You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தர பிரதேசம்: பூஜையின் போது மனைவி, மகன், 2 பூசாரிகள் சுட்டுக் கொலை; வரவழைக்கப்பட்ட கமாண்டோ படை - அடுத்து என்ன நடந்தது?
- எழுதியவர், கெளரவ் குல்மோஹர்
- பதவி, பிபிசி இந்தி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
(கட்டுரையில் உள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)
உத்தரப் பிரதேச மாநிலம் அசம்கர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
அசம்கர் மாவட்டத்தின் அஹரௌலா காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஷம்புபூர் கிராமத்தில், அரவிந்த் சிங் என்பவர் தனது வீட்டுக்கு ஐந்து நாள் காயத்ரி மந்திர பூஜை செய்வதற்காக வந்திருந்த இரண்டு பூசாரிகள், தனது மனைவி, மகன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அரவிந்த் சிங்கின் வயது முதிர்ந்த தாயார் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியபோது, "வீட்டில் காயத்ரி மந்திர பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது" என்றார்.
கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் நடைபெறவிருந்த இந்த ஆன்மீகச் சடங்கின் நான்காம் நாளில், அரவிந்த் சிங்குக்கும் அந்தச் சடங்கில் பங்கேற்ற பூசாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையின் தகவலின்படி, "அரவிந்த் சிங் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் பூசாரிகளைத் தாக்கினார்; பூசாரிகளைக் காப்பாற்ற வந்த அவரது மனைவியும் சுடப்பட்டு உயிரிழந்தார்."
காவல்துறையின் கூற்றுப்படி, "இதனைத் தொடர்ந்து அவர் தனது மூன்று குழந்தைகளுடன் ஒரு அறைக்குள் தன்னைத் அடைத்துக் கொண்டார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல்துறை கமாண்டோக்களையும் வரவழைத்தது."
"தோராயமாக ஏழு மணி நேரம் நீடித்த இந்த முற்றுகைக்குப் பிறகு, காவல்துறையினர் அந்த அறைக்குள் நுழைய முயன்றனர்" என்று காவல்துறை கூறுகிறது.
மேலும், "இந்தச் சமயத்தில் அரவிந்த் ஒரு குழந்தையைச் சுட்டதுடன், காவல்துறையினர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்" என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் ஊடகங்களிடம் கூறுகையில், "காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்ததும், குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தைகளை வீட்டின் ஒரு அறைக்குள் பூட்டிவிட்டு, காவல்துறையினரையும் குடும்ப உறுப்பினர்களையும் சுட்டுவிடுவதாக மிரட்டினார். அவர் தனது மகனைச் சுட்டதுடன் காவல்துறையினர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினார். சுய பாதுகாப்புக்காகவும், குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகவும் காவல்துறை தற்காப்புத் தாக்குதல் நடத்தியது. படுகாயமடைந்த குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது மகனும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்" என்றார்.
முழு விவகாரம் என்ன?
அசம்கர் காவல்துறையின் தகவலின்படி, அரவிந்த் சிங் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் தனது வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவரது மனைவி பபிதா சிங் மற்றும் இரண்டு பூசாரிகள் அங்கு உடனிருந்தனர்.
அசம்கர் ஊரகப் பகுதி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) சிராக் ஜெயின், பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "அரவிந்த் கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கிராம மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். அவர் அதிகக் கோபமுடனும் சண்டை போடும் இயல்புடனும் மாறியிருந்தார். அவர் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகி, அதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்தச் சூழலில்தான், அவரது மனைவி வீட்டுக்காக ஐந்து நாள் சிறப்புச் சடங்கை நடத்தி வந்தார்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "நான்காம் நாளான அன்று, அரவிந்த் சிங்குக்கு திடீரென என்ன தோன்றியதோ தெரியவில்லை, அவர் அங்கிருந்த பண்டிதர்களிடம் அவர்கள் யார், எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்கத் தொடங்கினார். மேலும் அவர்களைத் திட்டவும் செய்தார். அவரது மனைவி அவரைத் தடுக்க முயன்றபோது, அவர் மீதும் துப்பாக்கியால் சுட்டார். பண்டிதர்கள் தடுத்தபோதும் அவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அந்தப் பண்டிதர்களில் ஒருவர் சுவர் ஏறிக் குதித்துத் தப்பியோடிவிட்டார்" என்றார்.
காவல்துறையின் தரப்பில் உயிரிழந்த பூசாரிகள் மகேந்திர பதக் மற்றும் அகிலேஷ் மிஸ்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூன்று பேரைக் கொலை செய்த பிறகு, அரவிந்த் தனது மூன்று குழந்தைகளையும் வீட்டின் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று உள்ளிருந்து கதவைப் பூட்டிக்கொண்டார்.
தகவல் அறிந்ததும் பெருமளவிலான காவல்துறையினர் கிராமத்துக்கு வந்து வீட்டைச் சுற்றி வளைத்தனர், ஆனால் அவர் அறையிலிருந்து வெளியே வர மறுத்துவிட்டார். இந்த முற்றுகை நீண்ட நேரம் நீடித்தது.
இதனைத் தொடர்ந்து, அவருக்கும் காவல்துறைக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அரவிந்த் சிங் உயிரிழந்தார்.
பிபிசியிடம் முழு சம்பவத்தையும் விவரித்த பூசாரி
நடைபெற்ற ஆன்மீக சடங்கில் பூசாரி அகிலேஷ் மிஸ்ராவுடன் அவரது மகன் ஹிமான்ஷு மிஸ்ராவும் கலந்துகொண்டிருந்தார். ஹிமான்ஷு மிஸ்ரா அங்கிருந்து தப்பிச் சென்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.
இது காயத்ரி மந்திரம் கூறும் ஆன்மீக சடங்கு என்று அவர் தெரிவித்தார்.
ஹிமான்ஷு மிஸ்ரா பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "இது ஐந்து நாட்கள் நடைபெறும் அனுஷ்டானம். மூன்று நாட்கள் அனைத்தும் நன்றாகவே நடந்தது. ஆனால் நான்காவது நாளில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்த பூஜையில் அவருக்கு (அரவிந்த் சிங்) ஒரு சதவிகிதம் கூட ஆர்வம் இல்லை. தனது மனைவியையும் பூஜையில் உட்கார அனுமதிக்கவில்லை." என்றார்.
அவர் தனது உயிரை எப்படி காப்பாற்றிக்கொண்டார் என்ற கேள்விக்கு பதிலளித்த ஹிமான்ஷு மிஸ்ரா பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "அன்று நாங்கள் பூஜையை முடித்துவிட்டு எழுந்து செல்லப் போகும் நேரத்தில் அவர் (அரவிந்த் சிங்) திடீரென வந்தார். வந்தவுடன், 'நீங்கள் யார்? என் வீட்டுக்குள் எப்படி வந்தீர்கள்?' என்று கேட்டார். அதற்கு என் தந்தை, 'உங்கள் தாயார் எங்களை அழைத்தார்' என்றார். உடனே அவர், 'என் அனுமதியின்றி எப்படி வந்தீர்கள்?' என்று கேட்டார்."
"பிறகு ஆதார் அட்டையைக் காட்டுமாறு கேட்டார். அதற்கு என் தந்தை, 'எங்கள் உடைத் தோற்றத்தைப் பார்த்தாலே நாங்கள் யார் என்று தெரியவில்லையா? நாளை ஆதார் அட்டையை கொண்டு வருகிறோம், அப்போது பார்த்துக்கொள்ளுங்கள்' என்றார். அதற்குள் அவர் ஒரு கம்பியை எடுத்துவந்து தாக்கினார். அவருடைய மனைவி, மருமகள் மற்றும் தாயார் தடுக்க வந்தபோது, அவர் ரிவால்வரை எடுத்து சுட்டார். முதல் குண்டு அவரது மனைவி பபிதா சிங்கைத் தாக்கியது."
ஹிமான்ஷு மிஸ்ரா மேலும் கூறுகையில், "மற்றொரு பூசாரியான மகேந்திர் பாதக் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அரவிந்த் சிங் அவரை பின்புறத்திலிருந்து சுட்டார். என் தந்தை (அகிலேஷ் மிஸ்ரா) மீதும் சுட்டார். குண்டு அவரது தலையை உரசியபடி சென்றது. நான் சுவரைத் தாண்டி ஓடி தப்பித்தேன். பின்னர் அவர் மீண்டும் சென்று என் தந்தையின் தலையில் சுட்டார்."
நேரில் பார்த்த கிராமவாசி ஹரிசங்கர் யாதவ், காவல்துறையின் நடவடிக்கை நடந்தபோது அந்த வீட்டின் அருகில் இருந்தார்.
அவர் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "நான் இரவு சுமார் எட்டு மணியளவில் அங்கு சென்றேன். அப்போது அங்கு 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்தனர். காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். நாங்கள் அனைவரும் காவல்துறையினரிடமிருந்து சுமார் 40 மீட்டர் தூரத்தில் இருந்தோம். காவல்துறைக்கும் அவருக்கும் (அரவிந்த் சிங்) இடையே என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்பதை எங்களால் கேட்க முடியவில்லை. ஆனால் குறைந்தது 25 முதல் 30 சுற்றுகள் வரை துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம்." என்றார்
"குழந்தைகளை கொன்றுவிடுவேன்" என்ற மிரட்டல்
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் அசம்கர் மாவட்டத்தின் ஷம்புபூர் கிராமத்தில் நடந்தது.
"ஷம்புபூர் கிராமத்தில் மூன்று கொலைகள் நடந்ததாக அஹ்ரௌலா காவல் நிலையத்துக்கும் 112 அவசர உதவி எண்ணுக்கும் தகவல் கிடைத்தது. மாலை சுமார் 6.30 மணிக்கு காவல் நிலையப் பொறுப்பாளர் சம்பவ இடத்தை அடைந்தார். 7 மணிக்கு வட்டார அதிகாரியும், இரவு 8.30 மணிக்குள் எஸ்எஸ்பி, டிஐஜி மற்றும் ஏடிஜி ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்றுவிட்டனர்" என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிராக் ஜெயின் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறினார்.
அரவிந்த் சிங்கை சரணடையுமாறு பல மணி நேரம் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அவர் அதற்கு இணங்கவில்லை என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இது எவ்வளவு நேரம் நீடித்தது? அரவிந்தின் சிறுவயது மகன் ஷௌர்யா எந்தச் சூழலில் உயிரிழந்தார்?
"காவல்துறையினரும் அக்கம்பக்கத்தினரும் அவரை சரணடையுமாறு தொடர்ந்து சமாதானப்படுத்தினர். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் மிரட்டிக் கொண்டே இருந்தார். அப்போது வீட்டின் உள்ளிருந்து திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டது. உடனே எஸ்ஓஜி (சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு) பிரிவு அதிகாரிகள் இருவரும், எஸ்எஸ்பியும் கதவை உடைத்து, படுக்கையை மறைவாகப் பயன்படுத்திக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர். உள்ளிருந்து அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதற்கு காவல்துறையினர் பதிலடி கொடுத்தனர். அதில் அவர் காயமடைந்தார்" என சிராக் ஜெயின் கூறினார்.
இந்த நடவடிக்கைக்காக கமாண்டோ படையின் உதவி பெறப்பட்டதா?
"இந்த நடவடிக்கைக்காக கமாண்டோ படையினரை அழைத்திருந்தோம். ஆனால் அவர்கள் வீட்டுக்குள் செல்லவில்லை" என சிராக் ஜெயின் கூறினார்.
உயிரிழந்த பூசாரி மகேந்திர் பாதக்கின் மருமகன் பஜரங்கி பாதக் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "சம்பவம் நடந்தபோது நான் வேறு ஒரு ஆன்மீக சடங்கில் இருந்தேன். என் உறவினர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் சிறிது நேரத்திலேயே அங்கு சென்றோம். நாங்கள் சென்றபோது அரவிந்த் வீட்டுக்குள் இருந்தார். காவல்துறையும் அங்கு இருந்தது."
"என் உறவினர் தலையில் சுடப்பட்டிருந்தார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குண்டு அவரது தலையின் பின்புறத்தில் பாய்ந்திருந்தது."
காவல்துறையின் தகவலின்படி, உயிரிழந்த ஐந்து பேரின் உடற்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளது.
வாரணாசி மண்டல கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் நவீன் அரோரா ஊடகங்களிடம் கூறுகையில், "எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருந்தபோதிலும் அவர் (அரவிந்த்) வீட்டிலிருந்து வெளியே வரத் தயாராக இல்லை. குழந்தைகளையும் வெளியே அனுப்ப மறுத்தார். காவல் அதிகாரிகள் அவரிடம் பேசியும் பார்த்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும், 'குழந்தைகள் என்னுடன் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு பாதுகாப்புக் கவசம். நீங்கள் அனைவரும் திரும்பிச் செல்லுங்கள்' என்பதே அவரது பதிலாக இருந்தது. ஏற்கெனவே ஏழு மணி நேரத்துக்கும் மேலாக இந்த நிலை நீடித்திருந்தது. எனவே அவர் தப்பிச் செல்ல முயன்றால் அவரை தடுக்க, குறைந்தபட்சமாக வீட்டைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து வைத்திருந்தோம்." என கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வீட்டின் உள்ளிருந்து திடீரென ஒரு துப்பாக்கிச் சத்தம் கேட்டது. உள்ளே மூன்று குழந்தைகள் இருந்ததால், எங்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. அந்த ஒரு துப்பாக்கிச் சுடுதல் கூட எந்த நேரத்திலும் எதுவும் நடக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியது" என்றார்.
அதன்பிறகே காவல்துறையினர் வீட்டுக்குள் நுழைந்து நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு