You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இருமல், மூச்சுத்திணறல் எவ்வளவு நாள் நீண்டால் ஆபத்து? நுரையீரலின் செயல் திறனை அறிவது எப்படி?
- எழுதியவர், சண்முகப்ரியா செல்வராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
சுவாசம் என்பது உயிர் வாழ்வதற்கான அடிப்படைச் செயல்பாடு என்பதால், அதில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, ஆரம்பக்கட்ட அறிகுறிகளைக் கண்டறிதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து நுரையீரல் நிபுணர் மருத்துவர் ஷரோன் கிளமெண்ட் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். அவர் வழங்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
நுரையீரல் பாதிப்பின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் என்ன?
நுரையீரல் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் முக்கியம் என்கிறார் மருத்துவர் ஷரோன். அவர் குறிப்பிடும் முக்கியமான அறிகுறிகள்.
- தொடர்ச்சியான இருமல்
- சளியுடன் கூடிய இருமல்
- சளியுடன் ரத்தம் வெளிவருதல்
- மூச்சுத் திணறல்
- நெஞ்சு வலி
- மூச்சு விடும் போது சத்தம் ஏற்படுவது
இந்த அறிகுறிகள் 48 முதல் 72 மணிநேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்தால், மருத்துவப் பரிசோதனை அவசியம் என்கிறார் அவர்.
நுரையீரல் திறனை சுயமாக சோதிக்க முடியுமா?
நம்முடைய நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை ஓர் எளிய சோதனையின் மூலம் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார் மருத்துவர் ஷரோன்.
அவரது பரிந்துரையின்படி, "20 விநாடிகள் அல்லது அதற்கு மேல் மூச்சைப் பிடித்து வைக்க முடியவில்லையெனில், அது நுரையீரலின் செயல் திறன் குறைவாக இருப்பதைக் குறிக்கலாம். அதேபோல், ஒரு சில படிக்கட்டுகளை ஏறியவுடனேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டாலும் கவனம் தேவை."
இவை அனைத்தும் ஆரம்பக்கட்ட எச்சரிக்கை சமிக்ஞைகள் என வலியுறுத்தும் மருத்துவர் ஷரோன், இந்த நிலையில் இருக்கும் போதே சிகிச்சை எடுத்துக் கொண்டால், சுவாச நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்கிறார்.
நுரையீரல் பாதிப்புக்கான முக்கிய காரணங்கள்
வைரஸ் தொற்றுகள் நுரையீரல் பாதிக்கப்படுவதன் பின்னணியில் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான நூல்களில் நுரையீரல் தொற்றுகள் ஏற்படுவதற்கான பல்வேறு காரணிகள் குறித்துப் பேசப்பட்டுள்ளன.
கடுமையான சுவாச நோய்த் தொற்றுகள் குறித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கண்காணிப்பு, இந்தியாவில் ஆண்டு முழுவதும் இன்ஃப்ளுயன்ஸா மற்றும் பிற சுவாசம் தொடர்பான வைரஸ்கள் பரவுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறது.
அதேபோல, பி.எம்.2.5 காற்று மாசுபாட்டில் நீண்டகாலத்திற்கு வெளிப்படும் சூழலில் இருப்பது மிகக் கடுமையான சுவாசத் தொற்று அபாயத்தை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் சுகாதாரம் என்ற ஆய்விதழில் வெளியான ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
அதேபோல, தேசிய சுகாதார கணக்கெடுப்பு தரவுகளின் பகுப்பாய்வுகள் உட்புற புகை, மோசமான வீட்டு கட்டமைப்பு, சமூகப் பொருளாதார சூழல் ஆகியவற்றுடன் நுரையீரல் பாதிப்புகளுக்கு இருக்கும் தொடர்புகளை எடுத்துக் காட்டுகின்றன.
"சாதாரணமாக வைரஸ் தொற்றுகள் ஒன்றிரண்டு வாரங்களில் குணமாகிவிடும். ஆனால், சில நேரங்களில் 4 முதல் 6 வாரங்கள் வரை அது நீடிக்கக்கூடும். அப்படி முழுமையாகக் குணமடையாமல் இருந்தால், அது நீண்டகால சுவாசப் பிரச்னைகளுக்குக் காரணமாகலாம்," என்கிறார் மருத்துவர் ஷரோன்.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) பற்றிப் பேசிய அவர், "சுவாசக் குழாயில் ஏற்படும் வீக்கம் மற்றும் சுருங்கிய நிலையை இது குறிக்கிறது" என்றார். இதனால் காற்றை உள்ளே இழுப்பது மற்றும் வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும் என விளக்கியதோடு, இதற்கு புகைப்பழக்கமும் ஒரு முக்கியக் காரணமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
புகைப்பழக்கத்தால் வரும் ஆபத்துகள்
புகையிலை பயன்பாடு நுரையீரலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று எச்சரிக்கும் அவர், அது மூன்று வகையிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக விளக்கினார். அவரது கூற்றுப்படி,
- நேரடி புகைப்பழக்கம்: சிகரெட், பீடி, ஹூக்கா போன்றவற்றின் நேரடிப் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்
- மறைமுக புகைப்பழக்கம்: புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதால் ஏற்படும் பாதிப்பு
- மூன்றாம் நிலை புகைப்பழக்கம்: புகையிலை பொருட்களின் எச்சங்கள் மேற்பரப்புகளில் படிந்து, பின்னர் சுவாசத்தில் கலந்து உடலுக்குள் செல்வதால் உண்டாகும் பாதிப்பு
தொழில்சார் ஆபத்துகள் யாருக்கு அதிகம்?
தொடர்ந்து தூசி, புகை, நச்சு வாயுக்கள் ஆகியவற்றுக்கு வெளிப்படும் வகையில் பணியாற்றும் தொழிலாளர்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கிறார் மருத்துவர் ஷரோன்.
அதாவது, அரிசி ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தானிய தூசுக்கு நடுவில் பணியாற்றுவதால் நுரையீரலின் செயல் திறன் குறையும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் விளக்கினார்.
அதேபோல, "உலோகப் புகை மற்றும் வாயுக்களுக்கு நடுவில் பணியாற்றும் வெல்டிங் தொழிலாளர்கள், கழிவு மற்றும் ஆபத்தான நுண்ணுயிரிகளுக்கு மத்தியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், ஆஸ்பெஸ்டாஸ், அலுமினியம் தூசுகள் நிறைந்த கப்பல் கட்டும் தளம், துறைமுகம் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் போன்றோர் நுரையீரல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் அபாயத்தில் இருக்கின்றனர்" என்றும் தெரிவித்தார்.
மேலும், பறவைகள், செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள், அவற்றின் முடியிலுள்ள பூஞ்சைத் துகள்கள் சுவாசப் பாதையைப் பாதிக்கும் அபாயத்தை எதிர்கொள்வதாகவும் கூறினார் அவர்.
நுரையீரலைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?
நுரையீரலைப் பாதுகாக்க ஏற்ற வகையிலான பரமாரிப்புக்கு மருத்துவர் ஷரோன், சில வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்.
- 4-7-8 சுவாச முறை: 4 விநாடிகள் மூச்சை இழுத்து, 7 விநாடிகள் பிடித்து வைத்து, 8 விநாடிகளுக்கு நீளும் வகையில் மெதுவாக வெளியே விடுதல். இதை தினசரி செய்தால் நுரையீரல் திறன் மேம்படும் என்று பரிந்துரைக்கிறார்.
- நீராவி உள்ளிழுத்தல்: புதினா எண்ணெய் அல்லது இஞ்சி சேர்த்து நீராவியை உள்ளிழுத்தால் சளி அடைப்பு குறையும் எனவும் அறிவுறுத்துகிறார்.
- ஆன்டி-ஆக்ஸிடன்ட் உணவுகள்: ப்ரோக்கோலி, மாதுளை, பீட்ரூட், இஞ்சி போன்றவை அழற்சியை குறைக்க உதவும் என்கிறார் மருத்துவர் ஷரோன்.
- உடற்பயிற்சி: மார்பு மற்றும் சுவாச தசைகளைப் பலப்படுத்தும் உடற்பயிற்சிகள் நுரையீரல் திறனை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
நுரையீரல் ஆரோக்கியத்தை தினமும் பராமரிப்பது என்பது அதன் செயல் திறனைப் பாதுகாக்கவும் அபாயங்களுக்கு ஆளாகாமல் தவிர்க்கவும், சுவாச செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவும்.
அதற்காக உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களின்படி, புகையிலை மற்றும் புகையைத் தவிர்க்க வேண்டும், உட்புறத்தில் காற்று மாசுபாட்டைக் குறைப்பது, நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்வது ஆகியவை சுவாச நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
அமெரிக்க நுரையீரல் சங்கம் வழக்கமான ஏரோபிக் உடற்பயிற்சிகளைச் செய்வதையும், ரசாயனப் புகைகளுக்கு நீண்டகால அளவில் வெளிப்படுவதைத் தவிர்க்க பரிந்துரைக்கிறது.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சுவாச அறிகுறிகளை அடையாளம் கண்டு ஆரம்ப சிகிச்சை மூலம் தொற்று தடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.
எனவே, அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது அவசியம் என வலியுறுத்துகிறார் மருத்துவர் ஷரோன்.
"குறிப்பாக புகைப்பழக்கம் உள்ளவர்கள், தொழில்சார் தூசிக்கு வெளிப்படுவோர் மற்றும் குடும்பத்தில் நுரையீரல் நோய் பாதிப்புகளைக் கொண்டவர்கள் இருப்பவர்கள் இடையே கூடுதல் கவனம் தேவை.
நுரையீரல் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், நீண்டகால பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்," என்கிறார் மருத்துவர் ஷரோன் கிளமெண்ட்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு