விரல் சொடுக்குவது ஆபத்தான பழக்கமா? விரல் சொடுக்கும் போது சத்தம் வருவது எப்படி? 4 கேள்வி - பதில்கள்

    • எழுதியவர், சான்டி ஓங்க்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வளரும் பருவத்தில் அடிக்கடி விரல் சொடுக்குவது மூட்டுவாதத்தை ஏற்படுத்தும் என்று டொனால்ட் அங்கருக்கு அவரது தாய், அத்தைகள், பின்னர் அவரது மாமியார் ஆகியோர் எச்சரித்திருந்தனர்.

ஆனால் அவர்களின் எச்சரிக்கை தவறு என்பதை நிரூபிக்கத் தீர்மானித்த டொனால்ட், 50 ஆண்டுகளுக்கு தினமும் குறைந்தபட்சம் இருமுறையாவது தனது இடது கையின் விரல்களைச் சொடுக்கினார். மொத்தத்தில் சுமார் 36,500 முறை விரல் சொடுக்கிய அவர், வலது கையை எதுவும் செய்யவில்லை.

1998-ஆம் ஆண்டு அவரது, 72-வது வயதில், தனது வாழ்நாள் முயற்சியின் விளைவை அறிய இரு கைகளுக்கும் எக்ஸ்ரே பரிசோதனை செய்தார்.

அதன் பிறகு "இரண்டு கைகளிலும் மூட்டுவாதம் இல்லை. இரு கைகளுக்கும் இடையே எந்தத் தெளிவான வேறுபாடும் இல்லை," என்கிற முடிவுக்கு வந்தார்.

இது ஒருவரை அடிப்படையாகக் கொண்ட ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. சில ஆய்வுகளின்படி, 20 முதல் 50% வரையிலான மக்கள் விரல் சொடுக்குகின்றனர்.

அப்படியெனில், இதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா? ஒவ்வொரு முறை சொடக்குவதும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா?

விரல் சொடுக்கும் போது சத்தம் வருவது எப்படி?

சிலருக்கு, விரல் சொடுக்குவது ஒரு சாதாரண பழக்கம் மட்டுமே. மற்றவர்கள், மூட்டுகளைச் சொடுக்கும்போது ஏற்படும் உணர்வை ரசிக்கிறார்கள்.

ஆனால் சமூக ஊடகங்களில் பிரபலமாகும் கைரோபிராக்டிக் 'சீரமைப்பு' வீடியோக்களைப் பார்த்தால், அந்தச் சத்தத்தைக் கேட்பதில் பலரும் மகிழ்ச்சி அடைவது தெரிகிறது.

நாம் மூட்டுகளைச் சொடுக்கும்போது என்ன நடக்கிறது என்பது உண்மையில் மிகவும் எளிமையானது. ஒரு மூட்டு என்பது இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடமாகும்.

விரல்கள், கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் உள்ள மூட்டுகளைச் சுற்றி, முட்டை வெள்ளைக்கருவைப் போன்ற சினோவியல் திரவம் உள்ளது. இது ஒரு மசகுப்பொருளாகச் செயல்படுகிறது.

நீங்கள் மூட்டுகளைத் திருப்பி, இழுத்து, வளைத்துச் சொடுக்கும்போது, மூட்டுக்குள் உள்ள இடைவெளி தற்காலிகமாக விரிவடைகிறது. இதனால் சினோவியல் திரவத்தின் அழுத்தம் குறைகிறது. அதன் விளைவாக, முன்பு அந்தத் திரவத்தில் கரைந்திருந்த வாயுக்கள் குமிழிகளாக வெளிப்படத் தொடங்குகின்றன.

ஒரு மூட்டைச் சொடுக்கும் போது கேட்கும் ஒலி, உண்மையில் குமிழிகள் சுருங்கி உடைவதால் எழும் ஒலியாகும். இந்த ஒலி ஆச்சரியப்படத்தக்க வகையில் 83 டெசிபல் வரை சத்தமாக இருக்கலாம். அது, மணிக்கு சுமார் 64 கிமீ வேகத்தில் செல்லும் டீசல் லாரியின் சத்தத்திற்கு நிகரானதாக இருக்கும்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அல்ட்ராசவுண்ட் மூலம் சொடுக்கப்படும் ஒரு மூட்டைப் பார்வையிட்டபோது, "விரிசல்" நிகழும் தருணம் திரையில் பட்டாசு வெடிப்பது போல தோன்றியது என்று விவரித்தனர்.

விரல் சொடுக்குவது ஆபத்தான பழக்கமா?

சத்தம் அதிகமாக இருந்தாலும், மூட்டுகள் சொடுக்கும் சத்தம் "ஒரு இயல்பான உடலியல் செயல்முறை மட்டுமே" என்று பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் வாதநோய் நிபுணர் கிம்மே ஹைரிச் கூறுகிறார்.

ஆனால் இயல்பானது என்றால் அது கட்டாயமாக பாதிப்பில்லாததா?

"நிச்சயம் மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் போன்ற சில எச்சரிக்கை அறிகுறிகள் இருக்கலாம்," என்று நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஜே ஜகன்னாதன் கூறுகிறார். இவர் அமெரிக்காவின் மிச்சிகனில் தனியார் மருத்துவப் பணியில் உள்ளார்.

கழுத்தை மிக வலுவாக சொடுக்கியதால் தசை இழுப்புகள் மற்றும் பிற பிரச்னைகள் ஏற்பட்ட நோயாளிகளை அவர் பார்த்துள்ளார்.

"எனினும், மூட்டுகளைச் சொடுக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டால் அதைச் செய்வது பெரும்பாலும் பாதிப்பில்லாத ஒன்றே," என்கிறார் ஜகன்னாதன்.

இன்னும் சிலர், மிக வலிமையாக விரல்மூட்டுகளைச் சொடுக்குவது விரல் இடறல்கள் அல்லது தசைநார் காயங்களை ஏற்படுத்துமோ என்று கவலைப்படுகிறார்கள். குறிப்பாக அதிக அழுத்தத்தைப் பயன்படுத்தும் போது அல்லது விரலைத் திடீரென இழுப்பதன் மூலம் அது மூட்டிலிருந்து பிரிந்துவிடக் கூடிய அபாயம் உள்ளது.

உண்மையில், அப்படியான சம்பவங்கள் சில பதிவாகியுள்ளன. உதாரணமாக, 1999-இல் பிலடெல்ஃபியாவைச் சேர்ந்த ஒரு கையறுவை சிகிச்சை நிபுணர், சொடுக்கும் சத்தத்தைக் கேட்கும் ஆர்வத்தில் இருந்த இரண்டு நோயாளிகள் தங்கள் விரல்களைச் சுளுக்கிக் கொண்ட சம்பவத்தை விவரித்தார்.

ஆனால், குறைந்த அழுத்தத்துடன் சொடுக்கும்போது இத்தகைய சம்பவங்கள் அரிதாகவே நிகழ்கின்றன.

அடிக்கடி மூட்டுகளைச் சொடுக்கும் மக்கள் அதிகமாகக் கவலைப்படுவது, இறுதியில் தங்களுக்கு ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் ஏற்படுமா என்பதைப் பற்றி தான். இது மூட்டுகளில் உள்ள பாதுகாப்புத் திசுவான கார்டிலேஜ் தேய்வதுடன் தொடர்புடைய, மிகவும் பொதுவான மூட்டுவாத வகையாகும்.

"என் மருத்துவமனைக்கும், இரவு உணவு மேசையிலும் மக்கள் என்னிடம் அதிகமாகக் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. சுருக்கமான பதில் என்னவென்றால், அதனால் ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் ஏற்படுவதில்லை," என்று ஹைரிச் கூறுகிறார்.

1975-இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் 28 முதியோர் இல்லவாசிகளை ஆய்வு செய்து, தொடர்ந்து விரல்மூட்டுகளைச் சொடுக்கும் நபர்களுக்கும், அவ்வாறு செய்யாதவர்களுக்கும் சிதைவுறும் மூட்டுவாதம் ஏற்படும் விகிதம் ஒரே மாதிரியாக இருந்ததைக் கண்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து வெளியான மற்றொரு ஆய்வில், 215 ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் நோயாளிகளின் விரல்மூட்டு சொடுக்கும் பழக்க வரலாறு ஆய்வு செய்யப்பட்டு, நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடப்பட்டது.

அந்த ஆய்வும் அதே முடிவையே அளித்தது. ஒருவரின் வாழ்நாளில் எவ்வளவு காலம், எத்தனை முறை விரல் சொடுக்கினாலும், அது ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் அபாயத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

பிடிமான வலிமை பாதிக்கப்படுமா?

விரல் சொடுக்குவதால் பிடிமான வலிமை (grip strength) குறைகிறது என்பதும் மற்றொரு பரவலான நம்பிக்கையாகும். இதய நோய், அறிவாற்றல் குறைவு, மனச்சோர்வு மற்றும் சில வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல்நல விளைவுகளுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான சுகாதாரக் குறியீடாக பிடிமான வலிமை கருதப்படுகிறது.

1990-இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், 18 முதல் 60 ஆண்டுகள் வரை விரல் சொடுக்கும் பழக்கமுடைய 74 பேரை ஆராய்ந்தபோது, அவர்களுடைய கைகளின் பிடிமானத் திறன் குறைவாகவும், கை வீக்கம் அதிகமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால் 2017-இல் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு, விரல் சொடுக்குவதற்கும் பிடிமானத் திறன் குறைவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தது.

அடிக்கடி சொடுக்குவது விரல்மூட்டுகளை பெரிதாக்கும் அல்லது தசைநார்களை தளர்வாக்கும் என்பது போன்ற வேறு சில நம்பிக்கைகளும் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் உண்மையல்ல என்கிறார் ஹைரிச்.

மேலே குறிப்பிடப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஆய்வும் இதை உறுதிப்படுத்துகிறது. மருத்துவர்கள் விரல் சொடுக்கும் நபர்களை பரிசோதனை செய்தபோது, எந்த வகையான வீக்கம் அல்லது செயலிழப்பும் காணப்படவில்லை.

சிலருக்கு, மூட்டுகளைச் சொடுக்குவது நிம்மதி வழங்கி, மூட்டின் இயக்கத் திறனை தற்காலிகமாக மேம்படுத்தலாம். ஏனெனில் அது மூட்டினை நீட்டி, பரந்த அளவிலான இயக்க வரம்புக்குள் கொண்டு செல்கிறது.

ஒரு கோட்பாட்டின்படி, சொடக்குவதன் மூலம் மூட்டைச் சுற்றியுள்ள நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு, அருகிலுள்ள தசைகள் தளர்ந்து, வலி குறைந்து, எண்டார்ஃபின்கள் வெளியாகலாம். ஆனால் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

விரல் சொடுக்குவது பெரும்பாலும் பாதிப்பற்றதாக இருப்பதால், அதை நிறுத்துவதற்கான தூண்டுதல் குறைவாக இருக்கலாம். இருப்பினும் நீங்கள் அதை நிறுத்த விரும்பினால் அதற்குச் சில வழிகளை ஜகநாதன் பரிந்துரைக்கிறார்.

"நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டு அதைத் தடுக்க உதவும் மாற்றுச் செயல்பாடுகளைக் கண்டறியலாம் அல்லது அறிவாற்றல் சிகிச்சை (cognitive therapy) போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம்," என்று அவர் தெரிவிக்கிறார்.

உதாரணமாக, உங்களின் தூண்டுதல் காரணிகளைப் (triggers) பதிவு செய்து பார்க்கலாம் (மனஅழுத்தம், சலிப்பு அல்லது யோசிக்காமலே நீங்கள் விரல் சொடுக்குகிறீர்களா?) அல்லது உங்கள் கைகளை வேலைப்பளுவில் வைத்திருக்க ஸ்டிரெஸ் பந்துகள் அல்லது 'ஃபிட்ஜெட்' விளையாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் பார்த்தால், மூட்டுகளைச் சொடுக்குவது தீங்கற்றது என்று ஹைரிச் கூறுகிறார். ஆனால், உங்களின் சொடுக்கும் பழக்கம் உங்கள் நண்பர்களுக்கு மிகவும் எரிச்சலூட்டுவதாக மாறினால், அது பாதிக்கக்கூடிய ஒரே விஷயம் உங்கள் தனிப்பட்ட உறவுகளாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

கழுத்துப் பகுதியை ஏன் கவனமாக கையாள வேண்டும்?

விரல் சொடுக்குவது பிரச்னையில்லை என்றாலும், முதுகு அல்லது கழுத்தில் உள்ள மூட்டுகளை சொடுக்குவதை பிரச்னையில்லாத ஒன்று என்று நாம் கூற முடியாது.

கழுத்துப் பகுதியில் முதுகுத் தண்டு நரம்பு உட்பட மிக முக்கியமான நரம்புகள் உள்ளன. "அதோடு, கழுத்தின் பின்புறம் வழியாகச் சென்று மூளையை நோக்கிப் பயணிக்கும் இரண்டு மிக முக்கியமான தமனிகளும் உள்ளன," என்று ஜகன்னாதன் கூறுகிறார்.

இந்தப் பகுதிகள் மிகவும் நுட்பமானவை. அவற்றைத் தவறாகக் கையாள்வது கடுமையான காயங்களையும், கைகள் அல்லது கால்களில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு, தலைசுற்றல் போன்ற பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தலாம். "எந்த உறுப்பையும் அதன் வரம்பை மீறி பயன்படுத்துவது ஆபத்தானது," என்று ஜகன்னாதன் கூறுகிறார்.

தானாகவே கழுத்தைச் சொடுக்குவது பரிந்துரைக்கப்படவில்லை. தொழில்முறை நிபுணர்கள் செய்யும் இத்தகைய நகர்வுகளும் சர்ச்சைக்குரியவையாகவே உள்ளன.

2012-இல், ப்ரூனல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த நீல் ஓ'கானெல் மற்றும் அவரது சக ராய்ச்சியாளர்கள், கைரோபிராக்டிக் கழுத்து சீரமைப்புகளை "தேவையற்றதும், பரிந்துரைக்க முடியாததும்" என்று விவரித்தனர்.

(இக்கட்டுரையில் உள்ள அனைத்துத் தகவல்களும் பொதுவான அறிவுறுத்தலுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை சுகாதார நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகக் கருதப்படக் கூடாது.)

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு