இந்தியாவில் புதிய இன்சுலின் ஊசி அறிமுகம் - நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒருமுறை போட்டால் போதும்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டிங்கல் போப்லி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
டேனிஷ் மருந்து நிறுவனமான நோவோ நோர்டிஸ்க், ஜூலை 9-ஆம் தேதி இந்தியாவில் 'அவிக்லி' என்ற இன்சுலின் ஊசியை அறிமுகப்படுத்தியது.
இது மருத்துவப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட உலகின் முதல் வாராந்திர பேசல் இன்சுலின் ஊசி ஆகும்.
டைப் 1 நீரிழிவு நோயாளிகளின் உடலில் இயற்கையாக இன்சுலின் உற்பத்தி ஆகாது. அவர்கள் தினசரி இன்சுலின் ஊசிகளையே சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.
டைப் 2 அல்லது கர்ப்பகால நீரிழிவு நோயில் மாத்திரைகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் பலனளிக்காதபோது இன்சுலின் தேவைப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு நோயாளிக்கும் தேவையான இன்சுலின் அளவு வேறுபடும்.
இன்சுலின் எப்படி செயல்படுகிறது? புதிய வாராந்திர ஊசி சிகிச்சையில் எவ்வாறு உதவும்? என்பதைப் புரிந்துகொள்ள பிபிசி நியூஸ் பஞ்சாபி, லூதியானாவில் உள்ள தயானந்த் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உட்சுரப்பியல் துறைத் தலைவர் மருத்துவர் நவீன் மிட்டல் மற்றும் மும்பை சைஃபி மருத்துவமனையின் உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் ஷஹிலா ஷேக்குடன் பேசியது.
அவிக்லி என்பது என்ன? இதன் விலை எவ்வளவு?

பட மூலாதாரம், Getty Images
அவிக்லி (இதன் ஜெனரிக் பெயர் இன்சுலின் ஐகோடெக்) என்பது டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயுள்ள வயது வந்தவர்களுக்கான மிக நீண்ட காலம் செயல்படும் பேசல் இன்சுலின் ஆகும்.
நிறுவனம் கூறுவதன்படி, இதைப் பயன்படுத்தும் ஒருவர் ஆண்டுக்கு 365 ஊசிகளுக்குப் பதிலாக 52 ஊசிகள் மட்டுமே போட வேண்டியிருக்கும்.
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, நோவோ நோர்டிஸ்க் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் விக்ராந்த் ஷ்ரோத்ரியா கூறுகையில், 70 யூனிட் அளவு கொண்ட அவிக்லியின் விலை ரூ.261 ஆகும். இது இரண்டு பேனா வடிவங்களில் கிடைக்கிறது - 1 மில்லி பேனா (700 யூனிட்) ரூ. 2,611க்கும் 3 மில்லி பேனா (2,100 யூனிட்) ரூ.7,833க்கும் கிடைக்கிறது.
இந்தியாவில் தற்போது கிடைக்கும் தினசரி பேசல் இன்சுலின் 70 யூனிட் அளவின் விலை ரூ.345 முதல் ரூ.453 வரை உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பிறகு, இதை அறிமுகப்படுத்திய உலகின் ஏழாவது நாடு இந்தியா ஆகும்.
நோவோ நோர்டிஸ்கின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 10.1 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர்; மேலும் 13.6 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளனர்.
ஊசி பயம் மற்றும் பொருளாதாரக் கவலைகள் காரணமாக இந்தியாவில் பலர் இன்சுலின் சிகிச்சையைத் தொடங்க 7 முதல் 9 ஆண்டுகள் வரை தாமதிக்கின்றனர்.
தற்போது சுமார் 60 லட்சம் பேர் இன்சுலின் பயன்படுத்துகின்றனர்.
வாராந்திர இன்சுலின் எப்படி செயல்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
மருத்துவர் மிட்டல் கூறுவதன்படி, 18 முதல் 24 மணி நேரம் செயல்படும் கிளார்ஜின் அல்லது டெக்லூடெக் போன்ற தினசரி இன்சுலின்களுடன் ஒப்பிடும்போது, இன்சுலின் ஐகோடெக்கின் அமைப்பு வேறுபட்டது. இதனால் அது நீண்ட காலத்திற்கு மெதுவாக வெளியிடப்படுகிறது.
"இயற்கை இன்சுலின் 4 முதல் 6 மணி நேரம் மட்டுமே செயல்படும். விஞ்ஞானிகள் மரபணு பொறியியல் மூலம் இன்சுலின் மூலக்கூறில் மாற்றம் செய்துள்ளனர். இதனால் ஊசி செலுத்தப்பட்ட பிறகு, இன்சுலின் ஐகோடெக் இரத்தத்தில் உள்ள ஆல்புமினுடன் இணைகிறது. பின்னர் அது 7 நாட்கள் மெதுவாக வெளியேறி இரத்தச் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
"இது வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளப்படுகிறது. வாராந்திர அளவை நிர்ணயிக்க, தினசரி அளவை 7-ஆல் பெருக்க வேண்டும். மாத்திரைகள் போதிய பலன் தராதவர்களுக்கும், நாள்தோறும் ஊசி போடுவதால் சிரமப்படும் நோயாளிகளுக்கும் இது ஏற்றதாகும்" என மருத்துவர் ஷேக் கூறுகிறார்.
எந்த நோயாளிகளுக்கு இது பொருத்தமானது?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் அவிக்லி 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
"மாத்திரைகளால் இரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வராத டைப் 2 நீரிழிவு நோயாளிகளில், தினசரி ஊசிகளைத் தவிர்க்க விரும்பும் பெரியவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கலாம். தினந்தோறும் ஊசி போடுவதிலிருந்து விடுபட விரும்புபவர்களுக்கும் இது உதவக்கூடும்" என்கிறார் டாக்டர் மிட்டல்.
அவிக்லி குறித்து தெரிந்திருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
பேசல் கவர்: அவிக்லி பேசல் இன்சுலினாக மட்டுமே செயல்படுகிறது. அது 24 மணி நேரமும் பின்னணி இரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
உணவு நேர இன்சுலின்: உணவுக்குப் பிறகு அதிகரிக்கும் இரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்த குறுகிய காலம் செயல்படும் (போலஸ்) இன்சுலின் தேவைப்படுபவர்கள், அவிக்லியுடன் சேர்த்து அந்த ஊசிகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
முக்கிய நன்மைகள்

பட மூலாதாரம், Getty Images
குறைவான ஊசிகள்: ஆண்டுக்கு 365 ஊசிகளுக்குப் பதிலாக 52 ஊசிகள் மட்டும்.
சீரான தன்மை: மருந்தளவை மறப்பதற்கான வாய்ப்பு குறையும்.
வாழ்க்கைமுறை மேம்பாடு: அதிக வேலை இருப்பவர்கள் அல்லது அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு ஏற்றது.
சிறந்த இரத்தச் சர்க்கரை கட்டுப்பாடு: கிடைக்கும் தரவுகளின்படி, இது இரத்தச் சர்க்கரையைச் சிறப்பாக கட்டுப்படுத்துவதோடு, ஹைப்போகிளைசீமியா (சர்க்கரை மிகவும் குறைவது) அபாயத்தையும் குறைக்கக்கூடும்.
பயன்படுத்த எளிது: தனியாக வாழ்பவர்கள் அல்லது ஊசிக்கு பயப்படுபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர் வாரத்திற்கு ஒருமுறை ஊசி செலுத்தி உதவலாம்.
சாத்தியமான அபாயங்கள் மற்றும் குறைகள்

பட மூலாதாரம், Getty Images
வாராந்திர மருந்தளவு வசதியானதாக இருந்தாலும், கூடுதல் கவனம் தேவைப்படுவதாக டாக்டர் மிட்டல் எச்சரிக்கிறார்.
நீண்டகால ஹைப்போகிளைசீமியா அபாயம்: இன்சுலின் சிகிச்சையின் முக்கிய ஆபத்து இரத்தச் சர்க்கரை மிகவும் குறைவதாகும். தினசரி இன்சுலின் பயன்படுத்தும் போது இந்த பிரச்னை பொதுவாக 24 மணி நேரத்தில் சரியாகலாம். ஆனால் வாராந்திர இன்சுலின் 7 நாட்கள் வரை உடலில் இருக்கும். எனவே நோயாளியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மருந்தளவை கவனமாகப் பின்பற்ற வேண்டும்: இந்த இன்சுலின் மிகவும் செறிவூட்டப்பட்டதாகும் (700 யூனிட்/மில்லிலிட்டர்). இதற்கான சிறப்பு பேனாவில் ஒரு 'கிளிக்' என்பது 10 யூனிட்களை குறிக்கும். தவறுதலாக கூடுதல் கிளிக்குகள் செய்யப்பட்டால் அதிகளவு மருந்து செலுத்தப்படும் அபாயம் உள்ளது.
மருந்தளவை மறப்பது அல்லது இருமுறை செலுத்துவது: ஒரு வார மருந்தின் அளவை தவறவிடுதல் அல்லது தவறுதலாக இருமுறை செலுத்துதல் முழு வார இரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டையும் பாதிக்கக்கூடும்.
இரத்தச் சர்க்கரை குறைதல் அல்லது உடல் எடை அதிகரித்தல் போன்ற வழக்கமான இன்சுலின் சார்ந்த அபாயங்களும் இருக்கலாம். இருப்பினும், ஐகோடெக் பயன்படுத்தும் போது எடை அதிகரிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இரத்தச் சர்க்கரை மிகக் குறைந்தால், "15 நிமிட விதி"யைப் பின்பற்ற வேண்டும். அதாவது உடனடியாக இனிப்பான உணவு அல்லது பானம் எடுத்துக்கொண்டு, 15 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் இரத்தச் சர்க்கரையைச் சரிபார்க்க வேண்டும்.
யார் வாராந்திர இன்சுலினை பயன்படுத்தக் கூடாது?

பட மூலாதாரம், Getty Images
நிபுணர்கள் கூறுவதன்படி, பின்வரும் நபர்கள் இன்சுலின் ஐகோடெக்கைப் பயன்படுத்தக் கூடாது:
- குழந்தைகள்: 18 வயதுக்கு குறைவான நோயாளிகளுக்கு இது அங்கீகரிக்கப்படவில்லை.
- நிலையற்ற இரத்தச் சர்க்கரை அளவு கொண்ட நோயாளிகள்: இரத்தச் சர்க்கரை மிக வேகமாக ஏறி இறங்குபவர்கள்.
- குறைந்த சர்க்கரையின் அறிகுறிகளை உணராதவர்கள்: இரத்தச் சர்க்கரை குறையும்போது உடல் தரும் எச்சரிக்கை அறிகுறிகளை உணராதவர்கள்.
- கடுமையான பார்வைக் குறைபாடு உள்ளவர்கள்: உதவி இல்லாமல் பேனாவின் கிளிக்குகளைப் பார்க்க முடியாதவர்கள்.
- திடீர் உடல்நலப் பிரச்னைகள் அல்லது வாழ்க்கைமுறை மாற்றங்கள் உள்ளவர்கள்: அடிக்கடி குறைந்த இரத்தச் சர்க்கரையால் பாதிக்கப்படுபவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்கள் இதைத் தொடங்கக் கூடாது.
- மருந்து ஒவ்வாமை உள்ளவர்கள்: இந்த மருந்திற்கு ஒவ்வாமை இருப்பவர்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































