You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இ20 பெட்ரோல் கார், பைக் என்ஜினை பாதிக்குமா? விஸ்வரூபம் எடுக்கும் கேள்விக்கு நிபுணர்கள் பதில்
- எழுதியவர், அர்ச்சனா ஷுக்லா
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இந்தியாவில் பெட்ரோலுடன் உயிரி எரிபொருளை அதிகளவில் கலக்கும் அரசின் முடிவுக்கு வாகன உரிமையாளர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சந்தையில் உள்ள பெரும்பான்மையான வாகனங்கள் இந்த புதிய எரிபொருளுக்கு ஏற்றவாறு இன்னும் வடிவமைக்கப்படாத நிலையில், இந்தத் திட்டம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன சந்தையையும், மூன்றாவது மிகப்பெரிய கார் சந்தையையும் கொண்ட இந்தியா, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும் முயற்சித்து வருகிறது. இதற்காக, 2000-களின் மத்தியில் இருந்து கரும்பு மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் கலக்கத் தொடங்கியது; அப்போதிருந்து கலவையில் எத்தனாலின் அளவைப் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
பெரும்பாலான வாகனங்கள் 10 சதவிகித எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியா 'இ20' எனப்படும் 20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல் வகையை அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் நிலையான எரிபொருளாக மாற்றியபோது புகார்கள் அதிகரித்தன.
எத்தனால் கலக்கப்படாத தூய பெட்ரோல் இன்னும் சந்தையில் புழக்கத்தில் இருந்தாலும், மாநில வாரியாக அதன் விலை இ20 பெட்ரோலை விட 40% முதல் 50% வரை அதிகமாகவே உள்ளது. இப்படி ஒரு மாற்று எரிபொருள் கிடைக்கிறது என்பதோ, அதைத் தாங்கள் கேட்டுப் பெறலாம் என்பதோ பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்குத் தெரியவில்லை.
கடந்த சில மாதங்களாக, வாகன ஓட்டிகள் சமூக வலைத்தளங்களில் தங்களின் வாகனங்களின் என்ஜின் தேய்மானம், மைலேஜ் குறைவு மற்றும் செயல்திறன் குறைபாடு போன்ற புகார்களை நுகர்வோர் சமூக ஊடகங்களில் பெருமளவில் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த வாரம், டெல்லியில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பல வாகன ஓட்டிகள் கலந்துகொண்டனர். தொலைக்காட்சி விவாதங்களில் எதிர்க்கட்சியான காங்கிரஸை ஆதரிக்கும் ஒரு தொழிலதிபரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில், இ20 எரிபொருளை அரசு தன்னிச்சையாகத் திணித்ததாகவும், இதனால் தங்களுக்கு அதிக பராமரிப்புச் செலவுகள் ஏற்படுவதோடு எரிபொருள் நிலையங்களில் வேறு வழியின்றி அதையே வாங்க வேண்டிய நிலை உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இருப்பினும், பிரதமர் மோதி தலைமையிலான அரசு இந்தப் புகார்களை "தவறான வழிநடத்துதல்" மற்றும் "சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள்" எனக் கூறி நிராகரித்துள்ளது.
கடந்த மாதம் அரசு வெளியிட்ட அறிக்கையில், விரிவான சோதனைகளுக்குப் பிறகே இந்த எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், இது என்ஜின்களைப் பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ20 பெட்ரோலின் நன்மைகள் குறித்தும், "சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதைகளை" முறியடிக்கும் வகையிலும் அரசு விளக்கங்களை அளித்துள்ளது.
இ20 பெட்ரோல் திட்டத்திற்கு ஆதரவாகப் பேசுவதற்காக, அரசாங்கம் நிபுணர்களையும் வாகன உற்பத்தியாளர்களையும் களம் இறக்கியுள்ளது.
கடந்த வார இறுதியில், ஒரு அசாதாரண ஒற்றுமையைக் காட்டும் வகையில், ஆறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்தின் செய்தி ஊடகச் சந்திப்பில் கூட்டாகப் பங்கேற்றன. 20 சதவிகித எத்தனால் கலப்பு கட்டாயமாக்கப்பட்டதால் வாகனங்களுக்குப் பரவலான பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டதாக, பல வருட சோதனைகளிலோ அல்லது வாகனப் பராமரிப்புத் தரவுகளிலோ எந்த ஆதாரமும் இல்லை என நிறுவனங்கள் தெரிவித்தன.
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகியின் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மூத்த நிர்வாக அதிகாரி ராகுல் பாரதி கூறுகையில், "இ20 எரிபொருளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படாத 1.5 கோடிக்கும் மேற்பட்ட பழைய வாகனங்களுக்கு மாருதி நிறுவனம் சர்வீஸ் செய்துள்ளது. ஆனால், அவற்றில் எரிபொருள் தொடர்பான எந்தக் கோளாறும் கண்டறியப்படவில்லை" என்றார்.
இருப்பினும், பெட்ரோலை விட எத்தனாலில் ஆற்றல் குறைவாக இருப்பதால், இ20 பெட்ரோலைப் பயன்படுத்தும்போது வாகனங்களின் மைலேஜ் அதாவது எரிபொருள் செயல்திறன் 3% முதல் 3.5% வரை குறைகிறது என்பதை வாகன உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், சில மதிப்பீடுகள், செயல்திறனில் ஏற்படும் உண்மையான சரிவு 4-12% வரை அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.
ஒரு பரந்த நோக்கில் பார்க்கையில், அரசாங்கத்தின் இந்த உயிரி எரிபொருள் ஊக்குவிப்புத் திட்டம் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவது ஆகிய உயரிய நோக்கங்களைக் கொண்டே இந்த உயிரி எரிபொருள் கொள்கை முன்னெடுக்கப்படுகிறது. கரும்பு, மக்காச்சோளம் போன்ற உள்நாட்டுப் பயிர்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால், பெட்ரோலை விடக் குறைந்த அளவே சூழலை மாசுபடுத்துகிறது.
அரசாங்கத்தின் தரவுகள், இந்தத் திட்டம் பெரும்பாலும் அந்த இலக்குகளை எட்டியுள்ளதாகவே காட்டுகின்றன.
இந்தியா தான் பயன்படுத்தும் கச்சா எண்ணெயில் பெரும்பகுதியை இறக்குமதி செய்கிறது. இரான் மோதலின் போது உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட சீர்குலைவு, உள்நாட்டிலேயே அதிக எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான தேவையை வலுப்படுத்தியுள்ளது.
இந்தோனீசியா, வியட்நாம் உள்ளிட்ட பிற எண்ணெய் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளும் எத்தனால் கலந்த மற்றும் 'பிளெக்ஸ்-ஃபியூயல்' எனப்படும் பலவகை எரிபொருள் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான தங்களின் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வருகின்றன.
இந்திய அதிகாரிகள் அடிக்கடி முன்மாதிரியாகக் குறிப்பிடும் பிரேசில், அதிகப்படியான எத்தனால் கலப்பைக் கட்டாயமாக்குவதற்கு முன்பு, அதற்கு ஏற்ற வாகனங்களை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் படிப்படியாக உருவாக்கியது. அங்குள்ள நுகர்வோர் 'இ27' பெட்ரோல் அல்லது 100% தூய எத்தனால் ஆகியவற்றில் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அங்குள்ள பெட்ரோல் பங்க் விலைகளின்படி, பெரும்பாலும் எத்தனால் தான் விலை மலிவான எரிபொருளாக இருக்கிறது.
இதே மாற்றத்தை இந்தியா மிகக் குறுகிய காலத்திற்குள், அதாவது மூன்றே ஆண்டுகளில் அவசரமாகச் செய்து முடித்துள்ளது. 2022-இல் 10% ஆக இருந்த பயன்பாட்டை, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகள் முன்பாகவே (2025-க்குள்) 20% கட்டாயக் கலப்பாக அரசு உயர்த்தியுள்ளது. எத்தனால் அளவை அதிகரிக்கும் முன், புதிய தொழில்நுட்பத்திற்கு மாற வாகன உற்பத்தியாளர்களுக்கும் ஓட்டிகளுக்கும் போதிய அவகாசம் தர வேண்டும் என்ற உலகளாவிய நடைமுறையை இந்தியா தவறவிட்டுள்ளதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்."
இ20 பெட்ரோல் கார், பைக் என்ஜினை பாதிக்குமா?
இந்தியச் சாலைகளில் உள்ள 75%-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இ20 தரத்திற்கு இணக்கமானவை அல்ல என்று மொபிலிட்டி குளோபல் என்ற வாகன ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் புனீத் குப்தா கூறினார்.
கடந்த ஆண்டு 'தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை' நடத்திய ஆய்வும் இதேபோன்ற முடிவைத்தான் எட்டியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் விற்கப்பட்ட புதிய பெட்ரோல் வாகனங்களில் சுமார் 20% மட்டுமே இ20 எரிபொருளுக்கு ஏற்ற தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன என்று அது கண்டறிந்துள்ளது.
இந்த அதிவேக மாற்றம், குறிப்பாகக் குறைந்த அளவு எத்தனால் கலப்புக்காக வடிவமைக்கப்பட்ட 2023-ஆம் ஆண்டிற்கு முந்தைய வாகனங்களை வைத்திருப்பவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த எரிபொருளால் என்ஜினில் துருப்பிடித்தல் மற்றும் வாகனத்தின் செயல்திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
சமீபத்திய மாதங்களில் இதுகுறித்த புகார்கள் அதிகரித்துள்ளன. கடந்த வாரம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், இ20 பெட்ரோலைப் பயன்படுத்திய பிறகு தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகளை விவரித்தனர்.
இதுகுறித்து மும்பையிலுள்ள கார் மற்றும் இருசக்கர வாகன சர்வீஸ் சென்டர்கள் மற்றும் மெக்கானிக் பலரிடம் பிபிசி பேசியது. அவர்களில் சிலர் இதுவரை தாங்கள் எந்தப் பிரச்னையையும் சந்திக்கவில்லை என்று கூறிய போதிலும், மற்றவர்களோ தங்களுக்கு வந்த சில வாகனப் பழுதுகள் இந்த அதிகப்படியான எத்தனால் கலப்போடு தொடர்புடையவை என நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
இருசக்கர வாகன என்ஜின்களைப் பழுதுபார்க்கும் பட்டறை நடத்தி வரும் முகமது ஆரிஃப் கூறுகையில், "கடந்த ஓராண்டில் கார்புரேட்டர்களில் எரிபொருள் படிவுகள் தேங்கிய பிரச்னையோடு வந்த பல பழைய பைக்குகளை நான் பழுதுபார்த்துள்ளேன். பெட்ரோலில் எத்தனால் அளவு அதிகமாக இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்." என்கிறார்.
இந்தப் படிவுகள் வாகனத்தின் செயல்திறனைக் குறைப்பதோடு, அடிக்கடி கார்புரேட்டரைச் சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்துகின்றன. இதனால் வாடிக்கையாளர்களுக்குப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வரும் பேசில் ஜேக்கப் கூறுகையில், "வாடிக்கையாளர்கள் தங்களுக்கு மைலேஜ் மிகவும் குறைந்துவிட்டதாகப் புகார் கூறுகின்றனர். இதனால் அவர்கள் அடிக்கடி பெட்ரோல் போட வேண்டியுள்ளது. எத்தனாலைத் தயாரிப்பதற்கான செலவு குறைவு என்றாலும், அந்தப் பலன் நுகர்வோருக்கு வழங்கப்படவில்லை. பழைய விலையிலேயேதான் தற்போதும் இ20 பெட்ரோல் விற்கப்படுகிறது." என்றார்.
மேலும் அவர், "வாடிக்கையாளர்கள் ஒரு லிட்டருக்கு அதே விலையைத்தான் கொடுக்கிறார்கள், ஆனால் குறைவான கிலோமீட்டர் மைலேஜ் தான் கிடைக்கிறது." என்றும் கூறினார்.
சில நிபுணர்களின் கருத்துப்படி, இதனால் ஏற்படும் பாதிப்புகள் உடனடியாகத் தெரியாமல் போகலாம். ஆனால் இ20 பெட்ரோலைச் தொடர்ந்து சில மாதங்கள் பயன்படுத்திய பிறகு, வாகன உதிரிபாகங்கள் விரைவாக தேய்மானம் அடைவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
"இது மெதுவாக வெளிப்படும் ஒரு பாதிப்பாக இருக்கும். 10,000 முதல் 20,000 கி.மீ பயன்பாட்டிற்குப் பிறகு எரிபொருள் விநியோக அமைப்புகளில் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் காரை முறையாகப் பராமரித்தால், பெரிய சிக்கல் எதுவும் இருக்காது" என 'ஆட்டோகார் இந்தியா' இதழின் ஆசிரியர் ஹோர்மாஸ் சோராப்ஜி பிபிசியிடம் கூறினார். சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் சில கவலைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எத்தனால் ஈரப்பதத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது; காலப்போக்கில் அந்த ஈரப்பதம் எரிபொருளிலிருந்து பிரிந்து அரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.
"இது என்ஜினுக்குள் இருக்கும் பழைய படிவுகளை இளகச் செய்து, சில சமயங்களில் எரிபொருள் பம்புகள் மற்றும் இன்ஜெக்டர்களை அடைத்துவிடக்கூடும். இதன் விளைவாக விரைவான தேய்மானம், அடிக்கடி பழுதுபார்ப்பு மற்றும் கூடுதல் பாகங்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம். இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் இதற்கான செலவு பெரிய அளவில் இருக்காது" என்று சோராப்ஜி தெரிவித்தார்.
'லோக்கல்சர்க்கிள்ஸ்' என்ற ஆன்லைன் சமூக ஊடகத் தளம், 2023-ஆம் ஆண்டிற்கு முன்பு பெட்ரோல் வாகனங்களை வாங்கிய 44,000-க்கும் மேற்பட்ட மக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில், தங்களின் வாகனங்களில் "அசாதாரணமான உதிரிபாகத் தேய்மானம் அல்லது பழுதுபார்ப்புத் தேவைகள் அதிகரித்துள்ளதாக" குறிப்பிட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், வாகனங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்ற ஓட்டுநர்களின் புகார்களுக்கோ அல்லது விரிவான சோதனைகளில் எந்தப் பாதிப்பும் கண்டறியப்படவில்லை என்ற அரசாங்கம் மற்றும் வாகன உற்பத்தியாளர்களின் உறுதிமொழிகளுக்கோ ஆதரவாக எந்தவொரு அறிவியல்பூர்வமான ஆய்வுகளும் பொதுவெளியில் கிடைக்கவில்லை. இந்த ஆதார இடைவெளிதான் மக்களிடையே குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.
"இதை நீங்கள் பொதுமக்கள் மீது கட்டாயமாகத் திணிக்கப் போகிறீர்கள் என்றால், அது பாதுகாப்பானது என்பதை உங்களால் நிரூபிக்க முடிய வேண்டும். இதில் மைலேஜ் குறைவது என்பது முற்றிலும் உறுதியான ஒன்று. எனவே, இந்த எரிபொருளின் விலை குறைவாக இருந்திருக்க வேண்டும், அதோடு இதை ஒரு கட்டாயத் தேர்வாக மாற்றாமல் விருப்பத் தேர்வாக வைத்திருக்க வேண்டும்," என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த தொழில் வல்லுநர் கூறினார்.
வாகனங்களுக்கான உத்தரவாதம் மற்றும் காப்பீடு குறித்த நிச்சயமற்ற தன்மையால் இப்பிரச்னை இன்னும் சிக்கலாக மாறியுள்ளது. இ20 பெட்ரோலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படாத வாகனங்களில், எரிபொருள் சார்ந்த கோளாறுகள் ஏற்பட்டால் அதற்கு காப்பீடு பாதுகாப்பு கிடைக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இ20 கலவையை நீண்டகாலம் பயன்படுத்திய பிறகு எரிபொருள் பம்புகள் அல்லது எரிபொருள் குழாய்கள் பழுதடைந்தால், இ20-க்கு பகிரங்கமாக ஆதரவளித்த வாகன உற்பத்தியாளர்கள் உத்தரவாதக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வார்களா என்று குப்தா கேள்வி எழுப்புகிறார்.
கடந்த மாதம், தனியார் காப்பீட்டு நிறுவனமான 'ஐசிஐசிஐ லம்பார்ட்' தனது வலைப்பதிவில், இ20-க்கு ஏற்ற தொழில்நுட்பம் இல்லாத வாகனங்களில் இந்த எரிபொருளைப் பயன்படுத்துவது "அலட்சியமாக" கருதப்படலாம் என்றும், இதனால் காப்பீட்டுக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம் என்றும் முதலில் குறிப்பிட்டிருந்தது குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
இருப்பினும், பின்னர் அந்த நிறுவனம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இ20 பெட்ரோலைப் பயன்படுத்தினாலும் வாகனக் காப்பீட்டுக் கொள்கைகள் "முழுமையாகச் செல்லுபடியாகும்" என்று தெரிவித்தது. அப்படியிருந்தும், வாகனக் காப்பீடு என்பது பொதுவாக விபத்தினால் ஏற்படும் சேதங்களை மட்டுமே ஈடுசெய்யும், எரிபொருளால் ஏற்படும் உதிரிபாகத் தேய்மானங்களை அல்ல என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விலை மற்றும் செலவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியச் சந்தையில், வாகன உரிமையாளர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய கேள்விக் குறியாக மாறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு