கோடைக் காலம் நீள்வதால் 'அதிகரிக்கும் மின்சாரத் தேவை' தமிழ்நாடு அரசுக்கு சவாலாகிறதா?

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக தமிழ்நாட்டின் மின்சார அமைப்புக்கு நிம்மதியளிக்கும் காலமாக செப்டம்பர் இருந்து வந்தது. தென்மேற்குப் பருவமழையால் சில பகுதிகளில் மழை கிடைக்கும். இரவு நேரங்களில் வெப்பநிலை குறையும். இதனால் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட குளிர்விக்கும் சாதனங்களின் பயன்பாடும் குறையும். ஆனால் இந்த ஆண்டில் கோடை வழக்கத்திற்கு மாறாக நீள்வதால், மின் அமைப்பில் சுமை கூடியுள்ளது.
இந்த கோடைக் காலம் இயல்புக்கு மாறான ஒன்றுதான் என்கிறார் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன்னாள் பொறியாளரும், தமிழ்நாடு மின் பொறியாளர் அமைப்பின் தலைவருமான சா.காந்தி.
அதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், "நமது மொத்த மின்சாரத் தேவை ஏப்ரல், மே மாதங்களில் 21 ஆயிரம் மெகாவாட் வரை செல்லும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மின் தேவை சுமார் 22 ஆயிரத்தைத் தொட்டது, அதைச் சமாளித்துவிட்டோம். செப்டம்பர் மாதத்தில் மின்சாரத் தேவை 19 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மெகாவாட் வரை இருந்தது" என்றார்.
அதே தேவை, தமிழ்நாடு மின்சாரத் துறையின் தகவல்படி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 16,000 முதல் 17,000 மெகாவாட் அளவில் இருந்தது. செப்டம்பர் மாதத்தில் இந்த அளவுக்கு அதிகமான தேவை இருப்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில், மின்தேவை பொதுவாக கோடையின் உச்சத்தைத் தொட்டு, பின்னர் குறையத் தொடங்கும்.
இந்த ஆண்டு அது குறையவில்லை. கோடை நீடிப்பதால் மின் தேவை அதிகரிக்கிறது. அதேநேரம், மின்சார உற்பத்தியிலும், விநியோகத்திலும் சிரமங்கள் ஏற்படுகின்றன. சில மாவட்டங்களில் மின்வெட்டு குறித்த புகார்கள், போராட்டங்கள் ஏற்பட்டுள்ளன.
மின்சாரத் துறை தரவுகளின்படி, செப்டம்பர் 10ஆம் தேதி சென்னையின் உச்ச மின்தேவை 4,469 மெகாவாட்டை எட்டியது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அது 3,884 மெகாவாட்டாக இருந்தது. இதுபோன்ற சூழலில் உச்ச நேரத் தேவையை சமாளிப்பதற்காக மின்சார உற்பத்தி நிலையங்களையும் கூடுதல் திறனில் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகிறது.
"பேசின் பிரிட்ஜ் எரிவாயு மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயக்கப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டுகளாக இயங்காமல் இருந்த இந்த நிலையம், உச்சநேரத் தேவையைச் சமாளிக்க தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்டது" என்று மின்சாரத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதே போல திருச்சியில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் தெளிவாகத் தெரிந்தது. செப்டம்பர் 5ஆம் தேதி அங்கு 40.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் கூறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் மாதத்தில் திருச்சியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலைகளில் இது மிக உயர்ந்த அளவு. இதனால் அதே நேரத்தில், திருச்சியின் மின்தேவை சுமார் 550 மெகாவாட்டை எட்டியதாக மின்சாரத் துறை பதிவு செய்துள்ளது.
கோடைகால உச்சத் தேவை சுமார் 600 மெகாவாட் என்ற நிலையில், செப்டம்பர் மாதத்தில் இந்த அளவை நெருங்குவது குறிப்பிடத்தக்கது. தரவுகளின்படி, வழக்கமாக இந்தக் காலகட்டத்தில் திருச்சியின் மின்தேவை 400 முதல் 450 மெகாவாட் அளவில் இருக்கும்.
'மின் தேவை மட்டுமே பிரச்னை இல்லை'
ஆனால் தமிழ்நாட்டின் தற்போதைய மின்சார அழுத்தத்தைப் புரிந்துகொள்ள, மின்தேவை அதிகரித்து இருப்பதை மட்டும் பார்க்க முடியாது. மாநிலத்தின் மின்சாரக் கலவையில் காற்றாலை மின்சாரத்திற்கு முக்கிய இடம் உள்ளது. குறிப்பாக தென்மேற்குப் பருவமழைக் காலத்துடன் தொடர்புடைய காற்றின் வேகம் மற்றும் காற்றாலை உற்பத்தி மாநிலத்தின் மின்சார உற்பத்தியில் தாக்கம் ஏற்படுத்துகின்றன.
இந்த ஆண்டு சில காலகட்டங்களில் காற்றின் வேகம் குறைந்து இருப்பதாகவும், இதனால் காற்றாலை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காற்றாலை மின்சாரம் கிடைப்பதில் பிரச்னை இல்லை என்று சா.காந்தி கூறினார். "தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை காற்றாலை மின்சாரம் கிடைக்கும். பொதுவாக அந்தக் காலகட்டத்தில் வெளிச்சந்தை கொள்முதல் இருக்காது. இந்த ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வழக்கம் போல காற்றாலை மின் உற்பத்தி இருந்தது. சில நாட்கள் மட்டுமே காற்றாலை மின்சாரம் குறைந்துள்ளது. அதில் பிரச்னையில்லை."

பட மூலாதாரம், Getty Images
மாற்று வழிகளில் மின் உற்பத்தியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன். "செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் காற்றின் வேகம் குறையும் என்பது புதிய விஷயமே இல்லை. இதற்கு மின்சாரத் துறை தயாராக இருந்திருக்க வேண்டும்" என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும் அவர் மின் சேமிப்பில் கவனம் தேவை என்றும் கூறினார்.
அவரது கூற்றுப்படி, "ஒரு மெகாவாட் சேமிப்பதற்கான செலவைவிட ஒரு மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான செலவு இரண்டு-மூன்று மடங்கு அதிகம்."
பசிபிக் பெருங்கடலின் பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் நிகழ்வான எல் நினோ, உலகளாவிய வளிமண்டல சுழற்சியில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. இந்திய பருவமழையிலும் எல் நினோ தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இந்த ஆண்டு மிதமான எல் நினோ நிலை நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பருவமழை மற்றும் வெப்பநிலை நிலவரத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு காரணியாக உள்ளது.
வெளிச்சந்தையில் அரசு மின்சாரம் வாங்குகிறதா?
இந்திய அளவிலும் செப்டம்பர் மாதத்தில் மின்தேவை வழக்கத்தைவிட அதிகமாக நீடித்துள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி நாட்டின் உச்ச மின்தேவை சுமார் 269 ஜிகாவாட்டை எட்டியது.
பொதுவாக இந்தக் காலகட்டத்தில் மின்தேவை குறையத் தொடங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, அதிக வெப்பநிலை, குறைவான மழை, விவசாய பாசனத் தேவை, பொருளாதார நடவடிக்கைகள் தொடர்வது உள்ளிட்ட காரணிகளால் தேவை உயர்ந்துள்ளது.
இந்த இடைவெளியை நிரப்ப வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாநிலத்தின் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கூறுகிறார். "தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் சராசரியாக ஒரு யூனிட்டுக்கு சுமார் ரூ.20 என்ற விலையில் வாங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் 2000 மெகாவாட் மின்சாரத்தைக் குறுகிய கால கொள்முதல் மூலம் ஏற்பாடு செய்துள்ளதாகவும்" கூறினார்.

அனல் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்கிறார் சா.காந்தி. இது தொடர்பாக விரிவாகப் பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 5,700 மெகாவாட்டுக்கும் கூடுதலான மின் உற்பத்தி வாய்ப்பு உள்ளபோது நாம் 3 ஆயிரம் மெகாவாட்டுக்கு கூடுதலாக மட்டுமே வாங்குகிறோம். சுமார் 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்வதில்லை. அது ஏனென்றே தெரியவில்லை."
"சில குறுகிய கால ஒப்பந்தங்களில் வாங்க வேண்டிய மின்சாரத்தையும் முழுமையாக வாங்கவில்லை. பணம் செலுத்திய பிறகும் அதை வாங்குவதில்லை. எனவே ஒரு யூனிட் தயாரிப்புக்கு சுமார் 4.50 காசு ஆகும் வழியில் வாங்காமல். அதை ஏன் அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டும்?" மேலும், சில நேரங்களில் முன்பே அறிவித்து மின்வெட்டை அமலாக்கினால் தவறில்லை என்கிறார் சா. காந்தி.
"அதிக பணம் கொடுப்பதைக் குறைக்க சில மணிநேரம் மின்வெட்டு என முடிவெடுத்து அமலாக்கினாலும் தவறில்லையே. ஏன் அதிக விலைக்கு வாங்க வேண்டும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மின்வெட்டு புகார்கள்
சில மாவட்டங்களில் மின்வெட்டு குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன. திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே மின்வெட்டைக் கண்டித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மின்வெட்டு குறித்த புகார்களுக்கு செய்தியாளர் சந்திப்பின்போது பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "ஒவ்வொரு மின்வெட்டும் மொத்த மின்சாரப் பற்றாக்குறையால் மட்டுமே ஏற்படுவதாகக் கூற முடியாது. விநியோகக் கட்டமைப்பு, உள்ளூர் கோளாறுகள், பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட காரணங்களும் மின்தடைக்குக் காரணமாக இருக்கலாம்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































