You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுகவை தவிர்த்து திமுகவை சாடிய விஜயின் வியூகம் என்ன? சட்டப்பேரவை நிகழ்வு பற்றி நிபுணர்கள் கருத்து
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் திங்கள்கிழமை (செப்டம்பர் 7) பேசினார்.
தனது பேச்சில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்பட எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த முதலமைச்சர், 'எல்லாவற்றுக்கும் காரணம் தி.மு.க' என விமர்சித்தார். சர்க்காரியா கமிஷன், அமலாக்கத்துறை அறிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு திமுக மீது குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கினார்.
முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வாய்ப்பு தரப்படவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டம் ஒழுங்கு குறித்து திமுக முன்வைத்த கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.கவை விமர்சிப்பதன் மூலம் அரசியல் ரீதியாக த.வெ.க முன்னெடுக்கும் வியூகம் என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 3 ஆம் தேதி காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது தமிழ்நாடு அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார். அவர் பேசும்போது, "நான் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு திங்கள்கிழமை முதலமைச்சர் பதில் உரை வழங்க வேண்டும்" எனக் கூறினார்.
இதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், "அனைத்துக் கேள்விகளுக்கும் திங்கள்கிழமை பதில் அளிப்பேன். நான் பேசும்போது யாரும் ஓடக் கூடாது என சத்தியம் செய்யுங்கள்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, திங்கள்கிழமை (செப்டம்பர் 7) சட்டப்பேரவையில் தனது துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசினார்.
போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை, காவல் மரணங்கள் உள்பட த.வெ.க அரசு மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தனது பேச்சில் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
முதலமைச்சர் பேசியது என்ன?
அவர் பேசும்போது, "மாநிலத்தின் முன்னேற்றம் என்பது சாலைகள் அமைப்பது, தொழிற்சாலைகள் வருவதால் மட்டும் தீர்மானிக்கப்படுவது அல்ல. மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு பாதுகாப்பாகவும் பயமில்லாமலும் வாழ்கிறார் என்பதில் தான் முன்னேற்றம் இருக்கிறது" எனக் கூறினார்.
"சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடுகள் வரும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சுற்றுலாத்துறை வளரும். பெண்களும் இளைஞர்களும் வேலைவாய்ப்புகளில் பங்கேற்பார்கள்" எனவும் அவர் பேசினார்.
எந்தவித தடையும் இல்லாமல் நேர்மையாக காவல்துறை இயங்குவதற்கான சூழலை உருவாக்குவதற்கு தனது அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
"காவல்துறை என்பது வெறும் குற்றவாளிகளைக் கைது செய்யும் அமைப்பு மட்டுமல்ல. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக அமைதிக்கும் முதலீட்டு சூழலுக்கும் மக்களின் நம்பிக்கைக்கும் அடித்தளமாக அமையும் முக்கியமான அமைப்பாக உள்ளது" என அவர் பேசினார்.
'100 நாட்களில் தோன்றிய குற்றங்கள் அல்ல'
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.
இதனைக் குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், அரசைக் குறைகூறும் நோக்கில் கூறியவர்களின் கருத்தைக் கூட மக்களின் பாதுகாப்பு குறித்த அவர்களின் கவலையையும் அக்கறையையும் பொறுப்புணர்வுடன் எடுத்துக் கொள்கிறோம்" எனக் கூறினார்.
"உள்நோக்கத்துடன் கூடிய கருத்தாக அவை இருந்தாலும் அதைப் பரிசீலித்து ஏற்க வேண்டியதை ஏற்பதில் எந்தப் பாகுபாடும் காட்ட மாட்டோம்" என முதலமைச்சர் தெரிவித்தார்.
சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கமளித்த முதலமைச்சர், "குற்றத்தைப் பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு குற்றம் நடைபெற்றுவிட்டது என்பதற்காகவே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கும் சீர்கெட்டுவிட்டது எனக் கூற முடியாது" எனக் குறிப்பிட்டார்.
"குற்றம் நடைபெற்றுவிட்ட பிறகு அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி மற்றவர்கள் ஒதுங்கிவிட முடியாது" எனக் கூறிய அவர், "அனைத்துக் குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியது அல்ல" எனத் தெரிவித்தார்.
குற்றச் சம்பவங்களின் பின்னணியில் குடும்ப தகராறு, சொத்து தகராறு, முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை, போதைப் பொருள் பயன்பாடு ஆகியவற்றின் தாக்கம் இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.
"தெருவில் நடக்கும் குற்றங்களுடன் சட்டம்-ஒழுங்கு முடிவதில்லை. சைபர் குற்றங்களும் சட்டம்-ஒழுங்கின் சவாலாக உருவெடுத்துள்ளன. இணைய மோசடி, ஓ.டி.பி, வங்கி மோசடி போன்ற பல்வேறு குற்றங்கள் தொழில் நுட்பத்தின் வாயிலாக நடைபெறுகின்றன" என்கிறார் அவர்.
'தண்டனை மட்டும் நோக்கம் அல்ல'
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை மற்றும் சென்னையில் பள்ளி மாணவர் தனுஷ்குமார் கொலை ஆகியவை குறித்து சில விளக்கங்களை முதலமைச்சர் தெரிவித்தார்.
"ஒரு மாணவன் உயிரிழப்பது வேதனையான சம்பவம். அந்த மாணவனை இழந்த பெற்றோரின் மனவேதனையைப் புரிந்து கொள்ள முடிகிறது. குற்றத்தில் ஈடுபட்ட 36 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை வழங்கப்படும்" என்கிறார் அவர்.
"தண்டனை வழங்குவது மட்டுமே அரசின் நோக்கம் அல்ல" எனக் கூறிய முதலமைச்சர், "மாணவர்கள் குற்றத்தில் ஈடுபடாத அளவுக்கு அவர்களை வழிநடத்துவதும் அவர்களின் குடும்பங்களுடன் இணைந்து செயல்படுவதும் நமது பொறுப்பு" எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "யார் மீது பழிபோடலாம் என அரசியல்ரீதியாக எதிர்க்கட்சியினர் சிந்திப்பதைப்போல 2021 முதல் 2025 நடைபெற்ற குற்ற சம்பவங்களைக் கூறி ஒதுங்குவதற்கு மனம் இடம் தரவில்லை. அப்படிப்பட்ட கீழான அரசியலை செய்ய வேண்டியதில்லை" எனக் கூறினார்.
"போதைப் பொருள் கலாசாரம் கடந்த ஆட்சியாளர்களால் கவனிப்பாரற்று இருந்ததால் வேரூன்றி மரமாக வளர்ந்து நிற்கிறது. இது தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது" எனக் கூறிய முதலமைச்சர், போதைப் பொருள் கடத்தலில் பதிவான வழக்குகள், கைதான நபர்கள் குறித்த விவரங்களைப் பட்டியலிட்டார்.
காவல் மரணம் குறித்துப் பேசிய முதலமைச்சர், "காவல் நிலையத்தில் உயிரிழப்பு ஏற்படுவது சாதாரணமான ஒன்றல்ல. அது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல. காவல்துறை மீதான நம்பிக்கையைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னை ஆகும்" எனக் கூறினார்.
"காவல் மரணங்களை முற்றிலும் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும். காவலர்களின் நலனும் பாதுகாப்பும் முக்கியமான ஒன்று. பணிச் சுமை, மன அழுத்தம், போதிய ஓய்வின்மை போன்றவற்றுக்கு உரிய தீர்வைத் தரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" எனவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தி.மு.கவை கடுமையாக விமர்சித்து முதலமைச்சர் பேசினார்.
"ஒரே பதில் தி.மு.க.. தி.மு.க.. தி.மு.க"
"பெண்களைப் பற்றி அவதூறாக பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும். ஜெயலலிதா ஒரு பெண்ணாக எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பதைக் கேள்விப்படுகிறோம்" என்று அவர் பேசினார். தொடர்ந்து, விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியதை முதலமைச்சர் விமர்சித்தார்.
இதற்கு தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பதில் அளித்த அவைத் தலைவர், "இந்தப் பிரச்னை ஏற்கெனவே அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளேன்" எனக் கூறினார்.
தொடர்ந்து, சர்க்காரியா கமிஷன் மற்றும் கடந்த தி.மு.க ஆட்சியில் அமலாக்கத்துறையின் ஆவணங்களில் உள்ள விவரங்களைக் குறிப்பிட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசினார்.
தொடர்ந்து, தாலிக்கு தங்கம் உள்பட அ.தி.மு.க அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு ரத்து செய்ததாகக் கூறினார். "விலையில்லா லேப்டாப் திட்டத்தை நான்கு ஆண்டுகள் தி.மு.க அரசு ரத்து செய்தது. ஆட்சியின் கடைசி ஆண்டில் லேப்டாப் வழங்கினர்" என்கிறார்.
கடந்த ஐந்தாண்டு தி.மு.க ஆட்சியில் கள்ளச்சாராய சாவுகள், போதைப் பொருள் புழக்கம் அதிகரித்தது போன்றவை மக்கள் மத்தியில் நீங்காமல் உள்ளதாகக் கூறிய அவர், " சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசுவதற்கு முன்னதாக கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நல்லது" என விமர்சித்தார். தொடர்ந்து, "எல்லாவற்றுக்கும் ஒரே பதில் தி.மு.க, தி.மு.க, தி.மு.க" எனப் பேசினார்.
திமுகவினருக்கு அனுமதி மறுத்த அவைத் தலைவர்
இதனை ஏற்க மறுத்த தி.மு.க உறுப்பினர்கள் அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பாக கூடி முழக்கம் எழுப்பினர். அப்போது பேசிய அவைத் தலைவர், "நீங்கள் செய்வது நியாயமா என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விதிகளின்படியே செயல்படுவேன்" எனக் கூறினார்.
முதலமைச்சரின் பதில் உரைக்கு விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பு தருமாறு தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்குப் பதில் அளித்த அவைத் தலைவர், " அவர் (முதலமைச்சர்) பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்திருந்தால் வாய்ப்பளித்திருப்பேன்" எனக் கூறினார்.
"சட்டப்பேரவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தி.மு.க உறுப்பினர்கள் செயல்பட்டு வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, அவை முன்னவர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அப்போது எழுந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், "அனுமதி கொடுங்கள்" என அவைத் தலைவரிடம் தெரிவித்தார். இதனை ஏற்ற அவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், "முதலமைச்சர் கூறிய பிறகு எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கிறேன்" எனக் கூறினார்.
ஆனால், அடுத்த சில நொடிகளில் தனது நிலைப்பாட்டை மாற்றிய அவைத் தலைவர், "பேச அனுமதிப்பதாக இல்லை" எனத் தெரிவித்தார்.
'ரீல்சுக்காக மட்டும் பதில் உரை' - உதயநிதி
"பேரவையில் பேசுவதற்கு வாய்ப்பு தருவதாக முதலமைச்சர் கூறினார். அதன்பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அமைதியாக காத்திருந்தோம்" என்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறிய அவர், "எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக வெளிநடப்பு செய்துள்ளோம்" எனக் கூறினார்.
சட்டசபையில் தவறான கருத்துகளை முதலமைச்சர் பேசியுள்ளதாகக் கூறிய உதயநிதி, "ரீல்சுக்காக மட்டுமே பதிலுரையில் பேசியுள்ளார். சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பது ஊடகங்களுக்குத் தெரியும். எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் திசைமாற்றும் உத்தியைப் பயன்படுத்தியுள்ளார்" என முதலமைச்சரை விமர்சித்தார்.
த.வெ.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாகக் கூறிய உதயநிதி, "அதைப் பற்றி பேசாமல் தி.மு.க மீது வழக்கு உள்ளதாகக் கூறி திசை திருப்புகிறார்" எனக் கூறினார்.
சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களில் உள்ளவற்றை முதலமைச்சர் குறிப்பிட்டது குறித்துப் பேசிய உதயநிதி, "கொலைகள் அதிகரிப்புக்கு பதில் அளிக்காமல் 1970 ஆம் ஆண்டுக்கு சென்றுவிட்டார். அமலாக்கத்துறை கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை" என்கிறார்.
முதலமைச்சர் மீது வருமான வரித்துறை வழக்கு உள்ளதாகக் கூறிய அவர், "எங்களைக் குறை சொல்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை" என விமர்சித்தார்.
பேரவையில் அவைத் தலைவர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாகக் கூறிய உதயநிதி, " நான் 15 கேள்விகள் கேட்டுள்ளேன். அதற்குப் பதில் கூறுவார் என காத்திருந்தேன். 15வது நிமிடத்தில் பொய் குற்றச்சாட்டுகளை வைக்கத் தொடங்கிவிட்டார்" என முதலமைச்சரை சாடினார்.
'போகப்போக சலிப்பு ஏற்பட்டுவிடும்'
முதலமைச்சரின் பேச்சு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், " எல்லாவற்றுக்கும் முந்தைய ஆட்சியாளர்கள் தான் காரணம் எனக் கூறுவது தொடக்க காலத்தில் எடுபடும். ஆனால், போகப் போக இதுபோன்ற வாதங்களில் மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும்" எனக் கூறுகிறார்.
தனது பேச்சில் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் முன்வைத்ததாகக் கூறிய அவர், "மானியக் கோரிக்கையில் பதில் உரைக்குப் பிறகு விவாதம் நடத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை" என்கிறார்.
த.வெ.க ஆதரவாளர்களுக்கு முதலமைச்சரின் பேச்சு உற்சாகத்தைத் தரும் எனக் கூறும் ஷ்யாம், " சட்டப்பேரவை பேச்சை சாதாரண பொதுமக்கள் தற்போதைக்குக் கடந்து செல்வார்கள். ஆனால் போகப் போக த.வெ.க அரசுக்கு சிக்கல் உருவாகலாம்" எனக் குறிப்பிட்டார்.
சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அமலாக்கத்துறை ஆவணங்களை முதலமைச்சர் மேற்கோள் காட்டியதைக் குறிப்பிட்ட மூத்த பத்திரிகையாளர் மாலன், "சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் உள்ளவற்றை முதலமைச்சர் படித்தார். கமிஷனில் கூறப்பட்ட விஷயங்களை வழக்காக கொண்டு செல்வதற்கான வேலையை அடுத்து வந்த அரசு செய்யவில்லை" என்கிறார்.
அரசியலில் த.வெ.கவுக்கும் தி.மு.கவுக்கும் இடையில் மட்டுமே போட்டி என்று தனது பேச்சு மூலம் முதலமைச்சர் திரும்பத் திரும்ப உணர்த்த முயற்சிப்பதாக கூறும் மாலன், "அ.தி.மு.க குறித்து முதலமைச்சர் எதுவும் பேசவில்லை. இதன்மூலம் தி.மு.கவுக்கு எதிரான அரசியலை மட்டும் மையப்படுத்துவதாகப் பார்க்கலாம்" என்கிறார்.
பேரவையில் அவைத் தலைவரின் செயல்பாடுகளை விமர்சித்த ஷ்யாம், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பெரிதும் பாராட்டைப் பெற்ற அவைத் தலைவர் ஒரேநாளில் நற்பெயரை இழந்துவிட்டது வருத்தம் அளிப்பதாகக் கூறினார்.
இதனை மறுத்துப் பேசும் மூத்த பத்திரிகையாளர் மாலன், "அமைதியாக இருந்தால் வாய்ப்பு கொடுப்பதாக அவைத் தலைவர் கூறினார். அவ்வாறு கொடுக்க முன்வந்தபோது அவரைத் தூண்டும் விதமாக எதிர்க்கட்சியினர் ஏதோ கூறியுள்ளனர். இதனால் பேசுவதற்கான வாய்ப்பை அவர் மறுத்துவிட்டார்" எனத் தெரிவித்தார்.
தவெக கூறியது என்ன?
"ஆட்சியின் மீது எந்த விமர்சனங்களும் இல்லை" என்கிறார், த.வெ.க தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் சத்தியகுமார். பிபிசியிடம் பேசிய அவர்,"100 நாளில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்துள்ளோம்" என்றார்.
அமலாக்கத்துறை கூறியது குற்றச்சாட்டுகளாக மட்டுமே உள்ளதாக உதயநிதி கூறியுள்ளது குறித்து பேசிய அவர், "அமலாக்கத்துறை அனுப்பிய அறிக்கை மீது தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு