மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறை - என்ன நடந்தது?

ஹானூர் பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • எழுதியவர், சிவசுப்ரமணியம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜநகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார்.

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

இதில், வனத்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்ததாகவும் கர்நாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாஜிஸ்டிரேட் விசாரணைக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

என்ன நடந்தது?

கர்நாடக வனத்துறை தரப்பில் கூறப்படுவது என்ன?

கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டத்தின் ஹானூர் தாலுகாவில் மரியமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊர் காவிரி வனவிலங்கு சரணாலய வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

தோமையார்பாளையம், மரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிலர் காட்டுக்குள் மான் வேட்டையாடச் சென்றதாக சாக்யா பகுதி வன அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை தோமையார்பாளையம் மற்றும் சாக்யா குறுவட்ட வன அலுவலர்கள் அந்தப் பகுதிக்கு ரோந்து சென்றுள்ளனர்.

அப்போது மரியமங்கலம் ஊரை அடுத்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், சிலர் துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததாக கர்நாடக வனத்துறையினர் கூறுகின்றனர்.

அவர்களைச் சுற்றி வளைத்து பிடிக்க முயற்சி செய்யும்போது, இரு தரப்புக்கும் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கர்நாடக வனத்துறை தெரிவிக்கிறது.

இதில் வனத்துறை ஊழியர் ஒருவர் காயமடைந்ததால் வனத்துறையினர் திருப்பிச் சுட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதில் ஜகன்னாததொட்டி என்ற இடத்தைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவரின் மகனான அந்தோணிசாமி (வயது 50), மரியமங்கலத்தை சேர்ந்த யாகூப் என்பவரின் மகன் ஜான்ரோஸ் பீட்டர் (வயது 42), லாசர்தொட்டி என்ற இடத்தைச் சேர்ந்த சவேரியப்பன் என்பவரின் மகன் குமார் (33) ஆகிய மூவர் உயிரிழந்தனர்.

ஹானூர் பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
படக்குறிப்பு, ஹானூர் பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மரியமங்கலத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவரின் மகன் மகிமைதாஸ் (வயது-48) என்பவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் கொள்ளேகால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. காயமடைந்த மகிமைதாசும் சிகிச்சைக்காக அங்கே அனுமதிக்கப்பட்டார்.

கர்நாடக வனத்துறை அதிகாரி கூறியது என்ன?

கொள்ளேகாலில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு மகிமைதாஸ், மேல் சிகிச்சைக்காக மைசூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக உயிரிழந்த மூவரின் உடல்களும் மைசூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஹானூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் கொள்ளேகால் மாவட்ட வன அலுவலரும், காவிரி வன உயிரியல் சரணாலய துணை வனப்பாதுகாவலருமான (DCF - பொறுப்பு) மரிய சுவாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களிடமிருந்து மான் இறைச்சியும் மூன்று நாட்டுத் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்,

தகவல் அறிந்ததும், வனத்துறை மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

பல கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்

இதற்கிடையே ஹானூர் நகரில் உள்ள வனத்துறை அலுவலக நுழைவாயில் அருகே காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதால், ஹானூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த பல கிராமங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களும் ஹானூர் வனத்துறை அலுவலகம் முன்பாக திரண்டனர்.

ஹானூர் காவல் நிலையம், வனத்துறை அலுவலகம், பேருந்து நிலையம் அமைந்துள்ள அம்பேத்கர் சர்க்கிள் பகுதியில் மைசூருவில் இருந்து வரவழைக்கபட்டுள்ள கேஎஸ்ஆர்பி போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், கொள்ளேகால் - மாதேஸ்வரன்மலை சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

ஹானூர் பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
படக்குறிப்பு, ஹானூர் பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது வனத்துறையின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

"வனத்துறை அதிகாரிகளின் தரப்பில் குளறுபடிகள் உள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. இதற்கு உயர் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை," என்று ஹானூர் எம்.எல்.ஏ மஞ்சுநாத் செய்தியாளர்களிடம் கூறினார்.

கர்நாடக அமைச்சர் கூறியது என்ன?

காலை 05.20 மணிக்கு வனத்துறையினரால் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவர்களிடம் மான் மாமிசம் இருந்ததாகவும் கர்நாடகா வனத்துறை தெரிவித்துள்ளது.

"வேட்டையில் ஈடுபட்டவர்கள் வசம் ஆயுதங்கள் இருந்தன. இது ஒரு என்கவுன்டர் சம்பவம். அடுத்த சில மணி நேரத்தில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும். சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள காவல்துறை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தில் உள்ளனர்," என கர்நாடகா வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

ராமலிங்கா ரெட்டி, கர்நாடகாவில் தமிழர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, கர்நாடகா வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆத்திரமடைந்த சாக்யா கிராம மக்கள் உள்ளூர் வனத்துறை அலுவலகம் மற்றும் அலுவலர்களின் குடியிருப்பை சேதப்படுத்தியதாக கர்நாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சாம்ராஜநகர் மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.

கர்நாடகாவின் சாம்ராஜநகரில் மூன்று பேர் வனத்துறையினரின் என்கவுன்டரில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மாஜிஸ்டிரேட் விசாரணை நடத்த கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் (கோப்புப் படம்)

ஹானூர் எம்.எல்.ஏ மஞ்சுநாத் மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் புட்டரங்கா ஷெட்டி ஆகியோர் அதிகாலை நேரத்தில் என்கவுன்டருக்கான தேவை ஏன் வந்தது என்பது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்த நிலையில் கர்நாடக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவக்குமார், "இந்தச் சம்பவம் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வந்துள்ளன. மாஜிஸ்டிரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்." எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு