அமைச்சர்கள் கருத்துக்களை கூட அவைக்குறிப்பிலிருந்து நீக்கும் சபாநாயகர் - அவருக்கான அதிகாரம் என்ன?

பட மூலாதாரம், HANDOUT
ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் அமைச்சர்களின் பேச்சை சபாநாயகர் அவைக்குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிடுவது என்பது அண்மைக் காலங்களில் அரிதாகவே பார்க்கப்பட்ட ஒன்று.
பொதுவாக, இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகளுக்கு எதிராகவே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தனது தொடக்கப் பயணத்திலேயே ஆளுங்கட்சி அமைச்சர்களின் கருத்துகளையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கி, அவையின் விதிகளை அமல்படுத்துவதில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒருபுறம் அதிக எண்ணிக்கையிலான முதல் முறை உறுப்பினர்களைக் கொண்ட ஆளுங்கட்சி மறுபுறம், முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட நீண்ட சட்டப்பேரவை அனுபவம் கொண்டவர்களால் நிரம்பிய எதிர்க்கட்சிகள்.
இத்தகைய சமநிலையற்ற அனுபவச் சூழலில், விதிகளை நிலைநாட்டுவதோடு, புதிய உறுப்பினர்களை வழிநடத்தி, எதிர்க்கட்சிக்கும் உரிய இடமளித்து அவையை நடத்துவது ஜே.சி.டி. பிரபாகருக்கு முன் இருக்கும் முக்கியமான சவாலாகியுள்ளது.
அமைச்சர்களும் விதிவிலக்கு அல்ல
நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் பேசியபோது, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார்.
அந்தக் கருத்துகள் விவாதிக்கப்பட்டு வந்த பிரச்னையுடன் நேரடியாகத் தொடர்புடையவை அல்ல என்று கூறிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டார். சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் கீழ் விவாதிக்கப்படும் விஷயத்துக்கு உறுப்பினர்கள் கட்டுப்பட்டு பேச வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஏற்கெனவே அமைச்சர் ரஞ்சித்குமார் திமுக முன்னாள் முதலமைச்சர் பெயரை குறிப்பிட்டு பேசியதற்காக முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தொடர்ந்து பேச முயன்ற ரஞ்சித்குமாரை அமருமாறு சபாநாயகர் அறிவுறுத்தியதுடன், அவரது மைக்கை இயக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திமுகவை விமர்சிக்கும் வகையில் பேசிய சில கருத்துகளையும் சபாநாயகர் அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார்.

பட மூலாதாரம், TNDIPR
'சபாநாயகரின் முடிவே இறுதியானது'
அவைக்குறிப்பிலிருந்து கருத்துகளை நீக்கும் அதிகாரத்தின் வேர்கள் சுதந்திரத்துக்கு முந்தைய சட்டப்பேரவை நடைமுறைகளிலேயே உள்ளன.
தற்போதுள்ள சட்டப்பேரவை விதி 281-ன்படி, அவதூறான, அநாகரிகமான, சபையின் நடைமுறைக்கு முரணான, கண்ணியமற்ற அல்லது மிகுந்த முறைகேடான வார்த்தைகளை சபாநாயகர் தனது விருப்பத்தின் பேரில் அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதற்கு அதிகாரம் அளிக்கிறது.
மூத்த பத்திரிகையாளரும் சட்டப்பேரவை நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வருபவருமான இ.டி.பி. சிவப்பிரியன் பார்வையில், தற்போதைய சபாநாயகர் மீது இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே புகார் எழவில்லை.
"ஜே.சி.டி. பிரபாகர் சட்டப்பேரவைக்குள் நடுநிலையாக செயல்படுகிறார் என்பதே என் கருத்து" என்கிறார் அவர்.
அதேநேரம், அதிமுக உறுப்பினர்களின் ராஜிநாமாக்களை உடனடியாக ஏற்றுக்கொண்டது குறித்து அவர் மீது விமர்சனம் எழுந்திருப்பதையும் சிவப்பிரியன் சுட்டிக்காட்டுகிறார்.
சபாநாயகரின் அதிகாரம் குறித்த விவாதத்தில் முக்கியமானதாக இருப்பது அவைக்குறிப்பிலிருந்து ஒரு கருத்தை நீக்கும் அதிகாரம். அவையில் பேசப்பட்ட கருத்து, அவை மாண்புக்கு எதிரானதாகவோ, ஆதாரமற்ற கடுமையான குற்றச்சாட்டாகவோ அல்லது விதிகளுக்கு முரணானதாகவோ இருப்பதாக சபாநாயகர் கருதினால், அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட முடியும்.
"சபாநாயகரின் முடிவே இறுதியானது. அவை மாண்புக்கு தகாத வகையில் பேசப்பட்ட வார்த்தைகளை நீக்குவதாக அவர் அறிவித்தால் அதை உறுப்பினரால் மாற்ற முடியாது. ஆனால், நீக்கப்பட்ட கருத்தை மீண்டும் அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும் என்று உறுப்பினர் கோரினால், அதை ஏற்க வேண்டுமா என்பதை சபாநாயகரே முடிவு செய்யலாம்" என்கிறார் சிவப்பிரியன்.

பட மூலாதாரம், ETB Sivapriyan
வழக்கமாக அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும் கருத்துகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகளாகவே இருந்துள்ள நிலையில், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் பலவும் இந்த கூட்டத்தொடரில் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதில் அமைச்சர்களும் விதிவிலக்கல்ல என்பது கவனிக்கப்படுகிறது.
சபாநாயகராக இருந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பிபிசி தமிழிடம், ''அவையில் இல்லாதவர்களைப் பற்றி பேசுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, கடுமையான தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறுவது அல்லது ஒருமையில் பேசுவது போன்றவை அனுமதிக்கப்படுவதில்லை.'' என்றார்
"ஒரு குறிப்பிட்ட துறையில் எவ்வாறு ஊழல் நடக்கிறது என்று கூறலாம். ஆனால், 'ஊழலின் மொத்த உருவமே இந்த அரசு' என்று கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல" என அவர் விளக்குகிறார்.
ராஜ்மோகன், செங்கோட்டையன், ஆனந்த் உள்ளிட்ட சில ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தன்மையாகவும் விவாதத்துக்கு உட்பட்ட விஷயங்களை மையப்படுத்தியும் பேசுவதாக சிவப்பிரியன் குறிப்பிடுகிறார். ஆனால், சில உறுப்பினர்கள் அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைக்கும் போது அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாகவும் கூறுகிறார்.

பட மூலாதாரம், HANDOUT
ஜே.சி.டி பிரபாகர் சுமார் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவர். எம்.ஜி.ஆர் மீது பற்றுக் கொண்ட அவர், எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவை தொடங்கிய போது, அதில் இணைந்தார். 1980-ஆம் ஆண்டு முதன் முதலில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்றார். பின்பு வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்த அவர், 2026-ம் ஆண்டு தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வென்றார்.
சமீபத்தில் கருத்தடைக்கு எதிரான கிறித்துவ மத பேரணியில் அவர் பங்கேற்றது சர்ச்சையானது.
புதிய உறுப்பினர்கள் நிறைந்த அவை
ஜே.சி.டி. பிரபாகரின் சவால் சபாநாயகர் பதவியின் அதிகாரத்தோடு மட்டும் முடிவதில்லை. தற்போதைய ஆளுங்கட்சி வரிசையில் பெரும்பாலானவர்கள் முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
சட்டப்பேரவை என்பது அரசியல் மேடையைப் போன்றதல்ல. அங்கு உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் கருத்துகளுக்கும் அவை விதிகள் மற்றும் நடைமுறைகள் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.
"அரசியல் மேடையில் பேசுவதற்கும் சட்டப்பேரவையில் பேசுவதற்குமான வித்தியாசம் பலருக்கு தெரியவில்லை. எனவே, புதிய உறுப்பினர்களை வழிநடத்துவதும், விவாதத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும் சபாநாயகருக்கு கூடுதல் பொறுப்பாகிறது" என்றார் சிவப்பிரியன்.
இந்த சூழலில், முதல் முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சௌம்யா அன்புமணி ஆகியோர் தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பேசுவது மற்ற உறுப்பினர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக சிவப்பிரியன் சுட்டிக்காட்டுகிறார்.
முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமா?
தற்போதைய சட்டப்பேரவையில் எழுந்த மற்றொரு சர்ச்சை, முதல்வர் அவைக்குள் நுழையும் போது உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டுமா என்பது.
இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் திமுக உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகரிடம் கோரியிருந்தார்.
அதற்கு ஜே.சி.டி. பிரபாகர், சட்டப்பேரவை விதிகளின்படி முதல்வர் அவைக்குள் வரும்போது உறுப்பினர்கள் கட்டாயமாக எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி இல்லை என்றும், நாகரிகம் கருதி எழுந்து நிற்பது உறுப்பினர்களின் விருப்பம் என்றும் விளக்கம் அளித்தார்.
இந்த சர்ச்சையை வரலாற்றுப் பின்னணியுடன் பார்க்க வேண்டும் என்கிறார் சிவப்பிரியன்.
"பொதுவாக முதல்வர்கள் ஆளுங்கட்சி வரிசையில் உள்ளவர்களை நோக்கி வணக்கம் சொல்லி அமர்வார்கள். அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நிற்பார்கள். கருணாநிதி ஆட்சியில் ஜெயலலிதாவும், ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதியும் முதல்வர் வரும்போது எழுந்து நின்றதில்லை. ஆனால், தற்போது முதல்வர் விஜய் அவையின் நடுவில் நடந்து வந்து இருபுறமும் உள்ளவர்களுக்கு வணக்கம் சொல்கிறார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நிற்கவில்லை என்பது விவாதமாகிறது" என்கிறார்.
சபாநாயகர் அதிகாரம் சர்ச்சை
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகரின் அதிகாரம் குறித்து விவாதம் எழுவது புதிதல்ல. சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன், சபாநாயகருக்கு "வானளாவிய அதிகாரம்" இருப்பதாகக் கூறியிருந்தது இன்றும் அரசியல் வட்டாரங்களில் நினைவுகூரப்படுகிறது.
1987-ல் விகடன் இதழில் வெளியான அட்டைப்பட கார்ட்டூனை கண்டித்து, இதழாசிரியர் வி. பாலசுப்ரமணியனை சிறையில் அடைக்க அப்போதைய சபாநாயகர் பி.எச். பாண்டியன் உத்தரவிட்ட சம்பவம் சபாநாயகர் அதிகார வரம்பு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
பின்னர் விடுவிக்கப்பட்ட பாலசுப்ரமணியன், சபாநாயகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
கடந்த ஆட்சியில் "எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்களுக்கு பேச அனுமதி அளிக்கமாட்டார் என்ற விமர்சனம் சபாநாயகராக இருந்த அப்பாவு மீது இருந்தது. சில தருணங்களில் எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விக்கு, அமைச்சருக்கு பதில் அவரே விளக்கம் அளித்ததும் உண்டு. சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல முறை வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்" என்கிறார் சிவப்பிரியன்

பட மூலாதாரம், Instagram
'சபாநாயகர் சமயோஜிதமாக இருக்க வேண்டும்'
முன்னாள் சபாநாயகரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், சபாநாயகரின் பணியை நிர்வாகத் திறனுடனும் அரசியல் நடுநிலையுடனும் இணைத்துப் பார்க்கிறார்.
"சபாநாயகர் சமயோஜித புத்தியுடன் செயல்பட வேண்டும். விவாதங்களை உரிய நேரத்தில் முடித்து நேரத்தை கடைபிடிக்க வேண்டும். விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்" என்கிறார்.
அவர் சபாநாயகராக இருந்தபோது ஒரு கூட்டத்தொடரில் 1,000 கேள்விகள் இடம்பெற்றதாகக் கூறும் ஜெயக்குமார், அவையை "இறுக்கமாக இல்லாமல் ஜனரஞ்சகமாக, சில நேரங்களில் கலகலப்பாக" வைத்திருக்க வேண்டும் என்றும், அதேநேரத்தில் மசோதாக்களை விரைவாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் சபாநாயகருக்கு இருப்பதாகவும் கூறுகிறார்.
அவரது பார்வையில், இந்தப் பதவியின் செயல்பாடு தனிநபருக்கு தனிநபர் மாறுபடக்கூடியது.
தற்போதைய சபாநாயகர் குறித்து ஆளும் தரப்பில் இருப்பவர்களின் மதிப்பீடு, எதிர்க்கட்சிகளுக்கு முந்தைய காலங்களை விட அதிக வாய்ப்பு வழங்கப்படுவதாக உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் சரண், "தற்போதைய சபாநாயகர் நடுநிலையோடு இருக்கிறார். முன்பு ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டது. இப்போது அனைவருக்கும் சமமாக வாய்ப்பு வழங்கப்படுகிறது" என்கிறார்.
தவெகவில் பலர் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அனுபவம் வாய்ந்த சபாநாயகர் அவர்களை வழிநடத்துவதாகவும் அவர் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































