ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குப் பிந்தைய 10 ஆண்டுகளில் எர்துவான் துருக்கியை எப்படி மாற்றியுள்ளார்?

மூன்று ஆட்சிக் கவிழ்ப்புகளையும், இரண்டு ராணுவத் தலையீடுகளையும் சந்தித்த நாடான துருக்கிக்கு கூட, 2016 ஜூலை 15 இரவு என்பது முன் எப்போதும் இல்லாத ஒன்றாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்தது, ஆனால் அதன் விளைவுகள் கடந்த பத்தாண்டுகளில் துருக்கிய அரசியலை உருமாற்றியுள்ளன.
    • எழுதியவர், பிபிசி நியூஸ் துருக்கி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

தெருக்களில் துப்பாக்கிச் சூடு, நகரும் பீரங்கிகள், அரசு கட்டடங்களுக்கு மேல் தாழ்வாகப் பறக்கும் விமானங்கள், நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல். இவை அனைத்தும் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

மூன்று ஆட்சிக் கவிழ்ப்புகளையும், மேலும் இரண்டு ராணுவத் தலையீடுகளையும் சந்தித்த நாடான துருக்கிக்கு, 2016ம் ஆண்டு ஜூலை 15 இரவு என்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக இருந்தது.

துருக்கி நாடாளுமன்றம் அதற்கு முன்பு ஒருபோதும் தாக்கப்பட்டதில்லை.

அதேபோல, அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் விடுத்த அழைப்பை ஏற்று, ஆட்சி கவிழ்ப்புக்கு முயன்றவர்களை எதிர்ப்பதற்காக பொதுமக்கள் போராட வந்தபோது, இஸ்தான்புல்லில் உள்ள போஸ்பரஸ் பாலம் (இப்போது அதிகாரப்பூர்வமாக 'ஜூலை 15 தியாகிகள் பாலம்' என்று அழைக்கப்படுகிறது) இத்தகைய தாக்குதலைக் கண்டதில்லை.

அடையாளம் தெரியாத ஒரு இடத்திலிருந்து மொபைல் செயலி மூலமாக நேரலையில் உரையாற்றிய எர்துவான், அன்று இரவே தனது ஆதரவாளர்களை வீதியில் இறங்கிப் போராடுமாறு வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் உள்ள மசூதிகள் தங்களின் ஒலிபெருக்கிகள் மூலம் அவரது இந்தச் செய்தியை பரப்பின.

மறுநாள் காலைக்குள், ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சி முறியடிக்கப்பட்டது.

184 பொதுமக்கள் உட்பட மொத்தம் 253 பேர் உயிரிழந்தனர். மேலும், சதியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 34 பேரும் தங்களது உயிரை இழந்தனர்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்தது, ஆனால் அதன் விளைவுகள் கடந்த பத்தாண்டுகளில் துருக்கியின் அரசியலை முழுமையாக மாற்றியமைத்துள்ளன.

இது உள்நாட்டு அதிகாரச் சமநிலையை மாற்றியதோடு, வெளிநாடுகளுடனான அந்நாட்டின் உறவையும் மறுவரையறை செய்துள்ளது.

 அதிபர் எர்துவான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அடையாளம் தெரியாத இடத்திலிருந்து கைபேசி வழியாக அதிபர் எர்துவான் நேரலையில் தோன்றிய காட்சி, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடந்த அந்த இரவின் மிக முக்கியமான அடையாளப் படங்களில் ஒன்றாக அமைந்தது.

மிகப்பெரிய நடவடிக்கை

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இஸ்லாமிய மதகுரு ஃபெத்துல்லா குலனின் வலைப்பின்னலே காரணம் என்று எர்துவான் அரசு குற்றம் சாட்டியது.

2024 இல் அவர் இறக்கும் வரை, இந்த நிகழ்வுகளில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றே குலன் மறுத்து வந்தார்.

இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்ட சில நாட்களிலேயே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இது ஏழு முறை நீட்டிக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.

அந்த காலகட்டத்தில், நவீன துருக்கிய வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான அதிகாரப் பறிப்பு மற்றும் நீக்க நடவடிக்கைகளில் ஒன்றை அதிகாரிகள் மேற்கொண்டனர். குலனின் வலைப்பின்னலை சிதைக்க இந்த நடவடிக்கைகள் அவசியம் என்று அரசாங்கம் வாதிட்டது.

துருக்கி நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, துருக்கியில் நீண்டகாலமாக ராணுவத் தலையீடுகள் இருந்துவந்தபோதிலும், நாடாளுமன்றம் இதற்கு முன்பு ஒருபோதும் நேரடித் தாக்குதலுக்கு இலக்காகியதில்லை.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஒரு காலத்தில் அதிபர் எர்துவானின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த குலனின் மத இயக்கம், பல தசாப்தங்களாக துருக்கிய அரசு மற்றும் அதிகாரத்துவத்தின் பல்வேறு துறைகளில் செல்வாக்கு மிக்க பதவிகளை வகித்து வந்தது.

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு, உயர் அதிகாரிகள் மற்றும் ஜெனரல்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர், பணிநீக்கம் செய்யப்பட்டனர் அல்லது தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

குலன் வலைப்பின்னலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், பல பல்கலைக்கழகங்களுடன் சேர்த்து மூடப்பட்டன.

இந்த ஒடுக்குமுறையானது, சதிப்புரட்சி குறித்துத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் குலன் இயக்கத்தின் ஆதரவாளர்களைத் தாண்டி, பரந்த அளவிலான மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் இலக்கு வைத்ததாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

இந்த அதிகார நீக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிற மத குழுக்கள் அரசு நிறுவனங்களுக்குள் செல்வாக்கு பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அரசாங்க அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறார்கள்.

அதிபர் எர்த்துவானும் இஸ்லாமிய மதகுரு ஃபெத்துல்லா குலனும்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அதிபர் எர்துவானும் இஸ்லாமிய மதகுரு ஃபெத்துல்லா குலனும் கடுமையான எதிரிகளாக மாறுவதற்கு முன்பு, பல தசாப்தங்களாக நெருங்கிய கூட்டாளிகளாக இருந்தனர்.

எர்துவானின் அதிகாரத்தை பலப்படுத்தும் முயற்சி

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் மிக முக்கியமான அரசியல் விளைவு, அதிபர் எர்துவானின் அதிகாரம் பலப்படுத்தப்பட்டது தான் என்று குறிப்பிடலாம்.

2017 ஆம் ஆண்டில், நாடாளுமன்ற ஆட்சி முறைக்குப் பதிலாக, பரந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு நிர்வாக அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கான அரசியலமைப்பு மாற்றங்களுக்கு வாக்காளர்கள் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்புதல் அளித்தனர்.

இந்த மாற்றங்கள் அடுத்த ஆண்டு அமலுக்கு வந்தன, இது பிரதமரின் பதவியை ஒழித்தது மற்றும் அதிபரின் அதிகாரங்களை விரிவுபடுத்தியது.

புதிய ஆட்சி முறை அரசியல் நிலைத்தன்மை, விரைவான முடிவெடுத்தல் மற்றும் திறமையான நிர்வாகத்தை வழங்கியதாக இதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், அதிபர் பதவியிலும், குறிப்பாக ஒரு தனி நபரைச் சுற்றியும் அவர் அதிகப்படியான அதிகாரங்களைக் குவித்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஃப்ரீடம் ஹவுஸ் என்ற சிந்தனைக் குழு, இந்த அதிபர் ஆட்சி முறையின் கீழ் பொதுக் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துவதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் திறன் கணிசமாக பலவீனமடைந்துள்ளது எனக் குறிப்பிடுகின்றது.

துருக்கி குறித்த தனது சமீபத்திய அறிக்கையில், "[எர்துவான்] தனது விருப்பங்களுக்கு சவால் விடும் அமைச்சகங்கள் மற்றும் சுதந்திரமான பொது அமைப்புகளுக்கு எதிராக அடிக்கடி செயல்படுகிறார்" என்று அந்த அமைப்பு கூறுகிறது.

இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான டோகன் செடின்காயாவும் இந்த மதிப்பீட்டை ஆமோதிக்கிறார்.

இந்த அதிபர் ஆட்சி முறையானது "தன்னிச்சையான போக்கு மற்றும் தெளிவற்ற நிறுவனக் கட்டமைப்பைக்" கொண்டதாக உள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.

இந்த மாற்றங்கள் அடுத்த ஆண்டு அமலுக்கு வந்தன, இது பிரதமரின் பதவியை ஒழித்தது மற்றும் அதிபரின் அதிகாரங்களை விரிவுபடுத்தியது.

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள், ஓர் நபரிடம் அதிகப்படியான அதிகாரத்தைக் குவித்தன என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

சர்வாதிகாரம் குறித்த கவலைகள்

மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் துருக்கி அரசு பல ஆண்டுகளாக விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தது, ஆனால் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த அதிகார நீக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு கவலைகள் மேலும் தீவிரமடைந்தன.

குலன் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஆயிரக்கணக்கான நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் தங்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து மனித உரிமை அமைப்புகளும் ஐரோப்பிய நிறுவனங்களும் கவலை தெரிவித்தன.

"ஜூலை 15க்குப் பிறகு, துருக்கியின் அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பின் நிறுவனங்கள் சிதைக்கப்பட்டு, தங்களின் தன்னாட்சியை இழந்தன. நீதித்துறையும் சட்டமன்றமும் குறிப்பிடத்தக்க அதிகார மையங்களாகச் செயல்படுவதை நிறுத்திவிட்டன" என்று பேராசிரியர் செடின்காயா கூறுகிறார்.

மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் துருக்கி அரசு பல ஆண்டுகளாக விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தது, ஆனால் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த அதிகார நீக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு கவலைகள் மேலும் தீவிரமடைந்தன.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, "கடந்த பத்தாண்டுகளில் துருக்கி பெருகிய முறையில் சர்வாதிகார நாடாக மாறி வருகிறது" என ஃப்ரீடம் ஹவுஸ் வாதிடுகிறது.

அன்று முதல், பொது ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பது கடினமாகிவிட்டது, ஏனெனில் அதிகாரிகள் கூட்டங்களுக்கு அடிக்கடி கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் மற்றும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

ஊடகங்களின் உரிமையாளர்கள் மீதான அரசாங்கத்தின் அதிகரித்து வரும் செல்வாக்கு மற்றும் முக்கிய பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் ஆகியவற்றின் காரணமாக பத்திரிகை சுதந்திரமும் மோசமடைந்துள்ளது.

'எல்லைகள் இல்லாத நிருபர்கள்' (Reporters Without Borders) 2026 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில், 180 நாடுகளில் துருக்கி தற்போது 163வது இடத்தில் உள்ளது.

கருத்துச் சுதந்திரம் என்பது தொடர்ந்து ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில், அதிபரை அவமதித்ததாக ஒரு பிரபல நகைச்சுவை நடிகர் கைது செய்யப்பட்டார்.

இதன்மூலம், விசாரணைகளை எதிர்கொண்டுள்ள பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுப் பிரமுகர்களின் நீண்ட பட்டியலில் இவரும் இணைந்துள்ளார்.

"அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் அரசியல் எதிரிகள், சுயாதீன பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களின் சிறைவாசம் ஆகியவற்றின் மூலம் தனது அதிகாரத்தை வலுப்படுத்தி, கடந்த தசாப்தத்தில் துருக்கி பெரிய அளவில் ஒரு சர்வாதிகார நாடாக மாறியுள்ளது" என்று ஃப்ரீடம் ஹவுஸ் கூறுகிறது.

குலன் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஆயிரக்கணக்கான நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் தங்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து மனித உரிமை அமைப்புகளும் ஐரோப்பிய நிறுவனங்களும் கவலை தெரிவித்தன.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் காவல்துறையின் கடுமையான தலையீட்டை மனித உரிமை அமைப்புகள் நீண்ட காலமாக விமர்சித்து வருகின்றன.

எதிர்கால அதிபர் தேர்தலில் எர்துவானுக்கு மிகவும் வலிமையான சாத்தியமான போட்டியாளராக பலரால் கருதப்படும் இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லு , ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் பல்வேறு நகராட்சி அதிகாரிகளுடன் மார்ச் 2025 இல் கைது செய்யப்பட்டார்.

அவர்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர். அவரது வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2026ம் ஆண்டு மே மாதத்தில், நீதிமன்ற உத்தரவு ஒன்று அவரது கட்சியும் முக்கிய எதிர்க்கட்சியுமான சிஹெச்பி-இன் தலைமையகத்தில் தலையிட்டு, அதன் தலைவருக்குப் பதிலாக அவருக்கு முந்தைய தலைவரையே அப்பதவியில் அமர்த்தியது.

இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் ஒரு "நீதித்துறை சதி" என்று அழைத்தன.

இருப்பினும், ஜனநாயகப் பின்னடைவு குறித்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரிக்கிறது.

ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders) 2026 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில், 180 நாடுகளில் துருக்கி தற்போது 163வது இடத்தில் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வழக்கறிஞர்கள் எக்ரெம் இமாமோக்லுவுக்கு 2,400 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனை கோருகின்றனர்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட மாற்றங்களும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அதிகார நீக்க நடவடிக்கைகளும், அரசுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களை நீக்கியதன் மூலம் அரசியல் நிலைத்தன்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தியதாக அது குறிப்பிடுகிறது.

"இந்த தற்போதைய ஆட்சி முறை என்பது, ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியால் வெளிப்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்ள அரசு உருவாக்கிய ஒரு எதிர்வினை என்று நான் நம்புகிறேன்.

இதை வெறுமனே சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு படியாகப் பார்ப்பதற்குப் பதிலாக, தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அரசின் உள்ளுணர்வின் ஒரு நீட்சியாகவே நான் கருதுகிறேன்," என்று யில்டிரிம் பெயாசித் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் நூரி சாலிக் கூறுகிறார்.

குறைக்கப்பட்ட ஆயுதப் படைகளின் பங்கு

பல ஆண்டு காலங்களாக, முஸ்தஃபா கெமால் அட்டாதுர்க்கால் நிறுவப்பட்ட மதச்சார்பற்ற குடியரசின் பாதுகாவலனாக துருக்கி ராணுவம் தன்னைக் கருதியது.

மேலும், அரசியல் கொந்தளிப்பு நிலவிய காலங்களில் பல சந்தர்ப்பங்களில் அது அரசியலில் தலையிட்டது.

2016 ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து, தொடர்ச்சியான கட்டமைப்புக் சீர்திருத்தங்கள் ஆயுதப் படைகளை முழுமையாக சிவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.

பல ஆண்டு காலங்களாக, முஸ்தபா கெமால் அட்டாதுர்க்கால் நிறுவப்பட்ட மதச்சார்பற்ற குடியரசின் பாதுகாவலனாக துருக்கி ராணுவம் தன்னைக் கருதியது. மேலும், அரசியல் கொந்தளிப்பு நிலவிய காலங்களில் பல சந்தர்ப்பங்களில் அது அரசியலில் தலையிட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த பத்தாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள், துருக்கிய அரசியலில் ராணுவத் தலையீட்டுக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாகப் பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

புதிய ஆள்சேர்ப்பு மற்றும் கட்டளைக் கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன, ராணுவக் கல்விக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் மறுசீரமைக்கப்பட்டன அல்லது மூடப்பட்டன, மேலும் ராணுவப் பிரிவுகள் நகர்ப்புற மையங்களிலிருந்து தொலைவில் இடமாற்றம் செய்யப்படத் தொடங்கின.

இந்த மாற்றங்கள் உண்மையில் துருக்கிய அரசியலில் ராணுவத் தலையீட்டின் சகாப்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

"ராணுவம் எப்போதுமே அரசியலுக்கு வழிகாட்டும் ஒரு கருவியாகவே இருந்து வந்துள்ளது" என்கிறார் பேராசிரியர் சாலிக்.

"நவீன துருக்கிய வரலாற்றில், [ஜூலை 15 அன்று] பொதுமக்கள் முதன்முறையாக ஒரு ராணுவத் தலையீட்டை தீவிரமாக எதிர்த்தனர். அந்த வகையில், இது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

துருக்கிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் திறனை ராணுவம் முற்றிலும் இழந்துவிட்டதாக சாலிக் நம்புகிறார்.

"இதுதான் மிக முக்கியமான மாற்றம்" என்கிறார் சாலிக் .

பாதுகாப்பு சார்ந்த கொள்கைகள்

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு துருக்கியின் வெளியுறவுக் கொள்கையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.

அதைத் தொடர்ந்த மாதங்களிலும் ஆண்டுகளிலும், அங்காரா வடக்கு சிரியாவில் மூன்று பெரிய எல்லை கடந்த ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது. இவை இசுலாமிய அரசு (IS) குழு மற்றும் மக்கள் பாதுகாப்புப் படைகள் (YPG) ஆகிய இரண்டையும் இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டன.

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு துருக்கியின் வெளியுறவுக் கொள்கையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அங்காரா, வடக்கு சிரியாவில் மக்கள் பாதுகாப்புப் படைகள் தலைமையிலான படைகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதோடு, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி உடனான புத்துயிர் பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையையும் முன்னெடுத்து வருகிறது.

ஒய்.பி.ஜி (YPG) அமைப்பை குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் (PKK) தொடர்புடைய ஒன்றாக துருக்கி கருதுகிறது. பிகேகே (PKK) அமைப்பை துருக்கி அரசாங்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில், பிகேகே (PKK) அமைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதன் முன்னேற்றம் இன்னும் உறுதியற்றதாகவே உள்ளது.

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி, துருக்கிய அரசுக்குள் பாதுகாப்பு சார்ந்த அணுகுமுறையை மேலும் வலுப்படுத்தியதாக சாலிக் குறிப்பிடுகிறார். "அரசைப் பாதுகாப்பதே முழுமையான முன்னுரிமையாக மாறியது" என்று கூறுகிறார் சாலிக்.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்தத் தடைகளை நீக்கப் போவதாகக் கூறினார். மேலும், எஃப்-35 (F-35) விமானங்களை விற்பனை செய்யும் விவகாரத்தை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த வாரம் நேட்டோ உச்சிமாநாட்டுக்காக அங்காராவுக்கு வந்தடைந்த அதிபர் டிரம்புக்கு, கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

துருக்கி தனது வெளியுறவுக் கொள்கையை மேலும் பன்முகப்படுத்தியுள்ளது.

நேட்டோவின் முக்கிய உறுப்பினராகத் தொடர்ந்த போதிலும், ரஷ்யாவுடனான தனது உறவுகளை அது பலப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் எஸ்-400 (S-400) வான் பாதுகாப்பு அமைப்பை துருக்கி வாங்கியது அமெரிக்காவுடன் ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்தியது. இது அமெரிக்கத் தடைகளுக்கும், எஃப்-35 (F-35) போர் விமானத் திட்டத்திலிருந்து துருக்கி நீக்கப்படுவதற்கும் வழிவகுத்தது.

இருப்பினும், கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்தத் தடைகளை நீக்கப் போவதாகக் கூறினார். மேலும், எஃப்-35 (F-35) விமானங்களை விற்பனை செய்யும் விவகாரத்தை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இத்தகைய நடவடிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க எதிர்ப்பை எதிர்கொள்ளக்கூடும்.

இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான துருக்கியின் நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கும் முயற்சியில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகள் 2018 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட முடங்கியுள்ளன.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு