சிஜேபி கட்சியினர் மீது அதிரடிப் படை தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு - என்ன நடக்கிறது?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணிக்கான அழைப்புக்கு மத்தியில், காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கேவை டெல்லி காவல்துறை அழைத்துச் சென்றதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறியிருந்தார். ஆனால் அந்தக் கூற்றை டெல்லி காவல்துறை மறுத்தது.

இதையடுத்து, சௌரவ் தாஸ் தனது எக்ஸ் பதிவில், "அபிஜித் திப்கே காவல்துறையால் பிடித்து வைக்கப்படவும் இல்லை; அவர் கைது செய்யப்படவும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அபிஜித் திப்கேவை காவல்துறை அழைத்துச் சென்றதாக சிஜேபி கூறியிருந்தது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டை டெல்லி காவல்துறை நிராகரித்தது.

டெல்லி காவல்துறை தனது பதிவில்,"அபிஜித் திப்கேவை டெல்லி காவல்துறை காவலில் எடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன." என்று தெரிவித்தது.

மேலும், "இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கிறோம்." என கூறியுள்ளது.

இதற்கிடையே தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்ததாக சிஜேபி கூறியுள்ளது.

கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தாம் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்ததாகவும், தங்களது கோரிக்கைகள் குறித்து அவர் பேசுவதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சௌரவ் தாஸ், ஜே.பி. நட்டாவுடன் தானும் மற்றொரு செய்தித் தொடர்பாளரான அஷுதோஷ் ரங்காவும் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்

எனினும், இதுதொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

ஷார்ட் வீடியோ

முன்னதாக, திங்கள்கிழமை காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கேவும், சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோவும் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர்.

திப்கே மற்றும் கீதாஞ்சலி தலைமையிலான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறினர். எனினும், காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து அவர்களைத் தடுக்க முயன்றனர்.

போராட்டக்காரர்கள் தடுப்புகளைத் தாண்டி முன்னேற முயன்றபோது, காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

பேச்சுவார்த்தைக்காக திங்கள்கிழமை காலை அரசுத் தரப்பிலிருந்து தங்களைத் தொடர்புகொண்டதாகவும் சௌரப் தாஸ் தெரிவித்துள்ளார்.

காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆரம்பத்தில் காவல்துறையினர் லேசான பலத்தைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைத் தள்ளி அப்புறப்படுத்த முயன்றனர். கடும் வெயில் காரணமாக சிலர் மயங்கி விழுந்தனர். சிலர் போராட்ட இடத்தை விட்டு வெளியேறுவதும் காணப்பட்டது.

இதற்கிடையில், காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், "காக்ரோச் ஜனதா கட்சியின் சார்பில் நானும் அஷுதோஷ் ரங்காவும் ஜே.பி. நட்டாவைச் சந்திக்கச் செல்கிறோம். இன்று காலை பேச்சுவார்த்தைக்காக அரசுத் தரப்பிலிருந்து எங்களைத் தொடர்புகொண்டனர். எங்கள் கோரிக்கைகள் தெளிவானவை. ஏராளமான இளைஞர்கள் திரண்டுள்ளனர்," என்று தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட காணொளியில், ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் வீரர்கள் சிஜேபி ஆதரவாளர்களைக் கலைக்க தடியடி நடத்துவது காணப்படுகிறது.

இதற்கிடையில், ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.

வன்முறை குற்றச்சாட்டுகளை மறுத்த டெல்லி காவல்துறை

இது தொடர்பாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சில ஊடகங்கள் ஜந்தர் மந்தரில் டெல்லி காவல்துறையால் வன்முறை/தடுப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்படுவதாக செய்தி வெளியிடுகின்றன. அத்தகைய எந்தச் சம்பவங்களும் நடைபெறவில்லை. போராட்டம் முறையாக கையாளப்படுகிறது. இத்தகைய வதந்திகளுக்கு இரையாகாமல் சம்பவ இடத்தில் அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் பராமரிக்க டெல்லி காவல்துறைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 'சலோ சன்சட்' என்கிற பெயரில் பேரணி நடத்தப்போவதாக சிஜேபி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சிஜேபி கட்சியின் பேரணிக்கு அனுமதி வழங்க டெல்லி காவல்துறை மறுத்துவிட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே சென்று தங்களின் கோரிக்கைகளை வழங்க போராட்டக்காரர்கள் முடிவு செய்திருந்தனர்,

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே ஞாயிறன்று பிபிசியிடம் பேசுகையில், "காலை 9 மணி அளவில் ஆயிரக்கணக்கில் நாடாளுமன்றம் நோக்கி நகர்வோம். அங்கு எங்களின் கோரிக்கைகளை முன்வைப்போம். எங்களின் கோரிக்கைகளை முன்வைக்க எங்கள் குழுவினர் உள்ளே அனுமதிக்கப்படுவதை உறுதி செய்ய முயற்சிப்போம்." என்றார்.

அபிஜித் திப்கே கூறியது என்ன?

"இத்தனை தடுப்புகள் வைத்திருந்தாலும் எங்களால் வெளியே செல்ல முடியும். ஏனென்றால் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். காவல்துறை எங்களை ஏன் தடுக்க வேண்டும். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை." என்று அபிஜித் திப்கே கூறினார்.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். டெல்லி காவல்துறை சனிக்கிழமை காலை அவரை சஃதர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றியது. இதனைத் தொடர்ந்து போராட்டக் களத்தில் கூட்டம் அதிகரித்தது.

நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக ஜனவரி 28-ஆம் தேதி டெல்லியில் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

ஞாயிறு மதியம், வாங்சுக்கை மருத்துவமனையில் இருந்து விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன்னதாக, சோனம் வாங்சுக்கை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கக் கோரி அவரது மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மருத்துவமனையிலிருந்து விடுவிப்பது குறித்து நீதிமன்றம் கூறியது என்ன?

இந்த மனு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது, அன்று விடுமுறை தினமாக இருந்தபோதிலும் உயர் நீதிமன்றம் உடனடியாக அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

டெல்லி உயர் நீதிமன்றம், "ஒவ்வோர் உயிரும் மதிப்புமிக்கது" என்று கூறியுள்ளது. அதேநேரத்தில், சோனம் வாங்சுக்கை சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து விடுவிப்பது தொடர்பான முடிவு "மருத்துவக் குழு அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்படும்" என்றும் கூறியிருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் இந்த விவகாரத்தில் எந்தவொரு 'இடைக்கால உத்தரவும் தேவையில்லை' என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது

மூன்று நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு மீதான அடுத்த விசாரணை ஜூலை 24 அன்று நடைபெற உள்ளது. அதாவது வாங்சுக் அடுத்த மூன்று நாட்களுக்கு சஃப்தர்ஜங் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியிருக்கும்.

அதன்பிறகு தனது கணவருக்குப் பதிலாக நாடாளுமன்ற பேரணியில் தான் கலந்து கொள்வதாக அவருடைய மனைவி கீதாஞ்சலி அங்மோ தெரிவித்தார்.

மேலும் அவர், "நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அவரை மருத்துவமனையில் சந்தித்து நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 'கல்வியில் பொறுப்புக்கூறல்' குறித்த பிரச்னையை எழுப்புவோம் என உத்தரவாதம் அளித்தால் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவார்." எனத் தெரிவித்திருந்தார்.

சோனம் வாங்சுக் உடல்நிலை எப்படி உள்ளது?

சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தொடர்பாக சஃப்தர்ஜங் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின்படி, வாங்சுக்கிற்கு மேற்கொள்ளப்பட்ட தேவையான மருத்துவ சோதனைகள் இயல்பான முடிவுகளை அளித்துள்ளன.

அவருக்கான சிகிச்சை சுமூகமாக சென்று வருவதாகவும் மருத்துவர்கள் அவரைப் பார்த்துக் கொள்வதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"வாங்சுக் தற்போது சிகிச்சையில் இருக்கிறார், பல்வேறு நிபுணர்கள் குழு அவரின் ஆரோக்கியத்தைக் கண்காணித்து வருகிறது. சஃப்தர்ஜங் மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ், விஎம்எம்சியிலிருந்து வந்த மருத்துவக் குழுக்களின் மதிப்பீட்டின்படி ஏற்படக்கூடிய சிக்கல்களை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கத் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியமாகிறது," என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனம் வாங்சுக்கிற்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், நிபுணர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சோனம் வாங்சுக்கின் 3 நிபந்தனைகள் என்ன?

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடிப்பதற்கான நிபந்தனைகளைப் வெளிப்படுத்தியுள்ளார். தான் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிறைவேற்றப்படும் வரை, தான் உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லை என்று சோனம் வாங்சுக் கூறியுள்ளார்.

சமீபத்திய கல்வி முறையின் தோல்விகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொண்டால் அல்லது இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு உறுதியளித்தால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளப் போவதாகச் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.

மருத்துவமனையிலிருந்து சோனம் வாங்சுக் தன் கையால் எழுதிய கடிதத்தில், தான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதற்கான மூன்று சூழ்நிலைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

வாங்சுக்கின் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், "அன்பான நண்பர்களே மற்றும் ஆதரவாளர்களே, உங்களில் பலர் நான் எப்போது எனது உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று கேட்கிறீர்கள்? நான் முன்பே கூறியது போல், ஜூலை 20 அன்று எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வேன், இவை நடந்தால்..." என கூறியுள்ளார்.

  • சமீபத்திய கல்வி முறையின் தோல்விகளான, வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களுக்கு அரசு பொறுப்பேற்றுக் கொண்டால் அல்லது
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர்கள் நாடாளுமன்றத்தை அடைந்து, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று அரசியல் கட்சிகள் எனக்கு உறுதியளித்தால், நான் எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வேன் அல்லது
  • உடல்நிலை அல்லது பிற காரணங்களால் என்னால் உண்ணாவிரதத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால், அந்தச் சூழ்நிலையிலும் நான் எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வேன். ஆனால் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்து எனக்கு இதே உறுதிமொழியை அளிக்க வேண்டும்."

"எனது நடமாட்டம், கருத்து சுதந்திரம் மற்றும் அனைத்து வகையான தகவல் தொடர்பு சுதந்திரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சட்டவிரோதக் காவலில் இருந்து எழுதுகிறேன்," என ஜூலை 19 தேதியிட்ட இந்தக் கடிதத்தின் இறுதியில் அவர் எழுதியுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு