You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரு 'சீரியல் குற்றவாளியை' மணம் முடிக்க இருந்த பெண் தனது அன்புக்குரியவர்களால் தப்பிய கதை
- எழுதியவர், மேரி மெக்கேல்
- பதவி, பிபிசி ஸ்காட்லாந்து
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
(இந்தக் கட்டுரையில் வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட சில விவரங்கள் இடம்பெற்றுள்ளன; இது சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)
தனது குடும்பத்தினரும் நண்பர்களும் தலையிட்டு உதவாமல் இருந்திருந்தால், தன் வாழ்நாள் முழுவதுமே தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்த அந்த மனிதனையே தான் திருமணம் செய்திருப்பேன் என்று ஏமி கூறுகிறார்.
ஒருவேளை அந்தத் திருமணம் நடந்திருந்தால், அவர் தன்னை கொலை செய்திருப்பார் என்று அந்தப் பெண் அஞ்சுகிறார்.
சமீபத்தில் தனது குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட தொடர் வல்லுறவு குற்றவாளியான கிறிஸ்டோபர் மால்கம், அவருக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் அளித்த தகவலின்படி, தீவிரமாக நோய்வாய்ப்பட்டிருந்த தனது தந்தையை தந்தையர் தினத்தன்று பார்ப்பதற்குச் செல்வதற்குச் சற்று முன்பு, மால்கம் அவரது முகத்தில் "காயங்கள் ஏற்படும் வகையில்" அடித்துள்ளார்.
ஏமி என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பெண் பிபிசியிடம் பேசுகையில், அந்த உறவிலேயே தொடர்வது சில சமயங்களில் வன்முறையைக் கட்டுப்படுத்தவும், உயிர் வாழவும் ஒரு வழியாக இருந்தது என்று தெரிவித்தார்.
மால்கம் சுதந்திரமாக இருக்கும் வரை, காவல்துறையிடம் புகார் அளிக்கும் அளவுக்குப் பாதுகாப்பு உணர்வு தனக்கு இருக்கவில்லை என்று கூறினார்.
இதற்கிடையில், அவர்களது உறவினர்கள் நாளுக்கு நாள் அதிக கவலை அடைந்தனர்.
பல சந்தர்ப்பங்களில் அவர்கள் ஸ்காட்லாந்து காவல்துறையின் குடும்ப வன்முறைப் புகாரளிப்புத் திட்டத்திடம் தங்கள் நல்வாழ்வுக்கான கவலைகளைத் தெரிவித்தனர். குறுஞ்செய்திகள் மற்றும் காயங்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அதிகாரிகளிடம் வழங்கினர்.
இது இறுதியில் காவல்துறை அதிகாரிகள் மால்கமைக் கைது செய்வதற்குத் தேவையான போதுமான ஆதாரங்களைத் திரட்ட உதவியது. அதைத் தொடர்ந்து, அவர் செப்டம்பர் 2024இல் தடுத்து வைக்கப்பட்டார்.
சிறிது காலத்திற்குப் பிறகு, தான் எதிர்கொண்ட வல்லுறவுகள், தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஏமி முழுமையான புகார் அளித்தார்.
சரியாக அடுத்த நான்கு வாரங்களில் மால்கமை அவர் திருமணம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
டிண்டர் செயலி மூலம்
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் 'டிண்டர்' (Tinder) டேட்டிங் செயலி மூலம் ஏமி, மால்கமைச் சந்தித்தார்.
அவர்கள் காபி அருந்திக்கொண்டே உலா சென்றனர்; அந்தச் சந்திப்பு "மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும்" இருந்தது என்று அவர் நினைவு கூர்ந்தார். ஆனால், அவர்களின் உறவு அவர் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக வளர்ந்தது.
முதல் வாரத்திலேயே அவர் மால்கமின் பெற்றோரைச் சந்தித்தார். சில மாதங்களுக்குள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கினர், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் நிச்சயதார்த்தமும் முடிந்தது.
"நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தபோது, அவர் எனது சிறந்த நண்பரைப் போல நடந்துகொண்டார்" என்று அவர் விவரித்தார்.
"முடிவை நெருங்கிய போது, என்னால் என் வாக்கியங்களை முழுமையாக முடிக்க முடிந்தது. என் மனதில் என்ன ஓடுகிறது என்பது எனக்குத் புரிந்தது; அது நன்றாகத்தான் இருந்தது, ஆனால் அதே நேரத்தில் பயமாகவும் இருந்தது" என்று அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
மால்கம் மிக விரைவில் ஏமியின் வாழ்க்கையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கினார். அவர்களது உறவு "நமக்குள் மட்டுமே இருக்க வேண்டும்" என்பதற்காக தனது சமூக வலைதளப்பக்க கணக்குகளை நீக்க வேண்டும் என்று அவர் எவ்வாறு வற்புறுத்தினார் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
ஏமியின் "பேச்சு வழக்கு அவருக்குப் பிடிக்கவில்லை" என்பதால், வீட்டில் உள்ள குடும்பத்தினரிடமிருந்து வரும் அழைப்புகளுக்குப் பதிலளிக்க அவர் அனுமதிக்கவில்லை. அத்துடன் அவரிடமிருந்து தொலைபேசியை மறைத்து வைப்பார் அல்லது பிடுங்கிக் கொள்வார்.
பல சந்தர்ப்பங்களில், அவர் ஏமி பணிபுரியும் இடத்திற்கு திடீரென சென்று, அங்கே அமளியில் ஈடுபடுவேன் என்று அச்சுறுத்தி, அவளை சீக்கிரம் வேலை விட்டு வெளியே வருமாறு வற்புறுத்தினார்.
தான் அதற்கு உடன்படாவிட்டால், வீடு திரும்பியதும் தனக்கு ஒரு "நரகமான இரவு" காத்திருக்கும் என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.
"அது என்னை மிகவும் மன வேதனைக்குள்ளாக்கியது" என்று ஏமி ஒப்புக்கொண்டார்.
"கடுமையான உழைப்பால் நான் நுழைந்த துறை அது. எனது வேலையை நான் மிகவும் நேசித்தேன். எனது பணியின் அந்த அம்சத்தை நான் இழந்தபோது, என் சுயத்தின் ஒரு பகுதியை இழந்துவிட்டதாக உணர்ந்தேன்" என்று அவர் மேலும் கூறினார்.
"வேலையை விட்டு எப்போது வெளியேற வேண்டும் என்பதை மற்றொருவர் எனக்குச் சொல்ல அனுமதித்ததால், எனது ஊழியர்கள் என்னை இனி மதிக்க மாட்டார்கள் என்று நான் உணரத் தொடங்கினேன். என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும் என்பது எனக்கு அப்போது தெரியாது" என்று அவர் முடித்தார்.
'தாக்குதல் நிலையில் கழிந்த மூன்று நாட்கள்'
இந்த உறவிலும் வன்முறை தலைதூக்கியது; ஆரம்பத்தில் இது எதேச்சையாகத்தான் நடந்தது, ஆனால் போகப் போக அது வாரம் விட்டு வாரம் தொடர் கதையானதாக ஏமி கூறினார்.
மால்கம் மூன்று நாட்களாக "தாக்குதல் நிலையில்" இருந்ததாகவும், கத்தியால் சோபாவைக் கீறிச் சேதப்படுத்தியதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியதாகவும் அவர் ஒரு சம்பவத்தை விவரித்தார்.
மால்கம் தனது மார்பின் மீது ஏறி உட்கார்ந்து கழுத்தை நெரித்த சந்தர்ப்பங்களையும் ஏமி நினைவு கூர்ந்தார். இந்தத் தாக்குதல்களின் போது மால்கம் தன்னை கேலி செய்ததாகவும், மேலும் கடுமையான வன்முறைகளைச் செய்வதாக மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
இத்தகைய தாக்குதல்களில் ஒன்றில், அவர் ஏமிக்கு வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய காயங்களையும் உருக்குலைவையும் ஏற்படுத்தினார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், மால்கம் ஏமியின் மணிக்கட்டை உடைத்துவிட்டார். அவரை மருத்துவமனைக்கும் செல்ல அனுமதிக்கவில்லை; இதனால் இப்போது அவரால் ஒரு கையால் புத்தகத்தை கூட பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
"பெண்கள் எப்பொழுதும் என் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள்" என்று கத்திக்கொண்டே அவர் தன்னைத் தாக்கியபோது இது நிகழ்ந்ததாக ஏமி விவரித்தார்.
வீட்டில் ஒரு குழந்தை இருக்கும் போது கூட, அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஏமி மீது வல்லுறவு நிகழ்த்தியுள்ளார்.
குழந்தையின் முன்னால் தரையில் அமர்ந்து, தான் அவனுக்கு ஏற்படுத்திய பயத்திற்கு மன்னிப்புக் கேட்குமாறு ஏமியை அவர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
சில சமயங்களில் அவரது ஆளுமையில் ஒரு சுவிட்ச் மாற்றப்பட்டது போல சட்டென்று மாற்றம் ஏற்படும் என்று அவர் விவரித்தார். வேறு சில சமயங்களில், என்ன நடக்கப் போகிறது என்பதை அவளுக்கு முன்னரே புரிய வைப்பார்.
"அவர் ஒழுங்காக நடந்து கொள்ளாத நாட்களில், நான் காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை காலை 6 மணிக்கு ஹெவி மெட்டல் இசையை ஒலிக்கச் செய்வதுதான்" என்று அவர் நினைவு கூர்ந்தார்.
"இது என்னை எந்த அளவுக்குப் பாதிக்கச் செய்கிறது என்று நான் அவரிடம் கூறினேன், ஆனால் இது ஒரு சித்திரவதை முறை என்பது அவருக்குத் தெரியும்: 'இன்று நடக்கப் போவதற்கெல்லாம் உன்னைத் தயார்படுத்திக் கொள்' என்று அவர் என்னிடம் தெரிவித்தார்."
தாக்குதல்களுக்குப் பிறகு, மால்கமிடம் ஏமி சமாதானமாகப் பேச முயன்றார், தன்னை இப்படி நடத்துவதற்குத் தான் தகுதியானவள் அல்ல என்று அவரிடம் எடுத்துரைத்தார்.
இருப்பினும், அவர் தனது சொந்தப் பிரச்னைகள் மீது கவனத்தைத் திசைதிருப்பினார், இதனால் தன்னால் "எந்தச் செயலையும் சரியாகச் செய்ய முடியவில்லை" என்ற எண்ணம் ஏமிக்கு ஏற்பட்டது.
"எந்தவொரு உதவியும் செய்ய முடியாது என்பதை நீங்கள் உணரும்போது, அந்தச் சூழலுக்கு உங்களை நீங்களே பழக்கப்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறீர்கள்" என்று ஏமி கூறினார்.
"நீங்கள் யாரிடமாவது கூறினால், அவர்கள் உங்களை அந்த உறவிலிருந்து வெளியேறிவிடுமாறு கூறுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால் உங்களால் வெளியேற முடியாது என்ற நிலையில் சிக்கித் தவிப்பதைப் போல உணர்வீர்கள்" என்று அவர் விளக்கினார்.
அன்புக்குரியவர்கள் உதவி
ஏமி தன்னைத் தானே முற்றிலுமாகத் தனிமைப்படுத்திக் கொள்வதைத் தடுத்தவற்றுள் ஒன்று, அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் தங்கள் கவலைகளை அவரிடம் வெளிப்படுத்திய விதமாகும்: "நேரடியாக, ஆனால் வற்புறுத்தாமல்."
அவர்கள் ஏமியை நேசிப்பதாகவும், அவர் பாதுகாப்பாக இருக்க விரும்புவதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மால்கம் ஒரு நல்ல மனிதர் என்று தாங்கள் கருதவில்லை என்றும், அவர் எடுக்கும் எந்தவொரு முடிவும் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
ஏமியின் திருமணத்தில் ஏன் கலந்துகொள்ள முடியாது என்பதை விளக்கி ஏமியின் சகோதரி அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், தனக்கு "பயங்கரமான கனவுகள்" வருவதாகவும், ஏமியை இனி எப்போதுமே பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
"கடைசி நிமிடத்தில் இந்தத் திருமணத்தைத் தொடர வேண்டாம் என்று நீங்கள் முடிவு செய்தால், தயவுசெய்து உங்கள் காரில் ஏறி வாருங்கள், தேவைப்பட்டால் நான் இருக்கும் இடத்திற்கே நேராக ஓட்டி வாருங்கள்" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
"எனது கதவுகள் உங்களுக்காக எப்போதுமே திறந்திருக்கும்" என்று கூறி அவரது சகோதரி அந்தக் கடிதத்தை முடித்திருந்தார்.
ஏமிக்குத் தெரியாமல், நான்கு பேர் தனித்தனியாகக் காவல்துறையிடம் தங்களது கவலைகளைப் புகாராகத் தெரிவித்தனர்.
முதல் புகாரைத் தொடர்ந்து மால்கம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார், ஆனால் தொடர்ந்து சான்றுகள் குவிந்த வண்ணம் இருந்தன. அதனால் ஏமி தனது சொந்த வாக்குமூலத்தை அளிக்குமாறு காவல்துறை அதிகாரிகள் அவரிடம் வலியுறுத்தினர்.
"அவர்கள் என்னிடம் மிகவும் தெளிவாகப் பேசினார்கள்" என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
"நீங்கள் சாட்சியம் அளிக்கவில்லை என்றால், சாலையோரத்தில் ஏதேனும் ஒரு சாக்கடையில் அல்லது பள்ளத்தில்தான் உங்களைக் கண்டுபிடிக்க நேரிடும் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்" என்று அவர் கூறினார்.
"அது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஏனெனில் இதற்கு முன்பு யாரும் என்னிடம் இவ்வளவு வெளிப்படையாகப் பேசியது இல்லை. நிலைமை இப்படியே தொடர்ந்தால், அது எப்போது வேண்டுமானாலும் நடக்கக்கூடிய சாத்தியம் என்பதை நான் நன்கு உணர்ந்திருந்தேன்" என்று அவர் கூறினார்.
தற்போது 30 வயதாகும் ஏமி, தனது குடும்பத்தினரும், நண்பர்களும், தன் வழக்கைக் கையாண்ட காவல்துறை அதிகாரிகளும்தான் தனது உயிரைக் காப்பாற்றினார்கள் என்று நம்புவதால், தனது கதையைப் பகிர்ந்து கொள்ள பிபிசியைத் தொடர்புகொண்டார்.
இந்த விவகாரத்தில் முறையான கட்டமைப்பு சரியாக வேலை செய்தது என்று அவர் கூறினார்.
துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கத் தயங்கும் சந்தர்ப்பங்களில், அவர்களைச் சார்ந்திராத அனைத்து வகையான ஆதாரங்களையும் காவல்துறையினர் தேடுவார்கள் என்று ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
உடல் கேமரா பதிவுகள், செல்பேசிப் பகுப்பாய்வு, காயங்களின் புகைப்படங்கள், மருத்துவ அறிக்கைகள், முந்தைய சம்பவங்களின் வரலாறுகள் அல்லது முன்னாள் கூட்டாளிகளின் சாட்சியங்கள் என அனைத்தும் இதில் அடங்கும்.
குற்றம் நிரூபிக்கப்படுவதற்கான உண்மையான சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில், இத்தகைய ஆதாரங்கள் வழக்குகளை முன்னோக்கி நகர்த்த அனுமதிக்கலாம்.
மால்கம் இழைத்த குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில் ஏமியின் குடும்பத்தினரும் நண்பர்களும் வழங்கிய தகவல்கள் "மிக முக்கியமானவை" என்று காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
56 சாட்சிகள் சம்பந்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, ஸ்காட்லாந்தின் லோதியன் மற்றும் மோரே ஆகிய நகரங்களில் ஏமி உட்பட நான்கு பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் இழைத்ததற்காக, 37 வயதான மால்கம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது; இந்தக் குற்றங்கள் அவர் பதின்ம வயதினராக இருந்த 2008-ஆம் ஆண்டிலிருந்தே நிகழ்ந்தவை ஆகும்.
அவர் தமக்கு விதிக்கப்பட்ட 16 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு எதிராக அண்மையில் மேல்முறையீடு செய்துள்ளார்.
பெண்ணிய வெறுப்பு
மால்கமிடம் ஆழமாக வேரூன்றியுள்ள பெண்ணிய வெறுப்பு அவரால் எக்காலத்திலும் திருந்த முடியாது என்பதையே நிரூபிக்கிறது என்று நம்பும் ஏமி, அதனால் அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறார்.
ஸ்டேசி ஹண்டர் மற்றும் விக்கி சாலமன் போன்ற பெண்கள் தங்கள் இணையர்களால் சமீபத்தில் கொல்லப்பட்டது குறித்த செய்திகளை வாசிக்கும்போது, ஏமி தனது எதிர்காலப் பாதுகாப்பு குறித்துக் கவலை கொள்கிறார்; குறிப்பாக, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சமீபத்திய முன்மொழிவுகளின்படி மால்கம் தானாகவே முன்கூட்டியே விடுவிக்கப்படக்கூடும் என்ற சூழலில் இந்தக் கவலை அவருக்கு எழுகிறது.
வன்முறைக் குற்றவாளிகளையும் வல்லுறவு குற்றவாளிகளையும் விடுதலை செய்வது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என்று எச்சரித்த ஸ்காட்லாந்தின் உயர்மட்ட நீதிபதிகள், சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெரிசலைக் குறைக்கும் ஐக்கிய ராஜ்யத்தின் திட்டத்தை இந்த வாரம் விமர்சித்துள்ளனர்.
வன்முறைக் குற்றவாளிகளையும் பாலியல் வன்கொடுமையாளர்களையும் விடுவிப்பது பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று இந்த வாரம் எச்சரித்த ஸ்காட்லாந்து நீதிபதிகள், சிறைகளில் நெரிசலைக் குறைப்பதற்கான பிரிட்டனின் திட்டத்தை விமர்சித்தனர்.
பெண்களை வன்முறையிலிருந்து பாதுகாப்பது ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் ஜான் ஸ்வின்னிக்கு ஒரு முன்னுரிமையாகத் தெரிகிறது. அவர் தனது பதவிக்காலத்தில் பெண் வெறுப்பைக் குற்றமாக்குவதாகவும், இலக்கு வைக்கப்பட்ட ஆதரவு சேவைகளுக்கு நிதியளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
பெண்களை வன்முறையிலிருந்து பாதுகாப்பது ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சர்(Scottish First Minister) ஜான் ஸ்வினியின் முன்னுரிமையாகத் தெரிகிறது; அவர் தனது பதவிக் காலத்தில் பெண்ணிய வெறுப்பைக் குற்றமாக்குவதாக உறுதியளித்துள்ளார்.
இருப்பினும், "தெளிவான உறுதிமொழிகளும் காலக்கெடுவும்" தேவை என்று 'ரேப் கிரைசிஸ் ஸ்காட்லாந்து' போன்ற சில வாதிடுகின்றன.
தற்போது, ஏமி தனது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் தீர்மானித்துள்ளார். அவர் பல்வேறு அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுள்ளார், சிகிச்சை பெற்றுள்ளார், ஒரு புதிய காரும் வீடும் வாங்கியுள்ளார். குடும்பத்தைத் தொடங்கத் தயாராக உள்ளார்.
தான் நடத்தப்பட்ட விதம் குறித்து கொண்டிருந்த மனக்கசப்பைத் தனது பணியின் மூலம் கடந்து வந்துவிட்டதாகவும், தனக்கு ஆதரவளித்தவர்களிடம் மிகுந்த நன்றியுணர்வுடன் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
"குடும்பத்தினரும் நண்பர்களும் உங்கள் பாதுகாப்பிற்காக முன்வரும்போது நீங்கள் பலமாக உணர்வீர்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
"நான் அவர்களை வெறுத்துவிடுவேன், அதன் பிறகு அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டேன் என்று எனது நண்பர்களும் குடும்பத்தினரும் கடுமையாக அஞ்சினர். ஆனால், அவர்கள் காட்டிய தைரியத்திற்காக நான் உணர்ந்ததெல்லாம் நிம்மதியும் நன்றியுணர்வும் மட்டுமே" என்று அவர் சேர்த்துக் கூறினார்.
"இவ்வளவு பேர் என் மீது அக்கறை கொண்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியாது; நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்" என்று கூறி அவர் தனது பேச்சை முடித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு