You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாய் சுதர்ஷன் மீண்டும் ஹிட் விக்கெட்: ஸ்டம்பை பேட் தகர்த்தாலும் எப்போதெல்லாம் அவுட் இல்லை?
மே 26, குவாலிஃபயர் 1 போட்டியில் ஆர்சிபி நிர்ணயித்த இலக்கை குஜராத் டைட்டன்ஸ் துரத்துகையில், ஆஃப் திசையில் வந்த பந்தை கட் செய்தார் சாய் சுதர்ஷன், பந்து வேகமாக பவுண்டரியை நோக்கிச் சென்றது.
ஆனால் சாய் சுதர்ஷனின் கையில் இருந்த பேட் நழுவி ஸ்டம்ப் மீது விழுந்ததால் ஹிட் விக்கெட் முறையில் அவர் ஆட்டமிழந்தார்.
சரியாக மூன்று நாட்கள் கழித்து மே 29 அன்று ராஜஸ்தான் அணியுடன் போட்டியிலும் இலக்கைத் துரத்துகையில் கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி இருந்த தருவாயில், முந்தைய போட்டியைப் போலவே சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தார். இம்முறை, ஆஃப் சைடில் லோயர் ஃபுல் டாஸாக ப்ரிஜேஷ் சர்மா வீசிய பந்தை தர்ட் மேன் திசையில் பவுண்டரி ஆக்கியிருந்தார் சாய் சுதர்ஷன். ஆனால் முந்தைய போட்டி போலவே கிட்டத்தட்ட அதே பாணியில் பின்னோக்கிச் சென்ற பேட், ஸ்டம்ப் மீது விழுந்ததால் சாய் சுதர்ஷன் ஹிட் ஆவுட் ஆனார்.
ஒரு வீரர் அடுத்தடுத்த போட்டிகளில் ஹிட் அவுட் ஆவது மிகவும் அரிதான நிகழ்வே என்றாலும் ஒரே பாணியில் இந்த விக்கெட்டுகள் வீழ்ந்திருப்பது அதிகம் பேசப்படுகிறது. ஹிட் விக்கெட் என்றால் என்ன? கிரிக்கெட் விதிகள் என்ன சொல்கிறது?
ஆர்சிபி-க்கு எதிரான ஆட்டத்தில் ஹிட் விக்கெட் முறையில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. முக்கியமான சேஸிங்கில் நல்ல ஃபார்மில் இருந்த பேட்டர் இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்ததற்கு ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில் ஹிட் விக்கெட் விதிகள் தொடர்பான விவாதங்களும் எழுந்துள்ளன. கிரிக்கெட் அம்பயரான அனில் சௌத்ரி இது ஹிட் விக்கெட் அல்ல என்று வாதிடுகிறார்.
ஹிட் விக்கெட் என்றால் பேட்டரின் மட்டை, உடல் அல்லது ஏதேனும் ஒரு பொருள்பட்டு ஸ்டம்ப் தகர்ந்து ஆவுட் ஆவதைக் குறிக்கும்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில், "இந்த ஹிட் விக்கெட் தொடர்பான வீடியோவில், பேட்டர் தனது ஷாட்டை ஆடி முடித்த பிறகு, அவரது பேட் ஸ்டம்புகள் மீது விழுவதையும், இதனால் பெய்ல்ஸ் கீழே விழுவதையும் பார்க்க முடிகிறது.
இது ஹிட் விக்கெட் தொடர்பான விதி 35.2 ஆகும். பேட்டருடைய பேட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும் சரி, அல்லது அவருடைய எந்தவொரு பொருளும் பந்தை எதிர்கொண்டு, ஷாட்டை முழுமையாக விளையாடி முடித்த பிறகு ஸ்டம்பில் விழுந்தால், அது ஹிட் விக்கெட் கிடையாது.
இங்கும் அதுதான் நடக்கிறது. அவர் தனது ஷாட்டை விளையாடி முடித்துவிட்டார், ஒட்டுமொத்த செயல்முறையும் முடிவடைந்துவிட்டது. எனவே, இது ஹிட் விக்கெட் அல்ல." என்று தெரிவித்திருந்தார்.
கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிக்கும் எம்.சி.சி விதிகளின் 35.1 பிரிவு ஹிட் விக்கெட் தொடர்பாக விவரிக்கிறது.
"பந்துவீச்சாளர் பந்தை வீசிய பிறகும் பந்து தொடர்ந்து ஆட்டத்தில் இருக்கும்போதும் பேட்டரின் மட்டை அல்லது உடல் ஸ்டம்ப் மீது பட்டால் அவர் ஹிட் அவுட்டாக கருதப்படுவார்" என்று அந்த விதி தெரிவிக்கிறது.
ஹிட் விக்கெட் எப்போதெல்லாம் பொருந்தும்?
அதன் கீழ் பல்வேறு சூழ்நிலைகளில் ஹிட் விக்கெட் விவரிக்கப்பட்டுள்ளது.
- 35.1.1.1 பந்தை எதிர்கொள்ள தயாராகும் போது அவரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
- 35.1.1.2 பந்தை எதிர்கொண்ட உடனே முதல் ரன் எடுக்க முயற்சிக்கும்போது
- 35.1.1.3 பந்தை விளையாட எந்த முயற்சியும் செய்யப்படாத பட்சத்தில், முதல் ரன் எடுக்க புறப்படும்போது, பேட்டருக்கு பந்தை விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்த உடனேயே இது நிகழ்கிறது என நடுவர் கருதினால்
- 35.1.1.4 ஸ்டம்பை பாதுகாக்க பந்தை இரண்டாவது முறையாக அடிக்க முற்படும்போது (பந்து சட்டப்பூர்வமாக ஒரு முறைக்கு மேல் அடிக்கப்பட்டால்)
ஹிட் அவுட் ஆகியும் நாட் அவுட் இல்லாத சூழல்களை 35.2 பிரிவு விளக்குகிறது. அம்பயர் அனில் சௌத்ரி இந்த விதிகளை மேற்கோள்காட்டி தான் பேசியிருந்தார்.
35.2 பிரிவு விதிகள் சொல்வது என்ன?
- 35.1 பிரிவில் கூறப்பட்டுள்ளபடி ஸ்டம்ப் மீது படும் ஸ்ட்ரைகில் உள்ள பேட்டரின் மட்டை அல்லது உடல்படும் சூழலில் கீழே குறிப்பிடப்படுபவை நிகழ்ந்தால் அது நாட் அவுட் ஆக கருதப்படும்.
- 35.1 பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள சூழல்கள் அல்லாமல் பந்தை பேட்டர் எதிர்கொண்ட பிறகு ஸ்டம்ப் தகர்ந்தால் அது நாட் அவுட் ஆகும்.
- முதல் ரன் எடுக்க உடனடியாக ஓடும் சூழல் அல்லாத நேரங்களில் பேட்டர் ஓடும்போது ஸ்டம்ப் தகர்ந்தால் அதுவும் நாட் அவுட்.
- பேட்டர் ரன் அவுட் அல்லது ஸ்டம்பட் அவுட் ஆவதை தடுக்க முயற்சிக்கும்போது ஸ்டம்ப் தகர்ந்தால் அது நாட் அவுட்.
- எந்த நேரத்திலும் வரும் த்ரோவை தவிர்க்க பேட்டர் முயற்சிக்கும்போது ஸ்டம்ப் தகர்ந்தால் அதுவும் நாட் அவுட்
- பந்து வீசும் கோட்டைக் கடந்த பந்துவீச்சாளர் பந்தை வீசவில்லை என்றால் ஹிட் அவுட் என்பது பொருந்தாது. அந்த நேரத்தில் அம்பயர் அதனை டெட் பால் என அறிவித்துவிடார்.
- அந்த பந்து நோ பால் ஆக இருந்தால் அதுவும் நாட் அவுட் தான்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு