You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'இந்தியா வந்து சென்ற பிறகு என் மூளையில் 38 ஒட்டுண்ணிகள்' - இவருக்கு என்ன நடந்தது?
ஏதோ தவறு இருப்பதை லோரி முதன்முதலாக உணர்ந்தது, கழிவறைக்குச் சென்றபோது சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள நாடாப்புழுவைக் கண்டுபிடித்தபோதுதான். அது, அவரது மூளையில் 38 ஒட்டுண்ணிகள் உருவாகக் காரணமான நியூரோசிஸ்டிசெர்கோசிஸ் என்ற நோயின் முதல் அறிகுறியாக இருந்தது.
ஊடகத் துறையில் பணிபுரியும் லோரி, 2007 ஆம் ஆண்டில் மூன்று மாதங்கள் இந்தியாவுக்கு வந்திருந்தார். அவருக்கு அப்போது தான் இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அவரது மருத்துவரான தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் நிபுணர் மருத்துவர் பிரெண்டன் ஹீலி கருதுகிறார்.
உணவு நச்சுத்தன்மையைத் தவிர்ப்பதற்காக, லோரி தனது பயணத்தின் போது இறைச்சி சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார். இருப்பினும், பன்றி நாடாப்புழுவின் மிக நுண்ணிய முட்டைகளைக் கொண்ட உணவை அவர் அறியாமல் உட்கொண்டிருக்கலாம் என்று மருத்துவர் ஹீலி கருதுகிறார்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2010 இல், லோரி ஒரு உணவகத்தின் கழிப்பறையில் ஒரு நாடாப்புழுவைக் கண்டார்.
இதற்குப் பிறகு, அவர் ஒரு மருத்துவரிடம் சென்று தன்னை பரிசோதித்துக் கொண்டார், ஆனால் அவரது மலப் பரிசோதனை முடிவு சாதாரணமாக வந்தது. அப்போது அவரது ஆரோக்கியமும் நன்றாக இருந்ததால், அவரது வாழ்க்கை வழக்கம் போலத் தொடர்ந்தது.
இருப்பினும், அடுத்த ஒரு வருடத்திற்குள், அவர் கடுமையான தலைவலியால் அவதிப்படத் தொடங்கினார். 2011 இல், அவருக்கு முதல் முறையாக வலிப்பு ஏற்பட்டது.
"ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் நான் மிகவும் சிரமப்பட்டேன்," என்று கூறும் லோரி, "எனக்கு நினைவு திரும்பியபோது, நான் ஒரு ஆம்புலன்ஸில் இருந்தேன். இது எப்படி நடந்தது? ஏன் நடந்தது? என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்"என்கிறார்.
விரிவான சோதனைகள், லோரிக்கு 'நியூரோசிஸ்டிசெர்கோசிஸ்' பாதிப்பு இருப்பதை இறுதியாக உறுதிப்படுத்தின.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தத் தொற்றானது சமைக்கப்படாத அல்லது அரைகுறையாக சமைக்கப்பட்ட பன்றி இறைச்சியை உண்பதாலும், நாடாப்புழு முட்டைகளால் அசுத்தமடைந்த நீர் அல்லது உணவை உட்கொள்வதாலும் அல்லது அசுத்தமான சூழலாலும் பரவக்கூடும்.
இந்த நோய் பிரிட்டனில் மிகவும் அரிதானது மற்றும் இந்தத் தொற்று பரவலாகக் காணப்படும் பகுதிகளிலிருந்து வந்தவர்களிடமே பெரும்பாலான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.
லோரி முழுமையாகக் குணமடைவதற்கான பயணம் மிகவும் நீண்டதாகவும் சவாலானதாகவும் இருந்தது.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் லோரியின் நிலைமை சரியாகாததால், அவர் மீண்டும் தனது தந்தையின் வீட்டிலேயே வாழத் தொடங்கினார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், "நான் முன்பிருந்ததைப் போல் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நான் பார்ப்பதற்கும் முன்பு போல இல்லை. வெளியில் எங்கும் செல்ல எனக்குப் பிடிக்கவில்லை." என்கிறார்.
பின்னர் லோரி, கார்மர்தனில் ஒரு கலை படிப்பை மேற்கொண்டார். 2018 ஆம் ஆண்டிற்குள், அவரது உடல் நலம் கணிசமாக மேம்பட்டதால், அவர் மீண்டும் கார்டிஃப் நகருக்குக் குடிபெயர்ந்து இன்டீரியர் டிசைனிங் படிக்கத் தொடங்கினார்.
இறுதியாக, 2022-இல் அவர் மீண்டும் பணியாற்றத் தொடங்கினார்.
பல ஆண்டுகளாக உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொண்ட பிறகு, லோரியின் மூளையில் இருந்த ஒட்டுண்ணிகள் இப்போது கால்சியம் படிவங்களாக மாறிவிட்டன.
"அவற்றை என் மூளையிலிருந்து அகற்றுவதற்கு நான் எந்த அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை. அவை காலப்போக்கில் செயலற்றதாகி, கால்சியம் படிவங்களாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தற்போது அவை அந்த நிலையில் தான் இருக்கின்றன," என்று லோரி கூறினார்.
ஒட்டுண்ணியின் முட்டைகள் அனைத்தையும் அழிக்கும் வகையில் லோரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் நன்றாகக் குணமடைந்து வருவதாகவும் மருத்துவர் ஹீலி தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு லோரிக்கு வலிப்பு ஏதும் ஏற்படவில்லை, ஆனால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் வலிப்பு நோய்க்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும்.
தற்போது கார்டிஃப் நகரில் வசிக்கும் லோரி, தனது கடினமான அனுபவத்திலிருந்து ஏதேனும் ஒரு நல்ல விஷயம் கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறுகிறார்.
"இப்போது நான் எனது வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்லவும், இந்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எனது அனுபவத்தை ஏதேனும் ஒரு நல்ல காரியத்திற்காகப் பயன்படுத்தவும் விரும்புகிறேன்" என்று கூறும் லோரி,
"அடுத்த கணம் நம் வாழ்வில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இன்று நான் உயிருடன், ஆரோக்கியமாக, மீண்டும் ஒரு இயல்பான வாழ்க்கையை வாழ முடிகிறது. இதை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேன்." என்கிறார்.
பல ஆண்டுகள் சிகிச்சை பெற்று தனது உடல்நலத்தை மீட்டெடுத்த லோரி , தற்போது தாம் சந்தித்த இந்த கடுமையான அனுபவத்தை ஒரு நேர்மறையான முயற்சியாக மாற்ற விரும்புகிறார். இதன் மூலம், இந்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு