இரான் அச்சுறுத்தல்: டிரம்ப் உணவு வாகனத்தில் மறைந்து ரகசியமாக விமானம் மாறினாரா?

    • எழுதியவர், ஜெசிகா ரான்ஸ்லி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் இருந்து புறப்பட்டபோது, சாத்தியமான இரான் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் நோக்கில் டொனால்ட் டிரம்ப் ரகசியமாக விமானத்தை மாற்றிப் பயணித்ததாக அமெரிக்க ஊடகமான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, அமெரிக்க அதிபரான டிரம்ப் தொலைக்காட்சி கேமராக்கள் முன்னிலையில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறினார்.

ஆனால் பின்னர், உணவு விநியோக வாகனத்தின் உதவியுடன் அவர் வேறு ஒரு ராணுவ விமானத்துக்கு மாற்றப்பட்டார். விமானத்தில் இருந்த பத்திரிகையாளர்களுக்கும், சில வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கும் கூட அவர் ரகசியமாக வெளியேற்றப்பட்டதைப் பற்றி தெரியவில்லை.

டிரம்ப் பயணம் செய்ய இருந்த விமானத்தை குறிவைத்து இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற நம்பகமான அச்சுறுத்தலை அமெரிக்கா கண்டறிந்ததாக அதிகாரிகள், பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தனர். எனினும், இந்த ரகசிய விமான மாற்றத்தை வெள்ளை மாளிகை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

முன்னதாக அங்காராவில் நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது, "இரானின் முதல் இலக்கு நான்தான்" என்று டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த ரகசிய நடவடிக்கை, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மீண்டும் இரான் மீது ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கிய மறுநாளே நடைபெற்றது.

டிரம்ப், கத்தார் வழங்கிய புதிய போயிங் 747-8 விமானத்தில் துருக்கி சென்றிருந்தார். ஆனால், "பழைய நினைவுகளுக்காக" பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே திரும்பப் போவதாக அறிவித்திருந்தார்.

ஜூலை 8 அன்று, அங்காரா விமான நிலையத்தில் டிரம்ப், அதிபரின் விமானத்தில் ஏறும் காட்சிகள் வெளியானது. ஆனால் வாஷிங்டன் போஸ்ட் தகவலின்படி, பின்னர் அவர் ரகசியமாக சி-32ஏ ராணுவ விமானத்துக்கு மாற்றப்பட்டார். இது பொதுவாக அமெரிக்க துணை அதிபர் பயன்படுத்தும், மாற்றியமைக்கப்பட்ட போயிங் 757 விமானமாகும்.

இந்த மாற்றத்திற்காக, விமானத்தின் மறுபுறத்தில் விமானத்தின் உயரத்துக்கு உயர்த்தப்பட்டிருந்த உணவு விநியோக வாகனம் பயன்படுத்தப்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது.

அந்த விமானப் பயணம் வழக்கமானதாகத் தோன்றும் வகையில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தனியாக வெளிப்புற படிக்கட்டுகள் வழியாக சி-32ஏ விமானத்தில் ஏறியதாகவும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களும் சில வெள்ளை மாளிகை அதிகாரிகளும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறிய பிறகு, ஜன்னல் திரைகளை மூடுமாறு அவர்களிடம் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது அதிபர் டிரம்ப் அந்த விமானத்தில் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

டிரம்ப் பின்னர் பிரிட்டன் வழியாக அமெரிக்கா சென்றார். பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸ் மில்டன்ஹால் தளத்தில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கியபோது டிரம்ப் அதிலிருந்து இறங்கும் காட்சிகள் பதிவாகின. சி-32ஏ விமானத்திலிருந்து பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்துக்கு அவர் எவ்வாறு மாற்றப்பட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதன்பிறகு, வாஷிங்டனுக்குத் திரும்புவதற்காக கத்தார் வழங்கிய புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்துக்கு டிரம்ப் மாற்றப்பட்டார்.

அந்தப் பயணத்தின் போது விமானத்தில் இருந்த செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசியபோது, இரான் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் குறித்து குறிப்பிட்டார். ஆனால், விமானத்தை ரகசியமாக மாற்றிய சம்பவம் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

துருக்கியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏன் ஜன்னல் திரைகளை மூடுமாறு செய்தியாளர்களிடம் கூறப்பட்டது என்று கேட்கப்பட்டபோது, "நாம் எதிர்கொள்ள வேண்டிய மோசமான நபர்களால் அது ஆபத்தான விமானப் பயணமாக இருந்திருக்கலாம்," என்று டிரம்ப் பதிலளித்தார்.

தனது உயிருக்கு எப்போதும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், இரானின் "இலக்கு பட்டியலில்" தான்தான் முதல் இடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

"நான் போனால், நீங்களும் போக வேண்டியிருக்கும் அல்லவா?" என்று செய்தியாளர்களிடம் நகைச்சுவையாகக் கேட்ட அவர், "ஒருநாள் நீங்கள் வேறு தொழிலைத் தேர்ந்தெடுக்க விரும்பலாம்," என்றும் கூறினார்.

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் சியூங், இந்த தகவல்களை நேரடியாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. ஆனால், புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் அதிபரையும் அவரது பணியாளர்களையும் பாதுகாக்கும் வகையில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய "அதிநவீன விமானம்" என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்க உளவுத்துறை, டிரம்ப் அல்லது அவர் பயணம் செய்யும் விமானத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற குறிப்பிட்ட அச்சுறுத்தல் குறித்து முன்பே எச்சரித்திருந்ததாக சிபிஎஸ் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.

கத்தார் வழங்கிய விமானம் தொடர்பான பாதுகாப்பு கவலைகள் குறித்து நியூயார்க் டைம்ஸ் முன்பே செய்தி வெளியிட்டிருந்தது. குறிப்பாக, நேட்டோ உச்சி மாநாட்டிலிருந்து திரும்பும்போது விமானத்தை மாற்றுமாறு அமெரிக்க ரகசிய சேவை டிரம்புக்கு பரிந்துரைத்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டது.

இந்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, பல செய்தியாளர்கள் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டனர். பின்னர், சட்டவிரோத தகவல் கசிவுகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க சட்ட விவகாரத் துறை பிபிசியிடம் தெரிவித்தது.

அதிபரின் பயன்பாட்டிற்காக, 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய போயிங் 747-8 விமானத்தை மேம்படுத்தும் பணிகளை அமெரிக்கா பல மாதங்களாக மேற்கொண்டு வருகிறது.

பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்களில், வரக்கூடிய ஏவுகணைகளை குழப்புவதற்காக லேசர் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதாக சிபிஎஸ் செய்திக்கு தகவல் அளித்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், கத்தார் வழங்கிய விமானத்தில் என்னென்ன பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

"புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன், அதிபரின் பயணங்களுக்கு முழுமையாக பாதுகாப்பானது. இருப்பினும், இந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் அதில் கூடுதல் மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் பொருத்தப்பட உள்ளன. அந்தப் பணிகள் சுமார் ஒரு மாத காலம் நீடிக்கும்," என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் சிபிஎஸ் செய்திக்கு தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு