இந்தியாவுடன் மோதல் வெடித்தால் பாகிஸ்தானுக்கு சௌதி, துருக்கி உதவுமா? மெக்கா ஒப்பந்தம் பற்றிய பார்வை

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை சௌதி அரேபியாவின் மெக்காவில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.

பனிப்போர் காலத்தில் உருவாக்கப்பட்ட ராணுவக் கூட்டணிகளான மத்திய ஒப்பந்த அமைப்பு (Central Treaty Organization) மற்றும் தெற்காசிய ஒப்பந்த அமைப்பில் (outh Asia Treaty Organization) பாகிஸ்தான் இணைந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது புதிய ராணுவக் கூட்டணியில் இணைகிறது என்று தி புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் சிந்தனைக் குழுவின் மூத்த ஆய்வாளரான தன்வி மதன் கூறுகிறார்.

இதுகுறித்து தன்வி மதன் எழுதுகையில், "சீட்டோ ஒப்பந்தத்தின் 4-வது பிரிவு பரஸ்பர பாதுகாப்பை வழங்கியது. எனினும், அமெரிக்கா அதற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தது. உதாரணமாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டால், அதில் தலையிடாமல் இருப்பதற்கான வாய்ப்பு அமெரிக்காவுக்கு இருந்தது. இதற்கிடையில், வியட்நாம் போரில் பங்களிக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கைகளை பாகிஸ்தான் நிராகரித்தது" என்று குறிப்பிடுகிறார்.

இத்தகைய சூழலில், இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டால் துருக்கியும் சௌதி அரேபியாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்குமா என்ற கேள்வி எழுகிறது.

இஸ்ரேலிய பாட்காஸ்டர் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இரண்டாவது மகனான யாயிர் நெதன்யாகு, இந்த ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

"அடுத்த முறை இரான், ஹூத்திகள் அல்லது இராக்கில் உள்ள போராளிக் குழுக்கள் சௌதி அரேபியாவைத் தாக்கினால், துருக்கியும் பாகிஸ்தானும் இரான், இராக் மற்றும் யேமன் மீது தாக்குதல் நடத்துமா? இந்தியா - பாகிஸ்தான் போர் வெடித்தால், துருக்கியும் சௌதி அரேபியாவும் இந்தியாவைத் தாக்குமா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் சீனா மற்றும் துருக்கியிடம் இருந்து உதவியைப் பெற்றது.

பாகிஸ்தான் தனது சொந்த ராணுவம் மற்றும் பிற நாடுகளின் பாதுகாப்பு உபகரணங்களை நம்பியே அந்தப் போரை எதிர்கொண்டது.

சௌதி அரேபியா மற்றும் துருக்கியுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பாகிஸ்தானின் திறன்களுக்கு எதைச் சேர்க்க முடியும், எதைச் சேர்க்க முடியாது என்ற கேள்வியை இது எழுப்புகிறது.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானிடம் அணு ஆயுதத் திறன் உள்ளது. மேலும், அதன் அணு ஆயுதக் கொள்கை இந்தியாவை மட்டுமே மையமாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மெக்கா ஒப்பந்தம் இந்த நிலையை மாற்றவில்லை.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​பாகிஸ்தான் எவ்வாறு ராணுவ உதவியைப் பெற்றது என்பதையும், சர்வதேச அளவில் அதன் நிலைப்பாடு எவ்வாறு முன்வைக்கப்பட்டது என்பதையும் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகித்த ஆதரவை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது.

சௌதி அரேபியாவுடனான உறவுகளில் ஏற்படும் தாக்கம்

இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடியில் சௌதி அரேபியாவின் முக்கியத்துவம், இந்தியாவின் சொந்தப் பொருளாதாரச் சூழலுடன் தொடர்புடையது. இந்தியாவுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 43 பில்லியன் டாலராக உள்ளது.

இந்தியாவில் எரிசக்தி, சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் 100 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது சௌதி அரேபியா.

இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள முக்கியமான திட்டங்களில் சௌதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு பங்குகள் உள்ளன.

25 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் சௌதி அரேபியாவில் பணியாற்றுகின்றனர். இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியில் சௌதி கச்சா எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பல ஆண்டுகளாக, இந்தியா மற்றும் சௌதி அரேபியா இடையிலான உறவின் ஆழத்துக்கான சான்றாக இந்தப் புள்ளிவிவரங்களை இந்தியா கருதி வந்துள்ளது.

பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் இந்த உறவுகளைப் பாதிக்குமா?

இந்த அனைத்து பொருளாதார மற்றும் ராஜ்ஜீய கருவிகளையும் கொண்டுள்ள சௌதி அரேபியா, தற்போது 11 மாதங்களுக்குள் இருமுறை ஒப்பந்தங்கள் மூலம் தனது பாதுகாப்பை பாகிஸ்தானின் பாதுகாப்புடன் இணைத்துள்ளது.

தி புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனைச் சேர்ந்த துருக்கிய பத்திரிகையாளர் அஸ்லி அய்டின் தபாஸ், இதை 'முஸ்லிம் நேட்டோ' அல்லது 'சன்னி நேட்டோ' என்று அழைப்பது முன்கூட்டிய ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறார். ஆனால், பிராந்திய நாடுகளால் உருவாக்கப்படும் பிராந்திய பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதற்கான விருப்பத்தை இது நிச்சயமாகக் காட்டுகிறது என்று அவர் கூறுகிறார்.

"இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் தற்காப்புத் திறனை வலுப்படுத்துவதே தவிர, போரின் அளவை அதிகரிப்பது அவசியம் என்பதல்ல" என்று அய்டின் எழுதுகிறார்.

"துருக்கியும் பாகிஸ்தானும் இரானுக்கு எதிராகப் போர் செய்யாது. இரு நாடுகளும் தங்களை நிலைத்தன்மையை உருவாக்கும் நாடுகளாகக் கருதுகின்றன. இதற்கான அரசியல் சூழலை உருவாக்கவே அவை விரும்புகின்றன."

"இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும் இரானுக்கும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கருதுவது தவறாகும்" என்று அய்டின் நம்புகிறார்.

"அரசியல் ரீதியாக, இந்த நாடுகளின் கொள்கைகள் குறைவான ஆக்கிரமிப்புத்தன்மை கொண்டதாகவும், பிராந்திய நிலைத்தன்மையில் அதிக கவனம் செலுத்துவதாகவும் மாறும் வரை, அவற்றை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்துவதற்கான முயற்சியை இது வெளிப்படுத்துகிறது"என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா எவ்வாறு பார்க்கும்?

இதுகுறித்து அய்டின் கூறுகையில், "துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளும் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகள். அமெரிக்காவின் முக்கியமான மூன்று கூட்டாளிகளுக்கு இடையிலான எந்தவொரு பிராந்திய ஒப்பந்தத்துக்கோ அல்லது பிராந்தியத் தீர்வுக்கோ அமெரிக்காவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

சுமையைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு நடவடிக்கையாக அமெரிக்கா இதைப் பார்க்கிறது, இதை வரவேற்கிறது. எனினும், வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பை வழங்கும் அமெரிக்காவின் பங்கை இந்த ஒப்பந்தம் மாற்றாது" என்றார்.

துருக்கி என்ன கூறியது?

துருக்கி அதிபர் எர்துவான் , பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியாவுடனான ஒப்பந்தத்தின் நோக்கம் எந்தவொரு நாட்டையும் குறிவைப்பது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

சௌதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்கனவே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ள நிலையில், தற்போது துருக்கி அந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.

  • சௌதி அரேபியாவிடம் பொருளாதார பலம் உள்ளது.
  • பாகிஸ்தானிடம் அணு ஆயுதத் திறன், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் மனிதவளம் உள்ளன.
  • துருக்கியிடம் ராணுவ அனுபவமும் வளர்ச்சியடைந்த பாதுகாப்புத் தொழில்துறையும் உள்ளன.

ஒப்பந்தத்துக்குப் பிறகு, துருக்கி அதிபர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்த ஒப்பந்தம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரான கூட்டணி அல்ல என்று எழுதினார்.

"இந்த ஒப்பந்தம் ஐ.நா சாசனத்தின் 51-வது பிரிவுக்கு இணங்க உள்ளது. இதில் தற்காப்புக்கான உரிமை இடம்பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் எந்தவொரு நாட்டையும் குறிவைக்கும் நோக்கம் கொண்டதல்ல. எங்கள் பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் நிலைத்தன்மையை விரும்பும் அனைத்து நட்பு நாடுகளையும் இது உள்ளடக்கியதாக இருக்கலாம்" என்று அவர் எழுதியுள்ளார்.

"இது எங்களது பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லவும், பாதுகாப்புத் தொழில்துறையில் கூட்டுத் திட்டங்களை உருவாக்கவும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும் உதவும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், இந்த ராணுவக் கூட்டணி இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய இரண்டு நாடுகளுடனும் இந்தியாவுக்கு நட்புறவு இல்லை.

இந்த ஒப்பந்தத்தால் எழும் இந்தக் கவலைகள் இந்தியாவின் அச்சத்தை நிச்சயமாக அதிகரித்துள்ளதாக பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவுக்கு கவலையா?

"இது எதிர்கால இந்தியா-பாகிஸ்தான் மோதல்களின்போது தற்காப்பு மற்றும் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பான உத்திகளை மேலும் சிக்கலாக்கக்கூடும்" என்று மூலோபாய விவகார நிபுணர் பிரம்மா செல்லானி கூறுகிறார்.

"ஆபரேஷன் சிந்தூரின்போது, துருக்கியிடம் இருந்து பெற்றதைவிட சீனாவிடமிருந்து பாகிஸ்தான் அதிகளவு ராணுவ உதவியைப் பெற்றிருந்தாலும், துருக்கியின் நேரடி உதவி, இந்தியாவுடனான மோதல் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்க துருக்கி தயாராக இருப்பதைத் தெளிவுபடுத்தியது" என்று செல்லானி எக்ஸ் தளத்தில் எழுதினார்.

"எதிர்காலத்தில், ஆபரேஷன் சிந்தூரைப் போல, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகள் அல்லது ராணுவத் தளங்கள் மீது இந்தியா ஏதேனும் தாக்குதல் நடவடிக்கை எடுத்தால், அதை இஸ்லாமாபாத் கோட்பாட்டளவில் போர் நடவடிக்கையாகக் கருதி, இந்த ஒப்பந்தத்தின் கூட்டு பாதுகாப்பு விதிகளைச் செயல்படுத்துமாறு கோரலாம்." ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் இந்தியத் தூதர் டி.எஸ். திருமூர்த்தியும் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்குச் சாதகமாக இல்லை என்று கருதுகிறார்.

திருமூர்த்தி எழுதுகையில், "பிப்ரவரி இறுதியில் இரான் போர் தொடங்கிய உடனேயே, 'துருக்கி, சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை பயனடையும். பிராந்தியத்தில் தங்களது லட்சியங்களையும் செல்வாக்கையும் விரிவுபடுத்துவதற்கு அவற்றுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இது இந்தியாவுக்கு நல்ல செய்தி அல்ல' என்று மார்ச் 10-ஆம் தேதி தி இந்துவில் எழுதினேன். இப்போது அதே விஷயம் உண்மையாகி வருவதாகத் தெரிகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் சிந்தனைக் குழுவின் மத்திய கிழக்கு திட்டத்தின் நிர்வாக இயக்குநர் கபீர் தனேஜா தனது எக்ஸ் பக்கத்தில் எழுதுகையில், "துருக்கி, சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில், நேட்டோவின் 5-வது பிரிவைப் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் இதை மத்திய கிழக்கு கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். ஆனால், இது பிற பிராந்தியங்களிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால மோதல் உறவின் பின்னணியிலும் இதைப் பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறதா?

அட்லாண்டிக் கவுன்சில் சிந்தனைக் குழுவின் தெற்காசியாவுக்கான மூத்த ஆய்வாளரான மைக்கேல் குகல்மேன், பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி இடையிலான இந்த ஒப்பந்தம், கடந்த சில மாதங்களாக இந்த மூன்று நாடுகளுக்கும் இடையே ஆழமடைந்து வரும் பாதுகாப்பு உறவுகளின் இயல்பான விளைவு என்று நம்புகிறார்.

"இது பிராந்திய அளவில் கூட்டு தற்காப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துகிறது. இரானையும் கருத்தில் கொள்கிறது" என்று குகல்மேன் கூறுகிறார்.

"பிராந்தியப் பாதுகாப்புக்கான அதிக பொறுப்பைத் தனது முக்கிய கூட்டாளிகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதால், இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கும்."

இதில் பாகிஸ்தானின் பங்கு குறித்து அவர் எழுதுகையில், "இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் உருவாகி வரும் பாதுகாப்பு கட்டமைப்பில் பாகிஸ்தானின் பங்கை மேலும் வலுப்படுத்துகிறது. எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கின் பிற செல்வாக்கு மிக்க நாடுகளுடனான தனது பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த பாகிஸ்தான் சமீபத்தில் முயற்சித்து வருகிறது. இது மத்திய கிழக்கில் பாகிஸ்தானின் மூலோபாய முக்கியத்துவத்தை அதிகரித்து வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள போர் ஆய்வாளர் ஜான் ஸ்பென்சர், இதை ஒரு மோசமான யோசனை என்று கருதுகிறார்.

"இது மிகவும் மோசமான யோசனை. சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்புகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள குழுக்களுக்கு பாகிஸ்தான் இன்னும் அடைக்கலம் அளித்து வருகிறது. எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதக் குழுக்களுக்கு அது பொறுப்பேற்பதுமில்லை, அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுமில்லை" என்று அவர் எழுதியுள்ளார்.

"அது சீனாவைச் சார்ந்துள்ளது. அதன் ராணுவமும் சீன ஆயுதங்களைக் கொண்டு பெருமளவில் ஆயுதம் ஏந்தியுள்ளது. அதன் பொருளாதாரம் மிகவும் பலவீனமாக உள்ளது. மீண்டும் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்ஃ) நிதியுதவி தேவைப்படும் நிலையில் இருப்பதால், அது தோல்வியடைந்து வரும் பொருளாதாரமாகக் கூட கருதப்படலாம்."

"இரான் சௌதி அரேபியாவைத் தாக்கியபோது, பாகிஸ்தான் அதற்கு உதவ எதுவும் செய்யவில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஓர் இஸ்லாமிய கூட்டணியா?

சில ஆய்வாளர்கள் இதை ஓர் இஸ்லாமியக் கூட்டணியாகக் கருதுகின்றனர்.

இதில் துருக்கியின் பங்கு குறித்து இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் கன்வல் சிபல் எக்ஸ் தளத்தில் எழுதுகையில், "எர்துவான் தனது வழக்கமான ஏமாற்றும் ராஜ்ஜீய நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்பது அவருக்கே தெரியும். இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் யாரையும் குறிவைத்தது அல்ல என்றால், அது ஏன் தேவைப்படுகிறது? இல்லாத ஒரு அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காகவா?" என்று கேள்வி எழுப்பினார்.

"மேற்கு ஆசியாவில் துருக்கியின் பிராந்தியப் பங்கை வலுப்படுத்த எர்துவான் நீண்ட காலமாக முயன்று வருகிறார். இந்தப் பிராந்தியம் ஒரு காலத்தில் பல நூற்றாண்டுகளாக ஒட்டோமான் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. இஸ்லாமிய உலகிற்கு தலைமை வகிக்க எர்துவான் விரும்புகிறார்.

இஸ்லாமிய சீர்திருத்தவாதத் தலைவராக சௌதி அரேபியா வகிக்கும் பங்கை பலவீனப்படுத்தவும், பாகிஸ்தான் மற்றும் மலேசியாவை உள்ளடக்கிய, தனது தலைமையின் கீழ் ஒரு பழமைவாத இஸ்லாமியக் கூட்டணியை உருவாக்கவும் அவர் முயன்று வருகிறார்."

"தற்போது, சௌதி அரேபியாவையும் தனது பக்கம் இணைத்துக் கொள்வதன் மூலம், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட தனது அரசியல் தலைமைத் திட்டத்தை வலுப்படுத்த அவர் முயற்சித்து வருகிறார்."

பிரம்மா செல்லானியும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் எழுதுகையில், "இந்த ஒப்பந்தத்தில் 'இஸ்லாமிய ஒற்றுமை' என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருப்பதும், மெக்காவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதும், இந்த புதிய பாதுகாப்பு கூட்டமைப்பிற்கு ஒரு தெளிவான பான்-இஸ்லாமிய (அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் ஒருங்கிணைக்கும்) தன்மையை வழங்குகிறது" என்று கூறுகிறார்.

மத்திய கிழக்கு நிறுவனத்தின் துருக்கி திட்டத்தின் நிறுவன இயக்குநர் கோனுல் டோல் எக்ஸில் எழுதுகையில், "சௌதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையே இன்று மெக்காவில் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பின்னணியில், ஜனவரியில் நான் வெளியிட்ட பதிவை மீண்டும் பகிர்கிறேன். எனது மதிப்பீடு அப்படியே உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"இந்த ஒப்பந்தத்துக்கு சில குறியீட்டுத் தன்மையும் உள்ளது. இது முஸ்லிம்களின் புனித வழிபாட்டு நாளான வெள்ளிக்கிழமை, மெக்காவில் கையெழுத்திடப்பட்டது. நேட்டோவின் 5-வது பிரிவின் கட்டமைப்பும் இதில் இடம்பெற்றுள்ளது. ஏற்கெனவே இருந்த பாதுகாப்புக் கூட்டாண்மைகளை இந்த ஒப்பந்தம் முதன்மையாக அமைப்பு ரீதியாக முறைப்படுத்துகிறது என்று நான் நம்புகிறேன்."

"ஆனால், இதை முஸ்லிம் நேட்டோ என்று அழைப்பது ஒரு மிகையான கூற்றாகவே இருக்கும்."

"2025-ஆம் ஆண்டு சௌதி அரேபியா-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கூட்டு பாதுகாப்புக்கான ஏற்பாடு இடம்பெற்றிருந்தது. ஆனால், சௌதி அரேபியா தாக்கப்பட்டபோது, அது தானாகவே பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கையைத் தூண்டவில்லை."

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு