You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பெற்றோருடன் சேர்ந்து பீடி சுற்றிய சிறுமிகள்' கபடியில் சாதனைகளை குவிக்க தொடங்கியது எப்படி?
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
காளத்தி மடம் என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் அடங்கிய அணி, கடந்த ஐந்து ஆண்டுகளாக மூத்த வீராங்கனைகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்து இருக்கிறது காளத்தி மடம் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் ஆண்கள் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வரும் நிலையில், பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
காளத்தி மடம் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் அந்த கிராமத்து சிறுமிகளை கபடியில் சாதிக்க வைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இலவசமாக தினமும் காலை, மாலை இரு வேளையும் அவர்களுக்கு கபடி பயிற்சி அளித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த சௌந்தர பாண்டி பயிற்சிக்கான மைதானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
தினமும் அதிகாலையில் ஆர்வத்துடன் வரும் சிறுமிகளுக்கு முதல் கட்டமாக உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து கபடியில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து போட்டியில் சாதிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
பயிற்சியின் அடிப்படையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் 'இளம் புயல்' என்ற பெயரில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பல்வேறு வெளி மாவட்டங்களில் விளையாடி நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளனர். அத்துடன், மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு கோப்பைகளை வென்றுள்ளனர்.
பீடி சுற்றும் தொழிலாளர்களின் மகள்கள்
காளத்தி மடம் கிராமத்தில் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் கபடிப் போட்டியில் அசத்தி வருவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஸ்வர்ணா தேவி, "கொரோனா பேரிடர் காரணமாக வீட்டில் இருந்த தன்னைப் போன்ற சிறுமிகளை அழைத்து சௌந்தர் பாண்டி கபடி பயிற்சி அளித்ததாக" கூறினார்.
முதலில் தனது பெற்றோர் சம்மதிக்க மறுத்ததாகக் கூறிய அவர், பின்னர் "நாங்கள் போட்டிகளில் வெல்லத் தொடங்கியதும், பெற்றோர்களும் கபடி போட்டி மீது ஆர்வம் காட்டத் தொடங்கினர். இன்று, எங்கள் அணியில் 25 சிறுமிகள் உள்ளனர்" என்றார்.
அதோடு, "மாநில அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பை, குடியரசு தின விளையாட்டுகள், சப்-ஜூனியர், ஜூனியர் போட்டிகள் ஆகியவற்றில் எங்கள் 'இளம் புயல்' அணி கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளோம். ஓபன் போட்டிகளில், 100க்கும் மேற்பட்ட கோப்பைகளையும் பல லட்சம் ரூபாய் பரிசுகளையும் வென்றுள்ளோம்" என்று அவர் பெருமிதம் ததும்பத் தெரிவித்தார்.
இளம்புயல் அணி வீராங்கனைகளில் ஒருவரான பிருந்தா, இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பால் இரண்டு முறை தமிழ்நாட்டை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிகாரில் நடந்த 34வது சப்-ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஹரியாணாவில் நடந்த 35வது போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
"சமீபத்தில் இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த 14 வயதுக்கு உட்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடியதாகவும்" பிருந்தா குறிப்பிட்டார்.
'பெற்றோருடன் பீடி சுற்றும் தொழில் செய்த சிறுமிகள்'
இளம்புயல் கபடி அணி குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் சிவா பிபிசி தமிழிடம் பேசுகையில், "கபடி ஆண்களுக்கான விளையாட்டு என்றிருந்த காலம் மாறி, பெண்களும் அதிகளவில் கபடி விளையாட்டின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்" என்றார்.
தங்கள் கிராமத்தில் முதலில் மாணவிகள் அரைக்கால் சட்டை அணிந்து கபடி விளையாடுவதை விரும்பாத மக்கள், "இந்தச் சிறுமிகள் கபடியில் பரிசுகளையும் கோப்பைகளையும் வாங்கிக் குவிப்பதைப் பார்த்து கிராமமே பெருமையடைந்து வருவதாக மகிழ்ச்சி அடைகின்றனர். இதன் விளைவாகப் பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை கபடி விளையாட அனுமதிக்கின்றனர்" எனக் கூறினார் சிவா.
மேலும், "கபடி போட்டிகளுக்காக சிறுமிகளை வெளியே அழைத்துச் செல்லும்போது மிகுந்த சிரமங்களைச் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆண் வீரர்களை போட்டிக்குச் செல்லும் மைதானத்திலேயேகூட தங்க வைக்கலாம். ஆனால், மகளிர் அணி என்பதால் பாதுகாப்பு கருதி கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறோம். இந்தச் சிரமங்களையெல்லாம் கடந்து, முன்பு வருமானத்திற்காக பெற்றோருடன் சேர்ந்து பீடி சுற்றும் தொழிலைச் செய்து வந்த குழந்தைகள் இப்போது கபடியில் சாதித்துக் காட்டி வருகின்றனர்" என்று பெருமிதத்துடன் கூறினார்.
இதிலுள்ள சவால்கள் குறித்துப் பேசியபோது, "கபடி போட்டி உடல் வலிமையைக் கொண்டு விளையாடக் கூடியது. எனவே சிறுமிகளுக்கு புரதச் சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகமாகக் கொடுக்க வேண்டும். ஆனால் இவர்களின் பெற்றோருக்குப் போதிய வருமானம் இல்லாததால், சிலர் மூலம் கிடைக்கும் நிதியுதவியை வைத்து புரதச்சத்து மிகுந்த உணவுகளை வாங்கிக் கொடுத்து, உடல் ஆரோக்கியத்தைத் தக்கவைத்து பயிற்சி அளித்து வருகிறேன்" என்று விளக்கினார் சிவா.
"வெளிமாநிலங்களுக்குச் சென்று விளையாடும்போது பிற வீராங்கனைகளுடன் விளையாடுவதில் மொழி மிகப்பெரிய பிரச்னையாக இருந்தபோதிலும், அதைக் கடந்து இவர்கள் விளையாட்டில் வெற்றி பெற்று வருகின்றனர்."
அதேநேரம், "இளம்புயல் கபடி அணி சிறுமிகளுக்கு உலகத் தரமான விளையாட்டு மைதானம் மற்றும் உயர்தர வசதிகளைச் செய்து கொடுத்தால் அவர்களால் சர்வதேச அளவிலான கபடி போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு வளர முடியும். அதற்கு உதவக்கூடிய வசதிகளை அரசு செய்து கொடுக்கவேண்டும்" என்றும் பயிற்சியாளர் சிவா தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு