You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மண்டையோட்டில் சதுர வடிவ துளை - பண்டைய இன்கா பழங்குடிகள் சிக்கலான அறுவை சிகிச்சை செய்தனரா? இன்றுவரை தொடரும் விவாதம்
- எழுதியவர், டாலியா வென்ச்சுரா
- பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
கடந்த 1864ஆம் ஆண்டில், எஃப்ரைம் ஜார்ஜ் ஸ்குயர் என்ற அமெரிக்கர் முற்றிலும் எதிர்பாராத ஓர் அனுபவத்தை எதிர்கொண்டார்.
பல விஞ்ஞானிகளால் சாத்தியமற்றதெனக் கருதப்பட்ட ஒரு விஷயத்துக்கான, அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்ட 'பண்டைய நரம்பியல் அறுவை சிகிச்சை' (அல்லது மூளை அறுவை சிகிச்சை) குறித்த தெளிவான, மறுக்க முடியாத ஆதாரத்தை அவர் கண்டறிந்தார்.
ஆச்சர்யம் தரும் விதமாக, இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்வதற்குக் காரணமாக அமைந்தது 'பறவைகளின் எச்சம்'. இது குவானோ என்றும் அழைக்கப்படுகிறது.
அமெரிக்க உள்நாட்டுப் போர் 1861இல் தொடங்கியபோது, போர்க் காலத்தில் போதுமான உணவுப் பயிர்களை விளைவிக்கத் தேவையான உரத்தின் சீரான விநியோகத்தை உறுதி செய்வது அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனுக்கு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது.
அந்தக் காலத்தில், உலகின் மிகச் சிறந்த இயற்கை உரம் தென் அமெரிக்க கடற்கரைக்கு அப்பால் இருக்கும் தீவுகளில் இருந்து கிடைத்தது. அங்கு பல நூற்றாண்டுகளாகப் பெருமளவிலான குவானோ படிந்திருந்தது. இந்த மதிப்புமிக்க வளத்தைப் பெறுவதற்காக, அதிபர் ஆபிரகாம் லிங்கன், 1864இல் பெரு நாட்டுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பினார்.
அந்தத் தூதுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக எஃப்ரைம் ஜார்ஜ் ஸ்குயர் இருந்தார்.
திருமதி ஜென்டினோவின் 'அரண்மனை'
தனது அதிகாரபூர்வ பணிகளை முடித்த பிறகு எஃப்ரைம் ஜார்ஜ் ஸ்குயர், தனது மனைவியை மட்டும் நியூயார்க் நகரத்துக்குத் திரும்பிச் செல்லுமாறு கூறிவிட்டு, அவர் மேலும் சில மாதங்கள் பெரு நாட்டிலேயே தங்கியிருந்தார்.
தனது வாழ்நாள் விருப்பமான தொல்லியல் ஆய்வில் ஈடுபட அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள அவர் விரும்பினார்.
அடுத்த ஓராண்டுக் காலத்தில், ஸ்குயர் பெரு முழுவதும் பயணித்தார். அந்த நாட்டின் கடற்கரைப் பகுதிகள், அடர்ந்த காடுகள், ஆண்டிஸ் மலைத்தொடரின் உயரமான சிகரங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த அவர், இறுதியாக குஸ்கோ நகரை அடைந்தார். அந்த நகரை அவர் "சியரா (மலைப்பகுதி) பிராந்தியத்தில் அமைந்துள்ள, கம்பீரமான அதேநேரம் தனிமைப்படுத்தப்பட்ட நகரம்" என்று வர்ணித்தார்.
'பெரு: இன்காக்களின் தேசத்தில் ஆய்வுகள் மற்றும் பயண அனுபவங்கள்' (Peru: Exploration and Travel Incidents in the Land of the Incas) என்ற தனது நூலில், லிமாவில் இருந்து குஸ்கோவுக்கு செல்வது, லிமாவில் இருந்து நியூயார்க் செல்வதைவிட அதிக நேரம் எடுப்பதாகவும், பயணத்தின் சிரமங்கள் மற்றும் களைப்பு காரணமாக நான்கு மடங்கு கடினமானதாக இருந்ததாகவும் ஸ்குயர் எழுதியிருந்தார்.
அந்த நூலில், தான் பார்வையிட்ட ஈர்க்கக்கூடிய தொல்லியல் தளங்கள் பற்றி ஸ்குயர் விரிவாக விவரித்திருந்தார். மேலும், குஸ்கோ நகரம், அதன் வரலாறு, மக்கள் மற்றும் தான் அங்கு சென்றிருந்தபோது அந்த நகரம் எப்படி இருந்தது என்பவை குறித்தும் அவர் விரிவாக எழுதியுள்ளார்.
அவர் குறிப்பிட்ட இடங்கள் அனைத்திலும், திருமதி ஜென்டினோவின் இல்லத்துக்கு அவர் சிறப்புக் கவனம் செலுத்தினார்.
அதுகுறித்து அவர், "நான் குறிப்பாக திருமதி ஜென்டினோவின் இல்லத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். 'பிளாசா டி சான் பிரான்சிஸ்கோ'வில் வசித்து வந்த இவர், வெளிநாட்டினரிடம் காட்டிய கனிவான உபசரிப்புக்குப் பெயர் பெற்றவர். அத்துடன், பெரு நாட்டிலேயே மிகச் சிறந்த, மதிப்புமிக்க தொல்பொருள் சேகரிப்புகளைக் கொண்டவர் என்ற நற்பெயரையும் அவர் பெற்றிருந்தார்," என்று எழுதியுள்ளார்.
அவரது இல்லம் ஸ்குயரை மிகவும் கவர்ந்தது. "இந்த வீட்டின் கட்டடக் கலை ஒருபுறம் இருக்கட்டும், அதன் பிரமாண்டமான அளவைக் கருத்தில் கொண்டால்கூட, வெனிஸ் நகரில்கூட இதை ஓர் 'அரண்மனை' என்றே அழைத்திருப்பார்கள். விசாலமான அறைகள், செழுமையான, பலதரப்பட்ட பொருட்கள், அலங்காரங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த இல்லத்தை, 'கிராண்ட் கால்வாய்' ஓரத்தில் அமைந்துள்ள மிக அழகான சில மாளிகைகளுடன் தாராளமாக ஒப்பிடலாம்" என்று ஸ்குயர் விவரித்துள்ளார்.
ஜென்டினோவின் அருங்காட்சியகம்
எஃப்ரைம் ஜார்ஜ் ஸ்குயர் குறிப்பிட்ட 'திருமதி ஜென்டினோ' என்பவர் உண்மையில் மரியா ஆன்னா சென்டெனோ டி ரொமைன்வில் (1816/1817–1874).
பெருவின் முன்னோடி கல்வியாளரான எல்விரா கார்சியா ஒய் கார்சியா, தனது 1925ஆம் ஆண்டு வெளியான "நூற்றாண்டுகள் தோறும் பெருவின் பெண்மணி" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டபடி, மரியா ஆன்னா தனது தொடர்ச்சியான வாசிப்பின் மூலம் சிறு வயதில் இருந்தே வரலாற்றுப் பொருட்களைச் சேகரிப்பதில் ஆழ்ந்த அன்பை வளர்த்துக் கொண்டார். கார்சியா ஒய் கார்சியா அதை "பித்துப் பிடிப்பதன் விளிம்பில் இருக்கும் ஒரு பேரார்வம்" என்று விவரித்தார்.
இந்தப் பேரார்வத்தால் உந்தப்பட்டு, மரியா ஆன்னா பல இடங்களில் இருந்து பொருட்களைச் சேகரித்தார். இறுதியில், கார்சியா ஒய் கார்சியா விவரித்தபடி, ஒரு "வரலாற்று தொல்பொருள் அருங்காட்சியகத்தை" அவர் உருவாக்கினார். அங்கு பார்வையாளர்கள் பெருவின் வரலாற்றை அதன் வெவ்வேறு காலகட்டங்கள் வழியாகப் பார்வையிடலாம்.
அவரது சேகரிப்பில், கல், பீங்கான், விலையுயர்ந்த உலோகங்களால் செய்யப்பட்ட கொலம்பிய காலத்துக்கு முந்தைய கலைப் பொருட்கள் அடங்கியிருந்தன. அதில் ஒரு ரோமானிய மொசைக், ஜப்பானிய பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பறவைகள், பிற மர்மமான பொருட்கள் உள்படப் பல அசாதாரணமான பொருட்களும் இருந்தன.
கார்சியா ஒய் கார்சியாவின் கூற்றுப்படி, ஒரு தொல்பொருள் அருங்காட்சியகத்தை உருவாக்குவது மட்டுமின்றி, வெவ்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த அரிய மற்றும் சுவாரஸ்யமான பொருட்களால் நிரப்பப்பட்ட விசித்திரங்களின் அருங்காட்சியகத்தை உருவாக்குவதே மரியா ஆன்னாவின் நோக்கம்.
ஸ்குயர் அரண்மனையுடன் ஒப்பிட்ட மரியா ஆன்னா சென்டெனோவின் பிரமாண்டமான இல்லம், ஒரு முக்கியமான சந்திப்பு இடமாகவும் மாறியது.
ஐரோப்பாவின் புகழ்பெற்ற ஞானோதய கூடங்களைப் போலவே, இது குஸ்கோவின் உயர்குடியினரையும் பிற நாடுகளில் இருந்து வந்த முக்கியப் பிரமுகர்களையும் ஈர்த்தது. அவர்கள் அறிவியல், கலை, இலக்கியம் பற்றி விவாதிக்க அங்கு கூடினர். எஃப்ரைம் ஜார்ஜ் ஸ்குயரும் அந்தப் பார்வையாளர்களில் ஒருவராக இருந்தார்.
மரியா ஆன்னாவின் இல்லத்தில்தான், பிற்காலத்தில் அறுவை சிகிச்சையின் வரலாற்றை மாற்ற உதவிய அந்தக் குறிப்பிடத்தக்க பொருளை ஸ்குயர் முதன்முதலில் கண்டார்.
இதைப் பற்றி எழுதிய அவர், "சில வழிகளில், திருமதி ஜென்டினோவின் சேகரிப்பில் இருக்கும் ஒரு முக்கியமான தொல்பொருள், யூகே பள்ளத்தாக்கில் இருக்கும் இன்கா கல்லறையில் இருந்து கிடைத்த ஒரு மண்டையோட்டின் நெற்றி எலும்புதான்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்கா மண்டையோடு
எஃப்ரைம் ஜார்ஜ் ஸ்குயரின் கவனத்தை உடனடியாக ஈர்த்தது, மண்டையோட்டில் இருந்த 15 × 17 மில்லிமீட்டர் அளவுள்ள ஒரு சதுரத் துளைதான். அவர் அதை மிகவும் கவனமாக ஆராய்ந்தார்.
இயற்கை பொதுவாக நேர்த்தியான நேரான கோணங்களையும் சதுர வடிவத் துளைகளையும் உருவாக்குவதில்லை என்பதால், அந்தத் துளை இயற்கையாக ஏற்பட்டிருக்க முடியாது என்று ஸ்குயர் நம்பினார்.
மேலும், அந்தத் துளையின் ஓரங்களில் புதிய எலும்பு வளர்ச்சி இருப்பது போலத் தெரிவதையும் அவர் கவனித்தார்.
"அந்தத் துளை உருவாக்கப்பட்டபோது அந்த மண்டையோட்டுக்குச் சொந்தமான நபர் உயிருடன் இருந்திருக்கிறார். எலும்பு குணமாகத் தொடங்கும் வகையில் அதன் பிறகு சிறிது காலம் உயிர் வாழ்ந்திருக்கிறார்" என்பதை இது அவருக்கு உணர்த்தியது.
அந்த அவதானிப்பு ஸ்குயரை ஓர் அசாதாரணமான யோசனைக்கு இட்டுச் சென்றது. ஒரு மருத்துவ நிலைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மண்டையோட்டைத் திறக்கும் ஓர் அறுவை சிகிச்சையின்போது அந்தத் துளை ஒரு நோக்கத்துடன் வலிய உருவாக்கப்பட்டு இருக்கலாமோ என்று அவர் யோசித்தார்.
மண்டையோட்டை ஆராய்ந்த பிறகு, இது "இறப்புக்கு முன் செய்யப்பட்ட மண்டையோட்டுத் துளையிடல்" (trepanation) என்பதற்கான ஒரு தெளிவான உதாரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
'மண்டையோட்டுத் துளையிடல்' என்பது ஓர் அறுவை சிகிச்சை முறை. இதில் பொதுவாக காயங்கள் அல்லது சில மருத்துவ நிலைகளுக்கு சிகிச்சையளிக்க மண்டையோட்டில் ஒரு துளை உருவாக்கப்படுகிறது.
பின்னர், "திருமதி ஜென்டினோ அதை ஆராய்ச்சிக்காக எனக்கு அன்புடன் கொடுத்தார். மேலும், அது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. மறுபுறம் இந்தக் கண்டத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழங்குடிகள் மத்தியில் இருக்கும் அறுவை சிகிச்சை அறிவின் மிக அற்புதமான சான்றாக இது அனைவராலும் கருதப்படுகிறது. ஏனெனில், மண்டையோட்டைத் துளையிடுதல் என்பது மிகவும் கடினமான அறுவை சிகிச்சை முறைகளில் ஒன்று," என்று ஸ்குயர் எழுதினார்.
இருப்பினும், ஸ்குயரின் கண்டுபிடிப்பு அந்த விவாதத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவில்லை.
ஆனால், விஷயங்கள் அவர் எதிர்பார்த்ததைவிட மிகவும் சிக்கலானவையாக இருந்தன.
நம்ப மறுத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள்
எஃப்ரைம் ஜார்ஜ் ஸ்குயர், 1877இல் பெருவில் தான் மேற்கொண்ட பயணங்களின் கதையை வெளியிட்டார். இருப்பினும் ஏனோ அவர் ஒரு முக்கியமான சம்பவத்தைக் குறிப்பிடவில்லை.
அமெரிக்காவுக்கு திரும்பிய பிறகு, ஸ்குயர் நியூயார்க் மருத்துவ அகாடமியின் கூட்டத்தில் இன்கா மண்டையோட்டை சமர்ப்பித்தார்.
அவரது கண்டுபிடிப்பை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, பண்டைய பெருவியன் பூர்வீகவாசியால் செய்யப்பட்ட மூளைத் துளை அறுவை சிகிச்சையில் ஒருவர் உயிர் பிழைத்திருக்க முடியும் என்பதை அவர்கள் நம்ப மறுத்தனர்.
அவர்களைப் பொறுத்தவரை, நவீன மயக்க மருந்தோ அல்லது உலோக அறுவை சிகிச்சைக் கருவிகளோ இல்லாமல், பண்டைய இன்காக்கள் அத்தகைய நுட்பமான மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்திருக்க முடியுமென்ற எண்ணம் சாத்தியமற்றதாகத் தோன்றியது.
அந்தக் காலகட்டத்தில், சிறந்த மருத்துவமனைகளில் பணிபுரிந்த மிகவும் அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களிடம்கூட, மூளைத் துளையிடுதல் அறுவை சிகிச்சையில் உயிர் பிழைப்பவர்களின் விகிதம் 10%க்கும் குறைவாகவே இருந்தது.
இருப்பினும், பலர் ஒரு முக்கியமான உண்மையைக் கவனிக்கத் தவறினர்.
அந்தக் காலகட்டத்தில், பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கான உயிர் பிழைப்பு விகிதங்களும் மிகக் குறைவாகவே இருந்தன. இதற்குக் காரணம், 'நோய்க்கான கிருமிக் கோட்பாடு' இன்னும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாததால், நோய்த் தொற்றுகள் எவ்வாறு பரவுகின்றன என்பதை மருத்துவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை.
இதன் விளைவாக, மோசமான சுகாதாரம் மற்றும் தூய்மையற்ற மருத்துவமனை சூழல்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்த் தொற்றுகளுக்குக் காரணமாக அமைந்தன. இதனால், அறுவை சிகிச்சையைவிட நோய்த் தொற்றே இறப்புகளுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக மாறியது.
இன்கா மண்டையோடு குறித்த தனது அவதானிப்பு மீது விமர்சனங்கள் இருந்தபோதிலும், ஸ்குயர் மனம் தளரவில்லை.
அவர் இன்கா மண்டையோட்டை எடுத்துக்கொண்டு, மனித மண்டையோடு குறித்த ஐரோப்பாவின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான பால் ப்ரோக்காவின் கருத்தை அறிய பிரான்சுக்கு பயணம் செய்தார்.
ப்ரோக்கா, பாரிஸ் பல்கலைக்கழகத்தில் புறநோயியல் மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சை பேராசிரியராக இருந்தார். அதோடு அவர் முதல் மானுடவியல் சங்கத்தின் நிறுவனரும்கூட. ப்ரோக்காவின் நிபுணத்துவ பரிசோதனை, தனது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை உறுதிப்படுத்த உதவுமென ஸ்குயர் நம்பினார்.
புதிய கற்கால மக்களின் அறுவை சிகிச்சைத் திறன்
எஃப்ரைம் ஜார்ஜ் ஸ்குயர் அந்த மண்டையோட்டை அவரிடம் கொண்டு சென்ற நேரத்திலேயே, பால் ப்ரோக்கா உலகளவில் புகழ் பெற்றவராகத் திகழ்ந்தார்.
கடந்த 1861ஆம் ஆண்டில், மனித மூளையில் மொழித் திறனுக்குப் பொறுப்பான முதல் பகுதியை ப்ரோக்கா கண்டறிந்தார். இப்போது மூளையின் அந்தப் பகுதி ப்ரோக்காவின் பகுதி (Broca's area) என்று அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட உளவியல் செயல்பாடு மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்பதற்கான முதல் தெளிவான சான்றாக இது அமைந்தது.
கிரேனியோமெட்ரி (மண்டையோடுகளை அறிவியல் பூர்வமாக அளவிடுதல்) துறையில் இருந்த நிபுணத்துவம் மற்றும் மானுடவியலில் அவர் ஆற்றிய பணிகளுக்காகவும் ப்ரோக்கா பெரிதும் மதிக்கப்பட்டார்.
இன்கா இனத்தைச் சேர்நத அந்த மண்டையோட்டில் இருந்த சதுர வடிவத் துளையை உன்னிப்பாக ஆராய்ந்த ப்ரோக்கா, "அது இயற்கையாக ஏற்பட்ட துளையல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்டது" என்ற முடிவுக்கு வந்தார்.
மேலும், நுண்ணோக்கி மூலம் அந்த மண்டையோட்டை ஆராய்ந்தபோது, துளையின் விளிம்புகளைச் சுற்றி புதிய எலும்பு வளர்ச்சிக்கான தெளிவான அறிகுறிகள் தென்பட்டன. அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அந்த நபர் சிறிது காலம் உயிர் வாழ்ந்திருந்தார் என்பதை அது உணர்த்தியது.
இதன் விளைவாக, அந்த நபர் இறப்பதற்கு முன்பே வெற்றிகரமாகச் செய்யப்பட்ட ட்ரெபனேஷன் (மண்டையோட்டில் துளையிடும் அறுவை சிகிச்சை) முறைக்கு அந்த மண்டையோடு ஒரு சான்று என்ற ஸ்குயரின் கருத்தை ப்ரோக்கா உறுதி செய்தார்.
ப்ரோக்காவுக்கு சர்வதேச நற்பெயர் இருந்தபோதிலும், அனைவரும் உடனடியாக இதை ஏற்றுக் கொள்ளவில்லை.
பாரிஸ் மானுடவியல் சங்கத்தில் அவர் தனது கண்டுபிடிப்புகளை முன்வைத்தபோது, பார்வையாளர்களில் பலர் சந்தேகம் கொண்டிருந்தனர். இருப்பினும், சில ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பு மக்களின் கருத்துகளை மாற்றியது.
தொல்பொருள் ஆய்வாளர்கள் மத்திய பிரான்ஸ் பகுதியில் பல பழங்கால மண்டையோடுகளைக் கண்டறிந்தனர். அவற்றில் வட்ட வடிவத் துளைகள், விளிம்புகளைச் சுற்றி ஆறியதற்கான தெளிவான அறிகுறிகள் மற்றும் அதே அளவுள்ள சிறிய எலும்புத் தட்டுகள் ஆகியவை காணப்பட்டன.
இந்தக் கண்டுபிடிப்புகள் ப்ரோக்காவின் விளக்கத்தை ஆதரித்ததுடன், நியோலிதிக் (புதிய கற்கால) மக்கள் வெற்றிகரமாக ட்ரெபனேஷன் சிகிச்சையை மேற்கொண்டிருந்தனர் என்பதற்கான வலுவான சான்றுகளையும் வழங்கின.
இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு, பழங்கால நாகரிகங்களின் மருத்துவ அறிவு மற்றும் அறுவை சிகிச்சைத் திறன்களைத் தாங்கள் குறைவாக மதிப்பிட்டு இருந்ததை ஏற்றுக் கொள்வதைத் தவிர விஞ்ஞானிகளுக்கு வேறு வழி இருக்கவில்லை.
'பாரம்பரிய முறைகளில் குறைந்த இறப்பு விகிதம்'
இன்கா மண்டையோட்டின் கண்டுபிடிப்பு, பண்டைய மருத்துவ அறிவை இன்னும் தீவிரமாக அணுகுமாறு விஞ்ஞானிகளைத் தூண்டியது.
இதைத் தொடர்ந்து, பல மானுடவியலாளர்கள் தங்கள் அருங்காட்சியகங்களில் உள்ள மண்டையோடுகளை மீண்டும் ஆய்வு செய்யத் தொடங்கினர். போர்கள், விபத்துகள் அல்லது விலங்குகளின் தாக்குதல்களால் ஏற்பட்டவை என்று முன்பு கருதப்பட்ட துளைகளை அவர்கள் கவனமாக ஆராய்ந்தனர்.
அவர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் வகையில் ட்ரெபனேஷன் எனப்படும் மண்டையோட்டில் துளையிடும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல மண்டையோடுகள் கண்டறியப்பட்டன. அவற்றில் சில கி.மு.8000ஆம் ஆண்டைச் சேர்ந்தவை.
உலகெங்கிலும் உள்ள பல பண்டைய கலாசாரங்களில் மண்டையோட்டில் துளையிடும் சிகிச்சை ஒரு பொதுவான நடைமுறையாக இருந்ததை இன்று விஞ்ஞானிகள் அறிவார்கள்.
மண்டையோட்டில் துளைகளை உருவாக்க, கூர்மையான கற்கள், விலங்குகளின் எலும்புகள், செந்நிறமாகச் சூடேற்றப்பட்ட இரும்புக் கருவிகள், சுறா மீனின் பற்கள் எனப் பல்வேறு நாகரிகங்கள் வெவ்வேறு கருவிகளைப் பயன்படுத்தின.
பெரு நாட்டில், தொல்பொருள் ஆய்வாளர்கள் பண்டைய கல்லறைகளில் பெரும்பாலும் டுமி எனப்படும் வளைந்த சடங்குக்குரிய உலோகக் கத்தியைக் கண்டெடுக்கின்றனர். மண்டையோட்டில் துளையிடும் சிகிச்சையைச் செய்வதற்கு இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தபோதோ, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் இன்னும் முழுமையாகக் கைக்கொள்ளாத சில முக்கிய மருத்துவ நுட்பங்களை இந்தப் பண்டைய கால அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறிந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளைக் கண்டறிந்தனர்.
ஓர் ஆய்வில், மண்டையோட்டில் துளையிடும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 66 பண்டைய மண்டையோடுகளில், மூன்றில் மட்டுமே தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டது தெரிய வந்தது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொற்றைத் தடுப்பதில் பல பண்டைய மருத்துவர்கள் வியக்கத்தக்க வகையில் வெற்றிகரமாகச் செயல்பட்டனர் என்பதை இது உணர்த்துகிறது.
கடந்த 1870களில் லண்டனில் வெளியான மற்றோர் ஆய்வறிக்கையும் இதேபோன்ற முடிவை முன்வைத்தது. லண்டனில் மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளில் சுமார் 75% பேர் உயிரிழந்தனர் என்பதை அது காட்டியது.
அதேவேளையில், பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மண்டையோட்டில் துளையிடும் சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வந்த நியூ கினியா பகுதியில், இறப்பு விகிதம் சுமார் 30% மட்டுமே இருந்தது.
சில சந்தர்ப்பங்களில், 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் சில பகுதிகளில் பின்பற்றப்பட்ட மருத்துவ நடைமுறைகளைவிட, பண்டைய அறுவை சிகிச்சை முறைகள் அதிக வெற்றிகரமானவையாக இருந்திருக்கலாம் என்பதை இந்த முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பண்டைக்கால அறுவை சிகிச்சைக்கான காரணங்கள்
பண்டைய கலாசாரங்கள் ஏன் மண்டையோட்டில் துளையிடும் அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டன என்பது குறித்து விஞ்ஞானிகளுக்கு இன்னும் உறுதியான விளக்கம் தெரியவில்லை. ஏனெனில் அக்காலத்தைச் சேர்ந்த எந்தவொரு எழுத்துபூர்வமான ஆவணமும் இந்தச் செயல்முறையின் நோக்கத்தை விளக்கவில்லை.
மூளைக்குள் சிக்கியிருப்பதாகக் கருதப்பட்ட தீய சக்திகளை வெளியேற்றுவதற்காகவே பண்டைய மக்கள் மண்டையோட்டில் துளைகளைப் போட்டதாக பால் ப்ரோக்கா கருதினார்.
அவரது கூற்றுப்படி, தீய சக்திகளால் ஏற்படுவதாக அக்காலத்தில் நம்பப்பட்ட வலிப்பு நோய், மாயத்தோற்றம் போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்கவே இந்த முறை முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது.
இத்தகைய நம்பிக்கை ஐரோப்பாவின் சில பகுதிகளில் நிச்சயமாக நிலவியது. இருப்பினும், மிகவும் பழமையான கலாசாரங்களைச் சேர்ந்த மக்களும் இதே காரணத்துக்காகவே இந்த சிகிச்சையை மேற்கொண்டனர் எனக் கூறுவதற்குரிய தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை.
எஃப்ரைம் ஜார்ஜ் ஸ்குயர் மற்றும் பல தொல்பொருள் ஆய்வாளர்கள் ப்ரோக்காவின் கோட்பாட்டை ஏற்கவில்லை.
பண்டைய கால அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆன்மீக காரணங்களுக்காக அல்லாமல், நடைமுறை மருத்துவக் காரணங்களுக்காகவே இந்த சிகிச்சையை மேற்கொண்டதாக அவர்கள் நம்பினர்.
அவர்களின் கருத்துப்படி, ஆரம்பக்கால நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களான இவர்கள், முக்கியமாக கீழே விழுவதாலோ அல்லது போர்களின்போது ஏற்படும் காயங்களாலோ உண்டாகும் கடுமையான தலைக் காயங்களுக்கு சிகிச்சையளித்து வந்தனர்.
நவீனகால ஆய்வுகள், குறிப்பாக இன்கா நாகரிகம் தொடர்பான விஷயங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இந்த விளக்கத்தையே பெரும்பாலும் ஆதரிக்கின்றன.
பெண்களைவிட ஆண்களின் மண்டையோடுகளிலேயே இத்தகைய துளையிடப்பட்ட சிகிச்சையின் அடையாளங்கள் அதிகம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
போர்களில் ஆண்கள் அதிகளவில் பங்கேற்றதும், அதனால் அவர்களுக்குக் கடுமையான தலைக் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மேலும், மண்டையோட்டின் இடது பக்கத்தில் பல துளைகள் அமைந்திருப்பதையும் அவர்கள் கவனித்துள்ளனர்.
தாக்குதல் நடத்துபவர்களில் பெரும்பாலோர் வலது கைப் பழக்கம் கொண்டவர்களாக இருந்ததே இதற்குக் காரணமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது, அவர்கள் தாக்கும்போது எதிராளி தலையின் இடதுபுறமே பெரும்பாலும் தாக்குதல் விழுந்திருக்கக்கூடும்.
இந்தக் கோட்பாட்டின்படி, காயத்தைச் சுத்தம் செய்யவும், மண்டையோட்டுக்குள் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கவும், மூளையைச் சுற்றி ரத்தம் தேங்குவதைத் தடுக்கவும் இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
ஆரம்பக்கால ட்ரெபனேஷன் சிகிச்சைகளில் சிலவற்றில் மத நம்பிக்கைகள் அல்லது மூடநம்பிக்கைகள் ஒரு பங்காற்றியிருக்க வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இருப்பினும், நவீன கால மூளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் செயல்படுவதைப் போலவே, பண்டைய கால நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களும் பல நேரங்களில் இதே அடிப்படை நோக்கத்துக்காகவே இந்த சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு