'தாக்குதலை எதிர்பார்க்கவில்லை' - தமிழ்நாட்டில் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன?

சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். (கோப்புப்படம்)
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

"எழும்பூரில் போராட்டம் (ஜூலை 22) நடத்த சென்ற என்னைக் காவலர்கள் தூக்கி வீசினர். இதனால் வலதுகால் மூட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. ரத்தம் உறைந்துள்ளதால் ஒருவாரம் கழித்து அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்"

இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் அமர்நீதி பிபிசி தமிழிடம் இவ்வாறு கூறினார். தன்னைப் போல ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

'போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும்" என்கிறார், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மிருதுளா.

'மாணவர்கள் மீது காவல்துறையின் அச்சுறுத்தல் இருக்காது' எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ள நிலையில், அரசின் மீதான விமர்சனம் தொடர்வது ஏன்?

சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Handout

நீட் தேர்வுவினாத்தாள் கசிவு குறித்தும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

சிஜேபி நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

சென்னை எழும்பூரில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் இறங்கியபோது, அவர்களைக் காவல்துறை கைது செய்தது.

இதையடுத்து, சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் காக்ரோச் ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

டெல்லியில் போராட்டத்தைக் கலைப்பதற்காக மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதனைக் கண்டித்து காட்பாடியில் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'இயல்பு நிலை திரும்பிவிட்டது, ஆனால்?'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

போராட்டம் தொடரவே, தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரி வளாகங்களில் காவல்துறை குவிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து இயல்புநிலை திரும்பினாலும், 'வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும்' என, காக்ரோச் ஜனதா கட்சி கூறியுள்ளது.

'அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் திரும்பப் பெறுவதாக ஜூலை 25 ஆம் தேதியன்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்படும்' என, சிஜேபி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இனி புதிய முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படாது என மத்திய அரசு கூறியிருந்தது. இதனை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என அவர் கூறினார்.

இதே கருத்தை தமிழ்நாட்டில் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்புகளும் முன்வைத்துள்ளன.

'முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள்'

மிருதுளா

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மிருதுளா.

"எழும்பூரில் பேரணி நடத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தோம். அப்போது காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்தது. இதுதொடர்பாக சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்கிறார், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மிருதுளா.

"என்னென்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை" என பிபிசி தமிழிடம் கூறிய அவர், "மாநிலம் முழுவதும் ரயில் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அந்தவகையில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்கிறார் அவர்.

இந்தியாவில் நீட் மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்றது. இதனைக் கண்டித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசும் மிருதுளா, "போராட்டத்தின்போது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பிணையில் வர முடியாத பிரிவுகளில் எல்லாம் வழக்குப் பதிவு செய்துள்ளனர்" என அவர் தெரிவித்தார்.

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்பினர் போராட்டம் தீவிரம் அடைந்தது. தமிழ்நாட்டிலும் போராட்டம் தீவிரம் அடைந்தபோது பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளானதாகக் கூறுகிறார் மிருதுளா.

"காவல்துறையின் செயல்பாடுகள் அராஜகமாக இருந்தன. இந்தளவுக்கு ஏன் நடந்து கொள்ள வேண்டும் என அவர்களிடம் கேள்வி எழுப்பினோம். எழும்பூரில் காவல்துறை நடத்திய தாக்குதலில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்" என்கிறார் அவர்.

'வலதுகாலில் கடும் பாதிப்பு'

போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட SFI தென் சென்னை மாவட்ட தலைவர் அமர்நீதிக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், CPIM

படக்குறிப்பு, போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட SFI தென் சென்னை மாவட்ட தலைவர் அமர்நீதிக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.

ஜூலை 22-ஆம் தேதி எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் காலை சுமார் 11 மணியளவில் நீட் தேர்வு எதிர்ப்பை முன்னிறுத்தி மாணவர் அமைப்பினர் குவிந்தனர்.

அப்போது காவல்துறை நடத்திய தாக்குதலில் தனது வலதுகாலில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறுகிறார், இந்திய மாணவர் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் அமர்நீதி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "போராட்டம் தொடங்குவதற்கு முன்னரே கலைக்கும் நோக்கில் என்னைத் தூக்கி காவல்துறை வாகனத்தின் படிக்கட்டு மீது போலீசார் வீசினர். இதன் காரணமாக வலதுகால் மூட்டு பாதிக்கப்பட்டது" என்கிறார்.

"அதே காலைப் பிடித்து சாலையில் காவலர்கள் இழுத்துச் சென்றதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சக மாணவர்கள் என்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கால் மூட்டில் ரத்தம் உறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்" என அவர் தெரிவித்தார்.

ரத்தம் உறைதலை சரிசெய்வதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருவதாகக் கூறும் அமர்நீதி, "ஒரு வாரம் கழித்து அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்" என்கிறார்.

" என்னைப் போல வேறு சிலரும் காவல்துறையின் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாணவர்களைத் தாக்கிய போலீசார் பலரும் நேம் பேட்ச் அணியவில்லை. சில மாணவர்களின் கையை போலீசார் கடித்துள்ளனர்" என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசும்போது, "அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேலும் ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்பிறகு தான் என்னால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்" என்கிறார் அவர்.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமர்நீதியை கடந்த 25 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

விக்னேஷ்

பட மூலாதாரம், CPIM

படக்குறிப்பு, அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் விக்னேஷ்.

'விலா எலும்பில் தாக்குதல்.. மூச்சுத் திணறல்'

இதே போராட்டத்தில் தனது விலா எலும்பில் காவல்துறை தாக்குதல் நடத்தியதாகக் கூறுகிறார், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் விக்னேஷ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "போராட்டம் தொடங்குவதற்கு முன்பே கைது செய்யும் வேலைகளை காவல்துறை தொடங்கிவிட்டது. பேருந்துக்குள் வலுக்கட்டாயமாக ஏற்றும் வேலைகள் நடந்தன. பலரின் சட்டையைக் கிழித்து இழுத்தனர்" என்கிறார் அவர்.

"என்னுடைய இடது விலா எலும்பில் காவலர் ஒருவர் கடுமையாக குத்தினார். நகத்தை வைத்துக் கிழித்ததில் விலா எலும்பு அருகில் காயம் ஏற்பட்டது. பலருக்கும் இதேபோல் காயம் ஏற்பட்டது. ஆனால், இதனை யார் செய்தது எனத் தெரியவில்லை" எனக் கூறுகிறார் விக்னேஷ்.

"அங்கிருந்து தனியார் மண்டபத்துக்குக் கூட்டிச் சென்றனர். நேரம் செல்ல செல்ல உடல் எடை கனப்பது போல தோன்றியது. மூச்சு விடுவதற்கு ரொம்பவே சிரமப்பட்டேன். மாணவர்கள் ஆம்புலன்ஸை வரவைத்தனர். ஆனால், காவல்துறை அனுமதி மறுத்தது. நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகே மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்" என்கிறார் அவர்.

தன்னைக் கூட்டிச் சென்ற இடம் காவல்துறைக்கான மருத்துவமனை என்பதால் அங்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை எனக் கூறிய அவர், "மூச்சுவிடுவதற்கு சிரமமாக இருந்ததால் அங்கிருந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்" என்கிறார் விக்னேஷ்.

தொடர்ந்து பேசிய அவர், "அங்கு எக்ஸ் ரே, சி.டி ஸ்கேன் எடுத்தனர். அங்கு சிகிச்சை வழங்கப்பட்டதால் மாலை நேரத்துக்குப் பிறகே இயல்பு நிலைக்குத் திரும்ப முடிந்தது" என்கிறார்.

காவல்துறை நடத்திய தாக்குதலின் பாதிப்பு தற்போது வரை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

'தாக்குதலை எதிர்பார்க்கவில்லை'

நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பு.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பு.

"எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், யார் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்ற விவரம் இனிதான் தெரியவரும்" என விக்னேஷ் குறிப்பிட்டார்.

"தமிழ்நாடு அரசு நீட் தேர்வுக்கு எதிராக உள்ளதாகக் கூறுகின்றனர். நீட் தேர்வுக்கு மாநில அரசு எதிர்ப்பு எனக் கூறிவிட்டு காவல்துறை மூலம் தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை" என்கிறார் விக்னேஷ்.

"கடந்த தி.மு.க ஆட்சியில் மாணவர் போராட்டத்துக்கு இந்தளவுக்கு எதிர்ப்பு காட்டவில்லை. தற்போது திட்டமிட்டு தாக்குதல் நடத்தினர். நாங்கள் போராட்டம் நடக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டதாகவே பார்க்க முடியும்" எனவும் அவர் தெரிவித்தார்.

இதே கருத்தை புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம், "மாணவர் போராட்டம் நியாயமானது. நீட்டை எதிர்க்கிறோம் எனக் கூறிவிட்டு போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது போன்ற செயல்களில் மாநில அரசு ஈடுபட்டது" எனக் கூறியுள்ளார்.

"நீட் எதிர்ப்பு தொடர்பாக த.வெ.கவின் இரண்டாம்கட்ட தலைவர்கள் மட்டுமே பேசியுள்ளனர். தமிழ்நாட்டின் உணர்வை முதலமைச்சர் பிரதிபலித்திருக்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளில் முதலமைச்சர் பேச வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

'வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்'

இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் அமர்நீதி பேசும்போது, "சிஜேபி போராட்டம் கலைக்கப்பட்டபோதே, வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்துப் பேசப்பட்டது. அந்தவகையில் தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்" என்கிறார்.

" நீட் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை" எனக் கூறுகிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மிருதுளா.

அமைச்சர் ராஜ்மோகன் கூறியது என்ன?

அமைச்சர் ராஜ்மோகன்

பட மூலாதாரம், Rajmohan/X

படக்குறிப்பு, அமைச்சர் ராஜ்மோகன்

தமிழ்நாடு அரசின் காவல்துறைக்கு எதிராக மாணவர் அமைப்புகள் அதிருப்தியான மனநிலையில் உள்ளதை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்குக் காவல்துறை எந்த அச்சுறுத்தலையும் தரக் கூடாது" எனக் கூறினார்.

ஜூலை 25 ஆம் தேதியன்று நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற அவர், "அரசியலைத் தாண்டி மாணவர்கள், இளைஞர்களின் ஒற்றுமைக்குத் தலைவணங்குகிறேன்." என்கிறார்.

"நீட் எதிர்ப்பு போராட்டம் தொடரும். டெல்லியை செவிசாய்க்க வைத்த உங்களுக்குத் தலை வணங்குகிறேன். எந்த திசைதிருப்பலுக்கும் இடம் கொடுக்காத மாணவர்களின் போராட்டம் இது" எனவும் அவர் தெரிவித்தார்.

"தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்" என்கிறார், மிருதுளா.

நீட் தேர்வு எதிர்ப்பு தொடர்பாக, பள்ளி, கல்லூரிகளில் அடுத்தகட்ட பிரசாரத்தைக் கொண்டு செல்வது என மாணவர் அமைப்புகள் முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்தும் மாநில அரசிடம் அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

'கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று'

த.வெ.க தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் சத்தியகுமாரிடம் இதுகுறித்து கேட்டபோது, " போராடுவதற்கான உரிமை மாணவர்களுக்கு உள்ளது. அதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். மாணவர்கள் மீது தாக்குதல் நடந்திருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று" என்கிறார்.

"போராட்டத்தைக் கையில் எடுக்கும் மாணவர்களும் விதிகளைத் தாண்டாமல் செயல்பட வேண்டும்" எனக் கூறும் அவர், "இந்த விவகாரத்தில் காவல்துறை மீது தவறு நடந்தால் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்" எனக் கூறுகிறார்.

"மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பமாக உள்ளது. எந்தெந்த விஷயங்களுக்குத் தேவையோ அதுதொடர்பான போராட்டங்களுக்கு அரசு ஆதரவு அளிக்கும்" என்கிறார் வழக்கறிஞர் சத்தியகுமார்.

முதலமைச்சர் பேச மறுப்பது குறித்து எம்.பி சச்சிதானந்தம் கூறுவது குறித்துக் கேட்டபோது, "கட்சியின் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் என்ன கூறுகிறாரோ அதை வெளியில் கூறுகிறோம். எங்களுக்கு என தனிப்பட்ட குரல்கள் எதுவும் இல்லை. கட்சித் தலைமை கூறுவதையே நாங்கள் பிரதிபலிக்கிறோம்" என அவர் தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு