அடுத்தடுத்து 9 பெண்கள் கொடூர கொலை: தனியே கடைக்கு செல்லவே நடுங்கும் பெண்கள் - சீரியல் கொலையாளியா?

    • எழுதியவர், பூமா ஃபிஹ்லானி
    • பதவி, தென்னாப்பிரிக்கா செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை" என தனது மருமகள் டினியோ மொடாபானே கொலை செய்யப்பட்டதை நினைத்து வருந்தும் நோக்வாண்டா மாட்சிகிசா, "ஆனால், ஏதாவது ஒன்று மாறியே ஆக வேண்டும்"என்கிறார்.

"எங்களுக்காகவும், மற்ற அனைத்து பெண்களுக்காகவும் ஏதாவது ஒன்று மாறியே ஆக வேண்டும். இன்னும் எத்தனை பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்படும்?" என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரமான ஜொஹன்னஸ்பர்க்கிற்கு அருகே உள்ள வீட்டிலிருந்து, டினியோவின் உடலை உறவினர்கள் அடையாளம் கண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு பிபிசியிடம் நோக்வாண்டா பேசினார்.

38 வயதான இரண்டு குழந்தைகளின் தாயான டினியோ, ஞாயிற்றுக்கிழமை உயிருடன் கடைசியாகக் காணப்பட்டார்.

பின்னர், குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ள எகுர்ஹுலேனி பகுதியில், உடலில் பலத்த காயங்களுடனும், ஒரு பகுதி எரிந்த நிலையிலும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

டினியோவின் மரணம் குறித்து ஒரு கட்டத்தில் அவரது மகளிடம் தெரிவிக்க வேண்டிய வலிமிகுந்த பணியை குடும்பத்தினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை விவரிக்கும்போது நோக்வாண்டா கண்ணீர் விட்டு அழுகிறார்.

"பெற்ற தாய் கொடூரமாகக் கொல்லப்பட்டு, ஒரு வயல்வெளியில் குப்பையைப் போல வீசி எறியப்பட்டார் என்பதை அந்தச் சிறுமியிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது? ஒருபோதும் மன அமைதி கிடைக்கப் போவதில்லை. இந்த இழப்பை ஏற்றுக்கொள்ளவும் முடியாது; இதிலிருந்து மீண்டு வரவும் முடியாது" என்று அவர் கூறுகிறார்.

இந்த வாரம் டினியோ உயிரிழந்த சம்பவம், எகுர்ஹுலேனி பகுதியில் நடந்த இதேபோன்ற தொடர் சம்பவங்களுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது. இந்த வாரம் மட்டும் அங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்று உடல்களில் டினியோவின் உடலும் ஒன்றாகும்.

ஜூலை மாதம் முதல், அந்தப் பகுதியில் இதேபோன்ற சூழ்நிலைகளில் கொலை செய்யப்பட்ட ஒன்பது பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கதையாக உள்ள நிலையில், இந்தக் கொடூரமான தொடர் கொலைகள் அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறையின் அளவு குறித்து மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. உலகிலேயே பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகம் நடக்கும் நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாகும்.

தெம்பா கேகானாவும் தனது அன்புக்குரியவரின் மரணத்தால் அதிர்ச்சியில் உள்ளார்.

அவரது சகோதரி இடுமேலெங், எகுர்ஹுலேனி பகுதியில் முதலில் காணாமல் போனவர்களில் ஒருவராவார்.

32 வயதான கடைக்காரரான அவரது உடல், அவர் உயிருடன் கடைசியாகப் பார்க்கப்பட்ட 17 நாட்களுக்குப் பிறகு ஜூலை மாதம் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தன. அவர் பாதி ஆடையுடன் இருந்த நிலையில், ஒரு பாலத்தின் மீது உடல் வீசப்பட்டிருந்தது.

"நாங்கள் துயரத்தில் நிலைகுலைந்து போயிருக்கிறோம்," என்று கண்களில் கண்ணீர் ததும்ப தெம்பா கூறுகிறார்.

"என் சகோதரியின் இளம் மகளைப் பார்க்கும்போது கண்களில் கண்ணீர் நிறைகிறது. அவளது இந்த வலியை என்னால் ஒருபோதும் போக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்.

"நாங்கள் எதிர்கொண்டிருப்பதை எந்தக் குடும்பமும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படக்கூடாது"என்கிறார் தெம்பா.

இந்த கொலைகள் தொடர்பாக இதுவரை ஒரே ஒரு கைது மட்டுமே நடைபெற்றுள்ளது. ஜூலை 15 அன்று முதல் உடல் கண்டெடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்தக் கைது நடைபெற்றது.

இடுமேலெங், டினியோ அல்லது எகுர்ஹுலேனி பகுதியில் கொலை செய்யப்பட்ட மற்ற ஆறு பெண்களின் மரணங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர். அவர்களில் 20 மற்றும் 30 வயதுகளில் இருந்தவர்கள் அதிகம். கிட்டத்தட்ட அனைவரும் உயிரிழப்பதற்கு முன்பு கடுமையான வன்முறைக்கு உள்ளாகியிருந்தனர்.

தொடர் கொலையாளியைத் தேடி வருகிறோமா என்பது குறித்துத் தங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகவும் இருக்கலாம்.

எப்படியிருந்தாலும், தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரத்துக்கு கிழக்கே உள்ள இந்தக் குடியிருப்புப் பகுதியில் நடந்த சம்பவங்கள், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. பலர் இதை ஒரு நெருக்கடி நிலையாகக் கருதும் அளவுக்கு இது கவனத்தை ஈர்த்துள்ளது.

தென்னாப்பிரிக்க காவல்துறை ஒவ்வொரு காலாண்டிலும் விரிவான குற்றப் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 5,427 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரப்பூர்வ தரவுகளில் பாதிக்கப்பட்டவர்களின் பாலினம் தனியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்த வாரம் அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அந்தக் காலகட்டத்தில் 569 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1,052 பெண்கள் கொலை முயற்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏற்கெனவே பாதுகாப்பற்ற உணர்வுடன் வாழ்ந்து வரும் பல பெண்கள், சமீபத்திய சம்பவங்களால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த விவகாரம், அரசாங்கத்துக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் இந்தப் பிரச்னையின் தீவிரத்தை ஒப்புக்கொண்டு, பாலின அடிப்படையிலான வன்முறையை தேசியப் பேரிடராக அறிவித்து ஒரு ஆண்டுகூட நிறைவடையாத நிலையில் இந்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் இந்த நடவடிக்கையை அறிவித்த சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நோகுசோலா சிசிசி டோலாஷே, இந்த விவகாரத்தை தேசியப் பேரிடராகக் கருதுவது, நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கத்திற்கு உதவும் என்று தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்கா ஜி20 உச்சி மாநாட்டை நடத்தியபோது, பல வாரங்களாக நடைபெற்ற போராட்டங்கள், "பெண்கள் போராட்டம்" என்ற பேரணியில் உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வாரம், இதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்துள்ளன.

தென்னாப்பிரிக்கப் பெண்களைப் பாதுகாப்பதற்கான முக்கியமான முதல் நடவடிக்கையாக, பெண்களை அவர்களின் பாலினத்தின் காரணமாகக் கொல்வதை தனிக் குற்றமாக அங்கீகரிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

"'பெண் கொலை' ஒரு குற்றமாக அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் ஒவ்வொரு நாளும், இலக்கு வைத்துப் பெண்கள் கொல்லப்படுவதை எதிர்கொள்வதில் ஏற்படும் தோல்வியாகும்" என்று அம்னெஸ்டி அமைப்பின் அந்நாட்டு இயக்குநர் ஷெனில்லா முகமது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். "இதை அதன் உண்மையான பெயரிலேயே 'பெண் கொலை' என்று அழைப்பதற்கான நேரம் இது"என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"பெண் கொலை என்பது பாலின அடிப்படையிலான குற்றமாகும். ஒரு பெண் என்பதற்காகவே அவரைக் கொல்வதே பெண் கொலை எனப்படுகிறது".

ஆப்பிரிக்காவில் காபோன் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட 33 நாடுகளில் பெண் கொலை என்பது தனிக் குற்றமாக சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவிலும் இதுபோன்ற மாற்றத்தை ஏற்படுத்துவது, இந்தப் பிரச்னையின் அளவில் கவனம் செலுத்த உதவும் என்று அந்த அமைப்பு வாதிடுகிறது.

"வன்முறையிலிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாக்கத் தவறியதை எதிர்கொள்ள அரசை இது கட்டாயப்படுத்தும். நீங்கள் கண்காணிக்காத ஒன்றைச் சரிசெய்ய முடியாது" என்று முகமது கூறுகிறார்.

மேலும் நடவடிக்கைகள் தேவை என்பதில் தென்னாப்பிரிக்காவில் கிட்டத்தட்ட அனைவரும் உடன்படுகின்றனர்.

எகுர்ஹுலேனியில் நடைபெற்ற குற்றங்களை விசாரிப்பதில் "எந்தவொரு வாய்ப்பையும் விட்டுவைக்க்காமல்" செயல்படுவதாக அதிபர் சிரில் ரமபோசா இந்த வாரம் உறுதியளித்தார்.

ஒரு நாடாக, பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

பாலினம் மற்றும் சமூக நீதிக்காக செயல்படும் லெபோகாங் ரமோஃபோகோ, நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறையின் அளவு, அதைவிடப் பெரிய பிரச்னையின் அறிகுறியாக உள்ளது என்று கூறுகிறார். அது மனித உயிர்களுக்கு மதிப்பு அளிக்கப்படாத நிலை என அவர் குறிப்பிடுகிறார்.

"இந்த நாட்டில் கறுப்பினப் பெண்களின் உடல்கள் நீண்ட காலமாக தூக்கி எறியக்கூடிய பொருட்களைப் போல நடத்தப்பட்டுள்ளன. காலனியாதிக்கத்தில் இருந்து தொடங்கி, நிறவெறி ஆட்சி வரை இது தொடர்ந்தது" என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். 1994 வரை நடைமுறையில் இருந்த சட்டப்பூர்வமாக்கப்பட்ட இனவெறி அமைப்பை அவர் குறிப்பிடுகிறார்.

"பெண்களுக்கு எதிராக நடப்பதைப் பார்க்கும்போது, அந்த அமைப்புகளால் உருவாக்கப்பட்ட வன்முறையின் பாரம்பரியத்துக்கு இது சாட்சியாக உள்ளது. அந்த அமைப்புகளால் ஏற்பட்ட மன உளைச்சல்கள் ஒருபோதும் சரிசெய்யப்படவில்லை.

"கறுப்பின ஆண்கள் இயல்பாகவே வன்முறையாளர்கள் என்று இதன் மூலம் கூறவில்லை. ஆனால், பல ஆண்டு காலமாக அவர்களுக்கு எதிராக வன்முறை பயன்படுத்தப்பட்ட அமைப்புகளில், வரலாற்று ரீதியாக அந்த வன்முறையின் தாக்கம் கறுப்பினப் பெண்கள் மீது வெளிப்பட்டது. அந்தச் சுழற்சி இன்னும் முறியடிக்கப்படவில்லை."

சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒன்பது உடல்களில் ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்ட எகுர்ஹுலேனியின் கெம்ப்டன் பார்க் பகுதியில், லும்கா மாகுபெலா 'கேர்ள்2வுமன் ஃபவுண்டேஷன்' குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்தக் குழு, குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களை நடத்தியுள்ளது.

"நாங்கள் துயரத்தில் இருக்கிறோம், நாங்கள் பயந்துபோயிருக்கிறோம்" என்று கூறும் அவர், "காவல்துறையால் இனி எங்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால், அரசாங்கம் தலையிட்டு ஏதாவது செய்ய வேண்டும்"என்கிறார்.

"நாங்கள் பாதுகாப்பாக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எங்களிடம் கூறக்கூடாது.

எங்கள் சமூகங்களைப் பாதுகாப்பானதாக மாற்ற அவர்கள் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும். நாங்கள் வேறு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது? நாங்கள் எங்கும் பாதுகாப்பாக இல்லை. வீடுகளிலும் இல்லை, தெருக்களிலும் இல்லை. இது நிறுத்தப்பட வேண்டும்."

"எனக்கு அசௌகரியமாக இருக்கிறது" என்கிறார் 32 வயதான துலிசிலே சிபாண்டே.

"நான் ஒரு கடைக்குச் செல்லும்போது, சுற்றிப் பார்க்க வேண்டியிருக்கிறது. நான் அதிர்ச்சியிலும் பயத்திலும் இருக்கிறேன். மிகவும் பயமாக இருக்கிறது. இது மன உளைச்சலை தருகிறது".

60 வயதான தெம்பி மபெனா, டினியோ மொடாபானே வசித்த அதே பகுதியில் தான் வசித்து வந்ததாக பிபிசியிடம் கூறுகிறார்.

"அவர் தினமும் எல்லோருடனும் சிரித்துக்கொண்டே இருப்பார்" என்று நினைவுகூரும் அவர், "இப்போது நான் கவலைப்படுகிறேன்.

"பல குழந்தைகள், சிறுமிகள், தனியாகக் கடைக்குச் செல்ல பயமாக இருப்பதாக என்னிடம் கூறுகின்றனர். எனக்குக்கூட பாதுகாப்பு இல்லை. எனக்கு வயதாகிவிட்டது. ஆனால், பாதுகாப்பு இல்லை"என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

"தென்னாப்பிரிக்காவில், பெண்கள் இனி பாதுகாப்பாக இல்லை"என்று 20 வயதான லெராடோ மிசிசி கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு