'40 அடி நீள' உணர்கொம்புகளுடன் பேருந்து அளவிலான ஜெல்லிமீன்

பட மூலாதாரம், Iestyn Morgan
- எழுதியவர், ஆஸ்கார் எட்வர்ட்ஸ் மற்றும் பால் பிகோட்
- பதவி, பிபிசி வேல்ஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பிரிட்டனின் வேல்ஸ் கடலில் நீருக்கடியில் பிரம்மாண்டமான ஜெல்லிமீன் ஒன்றைப் பார்த்த டைவர் ஒருவர், "என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்பவே முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
பெம்ப்ரோக்ஷையரைச் சேர்ந்த இயெஸ்டின் மோர்கன், அந்த லயன்ஸ் மேன் ஜெல்லிமீன் "ஒரு பேருந்தின் நீளத்துக்கு" இருந்ததாகவும், அதன் அளவு சுமார் 10 முதல் 15 மீட்டர் (32 அடி 8 அங்குலம் முதல் 49 அடி 2 அங்குலம்) இருந்ததாகவும் கூறினார்.
21 வயதான அந்த நபர், "நமது கடல்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சமூக ஊடகங்களுக்கான காணொளிகளைப் பதிவு செய்து வருவதாக" கூறினார்.
வேல்ஸில் தான் பார்த்த முதல் லயன்ஸ் மேன் ஜெல்லிமீன் இதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்காட்லாந்தை ஒட்டியுள்ள குளிர்ச்சியான கடல் பகுதிகளில் அதிகம் காணப்படும் இந்த ஜெல்லிமீனின் கொடுக்கு "கடுமையாக வலியை ஏற்படுத்தக்கூடியது" என்றாலும், அது ஆபத்தானது அல்ல என்று கடல் உயிரியல் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Iestyn Morgan
பெம்ப்ரோக்ஷையரில் உள்ள ட்ரெஃபின் கடற்கரை அருகே தான் நீந்திக்கொண்டிருந்தபோது, நீரில் அந்த ஜெல்லி மீனின் உணர்கொம்புகளைக் கண்டதாக மோர்கன் கூறினார்.
"மூன்று பத்தாக ஆனது, பின்னர் இருபதாக ஆனது. அவை தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன" என்று அவர் கூறினார்.
அந்த ஜெல்லி மீன் மிகவும் பெரியதாக இருந்ததால், அதன் உணர்கொம்புகள் "கண்ணுக்குத் தெரியும் எல்லைக்கு அப்பால்" நீண்டிருந்தன.
ஆரம்பத்தில், அது பிரிட்டன் கடல் பகுதிகளில் இயற்கையாகக் காணப்படும் காம்பஸ் ஜெல்லிமீன் என்று அவர் நினைத்தார்.
ஆனால், அது அதைவிடப் பெரியதாக இருப்பதை உணர்ந்தார்.
"அது ஒரு பேருந்து அல்லது சிறிய ரயிலின் நீளமாக இருந்திருக்க வேண்டும். அது எவ்வளவு பெரியதாக இருந்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை."
லயன்ஸ் மேன் ஜெல்லிமீனுக்கு அதன் நீண்ட உணர்கொம்புகளின் காரணமாக இந்தப் பெயர் வந்ததாகவும், அதற்கு "சிங்கத்தைப் போன்ற அழகும் கடிக்கும் தன்மையும்" இருப்பதாகவும் வைல்ட்லைப் டிரஸ்ட்ஸ் தெரிவித்துள்ளது.
இவை 3 மீட்டர் (9 அடி 8 அங்குலம்) வரை நீளமாக வளரக்கூடும். ஆனால், இரையைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும் அதன் உணர்கொம்புகள் 30 முதல் 36.5 மீட்டர் (98 அடி 4 அங்குலம் முதல் 119 அடி 8 அங்குலம்) வரை நீளமாக இருக்கலாம். இதனால், பூமியில் உள்ள மிக நீளமான உயிரினங்களில் ஒன்றாக இது உள்ளது.
சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல்சார் உயிரியல் நிபுணர் முனைவர் கேத்தி லூகாஸ், மோர்கன் எடுத்த காணொளி அந்த உயிரினத்தின் வியக்கத்தக்க நீளத்தைக் காட்டுவதாகக் கூறினார்.
"அதன் உணர்கொம்புகள் மிகவும் நீளமாகவும் மெல்லியதாகவும் இருப்பதால், அவற்றை நீங்கள் பார்க்காமல்கூட இருக்கலாம்" என்று கூறிய அவர், ஸ்காட்லாந்தில் கள ஆய்வின்போது, ஜெல்லிமீன்கள் எதுவும் அருகில் இல்லாதபோதும், அவற்றின் உணர்கொம்புகளின் சிறு துண்டுகள் தங்கள் மீது பட்டதாக டைவர்கள் கூறியதை நினைவுகூர்ந்தார்.
"அவை உடலில் இருந்து பிரிந்த பிறகும் கொட்டும் தன்மை கொண்டவை" அது "கடுமையாக வலியை ஏற்படுத்தக்கூடியது" என்றும், "பிரிட்டனில் மிகவும் மோசமானது" என்றும் கூறிய அவர், அது ஆபத்தானது அல்ல என்றும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Iestyn Morgan
"அவற்றைத் தொட வேண்டாம் என்றும், உங்கள் தோலில் அதன் முள்ளெலும்புப் பகுதி பட்டால், ஒரு குச்சியால் அதைத் தட்டிவிட்டு, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்." என்று அவர் கூறினார்.
பொதுமக்கள் பதிவு செய்த ஜெல்லிமீன் காட்சி குறித்த தகவல்களின் அடிப்படையில், கோடையின் பிற்பகுதியிலோ அல்லது இலையுதிர் காலத்திலோ லயன்ஸ் மேன் ஜெல்லிமீன்கள் "எப்போதாவது" வேல்ஸ் கடற்கரையை அடைவதாக லூகாஸ் கூறினார். ஆனால், பிரிட்டனில் அவற்றின் முக்கிய வாழ்விடம் ஸ்காட்லாந்து என்று அவர் தெரிவித்தார்.
அவை வேல்ஸில் இருப்பதற்கு நாம் "நன்றியுடன்" இருக்க வேண்டும் என்று மோர்கன் கருதுகிறார். சிலர் நினைப்பதைப் போல அவை "பெரிய பயமுறுத்தும் அரக்கர்கள்" அல்ல என்றும் அவர் கூறினார்.
"அவற்றுக்குள் நீந்திச் செல்வது தான் உங்களுடைய மிகப்பெரிய பிரச்னை. லயன்ஸ் மேன் ஜெல்லிமீனால் கொட்டப்படுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள்."
தான் காணொளி எடுத்துக்கொண்டிருந்தபோது, வேல்ஸ் கடல் பகுதிகளுக்குள் "மேலும் மேலும்" ஜெல்லிமீன்கள் வருவதைப் பார்த்ததாக மோர்கன் கூறினார்.
"வெப்பமான நீரில் வாழும் உயிரினங்கள் 'அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன' என்பதை நான் கவனித்து வருகிறேன்" என்று அவர் கூறினார்.
"இதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு என்னிடம் போதுமான கோடைகால அனுபவங்கள் இல்லை. ஆனால், சில வாரங்களுக்கு முன்பு நான் ஒரு கேமராவை வைத்தபோது, மத்தியதரைக் கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட டிரிகர்ஃபிஷ் ஒன்றைப் பார்த்தேன்" என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Iestyn Morgan
தான் உருவாக்கும் உள்ளடக்கம் "மிகவும் திருப்தியளிப்பதாக" இருப்பதாக மோர்கன் கூறினார். நீர்வாழ் சூழல்களை மக்களுக்கு "எளிதில் அணுகக்கூடியதாக" மாற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், தனது திட்டத்தின் ஒரு பகுதியாக விலங்குகளுக்கு ஒருபோதும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதில் தான் எப்போதும் கவனமாக இருப்பதாக அவர் கூறினார்.
"விலங்குகளை வேட்டையாடுவதற்காக நான் செல்கிறேன் என்ற நிலைக்கு இதை ஒருபோதும் கொண்டு செல்ல விரும்பவில்லை" என்று கூறிய அவர்,
"நான் தண்ணீருக்குள் சென்று, படம் எடுத்து, நீந்துகிறேன்"என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































