இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மகன் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டது ஏன்?

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழுவினால் நாமல் ராஜபக்ஸ செப்டம்பர் 4ஆம் தேதி பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.

சர்ச்சைக்குரிய ஏயார் பஸ் விமானங்களின் கொள்வனவு நடவடிக்கைகளின்போது பெறப்பட்டதாகக் கூறப்படும் லஞ்சம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஸ இன்று முற்பகல் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, எதிர் வரும் 18ஆம் தேதி வரை நாமல் ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல்?

கடந்த 2013ஆம் ஆண்டு ஏயார் பஸ் நிறுவனத்திடம் இருந்து ஆறு ஏ-330 ரக விமானங்களும், 4 ஏ-350 ரக விமானங்களும் கொள்வனவு செய்யப்பட்டதுடன், நான்கு ஏ-350 ரக விமானங்கள் வாடகை அடிப்படையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவரின் மனைவிக்கு 16 மில்லியன் அமெரிக்க டாலர் பயணத்தை லஞ்சமாக வழங்க அந்த நிறுவனம் இணக்கம் தெரிவித்து இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளையில், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்படும் ஏ-330 விமானம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலரும், வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்படும் விமானம் ஒன்றுக்கு 1.16 மில்லியன் அமெரிக்க டாலரும் இடைத்தரகர்களுக்கு வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் தேதிக்கு முன்னர் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு வேறு எந்தவொரு விமான நிறுவனங்களிடம் இருந்தும் விமானங்களைக் கொள்வனவு செய்யாது இருந்தால், இடைத்தரகர்களுக்கு மேலும் 5 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்க ஏயார் பஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்திருந்தது.

எனினும், இணக்கம் எட்டப்பட்ட தொகைக்கு பதிலாக ஏயார் பஸ் நிறுவனத்தினால் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் மாத்திரமே இடைத்தரகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

கபில சந்திரசேன மர்மமாக உயிரிழப்பு

ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற காலப் பகுதியில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றிய கபில சந்திரசேன, கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், கபில சந்திரசேன, மே மாதம் 8ஆம் தேதி கொழும்பில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். அதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணைகளில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

சர்ச்சைக்குரிய ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவத்தின் முதலாவது சந்தேக நபராக கபில சந்திரசேன பெயரிடப்பட்டிருந்தார். இரண்டாவது சந்தேக நபராக கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவும், மூன்றாவது சந்தேக நபராக ஷஷிந்திர ராஜபக்ஸவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கபில சந்திரசேன, விசாரணைகளின்போது வழங்கிய வாக்குமூலம் தொடர்பான தகவல்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதன்படி, "ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கலில் பெற்றுக் கொள்ளப்பட்ட லஞ்சப் பணமானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு வழங்கியதாக கபில சந்திரசேன வாக்குமூலம் வழங்கியுள்ளார்" என லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

அத்துடன், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினராகக் கடமையாற்றிய ஷஷிந்திர ராஜபக்ஸவுக்கும் பணம் வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு 20 மில்லியன் ரூபா வீதம் மூன்று தடவைகளில் 60 மில்லியன் ரூபா பணத்தை தான், மஹிந்த ராஜபக்ஸவின் பெலிஅத்த பகுதியிலுள்ள வீட்டிலும், கால்டன் வீட்டிலும் வைத்து வழங்கியதாக கபில சந்திரசேன குறிப்பிட்டுள்ளதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு இன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு