மனித நடமாட்டம் அதிகரிப்பால் தனது குரலை மாற்றும் இமயமலை பறவை - ஆய்வில் புதிய தகவல்

    • எழுதியவர், ரசிதா பிரசாத்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இமயமலைப் பகுதியில் மனிதச் செயல்பாடுகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள ஒரு முக்கியப் பறவையின் வாழ்விடமும் தகவல் பரிமாற்ற முறையும் மாறிவருவதாக இந்திய ஆய்வாளர்கள் மேற்கொண்ட இரண்டு தனித்தனி ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

இமயமலையின் மலைக்காடுகளில் வாழும் ஹிமாலயன் மோனல் என்ற காட்டுக்கோழி இனப்பறவை, அந்தப் பிராந்தியத்தின் கலாசாரம், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் அடையாளத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது.

பச்சை, நீலம், தாமிர நிறங்கள் கலந்த பளபளப்பான இறகுகளைக் கொண்ட ஆண் மோனல், இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் மாநிலப் பறவையாகவும், நேபாளத்தின் தேசியப் பறவையாகவும் உள்ளது.

ஆனால், சுற்றுலா வளர்ச்சியும் கட்டமைப்பு விரிவாக்கங்களும் அதன் வாழ்விடத்தைச் சுருக்கி வருவதோடு, அதிகரிக்கும் மனித இரைச்சல் அந்தப் பறவையின் தகவல் பரிமாற்ற முறையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட இரண்டு ஆய்வுகள், மோனல் பறவை எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல்களை வெளிச்சமிட்டுள்ளன.

முதல் ஆய்வின்படி, மனித நடமாட்டம் அதிகரிப்பதால் மோனல் பறவைகள் தங்களது இயற்கை வாழ்விடங்களான உயர்மலைப் புல்வெளிகளில் இருந்து மேலும் உயர்ந்த பகுதிகளுக்கு இடம்பெயரத் தள்ளப்படுகின்றன.

இரண்டாவது ஆய்வு, மனிதர்களால் உருவாகும் இரைச்சலைக் கடந்து தங்களது குரல் கேட்கப்பட வேண்டிய தேவை காரணமாக, அவை தங்களது குரலின் சுருதியை மாற்றி வருவதை கண்டறிந்துள்ளது.

"இந்த இரண்டு ஆய்வுகளும், மற்ற உயிரினங்களுக்கான முக்கிய எச்சரிக்கையாக இருக்கின்றன. ஒரு மோனல் பறவை தனது குரலையும் வாழ்விடத்தையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், அதைவிட நுண்ணுணர்வு மிக்க பிற உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்," என்று இமயமலைப் பகுதியில் சூழலியல் மற்றும் காலநிலை தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் சுற்றுச்சூழல் நிபுணர் விஷால் சிங் கூறுகிறார்.

இந்த இரண்டு ஆய்வுகளுக்கும் தலைமை தாங்கிய ஆய்வாளர் ராஜீவ் லோச்சன், மோனலை ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் விளக்குகிறார்.

பருவநிலைக்கேற்ப, மோனல் பறவைகள் மலைகளின் கீழ்ச் சரிவுகளில் உள்ள மிதவெப்ப மண்டல பகுதிகளுக்கும், உயரமான ஆல்பைன் மண்டலங்களுக்கும் இடையே ஆண்டுதோறும் இடம்பெயர்கின்றன. இதனால், வடமேற்கு இமயமலையின் சூழலியல் ஆரோக்கியத்தை அளவிடும் முக்கிய குறியீட்டு இனமாக அவை கருதப்படுகின்றன.

"இந்தப் பறவை வாழும் சூழலில் பாதிப்புகள் தென்பட்டால், அதே நிலப்பரப்பில் வாழும் பிற பறவை இனங்களும் இதே பிரச்சினைகளை எதிrகொண்டிருக்கலாம்," என்கிறார் லோச்சன்.

கட்டுப்பாடற்ற சுற்றுலா வளர்ச்சி மற்றும் தீவிர நகரமயமாக்கல் காரணமாக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள இமயமலைச் சூழலமைப்பின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் ஒரு 'சுட்டிக்காட்டி'யாக ஆய்வாளர்களின் பார்வையில் மோனல் பறவை மாறியுள்ளது.

இமயமலை நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகள், மலையேற்ற ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களை ஈர்த்து வந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில் சாலைகள் மற்றும் பிற கட்டமைப்புகள் வேகமாக விரிவடைந்ததால், முன்பு சென்றடைய முடியாத பல பகுதிகளும் இப்போது எளிதில் அணுகக்கூடியதாகிவிட்டன. இதனால் மனித நடமாட்டம் அதிகரித்து, வனவிலங்குகளின் இயல்பான வாழ்க்கை முறையில் குறுக்கீடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த மனித அழுத்தங்களுக்கு மேலாக காலநிலை மாற்றமும் இமயமலையின் பல்லுயிர் வளத்திற்கு புதிய மற்றும் தீவிரமான அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

"பிரச்னைக்குப் பல காரணிகள் உள்ளன. ஆனால் அடிப்படையாகப் பார்த்தால், அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி அதன் சூழலியல் தாங்கு திறனுடன் ஒத்துப்போகவில்லை," என்கிறார் விஷால் சிங்.

காலநிலை மாற்றமும் சுருங்கும் வாழ்விடமும்

முதல் ஆய்வின்படி, பருவநிலை மாற்றம் காரணமாக இந்திய இமயமலைப் பகுதிகளில் மோனல் பறவையின் வாழ்விடம் தொடர்ந்து சுருங்குவதுடன், அதன் நிலைத்தன்மையும் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பருவநிலைச் சூழல்களைக் கருத்தில் கொண்ட இந்தக் கணிப்பு, 2100-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது.

தற்போது, காடுகளுக்கு மேலே மலைகளின் உயரமான பகுதிகளில் அமைந்துள்ள ஆல்பைன் புல்வெளிகளில் இந்தப் பறவைகள் வாழ்கின்றன. இமயமலைப் பகுதியில் பருவகால மேய்ச்சலுக்கும், பல்வேறு உயிரினங்கள் செழித்து வாழ்வதற்கும் இந்தப் புல்வெளிகள் முக்கியமான வாழ்விடங்களாக உள்ளன.

உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய இமயமலைப் பகுதிகளில், பருவநிலை மாற்றம் காரணமாக மோனல் பறவைக்கு ஏற்ற வாழ்விடங்கள் எவ்வாறு மாறக்கூடும் என்பதை ஆய்வாளர்கள் மாதிரிகளின் உதவியுடன் கணித்தனர். பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. அமைப்பான பன்னாட்டுப் பருவநிலை மாற்றக் குழு தனது மதிப்பீடுகளுக்குப் பயன்படுத்தும் உலகளாவிய பருவநிலை மாதிரிகள் மற்றும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றச் சூழல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

"பனிப்பாறைகள் உருகி வருவதாலும் புதிய தாவர வளர்ச்சி நிகழ்வதாலும் முன்பு அணுக முடியாத உயரமான பகுதிகளுக்கு மோனல் பறவைகள் நகரத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், மனிதர்கள் இயற்கை புல்வெளிப் பகுதிகளில் ஊடுருவி வருவதும் அவற்றை மேலும் உயர்ந்த பகுதிகளை நோக்கித் தள்ளுகிறது," என்று லோச்சன் கூறுகிறார்.

இதனால், பறவைகளின் எண்ணிக்கை ஒன்றோடொன்று தொடர்பில்லாத சிறிய குழுக்களாகப் பிரிந்து வாழக்கூடும். இந்தக் குழுக்களுக்கு இடையே இனப்பெருக்கம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும், அவற்றின் எண்ணிக்கை நீண்டகாலத்தில் சரிவதற்கும், குறிப்பிட்ட பகுதிகளில் முற்றிலும் அழிந்துபோவதற்கும் உள்ள அபாயம் அதிகரிக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இந்த அபாயம் ஏற்கெனவே நிலவுகிறது என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.

மனித இரைச்சலுக்கேற்ப மாறும் குரல்

லோச்சன், தினேஷ் குமார் ஷர்மா, ஆனந்த் குமார் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது ஆய்வு, மோனல்களின் நடத்தை மாற்றங்களை மையமாகக் கொண்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கஸ்தூரி மான் சரணாலயத்தின் இரண்டு பள்ளத்தாக்குகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகளும் வாகனப் போக்குவரத்தும் அதிகம் காணப்படும் சோப்தா பகுதியும், ஒப்பீட்டளவில் அமைதியான மத்மகேஷ்வர் பகுதியும் ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

2023 ஏப்ரல் முதல் ஒரு ஆண்டுக்காலம், சிறப்பு ஒலிப்பதிவு கருவிகள் மற்றும் மைக்ரோஃபோன்களின் உதவியுடன் 700-க்கும் மேற்பட்ட மோனல் குரல் பதிவுகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அவற்றின் சுருதி, குரல் நீளம் மற்றும் பின்னணி இரைச்சல் அளவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

அதன் முடிவுகளின்படி, அதிக இரைச்சல் நிலவும் பகுதிகளில் வாழும் மோனல் பறவைகள், அமைதியான சூழல்களில் வாழும் பறவைகளுடன் ஒப்பிடும்போது, உயர்ந்த அதிர்வெண்ணில் குரல் எழுப்புகின்றன.

இந்த மாற்றங்கள் மனிதக் காதுகளுக்குப் பெரிதாகப் புலப்படாவிட்டாலும், ஒலிப்பதிவு கருவிகளில் தெளிவாகக் கண்டறியப்பட்டன.

"இது அந்த இனத்தில் நிரந்தரமான அல்லது பரிணாம வளர்ச்சியால் ஏற்பட்ட மாற்றம் என்று அர்த்தமல்ல. மாறாக, மாறுபட்ட ஒலிச் சூழல்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் நடத்தையை இது காட்டுகிறது," என்கிறார் லோச்சன்.

மேலும், அமைதியான மத்மகேஷ்வர் பகுதியிலுள்ள மோனல்களுடன் ஒப்பிடுகையில், சோப்தாவில் வாழும் மோனல்கள் குறுகிய நேரத்திற்கு மட்டுமே குரல் எழுப்புவதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது. வாகனப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயணிகளால் உருவாகும் குறைந்த அதிர்வெண் இரைச்சலைத் தாண்டி தங்களது தகவலை விரைவாகக் கடத்தும் முயற்சியாக இது இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இமயமலை விடுக்கும் அமைதியான எச்சரிக்கை

பறவைகளின் குரல், இயற்கை உலகில் மிகவும் நுட்பமான தகவல் பரிமாற்ற அமைப்புகளில் ஒன்றாகும். குரலின் சுருதி அல்லது அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், துணையைக் கவர்வது உள்ளிட்ட பல முக்கிய நடத்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

"சுற்றுலா வாகனங்களின் இரைச்சலைத் தாண்டி தன் குரல் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக ஒரு பறவை தனது சுருதியை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்போதோ, மனித ஆக்கிரமிப்பால் மேலும் உயரமான பகுதிகளுக்கு குடிபெயர வேண்டிய சூழல் உருவாகும்போதோ, மனித அழுத்தங்கள் இமயமலையின் இயற்கை வாழ்வின் விதிகளை மாற்றி எழுதிக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது," ஃபிளேம் பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கைப் பேராசிரியரும், பன்னாட்டுப் பருவநிலை மாற்றக் குழுவின் அறிக்கைகளுக்குப் பங்களித்தவருமான அஞ்சல் பிரகாஷ்.

இந்த ஆய்வுகள் ஆரம்பநிலையிலேயே உள்ளதாகவும், அதன் பரப்பையும் ஆழத்தையும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் லோச்சன் கூறுகிறார்.

இந்த ஆய்வு, சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இறுதியான முடிவுகளை வழங்கவில்லை என்பதையும், கூடுதல் ஆய்வுகள் தேவை என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும், இந்த இரண்டு ஆய்வுகளையும் ஒன்றாகப் பார்க்கும்போது, இமயமலை முழுவதும் சுற்றுச்சூழல் நெருக்கடி அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

"மோனல் பறவையின் குரலைக் கவனித்துக் கேட்கும்போது, இமயமலை தனக்குத் தேவையான இடத்தையும் அமைதியையும் அக்கறையையும் நம்மிடம் கேட்டுக்கொண்டிருப்பதை உணர முடிகிறது," என்கிறார் பிரகாஷ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு