You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கொசுக்கள் நம்மில் சிலரை மட்டும் அதிகம் கடிப்பது ஏன்?
ஒருவர், “ஐயோ இடைவிடாது கடிக்கும் இந்தக் கொசுக்கள் என்னைப் பாடாய்ப்படுத்துகின்றன” என்று புலம்பும்போது, அவருக்கு அருகில் இருப்பவர், “அப்படியா? என்னை எதுவும் கடிக்கவில்லையே!” என்று கூறலாம். “ஒருவேளை கொசுக்களுக்கு உன் ரத்தம் மிகவும் பிடித்துள்ளது போல” என்று அவர்கள் கேலியாகக்கூட சொல்லலாம்.
பொதுவாக, குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாகக் குறிவைக்கின்றனவா? உண்மை என்ன? இந்தக் காணொளியில் தெரிந்துகொள்வோம்.
இது உண்மையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். கொசுக்கள் மிக அருகில், குறிப்பாக 10 மீட்டருக்கும் குறைவான தொலைவில், வரும்போது, ஒருவரது சுவாசம், தோலின் வாசனை ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் வேதிம சிக்னல்களின் அடிப்படையில் யாரைக் கடிக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதாக பிரிட்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பூச்சியியல் துறையின் பேராசிரியர் ஸ்டீவ் லிண்ட்சே விளக்கினார். இதுபோல சிலர் உடலில் வேதிம சிக்னல்கள் ஒரு காந்தம் போலச் செயல்பட்டு கொசுக்களைத் தன்பால் ஈர்க்கின்றன.
கொசுக்களில் பெண் மட்டுமே மனிதர்களைக் கடிக்கும். தமது முட்டைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரதத்தைப் பெற, அவை நம் ரத்தத்தை உணவாகக் கொள்கின்றன. கொசுக்களால், பார்வை மற்றும் வாசனை உணர்வைப் பயன்படுத்தி, சுமார் 10 மீட்டர் தொலைவில் இருந்தே தமது இலக்கை அடையாளம் காண முடியும். நாம் வெளியேற்றும் கரிம வாயுவும் நம் தோலில் இருந்து வெளிப்படும் வாசனைகளும் அவற்றுக்கு முக்கிய சிக்னல்களாக அமைகின்றன.
குழந்தைகளைவிடப் பெரியவர்கள் அதிக கரிம வாயுவை வெளியிடுவதால், அவை பெரியவர்களை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகின்றன.
கொசுக்கள் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் பெரிதும் ஈர்க்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், கர்ப்பிணிகள் சராசரி பெண்களைவிட அதிகமான கொசுக்களை ஈர்க்கின்றனர். கர்ப்ப காலத்தில் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகள், சுவாச வேகம் அதிகரிப்பதால், உடல் அதிக வெப்பத்தை உருவாக்கும், அதிக அளவிலான கரிம வாயுவை வெளியேற்றும்.
உடற்பயிற்சி செய்வோரின் உடலில் இருந்து அதிக கரிம வாயு வெளியேறுவதுடன், உடல் வெப்பமடைந்து அதிக வியர்வை உற்பத்தியாகிறது. எனவே அவர்களும் கொசுக்களை அதிகம் ஈர்க்கின்றனர்.
இப்படியாக நம் உடலில் இருந்து வியர்வை, தோலின் வாசனை, சுவாசத்தில் வெளியேறும் கரிம வாயு ஆகியவற்றில் வெளிப்படும் வேதிம சிக்னல்களுக்கு கொசுக்கள் ஈர்க்கப்படுவதாகவும் அவை வேதிம சிக்னல்கள் நிறைந்த சிற்றுலகில் வாழ்வதாகவும் லிண்ட்சே கூறினார்.
அதோடு, நம் உடலில் காணப்படும் அம்மோனியா மற்றும் லாக்டிக் அமிலத்தால் கொசுக்கள் இயற்கையாகவே ஈர்க்கப்படுகின்றன. அதிக அளவில் கார்பாக்சிலிக் அமிலங்களும் இருக்கும்போது அவற்றின் ஈர்ப்பு மேலும் தீவிரமடைகிறது.
அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், 64 பேரின் உடல் துர்நாற்றத்தை சேகரிக்க, அவர்களை ஆறு மணிநேரம் நைலான் உறைகளை அணியச் செய்தனர். பின்னர் அந்த துர்நாற்றம் கொசுக்கள் இடையே வெளிப்படுத்தப்பட்டது. இந்த நைலான் மாதிரிகள் 'வாசனை சேகரிக்கும் கருவிகளாக' செயல்பட்டன. இந்தச் சோதனையில், அதிக அளவு கார்பாக்சிலிக் அமிலங்களைக் கொண்ட உடல் துர்நாற்றம் வீசும் நபர்களை நோக்கி கொசுக்கள் அடிக்கடி ஈர்க்கப்பட்டது தெரிய வந்தது.
நமது தோலில் உள்ள நுண்ணுயிரிகளும் நாம் கொசுக்களை எந்த அளவுக்கு ஈர்க்கிறோம் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நெதர்லாந்தின் வாகெனிங்கன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மலேரியாவை பரப்பும் கொசுக்களை வலுவாக ஈர்க்கும் நபர்களின் தோலில் ஒரு தனித்துவமான பாக்டீரியா தொகுதி இருப்பதைக் கண்டறிந்தனர்.
குறைவான கொசுக்களை ஈர்ப்பவர்களுடன் ஒப்பிடும்போது, இந்த நபர்களின் தோலில் அதிக பாக்டீரியா சுமை உள்ளது தெரிய வந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு