காணொளி: தேவை குறைவதால் நலிவடையும் 5000 ஆண்டு மண்பாண்டக் கலை

காணொளி: தேவை குறைவதால் நலிவடையும் 5000 ஆண்டு மண்பாண்டக் கலை
பிரசுரிக்கப்பட்டது

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிந்து சமவெளி நாகரிகத்தில் களிமண் பொம்மைகளும் மண்பாண்டங்களும் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தன.

காலங்கள் மாறினாலும், இந்தக் கலை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தானின் கசூரில், பல குடும்பங்கள் இன்னும் இந்தப் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளன.

முகமது ரியாஸ் தனது ஐந்தாவது வயதில் களிமண் பானைகள் மற்றும் பொம்மைகள் செய்யக் கற்றுக்கொண்டார், பல ஆண்டுகளாக இந்தக் கலையின் மூலமே தனது வாழ்வாதாரத்தை ஈட்டினார். இருப்பினும், மலிவான பிளாஸ்டிக் பொம்மைகள் பரவலாகக் கிடைப்பதால், களிமண் பொம்மைகளுக்கான தேவை கணிசமாகக் குறைந்துவிட்டது.

முகமது ரியாஸ் கூறுகையில், "இளைய தலைமுறையினர் இந்தக் கலையைத் தொடர விரும்பவில்லை. பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் பிற நவீன பொம்மைகள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன, இதன் காரணமாக, பாரம்பரிய களிமண் பொம்மைகளுக்கான தேவை குறைந்து வருகிறது." என்றார்.

பர்வீன் பீபியின் கதையும் இதிலிருந்து வேறுபட்டதல்ல. அவர் 28 ஆண்டுகளுக்கு முன்பு களிமண் பானைகள் மற்றும் பொம்மைகள் செய்யத் தொடங்கினார். கணவரின் மரணத்துக்குப் பிறகு இந்தக் கலையின் மூலம் தான் தனது குழந்தைகளை வளர்த்தார். ஆனால் களிமண் பொம்மைகளுக்கான தேவை குறைந்துவிட்டதால், இப்போது வாழ்வாதாரத்திற்காக பூந்தொட்டிகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களைச் செய்கிறார்.

பர்வீன் பீபி கூறுகையில், "களிமண் பொம்மைகளுக்கான தேவை முற்றிலுமாக மறைந்துவிட்டது. இப்போது, ​​ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்குத் தான் அதிக தேவை உள்ளது, அதனால் எது விற்பனையாகிறதோ அதை நாங்கள் செய்கிறோம். இந்த வேலை தான் எங்கள் வாழ்வாதாரம். வேலை செய்யவில்லை என்றால், எங்களுக்கு வருமானம் இல்லை. என் மகன் களிமண் வேலைகளில் உதவி செய்து வந்தான், ஆனால் அவனால் அதைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை. அவனால் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்ய முடியாததால், நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்." என்கிறார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, களிமண் பொம்மைகள் நன்றாக விற்பனையாகின என்றும், கைவினைஞர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை வழங்கியதாகவும் முகமது ஆரிஃப் நினைவுகூர்கிறார். ஆனால், இன்று அவற்றுக்கான தேவை மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக, பல கைவினைஞர்கள் பொம்மைகள் செய்வதிலிருந்து விலகி, தற்போது சந்தையில் தேவைப்படும் பொருட்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றனர்.

முகமது ஆரிஃப் கூறுகையில், "இந்த வேலைக்கு அதிக உடல் உழைப்பு தேவைப்படுகிறது. சிறிய பொம்மைகளை உற்பத்தி செய்து இனி எங்களால் வாழ்க்கை நடத்த முடியாது, அதனால் அவற்றைச் செய்வதை நிறுத்திவிட்டு, எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற பெரிய பொருட்களைச் செய்யத் தொடங்கிவிட்டோம்.

இவ்வளவு கடினமாக உழைத்த பிறகும், நான் மாதத்துக்கு சுமார் 40,000 ரூபாய் தான் சம்பாதிக்கிறேன், அது செலவுகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லை. மின்சாரக் கட்டணம் மட்டுமே மிக அதிகமாக வருகிறது.

நாங்கள் ஹோட்டல்களுக்கு அதிக அளவில் களிமண் பானைகளை வழங்குகிறோம். நாங்கள் சுமார் 150 முதல் 200 சிறிய பானைகளைச் செய்கிறோம், ஆனால் அவை 1,000 முதல் 1,500 ரூபாயை மட்டுமே ஈட்டித் தருகின்றன.

நான் வேலை செய்யும் நாட்களுக்கு மட்டுமே எனக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. நான் ஒரு நாள் விடுப்பு எடுத்தால், என் வருமானம் குறைக்கப்படும்." என தெரிவித்தார்.

இந்தக் கலையை அறிந்த தற்போதைய தலைமுறையின் கடைசி கைவினைஞர்களில் முகமது ரியாஸ், பர்வீன் பீபி மற்றும் முகமது ஆரிஃப் ஆகியோரும் அடங்குவர். அவர்களின் பிள்ளைகளும் இந்தத் தொழிலைத் தொடர விரும்பவில்லை.

முகமது ரியாஸ் கூறுகையில், "என் சொந்த மகன்களே இங்கு வருவார்கள், பார்த்துவிட்டுச் செல்வார்கள்; அவர்கள் இதில் ஈடுபடுவதில்லை. மிகக் குறைந்த வருமானத்துக்காக அதிக கடின உழைப்பு தேவைப்படுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்." என்றார்.

செய்தியாளர்: நாஷிஷ் ஃபைஸ்

ஒளிப்பதிவு: வகாஸ் அன்வர்

படத்தொகுப்பு: பிலால் அஹ்மது

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு