'தீவிர வலியை உணர்வது வரை என் உடலில் நாடாப்புழு ஒட்டுண்ணி இருந்ததை நான் அறியவில்லை" - அரிய நோய் பாதித்த முதியவர்

- எழுதியவர், கிரேக் டக்கன்
- பதவி, பிபிசி வேல்ஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
நாடாப்புழு காரணமாக ஏற்பட்ட நீர்க்கட்டிகளுடன் வாழ்ந்து வந்த விவசாயி ஒருவர், தனது வாழ்நாளின் மிகக் கொடூரமான வலியை அனுபவிக்கும் வரை பல ஆண்டுகளாகத் தனக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதே தெரியாமல் இருந்ததாகக் கூறுகிறார்.
பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள ட்ரெகாசில் கிராமத்தில் வசிக்கும் 86 வயதான மெரெடித் ஜோன்ஸ் என்பவருக்கு, ஆடு மேய்க்கும் விவசாயிகளுக்குப் பிரத்யேக அபாயத்தை ஏற்படுத்தும் 'ஹைடாடிடோசிஸ்' என்ற நோய் கண்டறியப்பட்டது.
கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றப்படுவதற்கு முன்பாக, தனது நுரையீரலில் மெதுவாக வளர்ந்த இந்த நீர்க்கட்டிகளுடனேயே தான் பல ஆண்டுகள் வாழ்ந்ததாக அவர் நினைக்கிறார்.
ஹைடாடிட் நோய் அரிதானது என்றாலும், அது ஏற்படுத்தக்கூடிய "கடுமையான பாதிப்புகள்" காரணமாக "ஒரு முக்கிய பொது சுகாதாரப் பிரச்னையாக" விளங்குவதாக வேல்ஸ் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழில் பரவலாக இருப்பதால், இந்த நோயை உண்டாக்கும் நாடாப்புழுக்கள் மத்திய வேல்ஸ் பகுதியில் உள்ளூர் நோயாகப் பரவியுள்ளதாகக் கருதப்படுகிறது.
'தாங்க முடியாத வலியை' ஏற்படுத்திய நாடாப்புழுக்கள்
கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இரவை ஜோன்ஸ் நினைவுகூர்கிறார். அவர் தனது மனைவி எலைன் உடன் உணவகத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வீட்டிலேயே தங்கிவிட்டார்.
"என்னால் வலியைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அது நான் இதுவரை உணர்ந்ததைவிட மிகவும் தீவிரமாக இருந்தது" என்றார் அவர்.
"பின்னர், நள்ளிரவு வேளையில், நாங்கள் ஆம்புலன்ஸை அழைக்க வேண்டியிருந்தது. நான் நெவில் ஹால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு அவர்கள் எனக்குக் கொடுத்த மருந்து எதுவாக இருந்தாலும் அது வலியைப் போக்கியது. இதற்கு முன்பு நான் இதுபோன்ற வலியை உணர்ந்ததே இல்லை" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ஜோன்ஸ் 10 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும், தனக்கு ஹைடடிட் நீர்க்கட்டிகள் இருப்பதாக மருத்துவர்கள் உடனடியாக சந்தேகித்ததாக அவர் கூறுகிறார்.
"அந்தக் காலகட்டத்தில் இந்தப் பகுதியில் அதுபோன்ற பாதிப்புகள் அதிகம் இருந்தன. உள்ளூர் பண்ணைகளில் உள்ள நாய்களுக்கு வேளாண்மை அமைச்சகம் ஒட்டுண்ணி எதிர்ப்பு சிகிச்சைகளை அளித்தது எனக்கு நினைவிருக்கிறது."
"நான் முன்னாள் ஆட்டுப் பண்ணை விவசாயி என்பதை அவர்கள் பார்த்தார்களா, இல்லையா என்பது ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கலாம். இந்தப் பகுதியில் பொதுவாக பிரெகான்ஷயரில் ஹைடடிட் நீர்க்கட்டிகளால் பாதிக்கப்பட்ட மனிதர்களுடன் எங்களுக்கு நிறைய அனுபவம் கிடைக்கும் அளவுக்கு, ஏராளமான சம்பவங்கள் நடந்திருந்தன" என்றும் அவர் தெரிவித்தார்.
ஜோன்ஸ் பின்னர் லண்டனில் உள்ள "ஹைடடிட் நீர்க்கட்டிகளுக்கான முன்னணி நிபுணரிடம்" செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டார், அங்கு அவர் 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு, ஒவ்வொரு நுரையீரலில் இருந்தும் நாடாப்புழுக்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டன.
"இரண்டு நீர்க்கட்டிகளுக்குப் பதிலாக எனது விலா எலும்புகளில் இரண்டு வடுக்களைப் பெற்றுக் கொண்டேன்" என்று கூறிய அவர், தனது கல்லீரலில் இன்னமும் ஒரு நீர்க்கட்டி இருப்பதாகவும், அதை அகற்ற வேண்டாமென அறுவை சிகிச்சை நிபுணர்கள் முடிவு செய்துவிட்டதாகவும் கூறினார்.

ஹைட்ராடிடோசிஸ் என்றால் என்ன?
வேல்ஸ் பொது சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோயியல் ஆலோசகரான மருத்துவர் கிறிஸ் வில்லியம்ஸ், ஹைடடிட் நோய் நாடாப்புழுவால் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.
"பொதுவாக என்ன நடக்கிறது என்றால், இந்த நாடாப்புழுக்கள் ஆடு, மாடு, நாய் போன்ற பண்ணை விலங்குகளுக்கு இடையே பரவுகின்றன. மேலும் நாய்கள் அவற்றின் முட்டைகளை மலத்தின் மூலம் வெளியேற்றுகின்றன" என்று அவர் விளக்கினார்.
"துரதிர்ஷ்டவசமாக, மனிதர்கள் நாய்களிடம் இருந்து அந்த முட்டைகளை விழுங்க நேரிட்டால், அவை உடலுக்குள் நீர்க்கட்டிகளை உருவாக்குகின்றன. இவை மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தி, வீக்கம், வலி போன்றவற்றை உண்டாக்கி, அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையை ஏற்படுத்துகின்றன."
மேலும், அறிகுறிகள் வெளியே தெரிய 10 அல்லது 20 ஆண்டுகள் வரைகூட ஆகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"எனவே, மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்காகக் காத்திருக்காமல், நாய்கள் மற்றும் விலங்குகளின் இறந்த உடல்களில் இந்த நோயைக் கண்டறிய நேர்ந்தால் துளியும் தாமதிக்காமல் இந்தப் பிரச்னைக்குக் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும்" என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நோய் நாய்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடும். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பொது சுகாதாரப் பிரசாரங்கள், விலங்குகளைக் கையாண்ட பிறகு வழக்கமான ஒட்டுண்ணி எதிர்ப்பு சிகிச்சைகள் மற்றும் கை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தின.
இருப்பினும், ஆடுகள் மற்றும் நாய்களிடையே ஹைடடிட் நோய் மீண்டும் தோன்றுவதற்கான சமீபத்திய சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அபெரிஸ்ட்வித் பல்கலைக்கழகத்தின் கால்நடை அறிவியல் புலத்தைச் சேர்ந்த மருத்துவர் க்வென்லியன் ரீஸ், மனிதன்-நாய் இடையிலான தொடர்புகள் மற்றும் மலம் மாதிரிகளின் பகுப்பாய்வு குறித்த ஆராய்ச்சியை மேற்பார்வையிட்டு வருகிறார்.
"தற்போது மத்திய வேல்ஸில் இந்த நோயின் அளவு, விவசாயிகளுக்கு இருக்கும் அபாயங்கள் மற்றும் வேல்ஸில் இந்த நோய் தற்போது எவ்வாறு பரவுகிறது அல்லது பரவவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்" என்று ரீஸ் கூறினார்.

அபெரிஸ்ட்வித் பல்கலைக்கழகத்தின் இந்தத் திட்டத்தில் முனைவர் பட்ட ஆய்வாளரான கெய்ரா வாஷ்டெல் இதுகுறித்துப் பேசியபோது, நாய்களின் கழுத்துப் பட்டைகளில் பொருத்தப்படும் கண்காணிப்புச் சாதனங்கள், அவை எவ்வாறு நகர்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவும்" என்றார்.
இதுகுறித்து விளக்கிய அவர், "அவை ஒரு சமிக்ஞையை வெளிப்படுத்தும், அது நாய் எங்கு இருக்கிறது, வயல்வெளிகள் வழியாக எங்கு நகர்ந்துள்ளது, அது மற்ற பண்ணைகளுக்குள் நுழைகிறதா அல்லது மற்ற பண்ணை நாய்கள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்கிறதா என்பதைத் துல்லியமாக நமக்குத் தெரிவிக்கும்" என்று விவரித்தார்.
"இந்த வழியில், நோய் எவ்வாறு பரவுகிறது மற்றும் நாடாப்புழுக்கள் நிலப்பரப்பு முழுவதும் எவ்வாறு நகர்கின்றன என்பதைப் பற்றிய ஒரு யோசனையையோ அல்லது புரிதலையோ நாம் பெற முடியும்."
"நாய் இந்த நீர்க்கட்டிகளை விழுங்க வேண்டும். எனவே இறந்த அல்லது விழுந்த ஆடு அல்லது ஆட்டுக்கடாவின் திசுக்களில் பாதிக்கப்பட்ட பகுதிகள் இருக்கும்."
மேலும், "அவற்றின் இயக்கங்களைக் கண்காணிப்பதன் மூலம், அது உண்மையிலேயே நடந்ததா என்பதைத் தீர்மானிப்பதற்கான தடயங்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது" என்றும் அவர் விளக்கினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































