'3 நாட்களில் வரன்' - பெண் கிடைக்காமல் விரைவு திருமணம் செய்த ஆண்களுக்கு என்ன நேர்ந்தது?

கடுமையான பாலின விகித ஏற்றத்தாழ்வு காரணமாக, சீனாவில் திருமணத்துக்கு பெண்களுக்கு அதிக தேவை உருவாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடுமையான பாலின விகித ஏற்றத்தாழ்வு காரணமாக, சீனாவில் திருமணத்துக்கு பெண்களுக்கு அதிக தேவை உருவாகியுள்ளது.
    • எழுதியவர், லாரா பிக்கர்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

37 வயதான வாங் ஜுவாங், தனக்கு திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கையை கிட்டத்தட்ட இழந்துவிட்டார். அப்போது அவரது கவனத்தை திருமண வரன் பார்த்து தரும் விளம்பரங்கள் ஈர்த்தது.

பல ஆண்டுகள் ஒரு உறவை வளர்த்த பிறகு அது தோல்வியில் முடிவடையும் ஏமாற்றத்தை சந்திக்க வேண்டியதில்லை என்று அந்த விளம்பரங்கள் உறுதியளித்தன. அமைதியான குணமும், குடும்ப வாழ்க்கைக்கு அர்ப்பணிப்பும் கொண்ட பெண்ணை அறிமுகப்படுத்துவதாகவும் அவை கூறின.

"குய்சோவைச் சேர்ந்த பெண்கள் மிகவும் சிக்கனமாக வாழ்பவர்கள் என்று திருமணத் தொடர்பாளர்கள் என்னிடம் கூறினர்," என்று வாங் நினைவுகூர்கிறார்.

"வீட்டு நிர்வாகத்தைச் சிறப்பாக கவனிப்பார்கள், வீட்டு வேலைகளில் திறமையானவர்கள், மேலும் அவர்களது குடும்பங்கள் மிகவும் ஏழ்மையானவை என்பதால், திருமணத்திற்குப் பிறகு உங்கள் குடும்பத்திலேயே நிலையாக வாழ்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள் என்று அவர்கள் சொன்னார்கள்."

அந்த நம்பிக்கையுடன், தனது வாழ்க்கைத் துணையைத் தேடி தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத் தலைநகரமான குய்யாங்குக்கு வாங் பயணம் செய்தார்.

அங்கு சந்தித்த ஒரு பெண், தாம் எதிர்பார்த்த அனைத்து குணங்களையும் கொண்டவராகத் தோன்றியதால், தனது வாழ்க்கைத் துணையை கண்டுபிடித்துவிட்டதாக அவர் நம்பினார். திருமணத்திற்கு முன்பு அவர்கள் சில முறை மட்டுமே சந்தித்திருந்தனர்.

ஆனால், அவரது புதிய வாழ்க்கை தொடங்கிய வேகத்திலேயே அது சிதறிப் போய்விட்டது.

"எங்கள் குடும்பமே முற்றிலும் சீர்குலைந்துவிட்டது," என்று வாங் கூறுகிறார்.

தனது மனைவி கூறிய அனைத்தும் பொய்யானவை என்பதை அறிந்ததற்கு பிறகும், ஓர் ஆண்டுக்கு மேலாக அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள போராடிக் கொண்டிருக்கிறார்.

திருமணத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படத்தில், வாங் தனது முன்னாள் மனைவியுடன் காணப்படுகிறார்.
படக்குறிப்பு, திருமணத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படத்தில், வாங் தனது முன்னாள் மனைவியுடன் காணப்படுகிறார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பின்னர், அவர் திருமணம் செய்துகொண்ட பெண் குறித்து தெரியவந்த தகவல்கள் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

அந்த பெண் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்திருந்தார். அவருக்கு மூன்று குழந்தைகளும் இருந்தனர். மேலும், பாலியல் ரீதியாக பரவும் ஒரு தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்ததோடு, பெரும் கடன் சுமையிலும் இருந்தார். தனது வயது குறித்தும் அவர் பொய்யாக கூறியிருந்தார்.

தற்போது, வாங் விவாகரத்துக்காக சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், தனது பழைய வாழ்க்கைக்குத் திரும்பவும் முடியாத நிலையில் உள்ளார். காரணம், திருமண வரன் நிறுவனம் அறிமுகப்படுத்திய சில பெண்களைச் சந்தித்த சில மணி நேரங்களுக்குள்ளேயே, தனது வாழ்நாள் சேமிப்பில் ஒரு பெரிய பகுதியை அந்த நிறுவனத்துக்கு கட்டணமாக வழங்கியதாக அவர் கூறுகிறார்.

"என் பெற்றோர் என்னையே குற்றம் சொல்கிறார்கள். எனக்கு தூக்கமின்மையும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை," என்று அவர் கூறுகிறார்.

வாங் ஜுவாஙின் கதை, சீனாவில் நீண்ட காலமாக உருவாகி வந்த மக்கள்தொகை கட்டுப்பாட்டின் தீவிரமான ஒரு வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.

பல தசாப்தங்களாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற வேண்டும் என்ற கொள்கையை அமல்படுத்தியது. 2016 ஜனவரியில் அந்தக் கொள்கை திரும்பப் பெறப்பட்டாலும், அதற்குள் "ஒரே குழந்தை" கொள்கையும், ஆண் குழந்தைகளுக்கான சமூக முன்னுரிமையும் சேர்ந்து பெண்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்திருந்தன.

தற்போது சீனாவில் பெண்களை விட சுமார் 3 கோடி ஆண்கள் அதிகமாக உள்ளனர்.

இதன் விளைவாக, 30 வயதின் இறுதிப் பகுதியில் உள்ள வாங் போன்ற ஆண்கள், குறிப்பாக சிறிய நகரங்கள் அல்லது தொலைதூர கிராமப்புறங்களில் வாழ்பவர்கள், வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் மிகக் குறைந்த வாய்ப்புகளையே கொண்டுள்ளனர்.

மறுபுறம், இப்பகுதிகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு அதிக தேவை இருப்பதை அறிந்திருப்பதால், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அதிக வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

"என் நகரத்தில் ஆண்களுக்கான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகம். உங்களிடம் கார் இருக்க வேண்டும். சொந்த வீடு இருக்க வேண்டும். உங்கள் குடும்பம் தொழில் நடத்துவது கூடுதல் நன்மையாகக் கருதப்படுகிறது," என்று வாங் கூறுகிறார்.

சீனாவின் பல பகுதிகளில், மணமகனின் குடும்பம் மணமகளின் குடும்பத்துக்கு பணம் வழங்கும் "மணப்பெண் தொகை" என்ற பழக்கம் இன்னும் தொடர்கிறது. பெண்களை விட ஆண்கள் அதிகமாக உள்ள பகுதிகளில், இந்தத் தொகை பல குடும்பங்களுக்கு பெரும் பொருளாதாரச் சுமையாக மாறியுள்ளது.

அதனால்தான், குய்சோவில் செயல்படும் திருமண வரன் நிறுவனங்கள் போன்றவை வழங்கும் விரைவான தீர்வுகள் பலரைக் கவர்கின்றன. அவை, மிகக் குறுகிய காலத்தில் திருமணத்தை ஏற்பாடு செய்யும் "விரைவு திருமண" முறைகளை முன்னிறுத்துகின்றன.

திருமண வரன் நிறுவனங்கள் சீனாவில் புதியவை அல்ல. ஆனால், வயது அதிகரித்தும் வாழ்க்கைத் துணையைத் தேடி வரும் ஆண்களின் ஏமாற்றத்தையும் தனிமையையும் சில நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.

அரசு ஊடகம் சமீபத்தில் வெளியிட்ட செய்தியின்படி, இந்தத் துறை "வேகமான வளர்ச்சியை" கண்டுள்ளதோடு, அதனுடன் "சட்டவிரோத நடைமுறைகள் மற்றும் குழப்பங்களும்" அதிகரித்துள்ளன.

பெண் கிடைக்காமல் ’விரைவு திருமணம்’ மூலம் மனம் முடித்தவர்கள்

பட மூலாதாரம், Getty Images

சீனா முழுவதும் இத்தகைய மோசடிகள் எந்த அளவுக்கு பரவியுள்ளன என்பதைத் துல்லியமாகக் கணிப்பது கடினம். இருப்பினும், இந்தப் பிரச்னை சீன அதிகாரிகளின் கவனத்தை பெறும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை, திருமண வரன் துறையுடன் தொடர்புடைய குற்றங்களில் 1,546 பேருக்கு எதிரான வழக்குகளை அரசு வழக்கறிஞர்கள் கையாண்டுள்ளனர்.

இந்த மாதம், இந்த விவகாரம் "பொதுமக்களிடையே பரவலான கவலையை" ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஐந்து அரசுத் துறைகள் இணைந்து திருமண வரன் நிறுவனங்களுக்கு எதிராக நாடு தழுவிய நடவடிக்கையைத் தொடங்கின.

ஒரு வழக்கில், திருமண வரன் நிறுவனம் ஒன்று கரோக்கி பெண் பணியாளர்களை ஏமாற்று வலையாகப் பயன்படுத்தி, 128 பேரிடம் இருந்து 25 லட்சம் யுவானுக்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

"விரைவு திருமண மோசடிகளைத் தடுப்பதற்காக, இந்தத் துறைக்கென தனிப்பட்ட ஒழுங்குமுறைகளை அரசு அறிமுகப்படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன்," என்று பெய்ஜிங் ஜிங்ஷி சட்ட நிறுவனத்தின் நான்ஜிங் அலுவலகத்தைச் சேர்ந்த ஃபான் பிங்ஹே பிபிசியிடம் தெரிவித்தார்.

இவ்வகை 'விரைவு திருமண' சந்தையின் மையமாக குய்யாங் நகரம் அறியப்படுகிறது.

திருமண வரன் நிறுவனங்களின் அலுவலகங்கள், ஒரு வணிக வளாகத்தின் மேல் தளங்களில் நெருக்கமாக அமைந்துள்ள கட்டடங்களின் தொகுப்புக்குள் செயல்படுகின்றன. கீழே உள்ள சந்தைப் பகுதிகளில் உள்ளூர் பழங்கள் விற்கப்படுகின்றன. தொழிலாளர்கள் புளிப்புச் சூப் சேர்த்த அரிசி நூடுல்ஸை வாங்க வரிசையில் நிற்கின்றனர்.

ஆனால், அந்த நிறுவனத்தை நம்பலாம் என்ற உறுதியுடன் இருந்தார் வாங். முழுமையான பின்னணி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், மோசடிக்குள்ளானால் இழப்பீடு பெறும் உரிமை உண்டு என்றும் நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதனால் அவர் பணம் செலுத்தினார். அதன் பிறகே திருமணத் தொடர்புகள் தொடங்கின.

பெண் கிடைக்காமல் ’விரைவு திருமணம்’ மூலம் மனம் முடித்தவர்கள்

அடுத்த சில நாட்களில், நிறுவன ஊழியர்களின் கண்காணிப்பில் "திருமண அறிமுக" அறைகளில் வாங் ஏழு பெண்களைச் சந்தித்தார்.

அவர்களிடம் அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், ஏற்கனவே திருமணம் செய்திருக்கிறார்களா, குழந்தைகள் உள்ளனவா போன்ற கேள்விகளை அவர் கேட்டார்.

எட்டாவதாக சந்தித்த பெண்ணிடமே அவரது மனம் கவரப்பட்டது.

ஏற்கனவே திருமணம் செய்யாதவர், குழந்தைகள் இல்லாதவர், தன்னை விட சற்று இளையவர் ஆகிய குணாதிசயங்களைக் கொண்ட ஒருவரை அவர் எதிர்பார்த்திருந்தார்.

"அவரும் மிகவும் எளிமையாக உடை அணிந்திருந்தார்," என்று வாங் நினைவுகூர்கிறார்.

"அவர் அமைதியான குணமுடையவராகவும் நேர்மையானவராகவும் தோன்றினார்."

அவர்கள் நான்கு அல்லது ஐந்து முறை சந்தித்தனர். ஒவ்வொரு சந்திப்பும் வெறும் எட்டு முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

தொலைபேசி எண்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களை பரிமாறிக்கொள்ளக் கூடாது என்றும், அப்படிச் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் நிறுவனம் கடுமையாக எச்சரித்திருந்ததாக அவர் கூறுகிறார்.

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்தான் தனது வாழ்க்கைத் துணை என்று வாங் முடிவு செய்தார். அதன்பின், அவருக்காக கணிசமான மணப்பெண் தொகை வழங்கவும் ஒப்புக்கொண்டார்.

"நான் 3 லட்சம் யுவானுக்கும் அதிகமாக செலவிட்டேன்," என்று அவர் கூறுகிறார்.

"திருமண விருந்து மற்றும் பிற செலவுகளையும் சேர்த்தால், மொத்தமாக 4 லட்சம் முதல் 5 லட்சம் யுவான் வரை செலவழித்தேன்."

இந்த முழு நடைமுறையையும் திருமண வரன் நிறுவனம் தொழில்முறை புகைப்படங்களாகப் பதிவு செய்தது. பின்னர், அவற்றை தங்களது சேவைகளை விளம்பரப்படுத்த சீன சமூக வலைதளங்களிலும் பயன்படுத்தியது.

அந்தக் காணொளியில், சிவப்பு கம்பளத்தின் மீது கைகோர்த்து நடக்கும் தம்பதியினர் புன்னகையுடன் காணப்படுகிறார்கள். பின்னணியில் காதல் இசையும் ஒலிக்கிறது.

திருமணமான சில மாதங்களுக்குள்ளேயே, அவரது மனைவிக்கு கடன் இருப்பதாகக் கூறி கடன் வசூலிப்பாளர்கள் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்புகொள்ளத் தொடங்கினர்.

இதனால் சந்தேகமடைந்த வாங், தனது மனைவி இன்னும் என்னென்ன விஷயங்களை மறைத்திருக்கிறார் என்பதை அறிய முயன்றார். அவரது கைபேசியைச் சோதித்தபோது, முந்தைய வாழ்க்கை குறித்த தகவல்கள், பிறப்புச் சான்றிதழ் மற்றும் முந்தைய திருமண ஆவணங்கள் உள்ளிட்ட பல விவரங்கள் அவருக்குக் கிடைத்தன.

இது குறித்து நேரடியாகக் கேட்டபோது, அவரது மனைவி விவாகரத்துக்கு சம்மதித்தார். ஆனால் மணப்பெண் தொகையாக வழங்கப்பட்ட பணத்தில் ஒரு யுவான்கூட திருப்பித் தர மறுத்துவிட்டார்.

தன்னை இந்தத் திருமணத்தில் இணைத்த நிறுவனத்தைத் தேடி வாங் மீண்டும் சென்றார். ஆனால், அங்கு சென்றபோது அலுவலகம் காலி செய்யப்பட்டிருந்தது. அந்த நிறுவனம் செயல்பட்ட தடயமே இல்லாமல் மறைந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

தற்போது தனது வாடகை வீட்டில் வசித்து வரும் வாங், திருமண வரன் நிறுவனங்கள் அதிகமாக செயல்படும் முக்கிய பகுதியின் எதிரே வாழ்கிறார். இதேபோன்ற மோசடிகளில் மற்ற ஆண்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, சமூக வலைதளங்களில் காணொளிகள் வெளியிட்டு எச்சரிக்கை செய்து வருகிறார்.

குய்யாங்கில், இந்தத் துறையைப் பற்றி பேசத் தயாராக இருக்கும் நிறுவனங்களை கண்டுபிடிப்பது எளிதல்ல.

இருப்பினும், ஒரு நிறுவன உரிமையாளர் தனது அலுவலகத்தில் எங்களுடன் பேச சம்மதித்தார். ஆனால் பின்னர் அவரது தொழில் கூட்டாளர், அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.

அலுவலகத்தின் உள்ளே, திருமண முன்மொழிவுகளுக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளமும் செயற்கை மலர் இதழ்களும் காணப்பட்டன.

நாங்கள் அங்கு சென்ற சில மணி நேரங்களுக்கு முன்புதான் ஒரு ஜோடி திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

"சீனாவில் விரைவு திருமணங்களுக்கு மிகப் பெரிய சந்தை உள்ளது. உண்மையில், கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில்தான் இது பெருமளவில் உருவாகத் தொடங்கியது," என்று அவர் கூறினார்.

இந்த நிறுவனங்களின் கூற்றுப்படி, குய்சோ பகுதியில் பல குடும்பங்கள் 'ஒரே குழந்தை' கொள்கையை முழுமையாகப் பின்பற்றவில்லை. அதனால் அங்கு பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.

"ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று பெண் குழந்தைகள் இருந்தாலும், ஆண் குழந்தை பிறக்கும் வரை அவர்கள் தொடர்ந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டே இருப்பார்கள்," என்று ஒரு நிறுவன பிரதிநிதி பிபிசியிடம் தெரிவித்தார்.

அதனால்தான், பெண்கள் குறைவாக உள்ள மத்திய சீன மாகாணங்களில் வசிக்கும் வாங் போன்ற, பொருளாதார வசதி உள்ள ஆனால் வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்க சிரமப்படும் ஆண்களுடன் இந்தப் பெண்களை இணைக்க முயல்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

"எங்கள் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமானவரைத் தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் கொண்டவர்கள். மக்கள் உண்மையாகவே விரும்பும் வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்க உதவுவதே எங்கள் தொழிலின் நோக்கம்," என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.

ஒரு விளம்பரத்தில், "சரியான அறிமுகம் கிடைத்தால், மூன்று ஆண்டுகள் காதலிப்பதை விட மூன்று நாட்களே போதும்" என்று வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட ஒரு “திருமண அறிமுக” அறையில்தான் வாங் தனது வருங்கால மனைவியை முதன்முதலில் சந்தித்தார்.
படக்குறிப்பு, இப்படிப்பட்ட ஒரு "திருமண அறிமுக" அறையில்தான் வாங் தனது வருங்கால மனைவியை முதன்முதலில் சந்தித்தார்.

இப்போது வாங், தன்னைப் போன்ற மோசடிகளில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அவர் வசிக்கும் வாடகை வீடு, இதேபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்ட ஆண்களால் நிரம்பியுள்ளது. அவர்களில் சிலர் தங்களை ஏமாற்றிய திருமண வரன் நிறுவன உரிமையாளர்களைத் தேடி வருகின்றனர். மற்றவர்கள், திருமணமான சில வாரங்களிலேயே தங்களை விட்டு சென்ற மனைவிகளிடமிருந்து இழந்த பணத்தை மீட்டெடுக்க முயற்சித்து வருகின்றனர்.

ஜன்னல் அருகே இருந்த மடிக்கட்டிலில் அமர்ந்திருந்த ஜியாங்சி மாகாணத்தைச் சேர்ந்த 59 வயதான சூ ரூலின், தனது வழக்குக்கான ஆதார ஆவணங்களை கவனமாக ஒரு சிவப்பு நிற பிளாஸ்டிக் பையில் இருந்து எடுத்துக் காட்டுகிறார்.

தனது மகனுக்கு மனைவி தேடுவதற்காக, ஒரு "விரைவு திருமண" நிறுவனத்தின் மூலம் அவர் கிட்டத்தட்ட 5 லட்சம் யுவான் செலவிட்டுள்ளார்.

தந்தையும் மகனும் இணைந்து, ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிக தூரம் பயணித்து குய்யாங் நகரத்துக்கு வந்தனர். அங்கு, "திருமண அறிமுக" அறையில் முதன்முதலாக சந்தித்த பெண்ணை வெறும் ஏழு நாட்களுக்குள் அவரது மகன் திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட பிறகு, அந்தப் பெண் தமக்காக ஒரு ஐபோன் வாங்கித் தர வேண்டும் என்றும், தனது தொழிலுக்காக சுமார் 20,000 யுவான் பணம் வேண்டும் என்றும் கேட்டதாக சூ கூறுகிறார்.

மேலும், திருமண ஆடை மற்றும் நகைகளுக்காக 1.2 லட்சம் யுவானும் கேட்டதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.

"அவர் உண்மையாகவே எங்கள் குடும்பத்தில் இணைந்து எங்களுடன் வாழ வேண்டும் என்பதைத்தான் நான் விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார்.

"தனக்கு ஒரு வீடு வேண்டும் என்று அவர் கூறினார். அதை வாங்கித் தர நான் சம்மதித்தேன். எல்லாமே முன்கூட்டியே ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்கள்தான்."

ஆனால், அந்தப் பெண் அவர்களுடன் இரண்டு வாரங்களுக்கும் குறைவாக வாழ்ந்துவிட்டு தப்பிச் சென்றதாக அவர் கூறுகிறார்.

பின்னர் அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, அவரது மகனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் விவாகரத்து கிடைத்தது.

தங்களைத் திருமணத்தில் இணைத்த நிறுவனத்தின் உரிமையாளர்களும் இந்த ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டதாக சூ கூறுகிறார். இருந்தாலும், இழந்த பணத்தில் ஒரு பகுதியையாவது மீட்டெடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் அவர் இன்னும் குய்யாங் நகரிலேயே தங்கி போராடி வருகிறார்.

தனது மகனுக்காக பெரும் செலவில் தேடிய மணமகள், திருமணமான இரண்டு வாரங்களிலேயே தப்பிச் சென்றதாக சூ ரூலின் கூறுகிறார்.
படக்குறிப்பு, தனது மகனுக்காக பெரும் செலவில் தேடிய மணமகள், திருமணமான இரண்டு வாரங்களிலேயே தப்பிச் சென்றதாக சூ ரூலின் கூறுகிறார்.

பிபிசியுடன் பேசிய திருமண வரன் நிறுவன மேலாளர், தங்களது வாடிக்கையாளர்கள் குறித்து எந்த முறையான பின்னணி ஆய்வும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

"பெண்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துபவர்கள் உள்ளூர் திருமணத் தொடர்பாளர்கள்தான். அவர்கள் அந்தப் பெண்களை நன்கு அறிந்திருப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், குடும்பப் பின்னணியையும் தெரிந்திருக்கும். அதேபோல், ஆணை அறிமுகப்படுத்தும் தரப்பினரும் அவரைப் பற்றி நன்றாக அறிந்திருப்பார்கள்," என்று அவர் கூறினார்.

அவர்களது சேவைகளுக்கான கட்டணம் எவ்வளவு என்று கேட்டபோது, அது "ரகசிய தகவல்" என்பதால் தெரிவிக்க முடியாது என்று பதிலளித்தார்.

ஆனால், ஆண் அல்லது பெண் தரப்பில் யாராவது தவறான தகவல்களை வழங்கியிருப்பது நிரூபிக்கப்பட்டால், வாடிக்கையாளருக்கு பணத்தைத் திரும்பப் பெறும் உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

"எங்கள் வாடிக்கையாளர்கள் வழங்கும் தகவல்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை உண்மையானவையே என்று நான் கூறுவேன்," என்று அவர் வலியுறுத்தினார்.

"சீனாவில் ஒரு பழமொழி இருக்கிறது. ஒரு எலியின் கழிவு முழு சூப்பையும் கெடுத்துவிடும் என்பார்கள். இதுவும் அதுபோலத்தான். நாங்கள் உள்ளூர் காவல்துறையுடன் அடிக்கடி கூட்டங்களில் பங்கேற்கிறோம். ஏதேனும் ஒரு திருமண வரன் நிறுவனம் திருமண மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால், அது சட்டப்படி பொறுப்பேற்க வேண்டியிருக்கும்," என்றும் அவர் தெரிவித்தார்.

பெண் கிடைக்காமல் ’விரைவு திருமணம்’ மூலம் மனம் முடித்தவர்கள்
படக்குறிப்பு, திருமண வரன் ஏற்பாடு செய்யும் துறையில் பெரும்பாலானோர் நேர்மையாகவே செயல்படுகிறார்கள் என்று இந்த தரகர் கூறுகிறார்.

ஆனால், தாங்கள் சேமித்திருந்த பணத்தை இழந்தவர்களுக்கு இத்தகைய விளக்கங்கள் எந்த ஆறுதலையும் அளிப்பதில்லை.

"இவ்வளவு அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனம், அந்தப் பெண்ணின் சொந்த ஊரில் அவரைப் பற்றி விசாரித்த உள்ளூர் தரகர், நிறுவனம் அளித்த பல்வேறு உத்தரவாதங்கள் என இவை அனைத்தும் இருந்தும், அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்கள் முற்றிலும் பொய்யாக இருக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை," என்று வாங் கூறுகிறார்.

தான் இழந்த பணத்தை மீட்டெடுப்பதற்கான நம்பிக்கையை அவர் கிட்டத்தட்ட இழந்துவிட்டார். மேலும், இந்த மோசடியில் சிக்கியதற்காக தன்னைத்தானே குற்றம்சாட்டுகிறார்.

"பிரச்னைகள் உள்ள பெண்கள்தான் இத்தகைய விரைவு திருமணங்களுக்கு சம்மதிப்பார்கள்," என்று அவர் கூறுகிறார்.

தனது பணத்தை மீட்டுத்தருமாறு, குய்யாங் காவல்துறை அலுவலகங்களில் கெஞ்சியதாகவும் அவர் கூறுகிறார். இந்த வகை குற்றங்களைத் தடுக்க அதிகாரிகள் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக பெய்ஜிங்கிற்கும் பயணம் செய்துள்ளார்.

இத்தகைய வழக்குகளை நீதிமன்றத்தில் நிரூபிப்பது மிகவும் கடினம் என்று பல வழக்குகளை கையாண்டுள்ள வழக்கறிஞர் ஃபான் பிங்ஹே கூறுகிறார்.

முதலாவது காரணம், இவ்வகை திருமண மோசடிகளுக்கன தனிப்பட்ட குற்றச் சட்டம் சீனாவில் இல்லை என்பதுதான். எனவே, குற்றவியல் வழக்கு தொடர வேண்டுமெனில், ஆரம்பத்திலிருந்தே பணத்தைப் பறிப்பதே மனைவியின் நோக்கம் என்பதை பாதிக்கப்பட்டவர் நிரூபிக்க வேண்டும்.

"நான் கையாண்ட வழக்குகளில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பெரும்பாலும், 'நாங்கள் உண்மையாகவே திருமணம் செய்து நல்ல வாழ்க்கை வாழ விரும்பினோம். ஆனால் பின்னர் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஒருவருக்கொருவர் பொருந்தவில்லை. அதனால் உறவை முடிக்க முடிவு செய்தோம்' என்று வாதிடுவார்கள்," என்று அவர் கூறுகிறார்.

"அப்படிப்பட்ட சூழலில், உண்மையான திருமணத் தோல்விக்கும் திட்டமிட்ட மோசடிக்கும் இடையிலான வித்தியாசாத்தை உணர்த்த முடியாது. உறவு தொடர்பான பிரச்னைகளை பொய்யென்று நிரூபிப்பது மிகவும் கடினம்," என்றும் அவர் தெரிவித்தார்.

மோசடியில் சிக்கிய ஆண்களுக்கு வாங்கின் குடியிருப்பு ஒரு தற்காலிக புகலிடமாக மாறியுள்ளது.
படக்குறிப்பு, மோசடியில் சிக்கிய ஆண்களுக்கு வாங்கின் குடியிருப்பு ஒரு தற்காலிக புகலிடமாக மாறியுள்ளது.

ஆனால், போலியான திருமண வரன் நிறுவனங்களிடமிருந்து பணத்தை மீட்டெடுப்பது இன்னும் கடினமானது. ஏனெனில், போதுமான அளவு பணம் வசூலித்தவுடன் அவற்றில் பல நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு மறைந்துவிடுகின்றன.

வாங் தனது பணத்தில் ஒரு பகுதியை மட்டும் மீட்டெடுக்க முடிந்துள்ளது. முழுத் தொகையும் திரும்பக் கிடைக்கவில்லை.

"இப்படி ஒரு அனுபவத்திற்குப் பிறகு, இனி என்னால் திருமணம் செய்ய முடியுமா என்பதே தெரியவில்லை. ஏற்கனவே எனக்கு வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. இப்போது இவ்வளவு பணத்தையும் இழந்துவிட்டேன். இனி அதைப் பற்றி சிந்திக்கப் போவதில்லை," என்று அவர் கூறுகிறார்.

வாங் மற்றும் அவருடன் வசிக்கும் பல ஆண்களின் வாழ்க்கையும் தற்போது ஒரு இடைநிலைக் கட்டத்தில் சிக்கியிருப்பது போலத் தெரிகிறது.

"கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் எப்போது எனக்கு விவாகரத்து கிடைக்கும் என்பதே தெரியவில்லை," என்று சட்ட ஆவணங்களால் சூழப்பட்டபடி அவர் கூறுகிறார்.

"இந்த பிரச்னை எப்போது முடிவுக்கு வரும், நான் எப்போது மீண்டும் ஒரு சாதாரண வாழ்க்கையைத் தொடங்க முடியும் என்பது தெரியவில்லை. இதற்கு முடிவே இல்லாதது போலத் தோன்றுகிறது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு