இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் தடை விதித்தது ஏன்?

    • எழுதியவர், மிருதுலிகா ஜா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உலகிலேயே மிக அதிகமாக மாம்பழங்களை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா.

இந்தியாவில் பல்வேறு மாம்பழ வகைகள் உள்ளன, இவற்றின் சுவையை உலகெங்கும் உள்ள பல்வேறு நாட்டினரும் விரும்புகின்றனர்.

ஜப்பான் அவற்றில் ஒன்றாகும்.

ஆனால் இந்த ஆண்டு, அங்கு வாழும் மக்களால் இந்திய மாம்பழங்களைச் சுவைக்க முடியாது.

ஏனென்றால், இந்த ஆண்டு இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் தடை விதித்துள்ளது.

பூச்சி கட்டுப்பாட்டு செயல்பாட்டில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 1980களில், ஜப்பான் இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் வாங்குவதை நிறுத்தியிருந்தது.

இந்தத் தடை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

இந்தியாவில் உள்ள பழப் பூச்சிகளின் முட்டைகள் அல்லது புழுக்கள் தங்கள் நாட்டைச் சென்றடைந்து, ஜப்பானிய விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடும் என்று ஜப்பான் அஞ்சியது.

ஜப்பான் தடை விதித்தது ஏன்?

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மாம்பழங்களுக்காக ஜப்பானின் கதவுகள் திறக்கப்பட்டன, ஆனால் வரலாறு மீண்டும் திரும்புவது போல் தோன்றுகிறது.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது.

இந்தியாவில் மாம்பழ பதப்படுத்தும் நிலையங்களில் சில குறைபாடுகளை ஜப்பான் கண்டறிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில், ஒவ்வோர் ஆண்டும் மாம்பழப் பருவத்தின் போது, ​​ஜப்பான் தனது ஆய்வாளர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறது.

இந்த அதிகாரிகள் 'வேப்பர் ஹீட் ட்ரீட்மென்ட்' (Vapor heat treatment - நீராவி வெப்ப செயல்முறை) எனப்படும் ஒரு சிறப்பு செயல்முறை மூலம் மாம்பழங்களை ஆய்வு செய்கிறார்கள்.

இது மாம்பழங்களை பூச்சிகள் மற்றும் அவற்றின் முட்டைகளிலிருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறையாகும். மாம்பழங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சூடான காற்று உள்ள அறையில் வைக்கப்படுகின்றன, இது பழத்திற்குள் இருக்கும் பூச்சிகள் மற்றும் புழுக்களை அழிக்கிறது.

இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, மாம்பழங்களின் பதப்படுத்தும் செயல்முறையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, ஜப்பானின் யோகோகாமா தாவர பாதுகாப்பு சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, இந்திய மாம்பழங்களை ஏற்க மறுத்துவிட்டது.

ஜப்பானிய அதிகாரிகள் முற்றிலும் திருப்தி அடையும் வரை இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்படும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகமாக மாம்பழம் விளையும் பருவத்தில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பல நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஏற்றுமதியாளர்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடல் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் கப்பல் காப்பீட்டு கட்டணம் அதிகரித்துள்ளது, இது கப்பல் நிறுவனங்களின் செலவுகளை உயர்த்தியுள்ளது.

இது மாம்பழ ஏற்றுமதியை மட்டுமன்றி, இதர பொருட்களின் ஏற்றுமதியையும் பாதிக்கக்கூடும்.

நிபுணர்களின் கருத்து என்ன?

பிபிசி-யிடம் பேசிய மத்திய மிதவெப்ப மண்டல தோட்டக்கலை நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சி இயக்குநர் சைலேந்திர ராஜன், "ஒரு சரக்கில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறிய எச்சங்கள் அல்லது பிற குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அது நிறுத்தப்படும். ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த விதிகள் உள்ளன, ஆனால் ஜப்பான் மிகவும் கடுமையான விதிகளைப் பின்பற்றும் சந்தைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அங்குள்ள அதிகாரிகள் சிறிய குறைபாடுகளைக் கூட விடுவதில்லை. பழ ஈக்களைத் தவிர்க்க அவர்கள் விரும்பியதன் பொருட்டே நீராவி வெப்ப செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டது." என்று கூறினார்.

ஜப்பானில் இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை, மற்ற நாடுகள் நமது மாம்பழங்களை வாங்குவதை பாதிக்குமா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சைலேந்திர ராஜன், இந்தியா தனது மாம்பழங்களில் பெரும்பாலானவற்றை வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், அங்கு ஜப்பானில் உள்ளதைப் போன்ற கடுமையான விதிகள் இல்லை என்றும் கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, இந்தத் தடை பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

ஒவ்வொரு நாட்டிற்கும் சொந்தமான விதிமுறைகளும் தரக் கட்டுப்பாடுகளும் உள்ளன என்றும், ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

அதற்கேற்ப இந்தியாவும் தனது அமைப்பை மேம்படுத்தி வருகிறது.

ஜப்பான் கடுமை காட்டுவது ஏன்?

பழங்கள் மற்றும் காய்கறிகள் எந்தவொரு நோயையும் பரப்பாமல் தடுப்பதற்காக, பல நாடுகள் அவற்றை இறக்குமதி செய்வதற்கு முன் நீராவி வெப்ப செயல்முறையை கட்டாயமாக்குகின்றன.

இந்த விஷயத்தில் ஜப்பான் மிகவும் கடுமையாக இருப்பதாக அறியப்படுகிறது.

இந்தக் கடுமையான அணுகுமுறை, ஜப்பானின் நீண்டகால அனுபவத்திலிருந்து உருவானதாகும். 1970-களில், அந்நாட்டின் தென்பகுதியில் பழ ஈக்கள் பரவத் தொடங்கின, இது மாம்பழம், பப்பாளி மற்றும் பல பழப் பயிர்களைப் பாதித்தது.

இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஜப்பான் ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையைத் தொடங்கியது.

இது ஒரு நீண்ட மற்றும் செலவு மிகுந்த செயல்முறையாக இருந்ததுடன், முடிவடைய பல ஆண்டுகள் ஆனது.

இந்த அனுபவம் சாகுபடி மற்றும் இறக்குமதி மீதான கடுமையான விதிமுறைகளுக்கு வழிவகுத்தது. இன்று, பூச்சித் தாக்குதல்களைச் சகித்துக் கொள்ளும் நிலை அங்கு அறவே இல்லை.

இருபது ஆண்டு கால தடையை நீக்குவதற்காக இந்தியாவில் பல நீராவி வெப்ப செயல்முறை (VHT) நிலையங்கள் திறக்கப்பட்டு, ஏற்றுமதியும் தொடங்கியது.

மாம்பழ உற்பத்தியில் இந்தியா முதலிடம்

உலகிலேயே மிக அதிகமாக மாம்பழங்களை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா.

விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் (APEDA) தரவுகளின்படி, உலகின் ஒட்டுமொத்த மாம்பழ உற்பத்தியில் தோராயமாக 40 முதல் 45 சதவீதம் வரை இந்தியாவில் உள்ளது.

இங்கு சுமார் 1,000 வகையான மாம்பழங்கள் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பகுதி இந்தியாவுக்குள்ளேயே விற்கப்படுகிறது.

வடக்கிலிருந்து தெற்கு வரை, மாம்பழங்களின் ரகங்களும் சுவையும் மாறுபடுகின்றன. புதிய பழங்களாக உட்கொள்ளப்படுவதைத் தவிர, இது பல்வேறு வழிகளில் பதப்படுத்தப்பட்டும் பாதுகாக்கப்படுகிறது.

இதன் விளைவாக, மிகப்பெரிய உற்பத்தியாளராக இருந்தபோதிலும் இந்தியாவின் மாம்பழ ஏற்றுமதி குறைவாகவே உள்ளது.

விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் படி, இந்தியா 2024-25 ஆம் ஆண்டில் தோராயமாக 30,000 டன் புதிய மாம்பழங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் , குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஜப்பான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி, அல்போன்சா, கேசர் , பங்கனபள்ளி, லங்ரா , சௌசா மற்றும் மல்லிகா உள்ளிட்ட சில சிறப்பு ரக மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

அல்போன்சா எப்போதும் ஒரு பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் தேவ்காட் ஆகிய பகுதிகளில் அறுவடை செய்யப்படும் இந்த மாம்பழம், அதன் சுவை, நறுமணம் மற்றும் சதைப்பற்று ஆகியவற்றால் தனித்துவம் பெற்றது.

இந்த ரகம் ஜப்பானிய சந்தையில் ஒரு ஆடம்பரப் பொருளாகக் கருதப்படுகிறது. ஆனால் இப்போது அதன் இறக்குமதியை ஜப்பான் காலவரையறையின்றி நிறுத்தி வைத்துள்ளது.

பல்வேறு வர்த்தக அறிக்கைகளின்படி, இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு பொதுவாக ஆண்டுதோறும் சில நூறு டன்கள் முதல் சுமார் இரண்டாயிரம் மெட்ரிக் டன்கள் வரை மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இது ஒட்டுமொத்த ஏற்றுமதியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதாகவே கருதப்படுகிறது.

ஜப்பானின் தடை பற்றி பரபரப்பாக பேசப்படுவது ஏன்?

நிபுணர்களின் கூற்றுப்படி, இங்குள்ள பிரச்னை அளவு அல்ல, தரம் தான்.

தரக் கட்டுப்பாட்டிற்குப் பெயர் பெற்ற ஒரு நாடு இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது. ஜப்பான் போன்ற ஒரு நாட்டிற்கு, இது வெறும் மாம்பழம் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஏற்றுமதி அமைப்பின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியாகும்.

அவரைப் பொறுத்தவரை, இந்த முடிவு ஒரு 'சிக்னல் எஃபெக்ட்' (சமிஞ்கை விளைவு) எனப்படும் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும், அதாவது ஒரு முடிவின் காரணமாக மற்ற மனிதர்களோ அல்லது நாடுகளோ அதே வழியில் சிந்திக்கத் தொடங்கும் ஒரு விளைவாகும்.

அதாவது, இந்தத் தாக்கம் ஜப்பானுடன் மட்டும் நிற்கவேண்டிய அவசியமில்லை, இது மற்ற நாட்டு சந்தைகளுக்கும் ஒரு சமிஞ்கையாக மாறக்கூடும் என்பது தான் இதன் பொருள்.

லக்னோவைச் சேர்ந்த இந்திய மாம்பழ விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ். இன்ஸ்ராம் அலி பிபிசியிடம் பேசுகையில், "ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்து மாம்பழங்களை நிராகரித்தது. ஏற்றுமதியாளர்கள் மூலமாகவே எங்களுக்கு இது தெரியவந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது." என்று கூறினார்.

மாம்பழ உற்பத்தி குறித்து இன்ஸ்ராம் அலி கூறுகையில், "குளிர்காலத்தில் நிலவிய கடுமையான குளிரும், அதைத்தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்ததும் பழ உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் மாம்பழ உற்பத்தி கடந்த காலத்தை விட மிகக் குறைவாக இருந்தது, உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழங்களும் புயல்களால் சேதமடைந்தன." என்றார்.

இதுகுறித்து கவலை தெரிவித்த அவர், "இந்த ஆண்டு மாம்பழ சீசன் ஜூன் மாதத்திலேயே முடிவடையக்கூடும்" என்றும் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு