You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: எவரெஸ்டில் 30 ஆண்டாக கிடக்கும் இந்தியர் உடல் - யார் இந்த 'கிரீன் பூட்ஸ்'?
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக, எவரெஸ்டின் வடக்கு திபெத் பாதையில் மலையேறுபவர்கள் இவரை 'கிரீன் பூட்ஸ்' என்றே அறிந்திருந்தனர். ஆனால் லடாக்கில் உள்ள தொலைதூர கிராமமான ஸ்குருபுச்சானில் இவர் காலத்தால் உறைந்துபோன ஓர் ஏக்கமாக மாறினார். கோஞ்சோக் யாங்ஸ்கிட் தனது கணவருக்காக தொடர்ந்து காத்துக்கொண்டிருந்தார்.
"எவரெஸ்ட் பயணத்திற்கு புறப்படுவதற்கு முன், குழந்தைகளையும் மற்றவர்களையும் பார்த்துக்கொள்ளுமாறு என்னிடம் கூறினார். அவரது பாதுகாப்பு குறித்து நான் கவலைப்பட்டேன். நான் மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன். அவரை மீண்டும் பார்ப்பேனா என எனக்குள் யோசித்துக்கொண்டிருந்தேன்," என அவரது மனைவி கோஞ்சோக் யாங்ஸ்கிட் தெரிவிக்கிறார்.
திரும்பி வரும் போது ஒரு நாயகனாக வருவேன் என உறுதியளித்து 1996-ல், மோருப் தனது வீட்டை விட்டு புறப்பட்டார்.
"அவர் அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புறப்பட்டுச் சென்றார். எவரெஸ்ட் பயணத்தை முடித்து திரும்பும்போது, குழந்தைகளை லே விமான நிலையத்திற்கு அழைத்து வரும்படி என்னிடம் கூறினார். புறப்படுவதற்கு முன் என்னை கட்டியணைத்துக் கொண்டார்," என்று டோர்ஜே மோருபின் சகோதரர் டாஷி சோனம் கூறினார்.
எவரெஸ்ட் சிகரத்தை அதன் வடக்கு பகுதியான திபெத்திய பக்கத்திலிருந்து ஏற முயன்ற ஆறு பேர் கொண்ட இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை குழுவில் மோருப்பும் ஒருவராக இருந்தார். இது இந்தியா மேற்கொண்ட அத்தகைய முதல் முயற்சி.
1996 மே 10ஆம் தேதி வானிலை மோசமடைந்த போதும், மோருப் மற்றும் குழுவின் மற்ற இரு உறுப்பினர்கள் சிகரத்தை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தனர். ஆனால், அவர்கள் யாரும் திரும்பி வரவில்லை.
அவரது மகன் புன்சோக் டோர்ஜாய் கூறுகையில், "ஐடிபிபி குழுவின் மலையேற்ற பயணத்தின்போது புயல் தாக்கியதைச் சிலர் தொலைக்காட்சியில் பார்த்தனர். மறுநாள்தான் அதை பற்றி நான் கேள்விப்பட்டேன். அந்த குழுவினர் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது புயல் தாக்கியது என்பதை மறுநாள் தெரிந்துகொண்டேன். அப்போதிருந்து என் தந்தையைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை."
நேபாளத்தைச் சேர்ந்த ஷிரிங் ஜங்பு ஷெர்பா, அந்த உடலைப் பார்த்தவர்களில் ஒருவர்.
"கேம்ப் 4-லிருந்து உச்சியை நோக்கி என் client உடன் ஏறிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென புயல் வீசத் தொடங்கியது. காற்றும் பனியும் வீசின. நான் ஒரு சிறிய குகைக்குள் தஞ்சம் புக முயன்றேன். குகைக்குள் சென்று காற்று மற்றும் பனியிலிருந்து என்னை பாதுகாத்துக்கொள்ள அங்கேயே ஒதுங்கிக்கொண்டேன். அதன் பிறகு, பச்சை நிற பூட்ஸை பார்த்தேன். அதுவரை அவை புதிய பனியால் மூடப்பட்டிருந்தன. நான் அங்கு காலடி வைத்தபோது அந்த பனி சிதைந்தது. அப்போதுதான் அந்த பச்சை நிற பூட்ஸை கண்டேன். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்," என்றும் பிபிசியிடம் தெரிவித்தார்.
அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குடும்பத்தினர் வாழ்க்கையை தொடர வேண்டியிருந்தது.
யாங்ஸ்கிட் தனது மூன்று மகன்களையும் தனி ஆளாக வளர்த்தார். இப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருக்கும் அவரது மூத்த மகன் டோர்ஜாயும் வெளியூரில் வசித்து வந்தார். ஆனாலும், தன் கணவர் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை மட்டும் அவர் மனதில் தொடர்ந்து இருந்தது.
"நான் அவர் உடலை பார்க்காததால், அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஏதோ ஒரு நாள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கும், அவர் உள்ளே நுழைவார் என்று தொடர்ந்து நம்பிக்கொண்டிருந்தேன். ஆரம்பத்தில், அவரை அடிக்கடி கனவில் காண்பேன். நிஜ வாழ்க்கையில் அவர் என்னவெல்லாம் செய்தாரோ, அதை கனவிலும் செய்வதாக காண்பேன். சில ஆண்டுகளுக்கு பிறகு, அந்த கனவுகள் வருவது நின்றுவிட்டன." என்கிறார் யாங்ஸ்கிட்.
மாபெரும் துணிச்சலின் கதையில் முழுமையடையாத ஓர் அத்தியாயமாகிவிட்ட ஒருவரின் அமைதிக்காக வேண்ட ஒவ்வொரு ஆண்டும் இந்த குடும்பம் ஒன்றுகூடுகிறது.
வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் மோருப்பின் நினைவுகள் குடியேற தொடங்கின. காலம் நகர்ந்தது, ஆனால் அந்த எதிர்பார்ப்பு மட்டும் அப்படியே இருந்தது.
30 ஆண்டுகளுக்கு பிறகு, நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த உடலை திரும்பக் கொண்டுவருவதற்காக ஐடிபிபி (ITBP) ஒரு டெண்டரை வெளியிட்டுள்ளது.
உடல் டிஎன்ஏ பரிசோதனை மூலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மோருப் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் உபகரணங்கள் அவரை அடையாளம் காண உதவியதாக ஐடிபிபி அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இவ்வளவு உயரத்திலிருந்து ஓர் உடலை மீட்டுக் கொண்டு வருவது எளிதான காரியம் அல்ல.
"வானிலை மற்றும் காற்றின் நிலைமை மிகப்பெரிய சவாலாக உள்ளன. இந்தச் சூழலில் நம்மால் எதுவும் செய்ய முடியாது. நேபாள பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், ஹெலிகாப்டர் மூலம் விரைவாக வெளியேற்ற முடியும். ஆனால், சீன பகுதியில் அத்தகைய வசதி ஏதுமில்லை." என்கிறார் அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரர் ஷிரிங் ஜங்பு ஷெர்பா.
'கிரீன் பூட்ஸ்' மீட்கப்படுவது, யாங்ஸ்கிட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இதுவரை கிடைத்திடாத முடிவை இறுதியாக வழங்கக்கூடும்.
"அவரது உடல் திரும்பக் கொண்டுவரப்பட்டால் நான் மகிழ்ச்சியடைவேன். அவரை என் கண்களால் கடைசியாக ஒரு முறை பார்த்து இத்தனை ஆண்டுகளாக எங்கே இருந்தீர்கள் என்று கேட்க விரும்புகிறேன்." என்று டோர்ஜே மோருப்பின் மனைவி கோஞ்சோக் யாங்ஸ்கிட் கூறினார்.
முழு விவரம் காணொளியில்....
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு