'முதல்வர் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுப்பதா?' - துணைவேந்தர் நியமன சிக்கல் எப்போது தீரும்?

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டின் ஒரு முன்னணி அரசுப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஒருவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது ஆய்வு முடிந்த பிறகு வாய்மொழித் தேர்வுக்கான கோப்புகளைச் சமர்ப்பிக்கிறார்.

வழக்கமாக துணைவேந்தர் அந்தக் கோப்பில் கையெழுத்திட வேண்டும். அந்தப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் இல்லாததால் நிர்வாகம் ஒருங்கிணைப்பாளர் குழுவிடம் (Convenor committee) இருக்கிறது. அந்தக் குழுவில் மூன்று உறுப்பினர்கள் உள்ளதால் அனைவரிடமும் கையெழுத்து பெற வேண்டும்.

இருவர் கையெழுத்திட்ட நிலையில் தேர்தல் நெருங்கியதால் அந்த மாணவரின் கோப்பு தேங்கியது. கோப்பில் மூன்று உறுப்பினர்களின் பெயர்களும் அச்சிடப்பட்டிருந்தன. தேர்தலுக்குப் பிறகு உயர் கல்வித் துறை செயலாளர் மாறி புதிய செயலாளர் வந்துள்ளார். தற்போது அவரது கோப்பை மீண்டும் புதிதாக அச்சிட்டு, மீண்டும் மூன்று உறுப்பினர்களிடமும் கையெழுத்து பெற வேண்டிய சூழல் உருவானது.

முழுநேர துணைவேந்தர் இல்லாத காரணத்தால் பல்கலைக் கழக மாணவர்கள் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு இது ஓர் உதாரணம் மட்டுமே. பல்கலைக் கழகத்தின் பெயரையும் தனது பெயரையும் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் அந்த மாணவர் தான் எதிர்கொண்ட சிக்கலை பிபிசி தமிழிடம் விவரித்தார்.

பல்கலைக் கழக துணைவேந்தர் நியமன விவகாரம் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே மாநில அரசு மற்றும் ஆளுநர் இடையே சிக்கலான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் பல அரசு பல்கலைக் கழகங்கள் துணைவேந்தர் இல்லாமல் ஒருங்கிணைப்பாளர் குழுவால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், துணைவேந்தர் விவகாரத்தில் தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவின் எண்ணிக்கையை உயர்த்துவது தொடர்பாக தவெக அரசு எடுத்துள்ள புதிய முடிவு விவாதப் பொருளாகியுள்ளது.

துணைவேந்தர் நியமன விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஷ்வநாத் தெரிவித்திருந்தார். ஆனால் இது முற்றிலும் மாநில உரிமைக்கு எதிரானது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக் கழகம் உள்பட 10க்கும் மேற்பட்ட அரசு பல்கலைக் கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் இருப்பதாகவும் அதனால் பல்வேறு கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகள் தாமதமாவதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

என்ன சர்ச்சை?

தமிழ்நாடு அரசின் கீழ் பல்வேறு பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றுக்கு மாநில ஆளுநர் வேந்தராகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் இணை வேந்தராகவும் உள்ளனர். அதுபோக, ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் தனித்தனி துணைவேந்தர்கள் இருப்பார்கள்.

இவற்றில் சில பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றும் சட்டங்களை முந்தைய திமுக அரசு நிறைவேற்றியிருந்தது. ஆனால் அந்தச் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியது.

அதன் பின்னர் இந்த மசோதாக்களை நிறைவேற்ற திமுக அரசு முயன்றபோது சென்னை உயர் நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தத் தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது. ஆகையால், இந்தச் சட்டங்கள் தற்போது ஒரு சிக்கலான நிலையில் உள்ளன.

இந்த நிலையில் துணைவேந்தர் நியமனங்களுக்கான தேர்வுக் குழுவில் பல்கலைக் கழக மானியக் குழுவின் (யூஜிசி) பிரதிநிதியையும் சேர்க்க வேண்டுமென ஆளுநர் தரப்பில் கோரப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

துணைவேந்தர் நியமனம் எவ்வாறு நடைபெறும்?

ஒரு பல்கலைக் கழகத்தில் துணைவேந்தரின் பதவிக்காலம் முடிகிறதென்றால் அடுத்து ஒருங்கிணைப்பாளர் குழு ஒன்று அமைக்கப்படும். இதில் மூன்று அல்லது நான்கு உறுப்பினர்கள் இருப்பார்கள். பல்கலைக் கழக பிரதிநிதி, அரசாங்கப் பிரதிநிதிகள் அதில் இடம்பெறுவர்.

அதன் பின்னர் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும். இதில் பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர், மாநில அரசு அதிகாரி ஒருவர், ஆளுநர் முன்மொழியும் அதிகாரி ஆகியோர் இடம்பெறுவார்.

இவர்கள் துணைவேந்தர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பங்களைப் பெற்று இறுதி பட்டியலைத் தயாரித்து ஆளுநரிடம் வழங்குவார்கள். ஆளுநர் அந்தப் பட்டியலில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்து துணைவேந்தராக நியமிப்பார்.

இந்த நியமன அதிகாரத்தைத்தான் மாநில அரசுக்கு மாற்ற முந்தைய திமுக அரசு சட்டங்களை நிறைவேற்றியிருந்தது. இந்த நிலையில் மூன்று பேர் கொண்ட தேர்வுக் குழுவில் கூடுதலாக யூஜிசி பிரதிநிதியையும் சேர்க்க வேண்டுமென ஆளுநர் தரப்பில் கோரப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு எட்டப்படாததால் துணைவேந்தர்கள் நியமனம் முடங்கிப் போனது.

தவெக அமைச்சர்கள் கூறியது என்ன?

இந்தச் சூழலில் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அமைச்சர் விஷ்வநாதன் துணை வேந்தர் நியமனம் தொடர்பான பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "முதலமைச்சர் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார், அதில் நானும் கலந்து கொண்டேன். முதலமைச்சரிடம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. விரைவில் துணை வேந்தர் அறிவிக்கப்படுகிற நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. துணை வேந்தர் தேர்வுக் குழு விவகாரம் என்பது விரைவில் ஒரு முடிவுக்கு வரும். இதற்கு முன்னர் மூன்று பேர் நியமிக்கப்பட்டு இருந்தார்கள்" எனக் குறிப்பிட்டார்.

அவர் கூறியதன்படி, "ஒரு ஆளுநர் பிரதிநிதி, ஒரு பல்கலைக்கழக சிண்டிகேட் பிரதிநிதி மற்றும் ஒரு மாநில அரசு பிரதிநிதி இருப்பார்கள். ஆர்.என்.ரவி ஆளுநராக இருந்தபோது பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி ஒருவர் இருக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். அது நிலுவையில் இருந்தது. ஆனால் இன்னொரு சிண்டிகேட் பிரதிநிதியும் அந்தக் குழுவில் வேண்டுமென தமிழ்நாடு அரசு சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது."

அத்துடன், "ஆளுநர் அதற்கு இசைவு கொடுத்ததாகவே நான் கருதுகிறேன். மூன்று நபர்கள் இருந்த தேடுதல் குழு ஐந்து நபர்கள் கொண்ட குழுவாக மாற்றியமைக்கப்படலாம் என்கிற செய்தி எங்களுக்கு வந்தவண்ணமாக இருக்கிறது. ஐந்து நபர் குழுவாக அமைக்கப்பட்டவுடன் துணை வேந்தர் நியமனம் மேற்கொள்ளப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

துணை வேந்தர் நியமனத்தை ஆளுநர் மேற்கொள்வாரா அல்லது அரசு மேற்கொள்ளுமா என்ற கேள்விக்குப் பதிலளித்தபோது, "காலம் காலமாக ஆளுநர்தான் வேந்தராக இருந்துள்ளார்கள். ஆனால் கடந்த முறை, முதல்வர் வேந்தராக இருப்பதா அல்லது ஆளுநர் வேந்தராகத் தொடர்வதா என்ற சவால் இருந்தது. இப்போதும்கூட தமிழ்நாடு முதலமைச்சரே வேந்தராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் எழுப்பப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து ஜூலை 8ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் துணைவேந்தர் தேர்வுக் குழுவில் யூஜிசி பிரதிநிதி இருந்தால் மாநில அரசின் பங்கு குறைந்துவிடும் என்றார்.

"யூஜிசி, அவர்களின் பிரதிநிதி வேண்டுமெனக் கோருகிறார்கள். நாங்கள் வேண்டாம் என்கிறோம். அதனால்தான் தாமதமாகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமைச்சர் விஷ்வநாத் தெரிவித்த கருத்து பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் வேந்தராக இருக்க வேண்டுமா, ஆளுநர் வேந்தராக இருக்க வேண்டுமா, தேர்வுக் குழுவில் யூஜிசி பிரதிநிதி இருக்க வேண்டுமா என்ற கேள்விகள் உள்ளன. பல துறைகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. முதலமைச்சரிடம் இதுதொடர்பாகப் பேசி ஒரு முடிவெடுப்போம்" என்று கூறினார்.

இந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், "துணைவேந்தர் நியமனம் நீதிமன்றத்திலும் ஆளுநரிடமும் நிலுவையில் உள்ளது. சட்டபூர்வமாக அதை நீதிமன்றத்தில் கையாண்டுள்ளோம். தற்போது ஐந்து பேர் கொண்ட குழுவை முன்மொழிந்துள்ளோம். இதில் ஏதாவது முடிவுகள் வந்தால் உடனடியாக நியமனம் மேற்கொள்ளப்படும். இதற்கு ஓர் அமைதியான தீர்வைப் பெறவே முயன்று வருகிறோம்" என்றார்.

திமுகவின் எதிர்வினை

இதற்கு திமுக எதிர்வினையாற்றியுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் வெளியிட்ட அறிக்கையில், "பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள், பேராசிரியர்கள், துணை வேந்தர்கள் என அனைவரையும் நியமிக்க அரசியலமைப்பு சட்டத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2018இல் கொண்டு வரப்பட்ட யூஜிசி விதிமுறை 7.3இன் மூலம் துணைவேந்தர் தேடல் குழுவில் யு.ஜி.சி பிரதிநிதி இடம்பெற வேண்டுமெனக் கூறப்பட்டது. ஆனால், அப்போதைய அரசு அதை ஏற்க மறுத்து, அதற்கு எதிராக அரசாணை ஒன்றை வெளியிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இருந்த நடைமுறையைக் கடந்த ஆட்சியின்போது ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுத்த மறுத்து துணை வேந்தர்கள் நியமனத்திற்குத் தடையாக இருந்ததாகக் குறிப்பிட்ட வில்சன், "ஆளுநருக்கு எதிராகவும், விதி 7.3க்கு எதிராகவும் முந்தைய திமுக அரசு சார்பில் போடப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதாகவும்" தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், "உயர்கல்வித் துறை அமைச்சர் ஐந்து உறுப்பினர்களில் ஆளுநர் பரிந்துரைக்கும் இரண்டு உறுப்பினர்கள் எனக் கூறுகிறார். இன்னொரு உறுப்பினர் யார் என்பதற்கு அவர் மறைமுகமாக யூஜிசி பிரதிநிதியைக் கூறுகிறார். இந்த அரசு ஒன்றிய அரசுக்கு மண்டியிடப் பார்க்கிறதா? இல்லை, ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்படக் கூடாது என்று நினைக்கிறார்களா? எதற்காக முதலமைச்சருக்கு இருக்க வேண்டிய அதிகாரத்தை எடுத்து ஆளுநரிடம் கொடுக்க வேண்டும்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், "யூஜிசி உறுப்பினர்களை குழுவில் சேர்ப்பதன் மூலம் நமது பல்கலைக் கழகங்களின் அதிகாரம் ஒன்றிய அரசின் வசம் போய்விடும். எனவே எக்காலத்திலும் இந்த யூஜிசி-யின் பிரதிநிதியை தேர்வுக் குழுவில் சேர்க்கவே கூடாது" என்று குறிப்பிட்டார்.

'தெளிவில்லாத நிலை'

இந்த விவகாரத்தில் "அரசுதான் இறுதி முடிவை எடுக்க வேண்டும்" என்கிறார் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை தலைவரும் பேராசிரியருமான எஸ்.ஆர்ம்ஸ்ட்ராங்.

"துணைவேந்தர் நியமனம் மிகவும் அவசியமாகிறது. தற்போது கூட்டு முடிவுகள் எடுக்கப்படுவதால் முக்கியமான முடிவுகள் தள்ளிப் போகின்றன. இதில் சட்டபூர்வ சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும்," என்றார்.

இதில் ஒரு தெளிவில்லாத நிலை நிலவுவதாகக் கூறும் அவர் "இந்தக் கால தாமதத்தால் மாணவர்களும் பேராசிரியர்களும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுவதாகவும்" தெரிவித்தார்.

"ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் எனத் தனிச் சட்டங்கள் இருக்கின்றன. தேர்வுக் குழுவை மாற்றியமைக்க வேண்டுமெனில் அந்தச் சட்டங்களைத் திருத்த வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

ஆனால் "தேர்வுக் குழு உறுப்பினர் எண்ணிக்கை ஐந்தாக உயர்த்துவது மேலும் குழப்பங்களையே அதிகரிக்கும்" எனக் கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மூன்று உறுப்பினர்கள் என்கிறபோதே ஒருமித்த கருத்தை எட்டுவது கடினமாகிறது. ஐந்து உறுப்பினர்கள் என்பது இன்னும் அதிக சிக்கல்களையே உருவாக்கும். துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் தவிர்க்கப்பட்டு, காலம் தாழ்த்தும் உத்தியைக் கடைபிடித்து நேரத்தை வீணடிக்காமல் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

கடந்த காலங்களில் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இணக்கமான சூழல் நிலவியதாகக் கூறுகிறார் அரசியல் விமர்சகரும் பேராசிரியருமான ராமு மணிவண்ணன்.

"யூஜிசி பிரதிநிதி வந்தால் தேர்வுக் குழுவில் ஆளுநர் தரப்பின் கை ஓங்கலாம். திராவிடக் கட்சிகளும் மாநில சுயாட்சி என்ற பெயரில் பல்கலைக் கழகங்களுக்கு எனப் பெரிதாக எதுவும் செய்யவில்லை. மாநில அரசுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருக்க வேண்டும், இல்லையெனில் அதிகாரிகள் வர்க்கத்தின் நிர்வாகமாக (Bureaucratic administration) மட்டுமே இருக்கும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு