பராசக்தி, மனோகரா உள்பட கருணாநிதியின் வசனத்திற்காக அதிகம் பேசப்பட்ட 8 படங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,
    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அரசியலிலும் முக்கிய அங்கம் வகித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. சினிமாவில் அவருடைய எழுத்துப் பணி அரசியலுடன் இணைந்தே வளர்ந்தது.

1947-ஆம் ஆண்டில் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ராஜகுமாரி படத்தில் வசனகர்த்தாவாக தொடங்கிய அவரின் கலைப்பயணம் அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மணமகள் என வளர்ந்தது. 1952-ஆம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தில் அவருடைய வசனங்கள் பெரும் புகழை பெற்றன.

தமிழ் திரையுலகில் பராசக்தி திரைக்கதை வசனங்கள் பட்டிதொட்டியெல்லாம் சென்றடைந்தன. அதிலிருந்து கருணாநிதியின் வளர்ச்சி இன்னும் வேகமானது. 'மனோகரா'வின் வசனங்கள் இன்றும் கூட பலரால் விரும்பி கேட்கப்படுகின்றன.

அதைத்தொடர்ந்து, பூம்புகார், எங்கள் தங்கம், ரங்கோன் ராதா, அரசிளங்குமரி, பூக்காரி, தூக்குமேடை, பாலைவனச் சோலை, நீதிக்கு தண்டனை, பாசப் பறவைகள், பாசக் கிளிகள், இளைஞன், பொன்னர் சங்கர் உட்பட 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு கருணாநிதி வசனங்கள் எழுதினார். இன்று கருணாநிதியின் 8ஆவது நினைவுநாள்.

கருணாநிதியுடன் கவிஞர் இளையபாரதி
படக்குறிப்பு, கருணாநிதியுடன் கவிஞர் இளையபாரதி

கருணாநிதியின் வசனங்கள், எழுத்து ஆர்வம், சினிமா பயணம் குறித்து அவருடன் பழகியவர்களிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். 'போராடடா, ஒரு வாளேந்தடா' பாடலை எழுதியவரும், பல ஆண்டுகள் கருணாநிதியுடன் நெருங்கி பழகியவருான இளையபாரதி கூறுகையில், ''நான் அவரை கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் நெருக்கமாக உடனிருந்து கவனித்திருக்கிறேன். ஒரே ரத்தம், காவலுக்கு கெட்டிக்காரன், பாசக்கிளிகள் உட்பட 12 படங்களில் நான் கூடவே இருந்திருக்கிறேன். சினிமா தொடர்பான பல பணிகளில் உடனிருந்துள்ளேன். அவர் வசனம் எழுதிய படங்களில் இணை இயக்குநராக இருந்திருக்கிறேன்" என்றார்.

அவருடைய எழுத்து பாணி குறித்து பேசிய இளையபாரதி, "அவர் வசனம் எழுதும் பாணியே தனி. தாளில் தன் கைப்பட பேனாவால் எழுதுவார். ஏ4 தாளை சிறுசிறு துண்டுகளாக வைத்துக்கொண்டும் எழுதுவார். பெரும்பாலும் மீண்டும் அதை திருத்தி எழுத மாட்டார். அவர் எழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். பல பக்க வசனங்களை கோர்வையாக, அடித்தல்-திருத்தல் இல்லாமல் எழுதுவார். எழுதுவதற்கு நேரம், மனநிலை என தனக்கு கிடைக்காது, நேரம் கிடைக்கும்போது எழுதுவேன் என அவரே பலமுறை சொல்லியிருக்கிறார்" என கூறினார்.

"அவர் அதிகம் படித்தவரில்லை. ஆனால் நிறைய புத்தகங்களை படித்தார். சிலப்பதிகாரத்தை இப்படி எழுதுகிறார் என்றால், அதை எத்தனை முறை படித்து ரசித்து இருப்பார் என அறிஞர் அண்ணாவே (முன்னாள் முதலமைச்சர்) சொல்லியிருக்கிறார். சாமிநாத சர்மா எழுத்தை படித்தார், கிரீஸ் நாட்டை அறிந்து சாக்ரட்டீஸ் நாடகத்தை தமிழ் திரையுலகில் கொண்டு வந்தார். அதில் பெரியாரை கொண்டு வந்தார். கம்பராமாயணத்தை நன்கு படித்தவர். கம்பன் பாணியை தனது படங்களில் குறிப்பாக சேரன் செங்குட்டுவன் படத்தில் கொண்டு வந்தார்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருணாநிதியுடன் இளையபாரதி மற்றும் ஜெயகாந்தன்
படக்குறிப்பு, கருணாநிதியுடன் இளையபாரதி மற்றும் ஜெயகாந்தன்

இளையபாரதியின் கூற்றுப்படி, கருணாநிதி வசனம் எழுதிய காலகட்டத்தில் அதிகமான வசனங்கள் இருக்கும் என்பதால், தமிழ் சினிமாவில் அதிகமாக வசனங்கள் எழுதியவர்களில் அவரும் ஒருவர் எனலாம்.

கருணாநிதியின் கடைசி 20, 30 ஆண்டுகளில் வயது காரணமாக தூக்கம் குறைந்தபோது அதை எழுத்து பணிக்காக பயன்படுத்தியதாக குறிப்பிடுகிறார் இளையபாரதி.

"ஆரம்ப காலத்தில் பாரதிதாசனின் தாக்கம் அவரிடம் நிறைய இருந்தது. அதனால்தான் பராசக்தியில் பாரதிதாசனின் 'ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்ப ராகிவிட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!' என்ற பாடலை சரியான இடத்தில் வசனமாக பயன்படுத்தினார். வி.கே.ராமசாமி, சிவாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளில் அந்த வசனம் பிரபலம்," என இளையபாரதி கூறினார்.

கருணாநிதியுடன் பெண் சிங்கம் திரைப்படத்தின் இயக்குநர் பாலிஶ்ரீரங்கம்
படக்குறிப்பு, கருணாநிதியுடன் பெண் சிங்கம் திரைப்படத்தின் இயக்குநர் பாலிஶ்ரீரங்கம்

கருணாநிதி கதை வசனத்தில் உருவான பெண் சிங்கம் படத்தின் இயக்குநரும், கருணாநிதி திரை படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவருமான பாலிஸ்ரீரங்கத்திடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"ஒரு நாள் இரவு 10.30 மணிக்கு அவர் வீட்டில் இருந்து போன் வந்தது. பெண் சிங்கம் படம் உருவாவது பற்றி பேசினார், எனக்கு டீ கொடுத்தார். மறுநாள் காலையில் என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தினார். வசனங்கள் எழுதும்போது என்னை முன்பே அழைத்துவிடுவார். அவர் சொல்லச்சொல்ல, அவர் உதவியாளர் சண்முகநாதன் அந்த வசனங்களை எழுதுவார். அவர் படைப்புகளில் பெண்கள் முன்னேற்றம், பகுத்தறிவு, சமூக சிந்தனை இருக்கும். அதை பெண் சிங்கத்திலும் கொண்டு வந்தார்," என பாலிஶ்ரீரங்கம் கூறினார்.

பெண்சிங்கம் திரைப்பட படப்பிடிப்பில் இயக்குநர் பாலிஶ்ரீரங்கம்
படக்குறிப்பு, பெண் சிங்கம் திரைப்பட படப்பிடிப்பில் இயக்குநர் பாலிஶ்ரீரங்கம்

"படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் உடல்மொழி, வசன உச்சரிப்பு தெரிந்துகொண்டு அதற்கேற்ப தனது வசனங்களை மாற்றினார். குறிப்பாக, அந்த படத்தில் ஒரு ஓரங்க நாடக காட்சிக்கு மீரா ஜாஸ்மினை நிறைய பயிற்சி எடுக்க சொன்னார். இந்த வசனம் சினிமாவுக்கு எப்படி இருக்கும் என கேட்பார். நான் இயக்குநராக கருத்து சொன்னால் ஏற்றுக்கொள்வார்." என்றார் பாலிஸ்ரீரங்கம்.

"இயக்குநராக வசனங்களை மாற்றி கொடுக்க சொன்னால் செய்துகொடுப்பார். இயக்குநர் ஏன் வசனத்தை மாற்ற வேண்டும் என உறுதியாக இருக்கிறார் என ஆராய்ந்து அதற்கான தீர்வை கொடுப்பார். இயக்குநர் மனநிலை அறிந்து தன் எழுத்தை மாற்றுவார்." என்றார் பாலிஸ்ரீரங்கம்.

கருணாநிதி எழுதிய வசனங்களில் பிரபலமான சிலவற்றை இந்த கட்டுரையில் தொகுத்துள்ளோம்.

பராசக்தி

பராசக்தி

பட மூலாதாரம், AVMProductions/Youtube

படக்குறிப்பு, பராசக்தி திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் கருணாநிதியின் வசனத்தை பேசியிருப்பார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நடிகர் சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதி எழுதிய வசனங்கள் இன்று வரை மிக பிரபலமாக உள்ளன. குறிப்பாக சிவாஜி கணேசன் நீதிமன்ற கூண்டில் பேசும் வசனங்கள் இன்றுவரை அதிகம் பேசப்படுவதாக உள்ளது.

'இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்." எனத் தொடங்கி நீளமான வசனத்தை சிவாஜி கணேசன் பேசியிருப்பார்.

"கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக." என அந்த வசனம் நீளும்.

மனோகரா

1954ஆம் ஆண்டில் பம்மல் சம்பந்தம் முதலியாரின் 'மனோகரா' நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. இதில், சிவாஜி கணேசன், கண்ணாம்பாள், டி.ஆர். ராஜகுமாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில், அரசருக்கும் அவருடைய மகன் மனோகருக்கும் இடையேயான வசனம் பல படங்களில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?

மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.

அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.

மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?

என கைது செய்து அழைத்து வரும் தருணத்தில் சிவாஜி கணேசன் இந்த வசனத்தை பேசியிருந்தார்.

மருதநாட்டு இளவரசி

"மிருக ஜாதியில் புலி மானைக் கொல்கிறது. மனித ஜாதியில் மான் புலியைக் கொல்கிறது" என, 'மருத நாட்டு இளவரசி' படத்தில் எம்.ஜி.ஆர்.- வி.என். ஜானகி பேசிய மு.கருணாநிதியின் வசனம் இன்றைக்கும் பிரபலம்.

பூம்புகார்

சிலப்பதிகாரம் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பூம்புகார் திரைப்படத்தில் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் கோவலனாகவும் , நடிகை விஜயகுமாரி கண்ணகியாகவும் நடித்திருப்பர். அதில், "மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது" என கருணாநிதி எழுதிய வசனம் பல சூழல்களில் இன்றும் மேற்கோள் காட்டப்படுகிறது.

'ராஜா ராணி'யில் வரும் சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகம்

"சிங்கத் திருவிடமே உன்னை இகழ்ந்தார்கள். ஈடற்ற புலவனே இளங்கோ! ஆசைத்தம்பி! உன்னை இகழ்ந்தார்கள், நீதிக்கு உயிர்தந்த பாண்டியனே ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே! உன்னை இகழ்ந்தார்கள், அரங்கின் அண்ணலே! உன்னை இகழ்ந்தார்கள், செந்தமிழ் வளங்குறையாச் சிங்க ஏறுகளே! அறிஞரே! கவிஞரே! கலைவாணரே! உம்மையெல்லாம் இகழ்ந்தார்கள். புறப்படுங்கள்! களத்திலே உங்கள் தலைகள் பறிபோகலாம். ஆனால் கனல் கக்கும் கண்களோடு அவை கொய்யப்படட்டும்!"

நடிகர்கள் சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன் மற்றும் ராஜ சுலோச்சனா ஆகியோர் நடித்த 'ராஜா ராணி' திரைப்படத்தில் இந்த வசனம் இடம்பெற்றிருந்தது. இதில், கருணாநிதி எழுதிய நாடகமான சேரன் செங்குட்டுவன் ஒரு நாடகக் காட்சியாக இடம்பெற்றிருக்கும்.

கருணாநிதி - மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், PTI

மலைக்கள்ளன்

எம்.ஜி.ஆர், பானுமதி நடிப்பில் 1954ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில், பூங்கோதை கதாபாத்திரமும் மலைக்கள்ளனும் பேசிக்கொள்ளும் வசனம் இது:

பூங்கோதை: வருவதற்கு நேரான வழி இருக்கும் போது குறுக்கு வழியில் ஏன் வர வேண்டும்?

மலைக்கள்ளன்: பூவைத் தேடி ஓடிவரும் வண்டு, தோட்டக்காரனை எழுப்பி சொல்லிவிட்டா வரும்?

'ஒரே ரத்தம்'

"நான் ஒத்த ரூபா நோட்டுப்போல ஒன்ன பொட்டிக்குள்ள வச்சியிருந்தேன். நீ இப்படி சில்றையா ஆயிட்டியே"

கருணாநிதியின் கதை மற்றும் வசனத்தில் உருவான 'ஒரே ரத்தம்' திரைப்படத்தில் கார்த்திக், ராதாரவி , சீதா ஆகியோருடன் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடித்துள்ளார்.

'மந்திரி குமாரி'

மந்திரி குமாரி திரைப்படத்தில், "சுதந்திரமாக திரியும் சூரியன் காற்றுப்பட்டு கரையும் மேகத்திடம் மன்னிப்புக் கேட்பதா?" என்ற வசனம் இடம்பெற்றிருக்கும்.

எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரி தேவி நடிப்பில் உருவான இத்திரப்படம் 1950-ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்துக்கு கருணாநிதி கதை, வசனம் எழுதியுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு