தங்கம், வெள்ளி விலை 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைய என்ன காரணம்?

    • எழுதியவர், அஜித் காட்வி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவடைந்துள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை முடக்கத்தின்போது உச்சத்தை தொட்ட கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் தற்போது கணிசமாக சரிந்துள்ளன. புதன்கிழமை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த 7 மாதங்களில் இல்லாத சரிவைச் சந்தித்தது. அதேபோல வெள்ளியின் விலையும் கடந்த ஜனவரி மாதம் இருந்த நிலையில் இருந்து பாதியாகச் சரிந்துள்ளது. தற்போது இந்த இரண்டு உலோகங்களின் விலைகளும் கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு குறைவான நிலையை எட்டியுள்ளன.

இந்திய புல்லியன் மற்றும் நகை வணிகர்கள் சங்க இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, வியாழக்கிழமை 99.9% தூய்மை உள்ள 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.40 லட்சமாகவும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2.15 லட்சமாக இருந்தது.

ஜனவரி மாதத்தின் இறுதியில், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.2 லட்சத்தை எட்டியது. அதே போல வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.4.04 லட்சத்தை எட்டியது. அதன்பிறகு இவற்றின் விலை சீராக சரிந்தது.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, கடந்த புதன்கிழமை சர்வதேச சந்தையில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) 4,000 டாலருக்கும் கீழே சரிந்தது. புதன்கிழமை மட்டும் தங்கம் 3.3 சதவிகிதம் அதன் விலை குறைந்தது.

அதேநேரத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பும் வலுவடைந்துள்ளது. இதனால் டாலர் தவிர வேறு எந்த நாணயத்திலும் தங்கம் வாங்குவது விலை உயர்ந்த ஒன்றாக உள்ளது.

தங்கத்தை மட்டும் சேமித்து வைப்பது எந்த விதமான வருமானத்தையும் வட்டியையும் கொடுக்காது. எனவே வட்டி விகிதம் உயரும்போது தங்கம் மீதான முக்கியத்துவம் குறைகிறது.

கடந்த ஜனவரி மாதம் தங்கத்தின் விலை ஒரு அவுன்சிற்கு 5,594 டாலர் என்கிற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது. அப்போதைய நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போது அவுன்ஸ் ஒன்றுக்கு 1,600 டாலர் வரை தங்கம் விலை சரிந்துள்ளது.

இந்தச் சூழலைப் புரிந்துகொள்ள பிபிசி நகை வணிகத் துறை நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்களிடம் பேசியது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை எது பாதிக்கிறது?

அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இந்த அரிய உலோகங்கள் மீது பெரிய தாக்கம் செலுத்துகிறது.

கடந்த இரண்டு நாட்களில் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 6,000 ரூபாய் சரிந்தது. வெள்ளியின் விலையும் ரூ.15,500 வரை சரிந்தது.

இது தொடர்பாக ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டிஸில் பணிபுரியும் சரக்கு சந்தை ஆய்வாளரான சௌமில் காந்தி பிபிசியிடம் பேசுகையில், "அமெரிக்க மத்திய வங்கியில் கடந்த வாரம் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் புதிய தலைவர் கெவின் வார்ஷ், வட்டி விகிதம் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்தார்." என்றார்.

"அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளாக பணவீக்கம் அதிகமாக இருந்து வருகிறது. எனவே பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதே அமெரிக்க மத்திய வங்கியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இதனால் இந்த ஆண்டில் ஒன்று அல்லது இரண்டு முறை வட்டி விகிதங்களை அமெரிக்க மத்திய வங்கி உயர்த்தக் கூடும். வட்டி விகிதங்கள் உயர்வதற்கான அறிகுறிகள் தெரிவதால் தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் வெளியே எடுக்கப்பட்டு டாலரில் முதலீடு செய்யப்படுகிறது." என்று அவர் தெரிவித்தார்.

தற்போது டாலர் இன்டெக்ஸ் 13 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாகக் கூறும் அவர், இதனால் தங்கம், வெள்ளி மற்றும் அனைத்து அடிப்படை உலோகங்களும் விற்கப்படுவதாக தெரிவித்தார்.

சந்தை நிலவரத்தின்படி அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் மற்றும் டிசம்பரில் வட்டி விகிதங்களை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி மாதம் அடைந்த உச்சத்தில் இருந்து தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளதாக சௌமில் காந்தி குறிப்பிடுகிறார்.

"அமெரிக்கா மற்றும் இரான் இடையே 60 நாள் போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இது எவ்வளவு காலத்திற்கு தாக்குப் பிடிக்கும் எனச் சொல்வது கடினம். எனவே தலைப்புச் செய்திகளைப் பொருத்து தங்கம் மற்றும் கச்சா எண்ணையின் விலைகள் கூடலாம் அல்லது குறையவும் செய்யலாம்." என்றார் அவர்.

நகை வியாபாரிகளின் நிலை என்ன?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிவதால் இந்தியாவில் தங்கம் விற்பனை அதிகரிக்குமா என்பது தொடர்பாக ஆமதாபாத் சோக்சி மகாஜனைச் (நகை வியாபாரிகள் அமைப்பு) சேர்ந்த ஹேமந்த் சத்வாரா விளக்கினார்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் சரிந்தாலும் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் அவற்றை வாங்குவதற்கான தேவை எழவில்லை என்று அவர் தெரிவித்தார்.

"தற்போதைய சூழலில் தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் மந்தநிலை நிலவுகிறது என்று கூறலாம். பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன, எனவே மக்கள் தங்கள் வசம் இருந்த பணத்தை பள்ளிக் கடடணம், புத்தகங்கள் போன்றவற்றிக்குச் செலவு செய்திருப்பார்கள். அதனால் சில்லறை வணிகத்தில் தங்கம் விற்பனை குறைவாகவே இருக்கிறது," என்று அவர் கூறினார்.

அதோடு கூடுதலாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு மற்றும் அதன் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு ஆகியவற்றால் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களாக டாலரால் தான் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிந்ததாகக் கூறும் ஹேமந்த் சத்வாரா, "அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்கள உயர்த்தினால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரியும், அதே வேளையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால் அரிய உலோகங்களின் விலை உயரும்." என்றார்.

தங்கம் விலை குறைந்தாலும் வாங்க ஆர்வம் குறைவாக இருப்பது ஏன்?

ஹேமந்த் சத்வாராவின் கூற்றுப்படி ஜூன் 25 அன்று ஆமதாபாத்தில் 10 கிராம் தங்கத்தின் ரூ.1.44 லட்சமாகவும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2.19 லட்சமாகவும் இருந்தது.

வாடிக்கையாளர்கள் வாங்குகிறபோது இதன் மீது 3% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "தற்போது தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் எந்த ஆர்டர்களும் வருவதில்லை. தங்க நகைகள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோதி கேட்டுக்கொண்ட பிறகு நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சிறிய நகை உற்பத்தியாளர்கள் கூட வேலை இல்லாமல் இருக்கின்றனர்." என்றார்.

வழக்கமாக தங்கம் விலை சரிகிறபோது சந்தையில் வியாபாரம் அதிகரிக்கும் எனக் கூறும் ஹேமந்த் சத்வாரா, இந்த முறை போதிய வியாபாரம் இல்லை எனத் தெரிவிக்கிறார். இதர துறைகளிலும் மந்தநிலை நிலவுகிறபோது அதற்கு நகைத் துறையும் விதிவிலக்காக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் தொடங்கும் பண்டிகை காலகட்டம் தீபாவளி வரை நிலைக்கும். அப்போது வியாபாரம் அதிகரிக்கலாம் என ஹேமந்த் சத்வாரா நம்புகிறார். அதே தற்போதைய சூழலில் முன்கூட்டியே எந்த ஆர்டரும் வழங்கப்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

வெள்ளி விலை சரிந்தது ஏன்?

கடந்த ஆண்டு வெள்ளியின் விலை உயர்ந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது. எனினும் தற்போது அது கணிசமாக சரிந்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் என்பது ஒரு காரணம். அதோடு அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பதற்றங்கள் தணிந்ததால் வெள்ளி மீது கிடைத்துவந்த கூடுதல் லாபமும் (ரிஸ்க் ப்ரீமியம்) சரிந்துள்ளது.

தங்கத்தைப் போல வெள்ளி எந்த நிலையான வட்டி அல்லது வருமானம் வழங்காது. அதோடு ஒப்பிடுகையில் அமெரிக்கப் பத்திரங்களில் இருந்து கிடைக்கும் லாபம் அதிகமாக உள்ளது. எனவே முதலீட்டாளர்கள் கூடுதல் லாபம் பெற வேண்டும் என்பதற்காக வெள்ளியில் இருந்து விலகிச் சென்று பத்திரங்களை நோக்கி நகர்ந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு