எஸ்.ஜானகி குரலில் ரசிகர்கள் மனதில் நிலைத்த மற்றும் விருது வென்ற 5 பாடல்கள்

எஸ்.ஜானகி காலமானார்

பட மூலாதாரம், FB/Janaki

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

'அன்னக்கிளி' திரைப்படம் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மட்டுமல்ல, பாடகி எஸ்.ஜானகிக்கும் ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுக்கொடுத்தது. அந்தத் திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடிய மூன்று பாடல்களும் (மச்சானை பார்த்தீங்களா, அடி ராக்காயி, அன்னக்கிளி உன்ன தேடுது) இன்றும் ரசிகர்களிடையே பிரபலமான பாடல்கள் தான்.

"நான் பல ஆண்டுகளாகப் பாடி வருகிறேன். நான் பாடிய அனைத்து பாடல்களுமே, அந்தந்த மாநில ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. என் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் மற்ற மொழிகளில் எனது உச்சரிப்பு சரியாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். ஆனால் இவ்வளவு காலம் தாழ்த்தி, எனக்கு கிடைத்துள்ள கெளரவத்தை ஏற்க எனக்கு மனம் வரவில்லை"

- 2013இல் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து எஸ்.ஜானகி கூறிய வார்த்தைகள் இவை.

அவர் சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநில அரசுகளிடம் இருந்து அவர் 33க்கும் மேற்பட்ட மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.

செந்தூரப் பூவே (16 வயதினிலே, 1977)

இளையாராஜா, இசை, தேசிய விருது, எஸ்.ஜானகி, பாடல்கள்

பட மூலாதாரம், Sri Amman Creations

எஸ்.ஜானகி பெற்ற முதல் தேசிய விருது 'செந்தூரப்பூவே' பாடலுக்காக தான்.

தமிழ் சினிமாவில் 70கள் மற்றும் 80களில் கதாநாயகிகளுக்கான அறிமுகப் பாடல் என்றாலே பெரும்பாலும் எஸ்.ஜானகியின் குரலாகவே இருந்தது.

பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான , '16 வயதினிலே' திரைப்படத்தின் முதல் விநாடியிலேயே எஸ்.ஜானகியின் குரல் தான் பின்னணியில் ஒலிக்கும்.

"இனிமையான குரல் என்பதை விட, இசையமைப்பாளர் என்ன நினைக்கிறார் என்பதை உள்வாங்கிக் கொண்டு பாட வேண்டும். அந்தத் திறமை எஸ்.ஜானகியிடம் இருந்ததால் தான், என்னுடைய இசையில் அதிக பாடல்களை பாடினார்," என ஒருமுறை குறிப்பிட்டிருந்தார் இளையராஜா.

'இஞ்சி இடுப்பழகி' (தேவர் மகன், 1992)

இளையாராஜா, இசை, தேசிய விருது, எஸ்.ஜானகி, பாடல்கள்

பட மூலாதாரம், Raaj Kamal Films International

இளையராஜா இசையில் பாடிய பாடலுக்காக மீண்டும் ஒரு தேசிய விருது, ஆனால் ஜானகிக்கு இது நான்காவது.

இடையில் எட்டுமானூரம்பலத்தில் (1981) என்ற மலையாளப் பாடலுக்காகவும், வெண்ணெல்லோ கோதாரி அந்தம் (1984) என்ற தெலுங்குப் பாடலுக்காகவும் தேசிய விருதுகளைப் பெற்றிருந்தார்.

வாலியின் வரிகளில் கமல்ஹாசன், எஸ்.ஜானகி இணைந்து பாடிய பாடல் இது.

"சில பாடகர்கள் பாடும் போது, அதற்கு அவர்கள் மிகவும் சிரமப்படுவது போல தெரியும். ஆனால், ஜானகி பாடும்போது உண்மையில் அவர் தான் பாடுகிறாரா என்பது போல மிகவும் அமைதியான உடல்மொழியுடன் பாடுவார். குறிப்பாக 'தேவர் மகனின்' இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு பாட்டுடன் சேர்த்து, குரல் நடிப்பையும் வெளிப்படுத்த வேண்டும், அதை அவர் மிகக் கச்சிதமாக செய்தார்" என்று ஒரு நிகழ்வில் கூறியிருப்பார் கமல்ஹாசன்.

அதே நிகழ்வில், "நீங்கள் நன்றாக நடிக்கிறீர்களே, நீங்களே கதாநாயகியாக நடித்து விடுகிறீர்களா என கமல்ஹாசன் நகைச்சுவையாக கேட்டார்" என பாடகி எஸ்.ஜானகியும் பேசியிருப்பார்.

இளையாராஜா, இசை, தேசிய விருது, எஸ்.ஜானகி, பாடல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இளையராஜா இசையில் பாடிய இரண்டு பாடல்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார் எஸ்.ஜானகி.

'பொன்மேனி உருகுதே' (மூன்றாம் பிறை, 1982)

இளையராஜா இசையில் மூன்றாம் பிறை திரைப்படத்தில் பாடிய பாடல்களுக்காக தமிழக அரசின் மாநில விருதைப் பெற்றார் எஸ்.ஜானகி.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் அவர் 'பொன்மேனி உருகுதே' பாடலில் நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு பின்னணிக் குரலாக ஒலித்திருப்பார்.

"அந்தப் பாடலை நான் விவரிக்கும் போது ஜானகி சிரிக்கத் தொடங்கிவிட்டார், ஏனென்றால் அது ஒரு கவர்ச்சிப் பாடல். நான் சொல்லிக் கொடுத்ததை மிக அழகாகப் பாடினார். அதே போல, 'நிலா காயிது' பாடல். அவரைப் பொருத்தவரை தனது பணியை சிறப்பாக முடித்துவிடுவார்," என்று ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் இளையராஜா.

இளையாராஜா, இசை, தேசிய விருது, எஸ்.ஜானகி, பாடல்கள்

பட மூலாதாரம், S JANAKI / X

'மார்கழி திங்கள் அல்லவா' (சங்கமம், 1999)

சங்கமம் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் இன்றும் நினைவுகூரப்படுகின்றன. இந்தப் படத்தில் இடம் பெற்ற 'மார்கழி திங்கள் அல்லவா' பாடலுக்காக தமிழ்நாடு மாநில அரசின் விருதைப் பெற்றார் எஸ்.ஜானகி.

திரைப்படத்தில் நாயகனும் (நடிகர் ரஹ்மான்) நாயகியும் (விந்தியா) நடனக் கலைஞர்கள், இவர்களுக்குள் நடக்கும் கலைப் போட்டி மற்றும் காதலை அடிப்படையாகக் கொண்டு நகரும் திரைக்கதை.

அதன் உச்சமாக நாயகி பாடும் பாடல் தான் 'மார்கழி திங்கள் அல்லவா'. நாயகி விஷமருந்திவிட்டு கண்ணீருடன் அதேசமயம் சிரித்துக்கொண்டே பாடும் ஒரு பாடல் என்பதால் முன்பு கமல்ஹாசன் குறிப்பிட்டதைப் போலவே, தனது 'குரல் நடிப்பு' மூலம் பாடலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பார் எஸ்.ஜானகி.

"ஜானகி அம்மா 'மார்கழி திங்கள் அல்லவா' பாடலை பாடும்போது, அவரது குரல் 'ஆன்மாவோடு' வெளிப்படுவதைப் போல இருந்தது" என ஒரு நிகழ்வில் பேசியிருப்பார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

'நெஞ்சினிலே நெஞ்சினிலே' (உயிரே, 1998)

இளையாராஜா, இசை, தேசிய விருது, எஸ்.ஜானகி, பாடல்கள்

பட மூலாதாரம், Madras Talkies

இந்தப் பாடலுக்காக எஸ்.ஜானகிக்கு தேசிய அல்லது மாநில விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும் இங்கு இதைக் குறிப்பிட காரணம், 'உயிரே' திரைப்படம் 'தில் சே' என்ற பாலிவுட் திரைப்படத்தின் தமிழாக்கம்.

இதில் 'ஜியா சலே' என்ற இந்திப் பாடலை லதா மங்கேஷ்கர் பாடியிருப்பார். அதன் தமிழ் வடிவமான 'நெஞ்சினிலே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார்.

"அப்போது என்னைப் பார்க்க வரும் ரசிகர்கள் இந்தியில் லதா மங்கேஷ்கர் பாடிய கேசட்டை கொண்டுவருவார்கள். அதைக் காட்டி, நீங்கள் பாடிய பாடல் சிறப்பாக இருந்தது எனக் கூறுவார்கள். எனக்கு என்ன சொல்ல எனத் தெரியாமல் சிரிப்பேன்," என ஒரு நேர்காணலில் பகிர்ந்திருப்பார் எஸ்.ஜானகி.

இப்போது இன்ஸ்டாகிராம் ரீல்களில் 'ஜென் Z' தலைமுறையினரும் விரும்பும் பாடலாக எஸ்.ஜானகியின் குரலில் ஒலிக்கிறது 'நெஞ்சினிலே நெஞ்சினிலே' பாடல்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு