'ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்' - சௌதியின் கடுமையான சட்டங்கள் ஒரு பார்வை

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சௌதி அரேபியாவிற்கு பயணம் செய்யும் வெளிநாட்டினர் எவரும் அந்நாட்டின் சட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமென பல்வேறு நாட்டு தூதரகங்களும் அறிவுறுத்துகின்றன.

ஓர் உதாரணம், சௌதியின் இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின்படி, மற்றவர்களின் தனிப்பட்ட உரிமையை மீறும் வகையில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தால் அதிகபட்சமாக 5,00,000 சௌதி ரியால் (சுமார் 1 கோடி ரூபாய்) வரைகூட அபராதம் மற்றும் 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கச் சட்டத்தில் இடமுள்ளது. மக்களின் அனுமதியின்றி அவர்களைப் புகைப்படம் எடுப்பது அல்லது அத்தகைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது ஆகியவையும் இதில் அடங்கும்.

இன்னும் பல குற்றங்களுக்கு கசையடிகள், சிறைத் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கப்படுகிறது.

"சௌதியில் நீங்கள் உள்ளூர் சட்டங்கள் பற்றி தெரியாமல் அதனை மீறினாலும், நாடு கடத்தப்படலாம், கைது செய்யப்படலாம் அல்லது சிறையில் அடைக்கப்படலாம்" என அமெரிக்க தூதரகம் எச்சரிக்கிறது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் கூற்றுப்படி, இந்த ஆண்டு அந்நாடு சுமார் 100 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. அவர்களில் பலர் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட வெளிநாட்டினர் ஆவர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டுக் குடிமக்கள், கடுமையான மனித உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர் என்றும், மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் சௌதி அரேபியா முன்னணியில் உள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த புதன்கிழமை, மெக்காவில் உள்ள மசூதியில் 'தகாத' செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட வங்கதேசத் தம்பதிக்கு செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்நாட்டின் கடுமையான விதிகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.

ஷரியா சட்டம்

கடந்த 2022, மார்ச் 12ஆம் தேதி, சௌதி அரேபியா ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது. 'கொலை, பயங்கரவாதம், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொருளாதார மையங்கள் மீதான தாக்குதல்கள், மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை' சௌதி உள்துறை அமைச்சகம் இதற்குக் காரணமாகக் குறிப்பிட்டது.

'சௌதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு, அங்கு இஸ்லாமியச் சட்டம் (ஷரியா) கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. யாரையும் புண்படுத்தாத வகையில், உள்ளூர் மரபுகள், பழக்கவழக்கங்கள், சட்டங்கள் மற்றும் மதத்தை மதிக்க வேண்டும். பிரிட்டனில் சட்டவிரோதமாக கருத்தப்படாத சில செயல்கள், அங்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படக்கூடிய செயல்களாக இருக்கலாம்'.

சௌதி அரேபியாவிற்கு பயணம் செய்யும் பிரிட்டன் குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு வழங்கும் அறிவுறுத்தல் இது.

இதுபோல இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன.

சௌதி அரேபியாவின் கடுமையான விதிகளின்படி பின்வரும் செயல்களை தவிர்க்க வேண்டுமென பிரிட்டன் அரசு தெரிவிக்கிறது,

  • பொது இடங்களில் காதலை வெளிப்படுத்துவது
  • சபித்தல் மற்றும் அநாகரிகமான சைகைகள் செய்தல்
  • அதீத ஒலியுடன் இசையை ஒலிபரப்புவது
  • விமர்சன ரீதியிலான அரசியல் அறிக்கைகளை வெளியிடுதல் அல்லது பொது அமைதியைக் குலைப்பதாக சௌதி அதிகாரிகள் மதிப்பிடும் வகையில் நடந்துகொள்ளுதல்.

"சௌதி அதிகாரிகள் உள்நாட்டு ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றனர் என்றும் பத்திரிகையாளர்கள் பல்வேறு 'குற்றங்களுக்காக' சிறையில் அடைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன" என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை தெரிவிக்கிறது.

"இங்கு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் சட்டவிரோதமானவை. இந்தத் தடையை மீறுபவர்கள், 'அதிகாரிகளுக்கு எதிராக மக்களைத் தூண்டுதல்' போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது, வழக்கு விசாரணை மற்றும் சிறைத்தண்டனையை எதிர்கொள்வார்கள்."

சௌதி அரேபியாவில் சட்டங்களை மீறுகையில், நீங்கள் பின்வரும் நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடலாம் என அமெரிக்க தூதரகம் தெரிவிக்கிறது,

  • விசாரணையின்றி நீண்ட காலம் தடுத்து வைக்கப்படுதல்
  • நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டு, வெளியேற முடியாமல் தடுக்கப்படுதல்
  • உங்கள் தரப்பில் வழக்கறிஞர் இல்லாமலேயே விசாரிக்கப்படுதல்
  • ஒப்புதல் வாக்குமூலத்தில் வலுக்கட்டாயமாகக் கையெழுத்திட நிர்பந்திக்கப்படுதல்
  • அடித்தல் மற்றும் கசையடி உள்ளிட்ட உடல் ரீதியான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுதல்

பல்வேறு வகையான குற்றங்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்படலாம். குற்ற வழக்குகளில் ஒவ்வோர் ஆண்டும் பல மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன.

புலம்பெயர் தொழிலாளர் விதிகள்

இந்திய அரசின் தரவுகளின்படி (டிசம்பர், 2025), சௌதி அரேபியாவில் 27,47,551 இந்திய தொழிலாளர்கள் உள்ளனர்.

சௌதி அரேபியா புலம்பெயர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை ஒழுங்குபடுத்துவதற்காக கஃபலா (ஸ்பான்சர்ஷிப்) முறையைப் பின்பற்றுகிறது.

"சௌதி அரேபியாவிற்குள் நுழையும் எந்தவொரு வெளிநாட்டுத் தொழிலாளியும், ஒரு சௌதி குடிமகன் அல்லது ஒரு நிறுவனமாக இருக்கக்கூடிய கஃபீலின் (ஸ்பான்சர்) ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். பணி ஒப்பந்தக் காலம் முழுவதும் அந்த ஆதரவாளரின் பொறுப்பின் கீழ் தான் இருக்க வேண்டும்" என இந்திய தூதரகம் தெரிவிக்கிறது.

  • சௌதியில் வெளிநாட்டினர் எப்போதும் அடையாள அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
  • ஒரு சுற்றுலாப் பயணியாக இருந்தால், உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசாவின் நகலை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
  • சௌதி அரேபியாவில் வசிப்பவராக இருந்தால், குடியிருப்பு அட்டையை (இகாமா) உடன் வைத்திருக்க வேண்டும்.

ஆடைகள் தொடர்பான விதிகள்

முந்தைய காலத்தைப் போல முழு உடலையும் மறைக்கும் கருப்பு அபாயா (Abaya) அணிவது மற்றும் தலையை முழுமையாக மூடுவது வெளிநாட்டுப் பெண்களுக்குக் கட்டாயமில்லை என்றாலும், பொது ஒழுங்கு விதிமுறை அமலில் உள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பொது இடங்களில் தோள்கள் மற்றும் முழங்கால்களை மறைக்கும் தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும். இறுக்கமான உடைகள், மத/அரசியல் முழக்கங்கள் தாங்கிய ஆடைகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் இழிவான வார்த்தைகள், ஆபாசமான படங்கள் அல்லது சின்னங்கள் அடங்கிய ஆடைகளை அணிவது தண்டனைக்குரிய குற்றம், இதற்கு அபராதம் விதிக்கப்படும் என சௌதி அரசு தெரிவிக்கிறது.

மதம் சார்ந்த விதிகள்

சௌதி அரேபியாவில், பொதுவெளியில் இஸ்லாம் அல்லாத வேறு எந்த மதத்தையும் பின்பற்றுவது சட்டவிரோதமாகும். இருப்பினும், சௌதி அதிகாரிகள் மற்ற மதங்களை தனிப்பட்ட முறையில் பின்பற்றுவதை ஏற்றுக்கொள்கின்றனர்.

சமூக ஊடகங்கள் உட்பட இஸ்லாம் அல்லது முஸ்லிம் மதப் பிரமுகர்கள், குர்ஆன் மீதான எந்த விமர்சனத்தையும் சௌதி அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள். அத்தகைய செயல்களுக்கு சிறைத் தண்டனை (10 முதல் 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்), பெரும் தொகை அபராதம் மற்றும் சில தீவிர சூழ்நிலைகளில் மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.

மக்களை மற்றொரு மதத்திற்கு மாற்ற முயற்சிப்பது சட்டவிரோதமாகும். பிற மத நூல்களைத் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகக் கொண்டு வரலாம். இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான மத நூல்களை இறக்குமதி செய்ய முயற்சித்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

தடை செய்யப்பட்டவை

சௌதி அரேபியா போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை மிகக் கடுமையாகக் கையாள்கிறது. சிறு அளவிலான போதைப்பொருளை வைத்திருந்தால்கூட, 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 30,000 சௌதி ரியால் (இந்திய மதிப்பில் சுமார் 7.5 லட்ச ரூபாய்) அபராதமும் விதிக்கப்படலாம். போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

"போதைப்பொருட்கள், மதுபானம், பன்றி இறைச்சி அடங்கிய உணவுப் பொருட்கள், கசகசா, காட் இலைகள், குட்கா, பான் மசாலா, ஆபாசப் பொருட்கள், பில்லி சூனியம்/மாந்திரீகத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படக்கூடிய பொருட்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை சௌதி அரேபியாவிற்குள் கொண்டு வரக்கூடாது" என ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் குறிப்பிடுகிறது.

பொதுவான பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைக் கூட சௌதி அரேபியாவிற்குள் கொண்டு வருவதற்கு அல்லது வெளியே கொண்டு செல்வதற்கு முறையான அனுமதி தேவைப்படுகிறது.

நோயாளிகள் தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கான மருந்துகளை, அவர்கள் தங்கும் காலத்திற்கு மிகாமல் அல்லது அதிகபட்சமாக 30 நாட்களுக்கு மட்டுமே (இவற்றில் எது குறைவோ அதற்கேற்ப) எடுத்து வரலாம். அதேசமயம் முறையான மருத்துவ ஆவணங்கள் இருக்க வேண்டும்.

'தன்பாலின ஈர்ப்புக்கு தடை'

அதேபோல, "தன்பாலின ஈர்ப்பு என்பது சௌதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கை அரிதானது என்றாலும், அனைத்து தம்பதியினரும் உள்ளூர் பழக்கவழக்கங்களை அறிந்திருக்க வேண்டும் மற்றும் பொது இடங்களில் காதலை வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்" என்று பிரிட்டன் தூதரகம் அறிவுறுத்துகிறது.

சௌதி அரேபியாவின் 'பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்படி', பொதுவான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறை மற்றும் 1 லட்சம் ரியால் அபராதம் விதிக்கப்படும்.

ஆனால், பாதிக்கப்பட்டவர் 'சிறு வயதினராக' அல்லது மாற்றுத்திறனாளியாகவோ இருந்தால் அல்லது குற்றவாளி பாதிக்கப்பட்டவர் மீது அதிகாரம் செலுத்தும் இடத்தில் இருந்தால் (பணிபுரியும் இடம், கல்வி நிறுவனம், மருத்துவமனை போன்றவை), அல்லது மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் தண்டனை அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையாகவும் 3,00,000 சௌதி ரியால் வரை அபராதம் உயர்த்தப்படும்.

அதேபோல, பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதற்கும் கடுமையான தண்டனைகள் உள்ளன.

ஷரியா சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை ஒரு குற்றமாகும். இதற்கு கசையடி முதல் மரணதண்டனை வரை பலதரப்பட்ட தண்டனைகள் உள்ளன. ஆனால், திருமண உறவில் நடக்கும் பாலியல் அத்துமீறலை இச்சட்டம் ஒரு குற்றமாக அங்கீகரிக்கவில்லை.

திருட்டு தொடர்பான விதிகள்

'சௌதி லீகல் அட்வைசர்' என்ற இணையதளத்தின்படி, "பெரும்பாலான திருட்டு வழக்குகளுக்குப் பொருளின் மதிப்பு மற்றும் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து 1 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது."

"வன்முறை அல்லது ஆயுதங்களைப் பயன்படுத்தி பொது இடங்களில் வழிப்பறி செய்தால், அது பயங்கரவாதக் குற்றத்திற்கு இணையாகக் கருதப்பட்டு கடுமையான சிறை அல்லது மரண தண்டனை வரை விதிக்கப்படலாம்."

"ஷரியா சட்ட விதிகளின்படி திருட்டிற்கு 'கை துண்டித்தல்' தண்டனை உள்ளபோதிலும், அதற்குரிய ஆதார நிபந்தனைகள் (பூட்டிய இடத்தில் திருடியது, குறிப்பிட்ட தங்க மதிப்பு, சாட்சிகள்) மிகக் கடினம் என்பதால், நடைமுறையில் இத்தண்டனை மிக அரிதாகவே வழங்கப்படுகிறது."

தமிழர்கள் கூறுவது என்ன?

"வேறு சில மத்திய கிழக்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில், சௌதியில் சம்பளம் குறைவு தான், ஆனால் விலைவாசி, அன்றாட செலவுகளும் இங்கு குறைவு" என்கிறார் சௌதியின் ஜெட்டாவில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர் முகமது ஹாசன்.

"சௌதி அரேபியர்களால் இந்தியர்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். கடுமையான விதிகள் என்றாலும், அவற்றை முறையாகப் பின்பற்றுவதில் இந்தியர்கள் பெயர் பெற்றவர்கள்" என்கிறார் அவர்.

ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அஜீத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), "கொரோனா காலத்திற்கு முன், நான் வேலை பார்த்த தனியார் நிறுவனம் 5 மாதங்களுக்கு எனக்கு சம்பளம் தரவில்லை. என்னுடைய கஃபீலும் என்னை விடவில்லை. இந்திய தூதரகம் மூலமும், பிற இந்தியர்கள் உதவியுடனும் இந்தியா வந்து சேர்ந்தேன். அந்தச் சம்பளம் இன்றுவரை கிடைக்கவில்லை" என்கிறார் அவர்.

"முன்னர் கஃபீலின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை இருந்தது. 2021இல் சில தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2025இல் மேலும் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, கஃபலா முறையின் சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இருப்பினும், நடைமுறையில் பல தொழிலாளர்கள் இன்னும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்" என்கிறார் அஜீத்.

மதுரையைச் சேர்ந்த ஷாஜகான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 4 வருடங்களாக ரியாத்தில் மருத்துவ செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

"நாம் சௌதிக்குள் வரும்போது அனைத்து விதிகள் மற்றும் சட்டங்களை நன்றாக புரிந்துகொண்டு வர வேண்டும். குடும்பத்தோடு வசிப்பவர்களுக்கு இங்கு பாதுகாப்பு உள்ளது. ஆனால், சௌதி குடிமக்களுக்கு கிடைக்கும் மரியாதை என்பது நிச்சயம் பிற நாட்டவருக்கு கிடைக்காது. மற்றபடி வேலைக்காக வருகிறோம், அதை முறையாகச் செய்துவிட்டு நாடு திரும்ப வேண்டும்" என்கிறார்.

"சௌதி அரேபியாவில் சட்ட சிக்கல் ஏற்பட்டால், எனக்குச் சட்டம் தெரியாது என்று சொல்ல முடியாது. இங்குள்ள நீதிமன்றங்கள் அதை ஏற்றுக்கொள்ளாது."

"இங்கு அரசு கட்டடங்களை புகைப்படம் எடுக்க முடியாது, அரசை விமர்சிக்க முடியாது. இப்படி பல விதிகள் உள்ளன. இங்கு வாழும் அனைவரும் விதிகளை அறிந்து பின்பற்ற வேண்டும் என்று சௌதி அரசு எதிர்பார்க்கிறது" என்கிறார் ஷாஜகான்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு