தி ஒடிஸி: 'மயக்கும் கதாநாயகன், பிரமாண்ட சண்டைக் காட்சிகள்' - நோலன் காட்டிய புதுமைகள்

    • எழுதியவர், கேரின் ஜேம்ஸ்
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், மேட் டேமன், ஆன் ஹாதவே மற்றும் டாம் ஹாலண்ட் நடித்துள்ள பிரமாண்டமான திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

'தி ஒடிஸி' திரைப்படத்தைப் பார்க்கும் வரை, ட்ரோஜன் குதிரையின் உள்ளே எவ்வளவு துர்நாற்றமாக இருந்திருக்கும் என்பது குறித்து நான் நினைத்துப் பார்த்ததே இல்லை.

சிறிய விவரமோ, மிகப்பெரிய ஆக்‌ஷன் காட்சியோ எதுவாக இருந்தாலும், கிறிஸ்டோபர் நோலனின் இந்தப் படம் அதன் பிரமாண்டத்தாலும், லட்சியத்தாலும் தனித்துவமாகத் திகழ்கிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹோமர் எழுதிய இந்த காவியக் கவிதையை மேற்கத்திய இலக்கியத்தின் அடித்தளமாக நீங்கள் நினைத்திருக்கலாம் அல்லது பள்ளி நாட்களில் படிக்க வேண்டிய சலிப்பான பாடமாக நினைத்திருக்கலாம். ஒருவேளை அவை இரண்டுமாகவும் இருக்கலாம்.

ஆனால், நோலனின் இந்த பிரமாண்டமான திரைப்பட வடிவம், இலக்கியப் பாடத்தைப் போதிப்பதைவிட, முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன்–சாகச பிரமாண்ட திரைப்படமாகவே அமைந்துள்ளது.

அதேநேரத்தில், இது கிறிஸ்டோபர் நோலனின் திரைப்பட பாணியை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கும் படைப்பாகவும் இருக்கிறது.

நீதிக்காகப் போராடும் பேட்மேன் முதல், அணுகுண்டின் உருவாக்கத்தால் மனவேதனை அடையும் ஓப்பன்ஹைமர் வரை, தார்மீக ரீதியாக சிக்கல்களை எதிர்கொள்ளும் கதாநாயகர்களின் வரிசையில், ஒடிசியஸும் இயல்பாகவே பொருந்துகிறார்.

ஹோமரின் கதையில் அடிக்கடி வரும் கிளைக் கதைகளும், தெளிவான, ஆனால் நேர்கோட்டில் செல்லாத கதை சொல்லலை விரும்பும் நோலனின் பாணிக்கு மிகவும் பொருத்தமாக அமைகின்றன.

ட்ரோஜன் போரில் வெற்றி பெற்ற பிறகு, தனது ராஜ்ஜியமான இத்தாகாவுக்கு திரும்ப ஒடிசியஸ் மேற்கொள்ளும் சுமார் பத்து ஆண்டுக்கால பயணத்தை, 'தி ஒடிஸி' காலத்திற்குள் முன்னும் பின்னுமாக நகர்ந்து அழகாகச் சொல்கிறது.

இந்தப் படம் வெளியாகும் வரை காத்திருப்பதும், ஒடிசியஸின் நீண்ட பயணத்தைப் போலவே உணரப்பட்டது. ஓர் ஆண்டுக்கு முன்பே டிக்கெட் விற்பனை தொடங்கிய நினைவிருக்கிறதா?

இப்போது, நோலன் என்ன செய்திருக்கிறார் என்பதை இறுதியாகப் பார்க்க முடிகிறது. அவரது பிரமாண்டமான, சிந்திக்க வைக்கும் இந்தப் படத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. 'மயக்கும்' கதாநாயகன்

டேமன் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவரது கதாபாத்திரங்கள் எப்போதும் ஆழமாகச் சிந்திப்பதை உணர முடியும்.

தி ஒடிஸி திரைப்படத்தில், ஆக்‌ஷனும் சிந்தனையும் கலந்த தனது சிறந்த நடிப்பை அவர் ஒடிசியஸாக வெளிப்படுத்துகிறார். கடவுள்களுடனும், அரக்கர்களுடனும் தொடர்புகொள்ளும் மனிதராகவும், சில நேரங்களில் அவரே ஒரு கடவுளைப் போல நடந்து கொள்பவராகவும் தோன்றுகிறார்.

எதிரியை வாளால் குத்திக் கொல்லத் தயங்காத போர் வீரரான ஒடிசியஸ், பின்னர் தனது கட்டளையின் கீழ் இருக்கும் வீரர்களின் விதியை நிர்ணயிக்கும், கடவுளைப் போன்ற தனது முடிவுகளின் விளைவுகளை எதிர்கொள்கிறார்.

அவர் பொய் சொல்வதற்கும் தயங்குவதில்லை. நரகத்திற்கே சென்று மீண்டு வரும் அளவுக்கு நீளும் தனது பயணத்தில், ஹேடீஸின் பாதாள உலகில் தீர்க்கதரிசி டைரிசியஸ் அவருக்கு இரண்டு வழிகளை முன்வைக்கிறார். ஒன்று, சுழற்கடலான சாரிப்டிஸை நோக்கிச் செல்வது. அப்படிச் சென்றால் அவரது வீரர்கள் அனைவரும் உயிரிழப்பார்கள். மற்றொன்று, அரக்கன் ஸ்கில்லாவை எதிர்கொள்வது. அந்த வழியில் சென்றால் ஆறு வீரர்கள் மட்டுமே உயிரிழப்பார்கள்.

அவர் அவர்களுக்காக அதை ரகசியமாகத் தேர்வு செய்கிறார். டேமன் இந்தத் திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளையும் தார்மீக கனத்தையும் தாங்கி நிற்பதுடன், படத்தின் அனைத்து திருப்பங்களிலும் நம்மை உறைந்துபோகச் செய்கிறார்.

அவர் தனது வீரர்களிடம் சொல்லாமல், ரகசியமாக அதற்கான முடிவைத் தானே எடுக்கிறார். படத்தின் ஆக்‌ஷனையும், அதன் ஒழுக்கரீதியான பாரத்தையும் மேட் டேமன் தனது தோள்களில் சுமந்து செல்கிறார். கதையின் ஒவ்வொரு திருப்பத்திலும் அவரது நடிப்பு பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்கிறது.

2. பிரமாண்டமான சண்டைக் காட்சிகள்

ஒன்றன் பின் ஒன்றாக வரும் பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளில், தனது ஐமேக்ஸ் கேமராக்கள் மூலம் ஒடிசியஸின் நீண்ட பயணத்தின் பரப்பளவையும், கடவுள்களுக்கு முன்னால் மனிதர்கள் எவ்வளவு சக்தியற்றவர்கள் என்பதையும் கிறிஸ்டோபர் நோலன் வெளிப்படுத்துகிறார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆழமான நீலநிறக் கடலில் நடக்கின்றன. பரந்த வானமும், பெரும் பாறைகளும், ஒடிசியஸையும் அவரது வீரர்களையும் ஏற்றிச் செல்லும் படகை மிகவும் சிறியதாகக் காட்டுகின்றன. படம் பார்வையாளர்களை முழுமையாக அந்த உலகுக்குள் இழுத்துச் செல்கிறது. அவர்களுடன் அதே படகில் பயணிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளும் அதே அளவுக்கு ஆழமான அனுபவத்தைத் தருகின்றன. ஒவ்வொரு வாள், ஈட்டி, அம்பு வீச்சும் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிஜிஐ தொழில்நுட்பத்தை மிகக் குறைவாகப் பயன்படுத்தி, பெரும்பாலும் நேரடிக் காட்சிகளையே நம்பி இந்தக் காட்சிகளை நோலன் உருவாக்கியிருப்பதால், அவை இன்னும் பிரமிப்பூட்டுகின்றன.

ட்ரோஜன் போர் இரண்டு பகுதிகளாகக் காட்டப்படுகிறது. முதலில், ட்ரோஜன் குதிரையில் இருந்து ஒடிசியஸும் அவரது வீரர்களும் வெளியே வரும் காட்சி இடம்பெறுகிறது. படத்தின் இறுதிப் பகுதியில் மிகவும் வியப்பூட்டும் ஒரு காட்சியில், அந்தப் போரின் முழு கொடூரத்தையும் ஒடிசியஸ் நினைவுகூர்கிறார். அப்போது கட்டடங்கள் இடிந்து விழுவதும், அவர் "நெருப்பு, குழப்பம், வேதனை" என்று விவரிக்கும் வன்முறையும் திரையில் விரிகின்றன.

உண்மையான ஒரு குகையில் படமாக்கப்பட்ட, ராட்சத சைக்ளோப்ஸ், வீரர்களின் தலைகளைக் கடித்துத் தின்னும் காட்சி மிகவும் அதிர்ச்சியூட்டுகிறது. மற்ற அனைத்து ஆக்‌ஷன் காட்சிகளையும் போலவே, இந்தக் காட்சிக்கும் ஒரு நோக்கம் உள்ளது. அதாவது, அங்கிருந்து தப்பிக்க ஒடிசியஸ் தீட்டும் புத்திசாலித்தனமான திட்டத்தை அது வெளிப்படுத்துகிறது.

3. நட்சத்திரப் பட்டாளம்

தனக்காக சிறிய கதாபாத்திரங்களில்கூட நடிக்கத் தயாராக இருக்கும் முன்னணி நடிகர்களை நோலன் இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

ஒடிசியஸ் கதாபாத்திரத்துடன் ஒப்பிடும்போது இவையனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய பாத்திரங்கள்தான். ஆனால், ஒவ்வொருவரும் அதில் முழு அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர்.

ஒடிசியஸின் மனைவி பெனலோப்பாக நடித்துள்ள ஆன் ஹாத்வே தனித்துவமாகத் திகழ்கிறார். அமைதியாகக் காத்திருக்கும் பலவீனமான பெண்ணாக அல்லாமல், அரியணையைக் கைப்பற்ற முயலும் வரன்களால் சூழப்பட்ட புத்திசாலி ராணியாகத் தோன்றுகிறார்.

தனது ஆபத்தான சூழ்நிலையைப் பற்றி அவர் கோபமாக வெடிக்கும் தருணங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. போருக்காக தங்களின் குழந்தையையும் விட்டு ஒடிசியஸ் புறப்படுவதற்கு முன், இருவருக்கும் இடையே நடைபெறும் நெருக்கமான உரையாடல் மிகவும் உணர்ச்சிகரமான காட்சியாக அமைந்துள்ளது. இப்படிப்பட்ட காட்சிகள் படத்தில் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தை அது ஏற்படுத்துகிறது.

ஒடிசியஸின் வளர்ந்து வரும் மகன் டெலிமாக்கஸாக நடித்துள்ள டாம் ஹாலண்டின் கதாபாத்திரம் போதிய அளவில் விரிவாக எழுதப்படவில்லை. ஆனால், ஒடிசியஸுக்கு விசுவாசமாக இருக்கும் பார்வையற்ற பன்றிகளை மேய்க்கும் மேய்ப்பனாக ஜான் லெகுயிசாமோ மனதைத் தொடும்படி நடித்துள்ளார்.

பெனலோப்பின் முக்கிய வரனான ஆன்டினோஸாக நடித்துள்ள ராபர்ட் பட்டின்சன், தற்பெருமையும் தந்திரமும் நிறைந்த மனிதராக அந்தக் கதாபாத்திரத்தை வெளிப்படுத்துகிறார். சூனியக்காரி செர்சேவாக நடித்துள்ள சமந்தா மார்டனின் நடிப்பு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இரக்கமுள்ள தெய்வமான அதீனாவாக ஜெண்டாயா அமைதியான முறையில் வந்து போகிறார். மிகக் குறைந்த நேரம் மட்டுமே திரையில் தோன்றும் நடிகர்களுக்குக்கூட முக்கியமான காட்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில், ட்ரோயின் ஹெலனாக அழகும் கோபமும் கலந்த நடிப்பை வழங்கும் லுபிடா நியோங்கோவும், அவரது கொலைகார சகோதரியான கிளைடெம்னெஸ்ட்ராவும் குறிப்பிடத்தக்கவர்கள்.

4. 'உணர்வுபூர்வமான' கதை சொல்லல்

நோலனின் சுழலும் கதை சொல்லல் பாணியில், ஃபிளாஷ்பேக் காட்சிகள் நினைவுகளில் இருந்தும், பிறர் சொல்லும் கதைகளில் இருந்தும் உருவாக்கப்படுகின்றன. இதனால், வரலாறு மற்றும் எதார்த்தத்தின் தன்மையே நிச்சயமற்றதாகத் தோன்றுகிறது.

உரையாடல்களில் சற்று கனமாக இருக்கும் விளக்கங்களால் படம் மெதுவாகத் தொடங்கினாலும், அதன் பிறகு அதன் வேகம் ஒரு கணமும் குறைவதில்லை. மூன்று மணிநேரம் ஓடும் படத்தின் மீதமுள்ள பகுதி மிகவும் விறுவிறுப்பாகக் கடந்து செல்கிறது. இறுதியில், இந்தக் கதை ஆழமான ஒரு நீதிக் கருத்தை முன்வைக்கிறது.

நவீன காலத்திற்கு ஏற்ப, "மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களோ, அதேபோல் அவர்களிடம் நீங்களும் நடந்துகொள்ளுங்கள்" என்ற பொற்கோட்பாடாக மாற்றப்பட்ட ஜீயஸின் சட்டம், படத்தின் முக்கியக் கருப்பொருளாக உள்ளது.

அந்தக் கோட்பாட்டை மீறியதன் விளைவுகள் பின்னர் ஒடிசியஸை துரத்துகின்றன. இதன் மூலம், இந்தக் கதையை இன்றைய பார்வையாளர்களுக்கும் தொடர்புடையதாக நோலன் மாற்றியுள்ளார்.

இன்றைய உலகின் அச்சங்களையும் கவலைகளையும் படம் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. தன்னைச் சுற்றியுள்ள நாகரிகம் சிதைந்திருப்பதைப் பார்க்கும் ஒடிசியஸ், அதை மீண்டும் சீரமைக்க வேண்டிய அவசியத்தைப் பேசுகிறார். அதேநேரத்தில், வீரர்கள் துணிச்சலானவர்களாக மட்டுமல்ல, நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறார்.

5. தி ஒடிஸி திரைப்படம் விளம்பரத்திற்கு ஏற்றவாறு உள்ளதா?

இந்தப் படம் கிட்டத்தட்ட விளம்பரப்படுத்தப்பட்ட அளவுக்கு ஏற்றவாறு உள்ளது. பிரமிக்க வைக்கும் இதன் காட்சிகளில் மூழ்கிவிடுவது எளிது. ஆனால், பல இடங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் உணர்ச்சிபூர்வமான தாக்கத்தைக் குறைத்துவிடுகின்றன. அந்த உணர்ச்சிகளின் ஆழம் சற்று குறைவாகவே இருந்து, மிகவும் தாமதமாகத்தான் வலுவாக வெளிப்படுகிறது.

ஒரே மையக் கருத்தை முழுமையாகப் பின்பற்றிய ஓப்பன்ஹைமர், நோலனின் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திரைப்படமாக இன்னமும் திகழ்கிறது.

ஆனால், சில குறைகள் இருந்தபோதிலும், தி ஒடிஸி மந்திரமும் மனிதநேயமும் நிறைந்த, செழுமையான ஒரு படைப்பாக உள்ளது. அதனால், இந்தப் படத்தை மீண்டும் பார்க்க வேண்டுமென்ற ஆவலை அது ஏற்படுத்துகிறது.

தி ஒடிஸி திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு