அயோத்தி 'காணிக்கை திருட்டு' போல திருப்பதி, சபரிமலையில் முன்பு நடந்தது என்ன?

பரகாமணி திருட்டு வழக்கு, அந்த அமைப்பின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பரகாமணி திருட்டு வழக்கு, அந்த அமைப்பின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கோவில்களில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் திருடப்படுவதைத் தடுக்க, எத்தகைய நிர்வாக முறையை உருவாக்க வேண்டும்? இந்தக் கேள்வி சற்று வித்தியாசமாகத் தோன்றலாம்.

ஆனால், அயோத்தி ராமர் கோவிலில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான காணிக்கைகள் திருடப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், மத வேறுபாடுகளைக் கடந்து நாடு முழுவதும் இதுகுறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.

இதனுடன், கோவில்களின் நிர்வாகம் அறக்கட்டளைகள், தனிநபர்கள் அல்லது அரசாங்கங்களின் கைகளில் இருப்பது சிறந்ததா? அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல தலைமைச் செயல் அதிகாரி ஒருவரின் மேற்பார்வையின் கீழ் கோவில்கள் நிர்வகிக்கப்படுவது பொருத்தமானதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

மதத் தலங்களில் காணிக்கைகளைத் திருடுபவர்கள் கையாளும் நூதனமான வழிமுறைகள், பக்தர்களின் நம்பிக்கையைப் பெரிதும் பாதித்து வருகின்றன. அதனால்தான் இத்தகைய கேள்விகள் அனைத்தும் எழுகின்றன.

காணிக்கைகள் திருடப்படுவது தொடர்பான சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. ராமர் கோவிலுக்கு முன்பாகவே, நாட்டின் பணக்காரக் கோவிலான திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலும், சபரிமலை கோவிலும் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு விதிவிலக்காக இருந்ததில்லை.

மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோவிலில் நடைபெற்றதாகக் கூறப்படும் காணிக்கை முறைகேடும் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருப்பதி திருமலை

பட மூலாதாரம், Getty Images

திருப்பதி திருமலை வெங்கடேஸ்வர சுவாமி கோவில்

முதலில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) நிர்வகித்து வரும் வெங்கடேஸ்வர சுவாமி கோவிலின் நிர்வாகக் கட்டமைப்பைப் பார்ப்போம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்பது ஆந்திரப் பிரதேச அறக்கட்டளைகள் மற்றும் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையச் சட்டம், 1987-இன் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டபூர்வ அமைப்பாகும்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

1933-ஆம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் அரசின் டிடிடி சட்டத்தின் கீழ், இந்தக் கோவில் முதன்முதலில் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கோவிலின் அன்றாட நிர்வாகம், பொதுவாக ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் செயல்படும் செயல் அலுவலகத்தின் பொறுப்பில் உள்ளது.

இங்கு சுமார் 14,890 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுடன், ஏராளமான ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். மேலும், ஆயிரக்கணக்கான ஸ்ரீவாரி சேவகுலு தன்னார்வலர்களும் இங்கு சேவையாற்றுகின்றனர்.

கோவில் வாரியத்தில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பதவி வழி உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், இது முக்கியமாக கொள்கை முடிவுகளை எடுக்கும் அமைப்பாகவும், ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் அமைப்பாகவும் செயல்படுகிறது.

தேவஸ்தானத்தின் கணக்குகள் மாநில அரசால் தணிக்கை செய்யப்படுகின்றன. இதன் மூலம், அதன் செயல்பாடுகள் மாநில சட்டப்பேரவையின் கண்காணிப்புக்கு உட்படுகின்றன.

"ஆண்டில் தேவைக்கு ஏற்ப பலமுறை வாரியம் கூடுகிறது. 2026-27ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பட்ஜெட்டைத் தயாரிப்பதற்கான கூட்டமும் இதில் அடங்கும். 2025-26ஆம் ஆண்டில் வாரியம் எட்டு முறை கூடியது," என்று தேவஸ்தானத்தின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

கோவில்களில் நன்கொடைகள் மற்றும் காணிக்கைகள் திருடப்படுவது ஒன்றும் புதிய விஷயமல்ல.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோவில்களில் நன்கொடைகள் மற்றும் காணிக்கைகள் திருடப்படுவது ஒன்றும் புதிய விஷயமல்ல.

நன்கொடைகள்

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி, தேவஸ்தானத்திடம் ரூ.20,000 கோடி நிலையான வைப்புத் தொகைகள் உள்ளதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

"சுமார் 1.97 லட்சம் நன்கொடையாளர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை வழங்கும் நன்கொடையாளர்கள் உள்ளார்கள். ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை நன்கொடை வழங்குபவர்களும் பலர் உள்ளனர். நன்கொடைகளைப் பெறும் பல அறக்கட்டளைகளும் உள்ளன. வழக்கம்போல, அதிகபட்ச தொகை அன்னப் பிரசாதத் திட்டத்துக்கே செல்கிறது. இதற்காக ரூ.2,500 கோடிக்கும் அதிகமாக நன்கொடை கிடைக்கிறது.

"உண்டியல்கள் மூலம் தினசரி சராசரியாக ரூ.3.5 கோடி முதல் ரூ.4.5 கோடி வரை வசூலாகிறது. எனவே, உண்டியல்கள் மூலம் மட்டும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக சுமார் ரூ.5 கோடி வரை கிடைப்பதாகக் கூறலாம்," என்று அவர் விளக்கினார்.

1987-ஆம் ஆண்டுச் சட்டத்தின் 80-வது பிரிவின்படி, இந்த நிலையான வைப்புத் தொகைகள் பட்டியலிடப்பட்ட வங்கிகளில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்யப்படக் கூடாது.

தேவஸ்தான ஊழியர்கள் கூட்டுறவு வங்கியில் வைப்புத் தொகை மேற்கொள்ளப்பட்டால், அந்தத் தொகை ரூ.15 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் சட்டம் தெளிவாகக் கூறுகிறது.

பக்தர்கள் தினமும் ஆறு முதல் பன்னிரண்டு உண்டியல்களில் ரொக்கப் பணம், நாணயங்கள், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், தங்கக் கட்டிகள் மட்டுமின்றி, சொத்து உரிமைப் பத்திரங்கள் மற்றும் டீமேட் பங்குகளையும் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

இதனுடன், ஆன்லைன் நன்கொடைகள், இ-உண்டியல் மற்றும் டிஜிட்டல் நன்கொடை கியாஸ்க்குகள் மூலமாகப் பெறப்படும் நன்கொடைகளும் உள்ளன.

"தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் பாதுகாப்பாகச் சேகரிக்கப்படுகின்றன. அவற்றின் மதிப்பு ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்பட்டு, பின்னர் திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்துக்கு மாற்றப்படுகிறது. சொத்து உரிமைப் பத்திரங்களை தேவஸ்தான பெயரில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை வருவாய்த் துறை மேற்கொள்கிறது," என்று தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தக் கணக்குகள் ஆந்திரப் பிரதேச அரசின் உள்தணிக்கை மற்றும் சட்டபூர்வ தணிக்கைத் துறைகளால் தணிக்கை செய்யப்பட்டு வருவதாக அந்த அதிகாரி கூறினார்.

"தற்போது இவை இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தணிக்கையின் வரம்புக்குள்ளும் கொண்டு வரப்படுகின்றன," என்றும் அவர் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவில் உள்ள சித்திவிநாயகர் கோயிலில் நன்கொடைகள் பதுக்கி வைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில நாட்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவில் உள்ள சித்திவிநாயகர் கோயிலில் நன்கொடைகள் பதுக்கி வைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பரகாமணியில் திருட்டு

2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில், பரகாமணியில் பணியில் இருந்த உதவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலர் ஒய். சதீஷ் குமார், சி.வி. ரவிகுமார் என்பவருக்கு எதிராக திருமலை டவுன்-1 காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ரவிகுமாருக்கு ஒதுக்கப்பட்ட பணப்பையில் இருக்கும் அமெரிக்க டாலர்களைத் தனியாகப் பிரிப்பது அவரது பணியாக இருந்தது.

ரவிகுமார் தனது உள்ளாடைக்குள் ரகசியமாக பணத்தை வைத்துக் கொண்டதை தான் கவனித்ததாக சதீஷ் குமார் குற்றம்சாட்டினார்.

"பரகாமணியில் காணிக்கைப் பணம் எண்ணப்படும் அறைகளுக்குள் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வேட்டி மட்டும் அணிந்துதான் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். உள்ளாடை அணிந்து உள்ளே செல்ல அனுமதி இல்லை," என்று முன்னாள் வாரிய ஆலோசகர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தனது புகாரில், ரவிகுமார் 100 அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒன்பது நோட்டுகளைத் திருடியதாக, சதீஷ் குமார் குற்றம்சாட்டினார்.

ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி,ரவிகுமார் குற்றம்சாட்டப்பட்டவராக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டார்.

ஆச்சரியப்படும் வகையில், சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து ரவிகுமார் விடுவிக்கப்பட்டார்.

2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், நீதிபதி கன்னமனேனி ராமகிருஷ்ண பிரசாத், லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். மேலும், தேவஸ்தானத்திடம் உள்ள இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட்டார்.

2025-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி, இந்தப் புகாரை அளித்த ஊழியர் சதீஷ் குமாரின் உடல், தடேபத்ரி அருகே ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

சில நாட்களுக்குப் பிறகு, ரவிகுமாரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், தான் பாவம் செய்துவிட்டதாகவும், அதற்குப் பரிகாரமாக ரூ.14 கோடி மதிப்பிலான தனது சொத்துகளில் 90 சதவிகிதத்தை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ரவிகுமார் மற்றும் தேவஸ்தானத்தின் பிற அதிகாரிகள் தொடர்பான இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் சிஐடி ஆகியவை தங்களது அறிக்கையை சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.

சதீஷ் குமாரின் மரணம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்துமாறு ஜனவரி மாதத்தில் சிஐடிக்கு உத்தரவிடப்பட்டது. அவர் அனந்தபூர் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதைக் கண்டறிந்து உண்மையை வெளிக்கொண்டு வருவதே இந்த விசாரணையின் முக்கிய நோக்கமாகும்.

நிர்வாக அமைப்பு எவ்வளவு வலுவானதாக இருந்தாலும், பரகாமணி திருட்டு வழக்கு அதன் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

சபரிமலை

பட மூலாதாரம், Getty Images

சபரிமலையில் மாயமான தங்கம்

திருப்பதியில் டாலர்கள் திருடப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சபரிமலையில் தங்கம் மாயமாகியுள்ளது.

மாயமான தங்கத்தின் அளவு சுமார் 4.5 கிலோ என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தங்கத்துக்குப் பதிலாக, கோவிலின் காவல் தெய்வங்களின் சன்னதிக் கதவுகள் மற்றும் சிலைகளில் செப்புத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1988-ஆம் ஆண்டு தங்கத் தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது. ஆனால், 2019 முதல் 2025ஆம் ஆண்டுக்குள் தங்கத் தகடுகள் அகற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக செப்புத் தகடுகள் பொருத்தப்பட்டதாக தெரியவந்தது.

சமீபத்தில் வெளியான தேசிய உலோகவியல் ஆய்வகம் அளித்த அறிக்கையும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

உண்மையில், கோவிலில் இருந்து 30.29 கிலோ தங்கம் அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், ஐயப்பனின் கதைகளைச் சித்தரிக்கும் கதவுகள், தூண்கள் மற்றும் பலகைகள் மீண்டும் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டபோது, அவற்றில் இருந்து சுமார் 4.54 கிலோ தங்கம் மாயமாகியிருந்தது தெரியவந்தது.

கேரள உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறப்பு புலனாய்வுக் குழு தனது அறிக்கையை நேரடியாக நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோயிலின் தலைமை தந்திரி கந்தரரு ராஜீவரு மற்றும் அவரது உதவியாளர் உன்னிகிருஷ்ணன் பொட்டி ஆகியோர் நம்பிக்கை மோசடி, ஆவணங்களைப் போலியாகத் தயாரித்தல் மற்றும் சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். உன்னிகிருஷ்ணன் பொட்டிதான் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளி எனக் கருதப்படுகிறது.

இவர்களுடன், முன்னாள் திருவிதாங்கூர் தேவசம் வாரிய தலைவர்களான ஏ. பத்மகுமார் மற்றும் என். வாசு, வாரியத்தின் நிர்வாக அதிகாரிகளான ஆணையர்கள் கே.எஸ். பைஜு மற்றும் ஆர்.ஜி. ராதாகிருஷ்ணன், முன்னாள் உறுப்பினர்களான என். விஜயகுமார் மற்றும் கே.பி. சங்கரதாஸ், சென்னையைச் சேர்ந்த 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் பங்கஜ் பண்டாரி உள்ளிட்ட சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு