சிஜேபி போராட்டத்தை முன்னிட்டு டெல்லியில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிப்பு - நிலவரம் என்ன?

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, சமூக விவகாரங்கள் ஆசிரியர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

டெல்லியின் சில பகுதிகள் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. செல்வாக்கு மிக்க, ஜென்-ஸி தலைமையிலான "காக்ரோச்" இயக்கம் சனிக்கிழமை மிகப்பெரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல்களில் முறைகேடு செய்து வாக்காளர்களைத் தவறாகக் கையாள்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை குறித்து ஞானேஷ் குமார் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முக்கிய போராட்டத் தளமான ஜந்தர் மந்தரை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளும் பெரிய உலோகத் தடுப்புகளைக் கொண்டு மூடப்பட்டுள்ளன.

டெல்லிக்கு செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் வகையில், டஜன் கணக்கான மெட்ரோ ரயில் நிலையங்களை மூடவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆனால், போராட்டங்களை முன்னெடுத்து வரும் இணையவழி இயக்கமான காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, "என்ன நடந்தாலும் சரி, சனிக்கிழமை காலையில் சிஜேபி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாகச் செல்லும்" என்று தெரிவித்துள்ளார்.

"எங்களை சிறையில் அடைக்க விரும்பினாலும், சுட்டுக் கொல்ல விரும்பினாலும், அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று பிரதமர் நரேந்திர மோதியை குறிப்பிட்டு, எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கல்விச் சீர்திருத்தங்களைக் கோரி சிஜேபி பல வாரங்களுக்கு நடத்திய போராட்டம், மோதி அரசுக்கு அந்த இயக்கம் விடுத்த முதல் பெரிய சவாலாக அமைந்தது. ஜூலை மாதத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் நிலையை ஏற்படுத்தியதன் மூலம் சிஜேபி முக்கிய வெற்றியைப் பெற்றது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த வாரம் மும்பையில் பேரணி நடத்தி சிஜேபி போராட்டக்காரர்கள் மீண்டும் வீதிகளில் இறங்கினர். வியாழக்கிழமை, பெங்களூருவில் அவர்கள் மிகப்பெரிய பேரணியை நடத்தினர்.

கடந்த சில நாட்களாக தலைநகரிலும் மாணவர் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டம், சமீப காலத்தில் நடந்த மிகப்பெரிய போராட்டமாகக் கருதப்படுகிறது. பல எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தங்கள் ஆதரவாளர்கள் பலர் டெல்லியை வந்தடைவதை அதிகாரிகள் தடுத்து வருவதாக சிஜேபி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தலைநகரில் 30,000க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று, சிஜேபி குறுகிய கால அவகாசத்தில் அனுமதி கோரியதுதான் என்று காவல்துறை அதிகாரி நூபுர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். "தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, ஜந்தர் மந்தரில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கான விண்ணப்பம், திட்டமிடப்பட்ட தேதிக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

மேலும், கடந்த காலங்களில் சிஜேபி அமைப்பினர் தங்களுக்கு வழங்கப்பட்ட "சட்டபூர்வ வழிகாட்டுதல்களை" பின்பற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார். "நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாதது, கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சட்டபூர்வ உத்தரவுகளுக்கு இணங்கத் தவறியது, தற்போதைய பொதுப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து ஒழுங்குமுறை நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஜந்தர் மந்தரில் முன்மொழியப்பட்ட போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.

போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையின் நடவடிக்கையை சிஜேபி கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. சட்டப்படி, போராட்டம் நடத்துவது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தால் மட்டும் போதும் என்றும், மக்கள் ஒன்று கூடுவதற்குக் காவல்துறையின் அனுமதி தேவையில்லை என்றும் அந்த அமைப்பினர் கூறுகின்றனர்.

இந்த சர்ச்சையின் மையத்தில், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட, 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்' (எஸ்.ஐ.ஆர்) எனப்படும் நாட்டின் வாக்காளர் பட்டியல்களைத் திருத்தும் சர்ச்சைக்குரிய நடைமுறை உள்ளது.

போலி மற்றும் தகுதியற்ற பதிவுகளை நீக்குவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. இதுவரை வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், நீக்கப்பட்டவர்களில் பலர் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்றும், தேர்தல்களின்போது பிரதமர் மோதியின் பாஜக சாதகமாகச் செயல்படும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்த நடைமுறையில் முறைகேடு செய்வதாகவும் எதிர்க்கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜகவும் தேர்தல் ஆணையமும் மறுத்துள்ளன. கடந்த சில நாட்களாக, தேர்தல் ஆணையத்திற்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்களாக, இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய போராட்டங்களைப் போலீசார் கலைத்ததால், டெல்லியில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின.

ராகுல் காந்தியை போலீசார் வலுக்கட்டாயமாகப் பேருந்தில் ஏற்றுவதையும், பேருந்தின் ஜன்னல் வழியாக அவர் வெளியேற முயன்றபோது தடுத்து நிறுத்துவதையும் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு