ஹிட்லரை சந்தித்தவர்: 'இந்தியாவின் எடிசன்' ஜி.டி.நாயுடு வாழ்க்கையை காட்டும் 'ஜிடிஎன்' எப்படி உள்ளது?

பட மூலாதாரம், Varghese Moolan Pictures
''நான் ஒரு வருடமாக உங்களைப் பின்தொடரவில்லை. உங்களுடைய மோட்டார் சைக்கிளைப் பின் தொடர்கிறேன். உங்களுடைய மோட்டார் சைக்கிளை எனக்கு விலைக்குத் தருகிறீர்களா...?''
''மோட்டார் சைக்கிளை நான் ஓட்டுவதற்காக மட்டும் வாங்கவில்லை. அது எப்படி ஓடுகிறது என்பதைப் பார்ப்பதற்காகத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கினேன்!''
சோளக்காட்டுக்குள் இரவில் பழுது ஏற்பட்டு நிற்கும் பிரிட்டிஷ் அதிகாரியின் மோட்டார் சைக்கிளை சரி செய்வதற்கு மண்ணெண்ணெய் கொடுத்துவிட்டு, அவரிடமே அந்த வண்டியை விலைக்குக் கேட்கும் காட்சியும், மோட்டார் சைக்கிளில் வலம் வருவதற்காக மனைவியும், மகளும் ஆசையுடன் ஓடிவரும்போது அதை மொத்தமாகப் பிரித்துப் போட்டுவிட்டு யோசித்துக் கொண்டிருக்கும் காட்சியும் என ஜிடிஎன் படத்தில் ஆரம்பத்தில் வரும் இரு காட்சிகளும் வசனங்களுமே ஜி.டி.நாயுடுவிடம் இயல்பாக இருந்த அறிவியல் அறிவையும் அதில் அவருக்கு இருந்த அதீத ஆர்வத்தையும் துல்லியமாய்ப் படம் பிடித்துக் காட்டி விடுகின்றன.
கோவை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து, சுதந்திரத்துக்கு முன்பே, பலவிதமான கண்டு பிடிப்புகளால் இந்தியாவின் எடிசன் (Edison of India) என்றும், அற்புத மனிதர் (Miracle Man) என்றும் போற்றப்பட்ட ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப்படமான (பயோபிக்) ஜிடிஎன் (GDN) ஆகஸ்ட் 7 அன்று திரையில் வெளியாகியிருக்கிறது.
ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்ததுடன் படத்தின் தயாரிப்பிலும், வசனத்திலும் பங்களித்திருக்கிறார் மாதவன். முக்கிய கதாபாத்திரங்களில் துஷாரா விஜயன், ப்ரியா மணி, அதிதி பாலன், சத்யராஜ், ஜெயராம், கருணாகரன், தம்பி ராமையா, வினய் என ஏராளமான நடிகர் பட்டாளம் பங்கேற்றிருக்கிறது.
கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். 'ஃபைவ் ஸ்டார்' படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் ராம்குமார், இந்தப் படத்தில் இயக்குநராகியிருக்கிறார். படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனாக சில காட்சியிலும் அவர் நடித்திருக்கிறார்.

பட மூலாதாரம், gedee public school
கலங்கல் துவங்கி ஜெர்மனி வரை சென்ற ஜி.டி.நாயுடு வாழ்க்கைப் பயணம்!
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்கலாமா வேண்டாமா என்று, 1984-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி பாடப்புத்தகங்களுக்கான தயாரிப்புக் குழுவில் நடக்கும் ஒரு சூடான விவாதத்தில் படம் துவங்குகிறது.
தீவிரவாதி, தேசத்துரோகி, வரி ஏய்ப்பாளர் என்று பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவரின் பாடத்தைச் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கும் மற்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளைத் தொகுத்துக் கொடுக்கிறார் குழுவின் உறுப்பினரான அதிதி பாலன்.
அதிலுள்ள நிகழ்வுகளைப் படிக்கப்படிக்க காட்சிகள் விரிகின்றன. ஜி.டி.நாயுடுவைப் பற்றி பொதுவெளியிலும், வரலாற்றிலும் பதியப்பட்ட பல விஷயங்களின் பின்னணியில் என்ன நடந்தன என்பதைச் சொல்கிறது ஜிடிஎன்.
சுதந்திரத்துக்கு முன்பாக 1914-ஆம் ஆண்டில், கோவை சூலூர் அருகேயுள்ள கலங்கல் கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருக்கும் ஒரு எளிய மனிதராக ஜி.டி.நாயுடு வாழ்ந்ததிலிருந்து அவரின் வாழ்வை விவரிக்கிறது திரைப்படம்.
அவருக்கு இருந்த அறிவியல் ஆர்வத்தால் பிரிட்டிஷ் அதிகாரியின் மோட்டார் சைக்கிளை வாங்கி, அதைப் பிரித்து ஆராய்கிறார் ஜி.டி.நாயுடு எனப்படும் கோபால்சுவாமி துரைசுவாமி நாயுடு.
பின்பு பருத்தி ஆலையில் வேலைக்குச் சேர்ந்து, பருத்தியையும், விதையையும் பிரித்தெடுக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார். பின்பு பருத்தி ஆலை அமைக்கிறார். தொழிலில் முன்னேறுகிறார். இடையிடையில் சூழ்ச்சியால் வீழ்கிறார். மீண்டும் எழுகிறார்.

பிரிட்டிஷ் அதிகாரியின் பகைமையால் நஷ்டமடைந்த அவருக்கு ஒரு பிரிட்டிஷ்காரரே நண்பராக உதவுகிறார். சுதந்திரத்துக்கு முன்பே 400 பேருந்துகளை இயக்கி பெரும் தொழில் அதிபராகிறார் ஜி.டி.நாயுடு.
தொழில்நுட்பக் கல்லூரிகளை கோவையில் ஆரம்பிக்கிறார். தன்னுடைய நிறுவனத்தையே பலருக்கும் உதவும் வகையில் யு.எம்.எஸ். என்ற கூட்டுறவு பேருந்து நிறுவனமாக மாற்றுகிறார். எலக்ட்ரிக் ரேசரை கண்டுபிடித்து சிறந்த கண்டுபிடிப்புக்காக ஜெர்மனுக்குச் சென்று பரிசு வாங்குகிறார். ஹிட்லரை அங்கே சந்திக்கிறார்.
இடையில் அவருடைய முதல் மனைவி, ஜி.டி.நாயுடுவின் கனவுகள் நனவாவதற்கு அவருக்குத் தகுதியான துணை வேண்டுமென்று கூறிவிட்டு, அவரை விட்டுப் பிரிகிறார். பெரும்தொழிலதிபராக உயர்ந்த ஜி.டி.நாயுடு பல தருணங்களில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்க்கிறார். அதனால் ஒரு பிரிட்டிஷ் அதிகாரிக்கு எதிரியாகிறார்.
வருமான வரித்துறை பாக்கி வைத்தவர் என்று அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், அவருடைய தொழிலை முடக்கி சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் தொடர் முயற்சிகள் நடக்கின்றன. இவற்றிலிருந்து அவர் எப்படி மீண்டார், அவருடைய குடும்பமும், நிறுவனங்களும் என்னவாயின என்பதைச் சொல்கிறது க்ளைமாக்ஸ். அவருக்கிருந்த அரசியல் தொடர்பு, நட்பு வட்டம் எனப் பல விஷயங்களும் இதற்கிடையில் சொல்லப்படுகிறது.
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை நன்கு அறிந்து கொண்டு, அவருடைய எண்ண ஓட்டங்களையும், கண்டுபிடிப்புகளையும், முயற்சிகளையும், துணிவையும் உள்வாங்கிக்கொண்டு, அதை காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்தியிருக்கிறார் மாதவன்.
ஜி.டி.என். - ஆராய்ச்சி பெட்டகம் என்று விமர்சனம் எழுதியிருக்கிறது தினத்தந்தி.
படத்தைப் பார்த்த கோவைவாசிகள் என்ன நினைக்கிறார்கள்?

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பல கார்களும், மோட்டார் சைக்கிள்களும், வேறு பல கண்டுபிடிப்புகளும் இப்போதும் ஜி.டி.கார் அருங்காட்சியகத்திலும், சயின்ஸ் அருங்காட்சியகத்திலும் உள்ளன.
படத்தில் இடம் பெறும் பல இடங்களும், கோவையைச் சேர்ந்த தொழில் முன்னோடிகளும், ஸ்டேன்ஸ் உள்ளிட்ட பிரிட்டிஷ் நண்பர்களும் இடம் பெறும் காட்சிகள், கோவைவாசிகளைப் படத்துடன் ஒன்றிக்க வைப்பதாகவுள்ளன.
ஜிடிஎன் படத்தை முதல் காட்சியில் பார்த்த வரலாற்று ஆய்வாளரும், கோவையைச் சேர்ந்த எழுத்தாளருமான சி.ஆர்.இளங்கோவன், ''சிறுவயது ஜி.டி.நாயுடுவின் காட்சிகள், உற்சாகத்தையும் துடிப்பையும் கண் முன்னே நிறுத்துகின்றன. பொதுவாக ஜி.டி.நாயுடுவை, விஞ்ஞானி என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவரின் குடும்பம், தொழில் முயற்சிகள், அதில் கிடைக்கும் வெற்றி, எதிர்கொண்ட போராட்டங்கள் என்று ஒரு புது அறிமுகத்தை இந்தப் படம் தருகிறது.'' என்றார்.
ஜி.டி.நாயுடுவின் கருப்பு வெள்ளை புகைப்படங்களை கச்சிதமாக இணைத்தது பாராட்டுக்குரியது என்று கூறிய இளங்கோவன், ஒரு சில இடங்களைத தவிர மற்ற எல்லா இடங்களிலும் கொங்கு வட்டார வழக்கை மிகச்சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர் என்றார்.
நூறாண்டுக்கு முன்பு, நமது தாத்தா காலத்தில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒருவரை திரையில் கண்முன்னே கொண்டு வருவது மிகவும் கடினம் என்ற அவர், அந்தப் பணியை இயக்குநர் சிறப்பாக செய்திருக்கிறார், மாதவன் ஜி.டி.நாயுடுவாகவே வாழ்ந்திருக்கிறார் என்றார்.
''நவீன கோவையை உருவாக்கிய பெருமக்களில் அவரும் ஒருவர் என்ற முறையில் அதுபற்றிய காட்சிகளையும், தொழில்நுட்பக் கல்விக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றிய சில காட்சிகளையும் சேர்த்து இருக்கலாம். அந்தக் காலகட்டத்தில் அவர் தொடங்கிய பேருந்து தொழிலால் இப்பகுதி அடைந்த முன்னேற்றத்தையும் கோடிட்டு காட்டியிருக்கலாம். தொழிலில் அவருடைய போராட்டங்களையும், வழிகளையும் குறிப்பிடுகின்ற இந்தப் படம் கூடவே அவர் அரசாங்கத்தையும், வருமான வரித்துறையையும் ஏன் எதிர்க்கிறார், வரிகட்ட மறுக்கிறார் என்பதை இன்னும் தெளிவாக சொல்லிருக்கலாம்.'' என்றார் சி.ஆர்.இளங்கோவன்
சென்னையைச் சேர்ந்த கோபால், இந்த படத்தை கோவையிலுள்ள ஒரு திரையரங்கில் பார்த்துவிட்டு பிபிசியிடம் பேசியபோது, ''நானும் வருமான வரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவன் என்ற முறையில் படத்தைப் பார்த்துவிட்டு கலங்கிவிட்டேன். ஜிடி பென்ஸ் என்ற நிறுவனம் மட்டும் கோவையில் அன்றைக்கு துவங்கப்பட்டிருந்தால் இன்றைக்கு எப்படியிருந்திருக்கும் என்பதையும், அதைத் தடுப்பதற்கு நம் ஆட்களே என்னவெல்லாம் செய்தார்கள் என்பதையும் தெரிந்தபோது மனம் மிகவும் கனமாகிவிட்டது.'' என்றார்.
''அவருடைய கண்டுபிடிப்புகளைப் பற்றி சற்று விளக்கியிருக்கலாம். பெரியார், எம்ஆர் ராதா எல்லோரும் ஜி.டி.நாயுடுவின் நண்பர்கள் என்பதைப் போலவே, அம்பேத்கரும் அவருக்கு நிறைய உதவியுள்ளார். அவருடைய வருமானவரித் துறை வழக்குகளை அவர்தான் நடத்தினார். தனக்கு எதிரான சதியை முறியடிக்க ஜி.டி.நாயுடு செய்த சட்டப்பூர்வமான முயற்சிக்கு ஆலோசனை தெரிவித்ததே அம்பேத்கர்தான் என்பதை புத்தகங்களில் நான் படித்திருக்கிறேன். அதையும் சொல்லியிருக்கலாம்.'' என்றார் கோபால்.

ஜிடிஎன் திரைப்படத்தில் நடிகராகவும், தொழில்நுட்பக் கலைஞர்களாகவும் கோவையைச் சேர்ந்த பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்களும் முதல் காட்சியை கோவையில் பார்த்தனர். அவர்களிடமும் பிபிசி பேசியது.
படத்தில் நடித்துள்ள கோவை உக்கடத்தைச் சேர்ந்த துணை நடிகர் ரஞ்சித், ''கோவையில்தான் நாங்கள் பிறந்து வளர்ந்தாலும் அவரைப் பற்றிய வரலாறு எங்களுக்கே தெரியாது.'' என்றார்.
''ஜி.டி.நாயுடுவைப் பற்றி எங்களுக்கு பல தகவல்கள் தெரியவில்லை. சில தவறான தகவல்கள் சொல்லப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் தெளிவுபடுத்திவிட்டது இந்தப் படம். கோவையின் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு என்பது இப்போதுதான் தெரிகிறது. ஒரு கோவை வாசியாக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த படத்தை கோவைவாசிகள் கட்டாயம் பார்க்க வேண்டும்.'' என்றார் ரஞ்சித். இதே கருத்தை படம் பார்த்த ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட பலரும் பிபிசியிடம் பகிர்ந்தனர்.

ஜிடிஎன் திரைப்படம்; ஜி.டி.நாயுடு குடும்பத்தினரின் கருத்து என்ன?
படத்தின் இயக்குநரான கிருஷ்ணா என்ற கிருஷ்ணகுமார், இந்தப் படத்தை எடுப்பதற்கு முன்பாக, கோவிட் பெருந்தொற்று காலத்திலேயே இந்தப் படத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு, ஜி.டி.நாயுடுவின் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதைச் சில பேட்டிகளில் விவரித்திருந்தார்.
ஒரு பேட்டியில் இதுபற்றி விளக்கியிருந்த கிருஷ்ணகுமார் ராம்குமார், ''பள்ளியில் பாடப்புத்தகத்தில் படிக்கும் போதே அவர் மீது பெரும் ஈர்ப்பு இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டேன். சில வருடங்களுக்கு முன்பாக அவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கிப் படித்த பின்புதான், அவருடைய பயோபிக்கை கண்டிப்பாக பண்ண வேண்டுமென்று தோன்றியது. ஜி.டி.நாயுடு வாழ்க்கையில அவ்வளவு விஷயங்கள் நடந்துள்ளன. அவரைப் பற்றி கேள்விப்படாத விஷயங்கள் நிறைய இருந்தன.'' என்று கூறியிருந்தார்.
''அவரது கண்டுபிடிப்புகளை விட, நோக்கங்கள் உயர்ந்தவை. அவர் தமிழ்நாட்டின், இந்தியாவின் பெருமை. ஆட்டோமொபைல் துறையில அவர் சாதித்த விஷயங்களிலிருந்து எல்லாமே எனக்கு வியப்பாக இருந்ததால்தான் இந்த பயோபிக் எண்ணம் உருவானது. நான் எழுதிய திரைக்கதையை அவருடைய குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டபின்பு ஜி.டி.நாயுடு கைப்பட எழுதிய பதிவுகளை என்னிடம் கொடுத்தனர்.
அது படத்துக்கு அதிகமாக உதவியது. அவர் பயன்படுத்திய கார், பைக் எல்லாவற்றையும் அப்படியே படத்தில் பயன்படுத்தியுள்ளோம். அவர் எந்த இடத்தில் பஸ் ஸ்டாண்டை நிறுவினாரோ அங்கேயே படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம்." என்றும் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் விளக்கியிருந்தார்.

பட மூலாதாரம், Varshini
ஜிடிஎன் படத்துக்கு அனுமதியளித்தது குறித்தும், அந்தப்படம் குறித்தும் ஜி.டி.நாயுடுவின் குடும்பத்தினரிடம் பிபிசி தமிழ் பேசியது. அதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய ஜி.டி.நாயுடுவின் மகன் கோபாலின் மகள் வழிப்பேத்தியும், ஜி.டி.கல்வி நிறுவனங்களின் நிர்வாகியுமான வர்ஷிணி, ''படம் தயாரிப்பதற்கு முன்பே எங்களிடம் முறைப்படி அனுமதி வாங்கியிருந்தனர். படம் முழுமையாக தயாரான பின்பும் குடும்பத்துடன் பார்த்தோம். படம் மிக நன்றாகவே இருக்கிறது. எங்கள் குடும்பத்தினர் எல்லோருக்குமே மகிழ்ச்சி.'' என்றார்.
மேலும் பேசிய வர்ஷிணி, ''படத்தில் இடம் பெற்றுள்ள 90 சதவீத கதையும் காட்சிகளும் கொள்ளுத்தாத்தா ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த உண்மையான நிகழ்வுகள்தான். மீதமுள்ள 10 சதவீதம் சினிமாவுக்காக சில விஷயங்களைச் சேர்த்திருக்கிறார்கள். அதிலும் ஆட்சேபகரமாக எதுவுமில்லை. அதனால்தான் வெறும் பயோபிக் படமாக மட்டுமில்லாமல் எல்லோரும் பார்க்கக்கூடிய ஒரு படமாக வந்துள்ளது. எங்கள் குடும்பத்தில் எங்கள் தாத்தா (ஜி.டி.நாயுடு மகன் கோபால்) உட்பட எல்லோருக்குமே பிடித்துள்ளது.'' என்றார்.

பட மூலாதாரம், gedee public school
கவுண்டமணி வசனங்களில் அடிக்கடி இடம் பெற்ற ஜி.டி.நாயுடு!
கோவையைச் சேர்ந்த ஜி.டி.நாயுடு குறித்து, பாடப்புத்தகங்களில் பல தகவல்களும், சில புத்தகங்களும் வெளியாகியுள்ள நிலையில், அவரை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்ததில் கவுண்டமணியின் வசனங்களுக்கு முக்கிய இடமுண்டு.
ஜென்டில்மேன் படத்தில் ஈ விழுந்த டீயைக் குடிக்காமல் செந்தில் யோசித்துக் கொண்டிருக்கும்போது, ''இவரு பெரிய ஜி.டி.நாயுடு, சிங்கிள் டீயை ஆராய்ச்சி பண்றாரு,'' என்றும், மற்றொரு படத்தில் ''இந்தியாவிலேயே ரெண்டு அறிவாளிங்க. ஒருத்தர் ஜி.டி.நாயுடு, இன்னொன்னு இந்த தர்மடி தர்மலிங்கம்.'' என்றும் கவுண்டமணி வசனம் பேசியிருப்பார்.
ஜிடிஎன் படம் குறித்து அதைப் பார்க்க வந்த பலரிடமும் ஊடகங்கள் சார்பில் கருத்துக் கேட்டபோது, இந்த வசனங்களைக் குறிப்பிட்டு, ''அந்த வசனங்களை வைத்தே அவரைத் தெரியும்.'' என்று கூறியிருந்தனர்.
ஜி.டி.நாயுடுவைக் கெளரவிக்கும் விதமாக, கடந்த ஆண்டில் கோவை அவிநாசி சாலையில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட தமிழகத்தின் மிக நீளமான பாலத்துக்கு (10.1 கி.மீ. தூரம்) திமுக ஆட்சியில் ஜிடி நாயுடு பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது. அதே அவினாசி சாலையில்தான் ஜி.டி. கார் அருங்காட்சியம், அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் ஜி.டி.நாயுடுவின் பூர்வீக இல்லமான 'கோபால்பாக்' இல்லமும் இருக்கிறது. பந்தயச்சாலை பகுதியில் ஒரு வீதிக்கு ஜிடி நாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































