'முஸ்லிமாக மதம் மாறிய இந்து இட ஒதுக்கீடு பெற முடியாது' - நீதிமன்ற தீர்ப்பும் பின்னணியும்

மதம் மாறிய இஸ்லாமியருக்கு சாதிச் சான்று வழங்கும் அரசாணை ரத்து
படக்குறிப்பு, சமீர் அகமது
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BC muslim) என்ற அந்தஸ்தைக் கோர முடியாது. அவர் வெறும் முஸ்லிம் மட்டுமே (just a Mussalman)' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு ஜூன் 25 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.

'மதம் மாறியவர்கள் அப்படியொரு அந்தஸ்தைக் கோருவதற்கு அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டு அரசாணை, அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது' என்று கூறி நீதிபதிகள் அதனை ரத்து செய்துள்ளனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை, 'சமூகநீதிக்கு எதிரானது' என, இஸ்லாமிய அமைப்புகள் விமர்சித்துள்ளன.

'தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும்' என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

என்ன நடக்கிறது?

வழக்கின் பின்னணி

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன்-கோமதி அம்மாள் தம்பதியின் மகன் பரமசிவம், 2015 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். அவருக்கு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் கயத்தார் சுன்னத் ஜமாத் அமைப்பினர் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

தனது பெயரை சமீர் அகமது என அவர் மாற்றிக் கொண்டதாக, சுன்னத் ஜமாத் அமைப்பினர் அளித்த சான்றிதழில் கூறப்பட்டுள்ளது. 2.11.2016 அன்று வெளியான அரசிதழில் இந்த விவரம் இடம் பெற்றுள்ளது.

அதே ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வதிதா என்பவரை இஸ்லாமிய சடங்குகளின்படி சமீர் அகமது திருமணம் செய்து கொண்டார். "இஸ்லாம் மார்க்கம் பிடித்திருந்தந்தால் என் மனைவியும் என்னைப் பின்தொடர்ந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார்" என்கிறார், சமீர் அகமது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைஸராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பத்து மற்றும் ஒன்பது வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

"பெற்றோரின் சான்றிதழ்களை வைத்து தான் குழந்தைகளுக்கு வகுப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. நாங்கள் முஸ்லிம் லெப்பை சமூகத்தின் நடைமுறையைப் பின்பற்றுவதால் வகுப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தேன்" என பிபிசி தமிழிடம் சமீர் அகமது தெரிவித்தார்.

கயத்தார் வட்டாட்சியரிடம் 2020 ஆம் ஆண்டு வகுப்புச் சான்றிதழ் கோரி சமீர் அகமது விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

'வட்டாட்சியரின் நடவடிக்கை சட்டவிரோதமானது' எனக் கூறி தனக்கு முஸ்லிம் லெப்பை என்பதற்கான சான்றிதழை வழங்குவதற்கு உத்தரவிடுமாறு 2022ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சமீர் அகமது ரிட் மனுத்தாக்கல் செய்தார்.

வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வு, கடந்த ஜூன் 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

'நாராயணனின் மகனான பரமசிவம் சமீர் அகமதுவாக மாறுவது என்பது இந்திய அரசியமைப்பின் 25வது பிரிவின்கீழ் (Right to Freedom of Religion) தனி நபர் தனது அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், மதம் மாறிய பிறகும் இடஒதுக்கீட்டை தொடர்ந்து கோரும்போது அந்தக் கோரிக்கையில் உள்ள நியாயம் மற்றும் சட்டப்பூர்வத்தன்மை குறித்த மற்றொரு விவாதத்துக்கு வழிவகுப்பதாக, தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதம் மாறிய இஸ்லாமியருக்கு சாதிச் சான்று வழங்கும் அரசாணை ரத்து

பட மூலாதாரம், Getty Images

2024-ம் ஆண்டு அரசாணை கூறுவது என்ன?

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை கடந்த 9.3.2024 அன்று அரசாணை (எண் 31) ஒன்றை வெளியிட்டது.

'அந்த அரசாணையின் அடிப்படையில் தனக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்' என மனுதாரர் கூறுவதில் நியாயம் உள்ளதாகக் கூறிய நீதிபதிகள், அரசாணையை தாங்கள் ஆய்வு செய்ததாகத் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

அரசாணையில், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் அல்லது பட்டியல் சாதி பிரிவுகளில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களை 'பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BCM)' என வகைப்படுத்தி சான்றிதழ் வழங்குவது குறித்துக் கூறப்பட்டுள்ளது.

அந்த ஆணையில், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் சட்டம் 2007 என்பது கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மற்றும் மாநிலத்தின்கீழ் உள்ள பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்கிறது.

அதன்படி, தமிழ்நாடு சட்டம் 45/1994, பிரிவு 3(a)படி சில பிரிவினரை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதில், ஏழு பிரிவினர் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அன்சார் (Ansar)
  • தெக்கானி முஸ்லிம்கள் (Dekkani Muslims)
  • துதேகுலா (Dudekula)
  • லெப்பைகள் (Labbais ) (ராவுத்தர் மற்றும் மரைக்காயர் உள்பட - இவர்களின் பேச்சுமொழி தமிழ் அல்லது உருது என இருந்தாலும்)
  • மாப்பிள்ளா (Mapilla)
  • ஷேக் (Sheik)
  • சையத் (Syed)

'தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கருத்துகளைப் பரிசீலித்த பிறகு இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களை 3.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் ஆக கருதலாம்' என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட ஏழு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் மதம் மாறியதன் அடிப்படையில் 'பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்' என வகுப்புச் சான்றிதழை வழங்கலாம் எனவும் அரசாணை தெரிவிக்கிறது.

'ஆனால், நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தும்போது இந்த அரசாணை நிலைத்து நிற்காது' என, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வு தீர்ப்பில் கூறியுள்ளது.

மதம் மாறிய இஸ்லாமியருக்கு சாதிச் சான்று வழங்கும் அரசாணை ரத்து

பட மூலாதாரம், Getty Images

அரசுத் தரப்பு வாதம் என்ன?

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமீர் அகமது தரப்பில் வாதத்தை முன்வைத்தார்.

அவர் வாதிடும்போது, "அரசாணை தன்னிச்சையாக பிறப்பிக்கப்படவில்லை. இதில் தொடர்புடைய தரப்பினருடன் கூட்டம் நடத்தப்பட்டு விரிவான ஆலோசனைகளுக்குப் பின்னரே ஆணையம் தனது பரிந்துரையை வழங்கியது" எனத் தெரிவித்தார்.

"முன்னேறிய சாதியைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அவருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற அந்தஸ்து கிடைக்காது. ஏற்கெனவே இடஒதுக்கீட்டுப் பலனைப் பெற்று வந்தவர்கள் இஸ்லாத்துக்கு மாறுவதால் அந்தப் பலனை இழக்க மாட்டார்கள்" எனவும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

"இதன் காரணமாக சமூக சமநிலை பாதிக்கப்படாது" எனக் கூறிய அவர், "மதம் மாறிய நபரை குறிப்பிட்டுள்ள ஏழு பிரிவுகளில் ஒன்றில் ஏற்றுக் கொள்வது என்பது சம்பந்தப்பட்ட ஜமாத் நிர்வாகத்தின் பொறுப்பு" எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு சான்றிதழை ஜமாத் வழங்கிய பிறகு அதனை வருவாய்த்துறை அதிகாரிகள் கேள்விக்குள்ளாக்க முடியாது எனவும் நீதிமன்றமும் அதை மறுஆய்வு செய்வது நியாயமானதாக இருக்காது எனவும் அவர் கூறினார்.

'இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் அனைவரையும் பின்தங்கிய வகுப்பு (BC) பிரிவின்கீழ் சேர்க்காமல் தமிழ்நாடு அரசு கவனத்துடனும் சரியாகவும் செயல்பட்டுள்ளது' என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

1951ஆம் ஆண்டு தீர்ப்பு கூறுவது என்ன?

"இத்தகைய நிலைப்பாடு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது இந்த வழக்கின் முக்கியமான கேள்வியாக உள்ளது" என, நீதிபதிகள் கூறினர்.

இதுதொடர்பாக, 1951 ஆம் ஆண்டில் ஜி.மைக்கேல் எதிர் எஸ்.வெங்கடேஸ்வரன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.ராஜமன்னார் மற்றும் டி.எல்.வெங்கடராம ஐயர் வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மேற்கோள் காட்டியுள்ளது.

வழக்கின் தீர்ப்பில், 'ஓர் இந்து இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது அவர் வெறும் முஸ்லிமாக (just a Mussalman) மட்டுமே கருதப்படுகிறார். மதம் மாறுவதற்கு முன்பு அவர் சார்ந்திருந்த சாதி, இஸ்லாம் சமூகத்தில் அவரது இடத்தைத் தீர்மானிப்பதில்லை' எனக் கூறியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது உட்பிரிவைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது அவர் எந்தவொரு சாதியையும் சாராதவராக உள்ளதாக, 1951 ஆம் ஆண்டு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது. ஜி.மைக்கேல் வழக்கின் தீர்ப்பு இஸ்லாமிய இறையியலுடன் இணக்கமாக உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

மதம் மாறிய இஸ்லாமியருக்கு சாதிச் சான்று வழங்கும் அரசாணை ரத்து

பட மூலாதாரம், Getty Images

'குர்ஆன் கட்டளைகளுக்கு முரணானது'

உச்ச நீதின்றத்தில் 2024-ஆம் ஆண்டில் சி.செல்வராணி எதிர் சிறப்புச் செயலர், மாவட்ட ஆட்சியர் வழக்கில் இந்தத் தீர்ப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள நீதிபதிகள், தமிழ்நாடு வெளியிட்ட அரசாணைக்குப் பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இந்து மதத்தின் உள்ளார்ந்த அம்சமாக சாதி அமைப்பு உள்ள நிலையில், மாறாக தங்கள் மதம் சமத்துவத்தைப் போதிப்பதாக கிறிஸ்துவ, இஸ்லாமிய மதப்போதகர்கள் பல ஆண்டுகளாகப் பேசி வருவதாக, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வு கூறியுள்ளது.

சில பிரிவுகளை 'பிற்படுத்தப்பட்டவை' என்றும் மற்ற பிரிவுகளை 'முன்னேறியவை' என வகைப்படுத்துவது குர்ஆன் கட்டளைகளுக்கு முரணானது, என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

'சமத்துவ சமூகத்தை உருவாக்கவே இஸ்லாம் மதம் விரும்புகிறது. அங்கு சமூகப் படிநிலைகள் இல்லை. இறைவனின் பார்வையில் அனைவரும் சமம். ஆனால், வரலாற்றுரீதியான காரணங்களால் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்' எனத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

'பிறப்பால் சாதி தீர்மானிக்கப்படுவதைப் போல, ஒரு நபர் பிறப்பால் ராவுத்தர், மரைக்காயர், தெக்கானி முஸ்லிம் என அறியப்படுகிறார். ஒருவரை 'ராவுத்தர் முஸ்லிம்' ஆக மாற்ற முடியும் என்று கூறுவது அபத்தமானது' எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

'அரசியலமைப்புக்கு முரணான அரசாணை'

அரசியலமைப்பில் ஆழமாக வேரூன்றிய கொள்கையாக அதிகாரப்பகிர்வு உள்ளதாகக் கூறியுள்ள நீதிபதிகள், 'சட்டத்தின் ஆட்சியில் இவை இன்றியமையாத அங்கமாகும்' எனத் தெரிவித்துள்ளனர்.

'இந்தக் கொள்கை, நீதிமன்றங்களின் இறுதித் தீர்ப்புகளுக்குப் பொருந்தும். நீதிமன்றத்தின் எந்தவொரு தீர்ப்பையும் செல்லாதது என்றோ பயனற்றது என்றோ சட்டப்பேரவையால் அறிவிக்க முடியாது' எனத் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்பை மீறிச் செயல்படுவதன் மூலம் நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தின் செயல்பாட்டை மாநில அரசு செயலிழக்கச் செய்தால் அது சட்டத்தின் ஆட்சிக்கே முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

'அரசாணை சட்டவிரோதமானது என்று கண்டறியும் பட்சத்தில் அதை அவ்வாறே அறிவிப்பது நீதித்துறையின் கடமை. அதன்படி, அரசின் அரசாணை அரசியலமைப்புக்கு முரணானது' என்று கூறி 2024-ஆம் ஆண்டு அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்வதாக அறிவித்தனர்.

மதம் மாறிய இஸ்லாமியருக்கு சாதிச் சான்று வழங்கும் அரசாணை ரத்து
படக்குறிப்பு, ஜவாஹிருல்லா

'பயன்படுத்த முடியாத நிலை'

"இந்த தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை" எனக் கூறுகிறார், சமீர் அகமதுவின் மனைவி வதிதா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பழைய சாதிச் சான்றிதழ்படி இடஒதுக்கீட்டை எங்களால் பயன்படுத்த முடியாது. இஸ்லாம் சமூகத்தின் இடஒதுக்கீட்டையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது" எனக் கூறினார்.

"வட்டாட்சியர் அலுவலத்துக்கு நடந்தே சலித்துவிட்டோம். 'எங்கள் மார்க்கம் இதுதான்' எனக் காட்டுவதற்கு நானும் வட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். ஆனால், எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை" என்கிறார் அவர்.

"இந்த விவகாரத்தில் சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்கிறார், சமீர் அகமது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பு இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

'வருத்தமளிக்கும் தீர்ப்பு' - ஜவாஹிருல்லா

இந்த தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைப் புறக்கணிக்கக் கூடிய வருத்தமளிக்கும் ஒன்று என்று கூறுகிறார், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா.

இஸ்லாமிய மதத்தைத் தழுவியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என சான்றிதழ் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து 2022, 2023, 20024 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பேரவையில் வலியுறுத்தியதாகவும் பிபிசி தமிழிடம் அவர் குறிப்பிட்டார்.

"இதன் தொடர்ச்சியாக 2024 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு பிசிஎம் (BCM) வகுப்பு சான்றிதழ் கிடைத்தது" என்கிறார், ஜவாஹிருல்லா.

"தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் பெரிய அமர்வில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பாதுகாக்க வேண்டும்" என்கிறார் அவர்.

'தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு மேல்முறையீடு செய்யும்' என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு