'6 வயதில் பருவமடைந்தேன்': பெண்கள் சிறு வயதிலேயே பருவமடைய என்ன காரணம்? ஆபத்தும் தடுக்கும் வழியும்

கேபி

பட மூலாதாரம், Gabby

படக்குறிப்பு, கேபிக்கு இப்போது 26 வயது. ஆனால், அவர் மிகவும் இளம் வயதில் பருவமடைந்ததால், அது தொடங்கிய காலத்தைப் பற்றி அவருக்கு அதிகம் நினைவில் இல்லை.
    • எழுதியவர், ரெபெக்கா தார்ன்
    • பதவி, வேர்ல்டு சர்வீஸ் க்ளோபல் ஹெல்த்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஆறு வயதில், கேபிக்கு மாதவிடாய் தொடங்கியது மற்றும் உடலில் முடி வளர ஆரம்பித்தது.

தனது முதல் குழந்தைக்கு நடப்பதைப் பார்த்து பதற்றமடைந்த அவரது தாய், அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

"எனக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி குழந்தைகள் நல மருத்துவக் குழுவினர் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது, ஏனென்றால் அவர்கள் இதைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை" என்று பிரிட்டனைச் சேர்ந்த கேபி பிபிசி வேர்ல்ட் சர்வீஸிடம் கூறுகிறார்.

"இதற்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பது பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற, அவர்கள் நாடு முழுவதும் உள்ள மற்ற மருத்துவமனைகளைத் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது"என்கிறார் கேபி.

தற்போது 26 வயதாகும் கேபிக்கு, சென்ட்ரல் பிரிகோஷியஸ் பியூபர்ட்டி (CPP)பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது, சிறுமிகள் எட்டு வயதிற்கு முன்பும், சிறுவர்கள் ஒன்பது வயதிற்கு முன்பும் பருவமடையத் தொடங்கும் ஒரு நிலையாகும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த மதிப்பீடுகள் நாடுகளுக்கு இடையே கணிசமாக வேறுபடுகின்றன.

பெண்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உலகளவில், ஒவ்வோர் ஆண்டும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 10,000 பெண்களுக்கு 0.2 முதல் 26 வரையிலும், 10,000 ஆண்களுக்கு 0.02 முதல் 0.9 வரையிலும் உள்ளது.

முன்கூட்டியே பருவமடைபவர்கள் உடனடி விளைவுகளை மட்டும் சந்திப்பதில்லை, பிற்காலத்தில் பல வகையான புற்றுநோய்கள் மற்றும் இருதய நோய்கள் உருவாகும் அதிக ஆபத்தையும் எதிர்கொள்கின்றனர்.

'நான் மிகவும் அந்நியமாக உணர்ந்தேன்'

கேபி

பட மூலாதாரம், Gabby

படக்குறிப்பு, கேபி, முன்கூட்டிய பருவமடைதல் குறித்து நிலவும் தவறான புரிதல்களையும் அவமான உணர்வையும் போக்க விரும்புவதாகக் கூறுகிறார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கேபி மிகவும் இளம் வயதிலேயே பருவமடைந்ததால், அதைப் பற்றி அவருக்கு அதிகம் நினைவில் இல்லை. ஆனால், நினைவில் இருக்கும் சில தருணங்கள் வேதனையாகவும் மனதைப் பாதிப்பதாகவும் இருந்தன.

"நான் கருவில் இருப்பது போன்ற நிலையில், மிகுந்த வலியோடு தரையில் சுருண்டு கிடந்தது எனக்கு நினைவிருக்கிறது," என்று கூறுகிறார் கேபி.

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக பல்வேறு பரிசோதனைகளும், சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவரது மூளையில் மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம், இதற்குக் காரணமாக இருக்கக்கூடிய வெளிப்படையான பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இதையடுத்து, கேபிக்கு சென்ட்ரல் ப்ரீகோஷியஸ் ப்யூபர்டி (central precocious puberty) இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், ஹார்மோன் தடுப்பான்கள் எனப்படும் கோனாடோட்ரோபின்-விடுவிக்கும் ஹார்மோன் அகோனிஸ்டுகள் (GnRH) மருந்தை அவர் எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்.

"நான் மிகவும் அந்நியமாக உணர்ந்தேன். ஏனென்றால், எனக்கு தொடர்ந்து பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. எனது ஹார்மோன்களைத் தடுப்பதற்காக மூன்று வாரங்களுக்கு ஒருமுறை ஊசி போடப்பட்டது" என்று கேபி பகிர்ந்து கொண்டார்.

 கேபி.

பட மூலாதாரம், Gabby

படக்குறிப்பு, பதின்ம வயதில் தனது நண்பர்களைவிட தான் வயதில் மூத்தவரைப் போலத் தோன்றியதாகக் கூறுகிறார் கேபி.

ஜிஎன்ஆர்ஹெச் (GnRH) மருந்தைத் தொடர்ந்து செலுத்துவது பருவமடைதலின் முன்னேற்றத்தைத் தற்காலிகமாக நிறுத்துகிறது. இதனால், குழந்தை தனது வயதுக்கேற்ற இயல்பான வேகத்தில் வளர முடியும்.

பொதுவாக, 11 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மருந்து நிறுத்தப்படும். அதன் பிறகு, பருவமடைதல் இயல்பாகத் தொடங்கும்.

கேபியின் உடல் வளர்ச்சியை தாமதப்படுத்துவதில் இந்த மருந்துகள் பயனுள்ளதாக இருந்தபோதிலும், அதற்கு முன்பே அவர் ஓராண்டு காலமாகப் பருவமடைதலுடன் தொடர்புடைய உடல் மாற்றங்களை எதிர்கொண்டிருந்தார்.

"கண்ணாடியில் என்னைப் பார்க்கும்போது, நான் யார் என்பதை என்னால் உண்மையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், மனதளவில் நான் உணர்ந்த வயதைவிட, தோற்றத்தில் நான் வயதானவளாகத் தெரிந்தேன்.

"எனது வயதுக்கு இருக்க வேண்டியதை விட நான் அதிக முதிர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டதாக நினைக்கிறேன்" என்கிறார் கேபி.

ப்ரீகோஷியஸ் ப்யூபர்ட்டிக்கு (முன்கூட்டிய பருவமடைதலுக்கு) என்ன காரணம்?

இந்த நிலையில் இரண்டு வகைகள் உள்ளன:

பெரிபெரல் பிரிகாஷியஸ் ப்யூபர்ட்டி (Peripheral precocious puberty) என்பது, மூளையின் ஹைப்போதாலமஸ் எனப்படும் பகுதியின் தலையீடு இல்லாமல், கருப்பைகள் மற்றும் விதைப்பைகள் பாலின ஹார்மோன்களை வழக்கத்தைவிட மிக விரைவாகச் சுரக்கத் தொடங்கும் நிலையாகும். ஹைப்போதாலமஸ் என்பது உடலின் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் மையமாகச் செயல்படும் மூளையின் ஒரு பகுதியாகும். கருப்பை அல்லது விதைப்பையில் ஏற்படும் கட்டிகள், அட்ரீனல் சுரப்பி தொடர்பான கோளாறுகள் அல்லது வெளிப்புற பாலின ஸ்டீராய்டுகளின் தாக்கம் போன்ற அடிப்படை உடல்நலப் பிரச்னைகள் பொதுவாக இதற்குக் காரணமாக இருக்கலாம்.

சென்ட்ரல் பிரிகாஷியஸ் ப்யூபர்ட்டி (Central precocious puberty) என்பது, உடல் வழக்கத்தைவிட மிக இளம் வயதிலேயே பருவமடையத் தொடங்குவதைக் குறிக்கிறது. ஆனால், அதன் வளர்ச்சி வழக்கமான முறையிலேயே தொடரும். இது முன்கூட்டிய பருவமடைதலின் மிகவும் பொதுவான வகையாகும். இதற்குப் பொதுவாகக் குறிப்பிட்ட காரணம் எதுவும் கண்டறியப்படுவதில்லை.

1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை டென்மார்க்கில் 8,596 குழந்தைகளை உள்ளடக்கிய 2020-ஆம் ஆண்டு ஆய்வின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10,000 சிறுமிகளில் 9.2 சிறுமிகளும், 10,000 சிறுவர்களில் 0.9 சிறுவர்களும் சென்ட்ரல் பிரிகாஷியஸ் ப்யூபர்ட்டியால் (Central precocious puberty) பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

20 ஆண்டுகாலத்தில், சிறுமிகளிடையே இந்த நிலை ஏற்படும் விகிதம் மூன்று மடங்காகவும், சிறுவர்களிடையே இரண்டு மடங்காகவும் அதிகரித்திருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

தென் கொரியாவில், 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான தேசிய மருத்துவக் காப்பீட்டுத் தரவுகளின் ஆய்வில், 10,000 சிறுமிகளில் 26.28 பேருக்கு சிபிபி இருப்பதாக மதிப்பிடப்பட்டது. சிறுவர்களிடையே இந்த எண்ணிக்கை 10,000 பேருக்கு 0.7 ஆக இருந்தது.

அதிகளவில் பெண்கள் இந்த நிலைக்கு ஆளாவதன் காரணம் குறித்து ஆய்வாளர்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் காரணிகளின் கலவையாக இது இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். பொதுவாக சிறுமிகளிடையே பருவமடைதல் முன்கூட்டியே தொடங்குவதை இது காட்டக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

1977 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை, சிறுமிகளுக்கு மார்பகங்கள் வளரத் தொடங்கும் சராசரி வயது ஒவ்வொரு பத்தாண்டுக்கும் சுமார் மூன்று மாதங்கள் குறைந்துள்ளதாக, 44 ஆய்வுகளை உள்ளடக்கிய 2025 ஆம் ஆண்டின் ஒரு மெட்டா பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.

சிறுவர்களும் முன்பைவிட இளம் வயதிலேயே பருவமடையத் தொடங்குவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இருப்பினும், அவர்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றம் அவ்வளவு குறிப்பிடத்தக்கதாக இல்லை.

பிரேசிலில் உள்ள சாவ் பாலோ பல்கலைக்கழகத்தின் உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் அனா பினெய்ரோ மச்சாடோ கான்டன், இந்த நிலை ஏற்பட்ட ஒரு வயது குழந்தைகளுக்குக் கூட தான் சிகிச்சை அளித்துள்ளதாகக் கூறுகிறார்.

இதுபோன்ற மிகவும் தீவிரமான நிலைகளில், ஹைப்போதாலமஸில் ஏற்படும் பாதிப்புகளே காரணமாக இருக்கலாம். மூளைக் கட்டிகளும் பருவமடைதல் முன்கூட்டியே தொடங்குவதற்குக் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கான்டனும் அவரது ஆய்வுக் குழுவினரும் உணவு மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட வெளிப்புறக் காரணிகளும் இதில் பங்கு வகிப்பதாகக் கருதுகின்றனர்.

"குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் குறித்து நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், குழந்தைக்கு உடல் பருமன் இருக்கும்போது, பருவமடைதல் வேகமாக நடைபெறுகிறது" என்று அவர் கூறுகிறார்.

கொழுப்பு திசுக்கள், ஈஸ்ட்ரோஜன் உள்ளிட்ட பாலின ஹார்மோன்களின் அளவை அதிகரிப்பதாகவும், எலும்பு வளர்ச்சிக்கு பங்களிக்கும் லெப்டின் என்ற ஹார்மோனின் அளவையும் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சில குழந்தைகளிடம் இவை பருவமடைதலை முன்கூட்டியே தூண்டக்கூடும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பெர்னார்டி குடும்பம்

பட மூலாதாரம், Bruno Bernardi

படக்குறிப்பு, பெர்னார்டி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்களின் மகள்களுக்கு சென்ட்ரல் பிரிகாஷியஸ் ப்யூபர்ட்டி (Central precocious puberty) ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் மரபணு மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டது.

மரபணுக்களும் இதில் பங்கு வகிக்கலாம். 2013-ஆம் ஆண்டில், இந்தக் குழுவின் தலைவரான பேராசிரியர் அன்னா கிளாடியா லாட்ரோனிக் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட முன்னோடியான ஆய்வில்,எம்கேஆர்என்3 (MKRN3) உள்ளிட்ட சில மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் சென்ட்ரல் பிரிகாஷியஸ் ப்யூபர்ட்டி எனும் நிலையைத் தூண்டக்கூடும் என்று கண்டறியப்பட்டது.

10 வயதான லாரா மற்றும் எட்டு வயதான பீட்ரிஸ் ஆகிய சகோதரிகள் இருவரிடமும் இந்த மரபணு மாற்றம் உள்ளது. லாராவிடம் இளம் வயதிலேயே மார்பக வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்பட்டபோதுதான் இந்த மரபணு மாற்றம் கண்டறியப்பட்டது.

"லாராவுக்கு ஐந்து வயது 10 மாதங்கள்தான் ஆகியிருந்தது. இந்த நிலையை எதிர்கொள்வதற்கு அவள் மிகவும் சிறியவள் என்பதால் நான் மிகவும் பயந்துவிட்டேன்" என்று அவரது தாயார் லெயா பெர்னார்டி கூறுகிறார்.

மரபணுப் பரிசோதனைகள் மூலம், இந்த மரபணு மாற்றம் அவர்களின் தந்தை வழியில் இருந்து வந்திருப்பதை கான்டனும் அவரது குழுவினரும் கண்டறிந்தனர். இளைய சகோதரி பீட்ரிஸுக்கும் சிபிபி ஏற்படுவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாக இருந்தது.

இதனால், ஏழு வயதில் அவரிடம் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியபோது, உடனடியாக சிகிச்சையைத் தொடங்க முடிந்தது.

"அவர்களுடைய குழந்தைப் பருவத்தில் ஒரு பகுதியை நாம் இழந்துவிட்டது போல உணர்ந்ததால் நான் மிகவும் பதற்றமடைந்தேன்" என்று லெயா கூறுகிறார்.

புற்றுநோய் மற்றும் இருதய நோய்கள் தொடர்பான அபாயங்கள்

சிகிச்சை அளிக்கப்படாத சென்ட்ரல் ப்ரீகோஷியஸ் ப்யூபர்ட்டி (சிபிபி) மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் குறிப்பிடத்தக்க உடல்நல ஆபத்தை ஏற்படுத்தும் என்று கான்டன் எச்சரிக்கிறார்.

"ஆறு அல்லது ஏழு வயதிலேயே ஒரு சிறுமிக்கு மார்பக வளர்ச்சி தொடங்குவதை கற்பனை செய்து பாருங்கள். பள்ளியில் அதே வயதுடைய நண்பர்களிடமிருந்தும் மற்ற சிறுமிகளிடமிருந்தும் அச்சிறுமி மிகவும் வித்தியாசமாகத் தோன்றுவாள். இது மிகவும் கடினமானதாக இருக்கும்" என்று அவர் கூறுகிறார்.

உயிரியல் ரீதியாக, முன்கூட்டியே பருவமடையும் குழந்தைகள் உயரம் குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

"பாலின ஹார்மோன்கள் எலும்பு முதிர்ச்சிக்குக் காரணமாகின்றன. எனவே, பருவமடைதல் முன்கூட்டியே வந்தால், எலும்பு முதிர்ச்சியும் மிக வேகமாக நடைபெற்று, அது முன்கூட்டியே நின்றுவிடும்" என்று கான்டன் விளக்குகிறார்.

பெரியளவிலான மக்கள்தொகை ஆய்வுகளும், பருவமடைதல் முன்கூட்டியே தொடங்குவதற்கும் இதய நோய் மற்றும் பாலின ஹார்மோன்களுடன் தொடர்புடைய புற்றுநோய்கள், குறிப்பாக மார்பக மற்றும் கருப்பையின் உட்சுவரில் ஏற்படும் புற்றுநோய்கள் அதிகரிக்கும் அபாயத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளன.

ஆனால், இந்த அபாயங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முடிந்தவரை விரைவாக சிகிச்சையளிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று கான்டன் கூறுகிறார்.

மேலும் , "இன்று நாம் பயன்படுத்தும் இந்த வகையான சிகிச்சையை கடந்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாகப் பயன்படுத்தி வருகிறோம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது" என்றும் அவர் கூறுகிறார்.

பியாட்ரிஸ் (இடது) மற்றும் லாரா (வலது)

பட மூலாதாரம், Bruno Bernardi

படக்குறிப்பு, பியாட்ரிஸ் (இடது) மற்றும் லாரா (வலது) சுமார் 11 வயது வரை ஹார்மோன் தடுப்பான்களைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டனர்.

ஆரம்பத்தில் அச்சமடைந்திருந்த போதிலும், தங்கள் மகள்கள் இயல்பான குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதைப் பார்த்து பெற்றோரான லெயாவும் புருனோவும் நிம்மதி அடைந்துள்ளனர்.

"லாரா பருவமடையத் தொடங்கியபோது, 'இது எனக்கு மட்டும் ஏன் நடக்கிறது? நான் ஏன் வித்தியாசமாக இருக்கிறேன்? நான் ஏன் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்?' என்று அவள் யோசித்தாள்" என்று லெயா கூறுகிறார்.

தங்களது அனுபவத்தைப் பகிர்வதன் மூலம், மற்ற பெற்றோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் ஆரம்பத்திலேயே உதவியை நாட ஊக்குவிக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

கேபியும் இந்த நிலை குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் ஆர்வமாக உள்ளார். இந்த நிலை குறித்த அவமான உணர்வை மற்றவர்கள் குறைத்துக்கொள்ள உதவுவதற்காக, தனது சமூக ஊடகத் தளங்களை அவர் பயன்படுத்துகிறார்.

"இது குறித்து வெளியில் கிடைத்த தகவல்கள் மிகவும் குறைவாக இருந்தது எனக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியது" என்று கூறும் கேபி, "பலர் என்னைத் தொடர்புகொள்வதைப் பார்த்தபோது, நான் இதை வெளிப்படையாகப் பகிர்ந்து, இதை நான் எதிர்கொண்டேன் என்பதை உலகுக்குத் தெரிவித்தது சரியான முடிவு என்பதை உணர்ந்தேன்" என்கிறார்.

கூடுதல் தகவல்கள்: பவுலா அடாமோ இடோயேட்டா

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு