'வெட்கி ஒதுங்க மாட்டேன்': பிறப்புறுப்பு ஹெர்பெஸ் நோய் வருவது எப்படி? அதிகம் அறியப்படாத உண்மைகள்

உடலுறவின்போது பிறப்புறுப்பு ஹெர்பெஸ் தொற்றுநோய் பரவ வாய்வழிப் புணர்ச்சி காரணமா?

பட மூலாதாரம், Julian Tse

    • எழுதியவர், லெனா-சஹாரா மொஹமது
    • பதவி, பிபிசி வேல்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மெலிஸ் எட்வர்ட்ஸ் 20களின் தொடக்க வயதில் இருந்தபோது, அவர் சன்கிளாஸ் அணியாமல் வெளியே செல்வது மிக மிக அரிது.

"அதற்குக் காரணம், மக்கள் என்னைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை என்பதே," என்று தற்போது 29 வயதாகும் அவர் கூறினார்.

ஜெனிட்டல் ஹெர்பெஸ் என்ற பால்வினை நோய் இருப்பது கண்டறியப்படும்போது ஏற்படும் உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான தாக்கம், பலருக்கும் உடலில் தெரியும் அறிகுறிகளைவிட மிகவும் தீவிரமானதாக இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஜெனிட்டல் ஹெர்பெஸுக்கு சிகிச்சையளித்து கட்டுப்படுத்த முடியும் என்றாலும் அதை முழுதாகக் குணப்படுத்த முடியாது.

இங்கிலாந்தில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2025இல் கிட்டத்தட்ட 29,000 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. முந்தைய ஆண்டில் பதிவானதைவிட இந்த நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 3% உயர்ந்துள்ளது.

வேல்ஸ் பொது சுகாதாரத் துறை 2025ஆம் ஆண்டு வேல்ஸில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 913 புதிய நோயாளிகளைக் கண்டறிந்து பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1,321-ஆக இருந்தது. கார்டிஃப் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக சுகாதார வாரியத்தின் சில மருத்துவத் தரவுகள் முழுமையற்றதாக இருந்த காரணத்தால், இந்தப் புள்ளிவிவரங்கள் எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரெக்ஸ்ஹாம் பகுதியைச் சேர்ந்த மெலிஸுக்கு, அவர் முதன்முதலில் இந்த நோயால் பாதிக்கப்பட்டபோது, வலி மிகக் கடுமையாக இருந்தது.

"நான் முதலில் இந்த நோயால் பாதிக்கப்பட்டபோது, மிகவும் பயங்கரமாக இருந்தது. அதுவரை பார்த்திராத அளவுக்கு மிக மோசமான வலியை உணர்ந்தேன்," என்று அவர் கூறினார்.

மெலிஸ் யோகா ஆசிரியை மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநராக இருக்கிறார். பிறப்புறுப்பு ஹெர்பெஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர் அதனை தன்னிடம் தெரியப்படுத்தாமல் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதால் தனக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று மெலிஸ் நம்புகிறார்.

உடலுறவின்போது பிறப்புறுப்பு ஹெர்பெஸ் தொற்றுநோய் பரவ வாய்வழிப் புணர்ச்சி காரணமா?

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தப் பால்வினை நோய் தனக்கு இருப்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, அவர் துக்கம், கோபம், மறுப்பு போன்ற உணர்வுகளில் மூழ்கினார்.

இதனால் அவர் தனது சுயத்திடம் இருந்து பிரிந்து இருப்பதாகவும், தனது சொந்த முடிவெடுக்கும் திறன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் மெலிஸ் கூறினார்.

இந்தப் பால்வினை நோய் குறித்த தகவல்களை இணையத்தில் தேடுவதே, "அந்தத் தருணத்தில் என் வாழ்க்கையே மாறிவிட்டது," என்று கூறிய மெலிஸின் முதல் எதிர்வினையாக இருந்தது.

இருப்பினும், ஆறுதல் கிடைப்பதற்கு மாறாக, அந்தத் தொற்று வாழ்நாள் முழுவதும் நீடிக்கும், தனது உறவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், தீவிரமான சிக்கல்களுக்கு இந்த நோய் வழிவகுக்கலாம் என்பன போன்ற அச்சமூட்டும் தகவல்களையே அவர் இணையத்தில் காண நேர்ந்தது.

"உங்கள் வாழ்க்கை இனி ஒருபோதும் பழையபடி இருக்காது" என்பது போன்ற விஷயங்களையே நான் படிக்க நேர்ந்தது. இவை அனைத்தும் நான் தவிர்க்க முடியாமல் உள்வாங்கிக்கொள்ள வேண்டிய மிகக் கடுமையான தகவல்களாக இருந்ததாக" அவர் தெரிவித்தார்.

பிறப்புறுப்பு ஹெர்பெஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு மெலிஸுக்கு காதல் உறவுகளைப் பேணுவதும் சவாலானது. தன்னை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் அஞ்சிக் கொண்டிருந்த வேளையில், தனக்கு 'பிறப்புறுப்பு ஹெர்பெஸ் இருப்பதை ஏற்றுக்கொண்ட முதல் நபருடன் அவர் உணர்வுபூர்வமாக நெருக்கமானார். ஆனால், மற்றொருவரிடம் தனது நிலைமையைப் பற்றித் தெரிவித்த பிறகு, அவர் மெலிஸுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

உடலுறவின்போது பிறப்புறுப்பு ஹெர்பெஸ் தொற்றுநோய் பரவ வாய்வழிப் புணர்ச்சி காரணமா?

பட மூலாதாரம், CAVALLINI JAMES/BSIP/Universal Images Group via Getty Images

ஒரு பயணத்தின்போது மெலிஸ் சந்தித்த ஒருவரை மீண்டும் தேநீர் குடிக்கும்போது சந்தித்தார். அந்த நபர் தனக்கு இந்த நோய் இருப்பதை அறிந்த பிறகு, "இதை வெளிப்படையாகக் கூறியதால் தன் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டதாக" கூறினார். ஆனால், நாங்கள் மீண்டும் சந்திப்போம் என்று தான் கருதவில்லை என்றும் அந்த நபர் கூறியதாகத் தெரிவித்தார்.

மேலும் பேசிய மெலிஸ், "அப்போது, 'தேநீர் அருந்துவதன் மூலம் இந்த நோய் பரவாதே!' என்று நான் நினைத்தேன்," என்று தெரிவித்தார்.

காலப்போக்கில், 'ஜெனிட்டல் ஹெர்பெஸ்' பாதிப்பு மட்டுமே தனது அடையாளமாகி விடாது என்பதை அவர் புரிந்துகொள்ளத் தொடங்கினார். பிப்ரவரி 2026இல் வேல்ஸின் லவ் ஐலாண்ட் என்று வர்ணிக்கப்படும் அமோர் & மினிட், அதாவது லவ் அண்ட் மௌன்டைன் என்ற நிகழ்ச்சியில் மெலிஸ் பங்கேற்றார்.

சமீபகாலமாக, ஜெனிட்டல் ஹெர்பெஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் தனது சமூக ஊடக பக்கங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.

மெலிஸ் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியபோது, "வேறு பலரும் இதே பாதிப்புடன் அமைதியாக வாழ்ந்து வருவதை உணர்ந்தார்.

"நீண்ட காலம் கண்ணாடியை அணிந்து வெட்கிப்போய் மறைவில் இருக்க முயன்றதைப் போல் இனி இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். 'இல்லை நான் மீண்டும் அப்படி செய்யப் போவதில்லை' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்" என்று கூறினார்.

உடலுறவின்போது பிறப்புறுப்பு ஹெர்பெஸ் தொற்றுநோய் பரவ வாய்வழிப் புணர்ச்சி காரணமா?

பட மூலாதாரம், Emrah Zengin

மெலிஸ் தனது அனுபவத்தை மையமாகக் கொண்டு ஒரு மேடை நிகழ்ச்சிக்கான படைப்பையும் எழுதினார்.

"நான் ஒரு மேடை நிகழ்ச்சிக்கான படைப்பை எழுதினேன். அது எனக்கு ஒருவித வலிமையையும் தன்னம்பிக்கையையும் உணர உதவியது. பிறகு நான் அதை வெளியிட்டபோது, சிலர் முன்வந்து என்னிடம் பேசினார்கள்," என்கிறார் மெலிஸ்.

அத்துடன், "உள்ளூர் பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் என்னிடம் வந்து, 'எனக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது. உங்களை பெரிதும் மதிக்கிறேன்' என்று கூறியதாக" அவர் குறிப்பிட்டார்.

தனது வெளிப்படைத்தன்மை, தனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதற்குக் காரணம் என குற்றம் சாட்டும் இணையவழித் துன்புறுத்தல்களையும் பெண் வெறுப்புக் கருத்துகளையும் கொண்டு வந்ததாக மெலிஸ் தெரிவித்தார். அத்துடன், இந்த நோய் குறித்துப் பேசுவது தனக்கு முக்கியமானதாகவும் இருந்ததாகக் கூறினார்.

"ஹெர்பெஸ் நோய் இருப்பது பற்றி யாருமே பேசுவதில்லை" என்கிறார் மெலிஸ்.

எனக்கு அது முதலில் வந்தபோது, என்னை அச்சுறுத்திய கூகுள் தேடல்கள், ரெட்டிட் பதிவுகள் தவிர இணையத்தில் கிட்டத்தட்ட வேறு எதுவுமில்லை.

"எனவே, அப்போது எனக்குத் தேவைப்பட்ட அந்த நபராக என்னால் இப்போது இருக்க முடிந்தால், அதில் இருந்து ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது" என்று கூறலாம்.

ஹெர்பெஸ் வைரஸ் கூட்டமைப்பின் இயக்குநரான மரியன் நிக்கல்சன், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஹெர்பெஸ் நோயுடன் வாழ்ந்து வருகிறார். அவர், "மருத்துவ அறிவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பொது மக்களின் புரிதல் இல்லை. ஆதலால் மக்களிடையே தேவையற்ற பயம் மிகவும் அதிகமாக உள்ளது" என்று கூறினார்.

கடந்த 1980களில் நடந்த பொது சுகாதார பிரசாரங்களில் இருந்து உருவான களங்கம், இன்றும் மக்களுடைய மனப்பான்மையை வடிவமைத்து வருவதாக அவர் கருதுகிறார். அவரைப் பொறுத்தவரை, மக்கள் இந்த நோய்க்கு ஆளாவதை ஒரு தண்டனை எனக் கருதுகிறார். ஆனால், உண்மை அப்படியில்லை என்கிறார் நிக்கல்சன்.

உடலுறவின்போது பிறப்புறுப்பு ஹெர்பெஸ் தொற்றுநோய் பரவ வாய்வழிப் புணர்ச்சி காரணமா?

பட மூலாதாரம், Getty Images

"வாய்ப் புண்கள், பிறப்புறுப்பு ஹெர்பெஸ் ஆகியவை ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸால் ஏற்படுவதையும், வாய்வழிப் புணர்ச்சி என்பது நோய் பரவுவதற்கான ஒரு பொதுவான வழி என்பதையும் மக்களில் பலரும் இன்னும் அறிந்திருக்கவில்லை," என்று அவர் கூறினார்.

"ஒருவருக்கு உதட்டுப் புண் இருந்து, அந்த நபர் வாய்வழிப் புணர்ச்சி செய்தால், வாய்ப்புண்ணில் பரவியிருக்கும் வைரஸ் மற்றொருவரின் பிறப்புறுப்புக்கும் பரக்கூடும்," என்று விளக்கினார் நிக்கல்சன்.

பிறப்புறுப்பு ஹெர்பெஸ் என்பது பெரும்பாலான மக்களுக்கு கட்டுப்படுத்தக்கூடிய ஒரு தோல் நோய்தான் என்றும் அவர் விளக்கினார்.

இதனால் பாதிக்கப்படும் பலருக்கும் அறிகுறிகளே ஏற்படுவதில்லை. அதேநேரம், அடிக்கடி நோய்த் தாக்கத்திற்கு ஆளாவோர், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் அவற்றைப் பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியும்.

"மூவரில் ஒருவர் மட்டுமே தங்களுக்கு நோய்த் தாக்கம் ஏற்பட்டு இருப்பதை உணர்வார்கள். மூவரில் இருவருக்கு நோய் மிகவும் லேசான, குறைந்த தாக்கம் கொண்டதாக இருப்பதால், அவர்கள் அதை உணர்வதே இல்லை," என்கிறார் நிக்கல்சன்.

ஹெச்.ஐ.வி தன்னார்வ நிறுவனமான ஃபாஸ்ட் டிராக் சைம்ருவின் தலைவரும், பாலியல் ஆரோக்கியம், ஹெச்.ஐ.வி துறையில் முன்னாள் ஆலோசகருமான மருத்துவர் ஓல்வென் வில்லியம்ஸ், பிறப்புறுப்பு ஹெர்பெஸ் உள்ளவர்கள் பாலுறவுகளில் ஈடுபடலாம், ஆனால் நோய்த் தாக்கம் தீவிரமாக இருக்கையில், உடலுறவு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுப்படுவதாகக் கூறினார்.

மேலும் அவர், "உண்மையில் அந்த நேரத்தில் உடலுறவு கொள்வது மிகவும் அசௌகரியமாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில் வைரஸ் வெளியேற்றப்படுவதால், நோய் பரவும் அபாயமும் உள்ளது," என்று தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுவதைவிட, பிறப்புறுப்பு ஹெர்பெஸ் நோயுடன் வாழ்பவர்களின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.

வேல்ஸில், பாலுறவால் பரவக்கூடிய சில நோய்த் தொற்றுகளுக்கு, மக்கள் வீட்டிலேயே பரிசோதனை செய்யும் கருவிகளைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இந்தக் கருவிகள் பிறப்புறுப்பு ஹெர்பெஸ் நோயைப் பரிசோதிப்பதில்லை. தங்களுக்குப் பிறப்புறுப்பு ஹெர்பெஸ் இருக்கலாம் என்று சந்தேகிக்கும் நபர்கள், அதை உறுதி செய்துகொள்ளத் தேவையான பரிசோதனைக்கு பாலியல் சுகாதார மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

உடலுறவின்போது பிறப்புறுப்பு ஹெர்பெஸ் தொற்றுநோய் பரவ வாய்வழிப் புணர்ச்சி காரணமா?

பட மூலாதாரம், Melys Edwards

ஃபாஸ்ட் டிராக் சைம்ரு என்ற ஹெச்.ஐ.வி தன்னார்வ நிறுவனத்தின் தலைவரும், பாலியல் சுகாதாரம் மற்றும் ஹெச்.ஐ.வி துறையின் முன்னாள் ஆலோசகருமான டாக்டர் ஓல்வென் வில்லியம்ஸ், பலர் ஒருபோதும் பரிசோதனை செய்துகொள்ள முன்வருவதில்லை என்று கூறுகிறார். மற்றவர்கள், நோய்த் தொற்றை மிகவும் துல்லியமாகக் கண்டறியக்கூடிய கால அளவைத் தவறவிடக்கூடும்.

இதனால், "நோய்த் தொற்றுகள் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன என்பது எங்களுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டார் அவர்.

அத்துடன், "வைரஸ் தொற்று இருக்கும் பலர் ஒருபோதும் பரிசோதனைக்குச் சென்றிருக்க மாட்டார்கள். சிலருக்கு, வைரஸ் தொற்று இருந்தபோதிலும், பரிசோதனை முடிவு எதிர்மறையாக வரக்கூடும்," என்றும் டாக்டர் வில்லியம்ஸ் விளக்கினார்.

அறிகுறிகள் தெரியத் தொடங்கியவுடன் மருத்துவ உதவியை நாடுமாறு டாக்டர் வில்லியம்ஸ் அறிவுறுத்துகிறார். அறிகுறிகள் தோன்றிய சுமார் 48 மணிநேரத்திற்குள், பாதிக்கப்பட்ட நபரின் சளி மாதிரியை எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்படும். அந்தப் பரிசோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இருப்பினும், பாலியல் நல மருத்துவமனைகளில் சந்திப்பு நேரம் (appointment)பெறுவதில் பலர் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

"மருத்துவமனைக்கான முதலீடு அதிகரித்திருப்பதையோ அல்லது இட வசதி விரிவாக்கத்தையோ நாங்கள் காணவில்லை" என்று டாக்டர் வில்லியம்ஸ் குறிப்பிட்டார்.

அதோடு, "இந்த சேவைகள் தேவைப்படக்கூடியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அவற்றை அணுகுவதில் மக்கள் தாமதங்களை எதிர்கொள்கின்றனர்" என்று கூறினார்.

வேல்ஸ் அரசாங்கம், நோயைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், பொது மற்றும் தடுப்பு சுகாதாரத்திற்குப் பொறுப்பான ஓர் அமைச்சரை நியமித்து இருப்பதாகவும் தெரிவித்தது.

மேலும் பேசிய வேல்ஸ் அரசின் செய்தித் தொடர்பாளர், "வேல்ஸ் முழுவதும் பாலியல் நல சேவைகளை மேம்படுத்துவதற்காக, பாலியல் நோய்த் தொற்றுகள், ஹெச்.ஐ.வி ஆகியவற்றின் தடுப்பு, பரிசோதனை மற்றும் சிகிச்சை தொடர்பான மக்களின் தேவைகளை மதிப்பிட்டு வருவதாகவும்" கூறினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு