You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஷாருக் கான் வார்த்தைகளை நம்பியிருக்க கூடாது': அக்தர் கூறியது என்ன? 10 முக்கிய விஷயங்கள்
- எழுதியவர், ரஷீத் ஷகூர்
- பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரைப் பற்றிப் பேசுவதற்கு முன், அவரைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
ஏனென்றால் அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
வெவ்வேறு மனிதர்கள் அவரை வெவ்வேறு கோணங்களில் பார்த்துள்ளனர். அதனால், அவரது ஆளுமை பற்றிய வெவ்வேறு சித்திரங்கள் உருவாகியுள்ளன.
சிலருக்கு, தனது அபார வேகத்தால் பேட்ஸ்மேன்களைத் திணறடித்த பந்துவீச்சாளராக அவர் தெரிந்தார்.
மற்றவர்களோ, ஒழுக்கம் குறித்து சிறிதும் கவலைப்படாத முரட்டுத்தனமான, கலகக்கார கிரிக்கெட் வீரராகவே அவரைப் பார்த்தனர்.
சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு முறை, பந்தை சேதப்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல சர்ச்சைகளை அவரது விமர்சகர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டியுள்ளனர்.
தடைகள், அபராதங்கள், பல்வேறு விசாரணைக் குழுக்கள் மற்றும் நீதிமன்ற விசாரணைகளை அவர் எதிர்கொண்டார்.
ஒழுக்க விதிமீறல்கள் தொடர்பான விவகாரங்கள் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அவரைப் பின்தொடர்ந்தன.
ஆனால் உண்மை என்னவென்றால், சோயப் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்தைப் போன்றது. மக்களின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்க்கத் தேவையான அனைத்தும் அவரிடம் இருந்தன.
கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வுபெற்று 15 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
தற்போது, அவர் அடிக்கடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் நிபுணராகத் தோன்றுகிறார். அவரது கருத்துகள், அவரது பந்துவீச்சைப் போலவே கூர்மையாகவும் நேரடியாகவும் உள்ளன.
1. 'சிகிச்சைக்கு பணம் செலவழிக்க வேண்டாம் என்று தந்தை கூறியிருந்தார்'
சோயப் அக்தர், ராவல்பிண்டியில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.
அவரது தந்தை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பெட்ரோல் நிலையத்தில் இரவுநேர காவலாளியாகப் பணியாற்றினார். அவர்களது குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது.
இருப்பினும், தங்கள் குழந்தைகளின் தேவைகளை அவரது பெற்றோர் முழுமையாகக் கவனித்துக்கொண்டனர்.
தனது 'கான்ட்ரோவர்ஷியலி யுவர்ஸ்' (Controversially Yours) என்ற புத்தகத்தில், சிறுவயதில் தனக்கு கடுமையான இருமல் இருந்ததாகவும், அதனால் தனது உடல்நலம் பலவீனமடைந்ததாகவும் சோயப் எழுதியுள்ளார்.
தனது நுரையீரல் எப்போதும் பலவீனமாகவே இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
சோயப் கூற்றுப்படி, ஒருநாள் அவரது தாயிடம் அவர் தந்தை, "இந்தக் குழந்தை பிழைப்பது கடினம், அதனால் இக்குழந்தையின் சிகிச்சைக்காக பணத்தையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்" என்று கூறினார்.
ஆனால் அவரது தாய் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, அவரைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், அதே நுரையீரல் மிகவும் வலிமையடைந்ததால், தன்னால் மைதானத்தில் காற்றைப் போல ஓட முடிந்ததாக சோயப் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
2. 'பட்டம் விடுதல், கில்லி போன்ற பொழுதுபோக்குகள் உதவியாக இருந்தன'
சிறுவயதில் சோயப் பட்டம் விடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பட்டம் விடும் காலத்துக்காக அவர் ஆவலுடன் காத்திருப்பார். அவரது மூத்த சகோதரர் தாஹிர், பட்டம் வாங்குவதற்காக அவரை அடிக்கடி அழைத்துச் செல்வார்.
பட்டங்களைப் பிடிக்க ஓடியது தனது வேகத்தை அதிகரிக்க உதவியதாக சோயப் கூறுகிறார். கில்லி விளையாடியது தனது பந்தெறியும் திறனையும் ஃபீல்டிங் திறனையும் மேம்படுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இவை அனைத்தும் பின்னாளில் கிரிக்கெட்டில் அவருக்குப் பெரிதும் உதவியதாகவும் அவர் கூறுகிறார்.
3. வண்டி ஓட்டுநருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய அக்தர்
சோயப் கிரிக்கெட்டைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளத் தொடங்கியபோது, வாய்ப்புகளைத் தேடி ஒவ்வொரு நகரமாக பயணிக்க ஆரம்பித்தார்.
ஒருமுறை, லாகூரில் பிஐஏ அணிக்கான தேர்வுகள் நடைபெறுவதாக அறிந்ததும், தனது நண்பர் எஜாஸ் அர்ஷத்துடன் ராவல்பிண்டியில் இருந்து புறப்பட்டார். அவரது கையில் 12 ரூபாய் மட்டுமே இருந்தது. அவரது நண்பரிடம் 13 ரூபாய் இருந்தது.
டிக்கெட் எடுக்காமலேயே ஏழு மணி நேரப் பேருந்துப் பயணத்தை மேற்கொண்டதாக சோயப் கூறுகிறார். லாகூரைச் சென்றடைந்த பிறகு, விடுதியில் தங்குவதற்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை.
ரயில் நிலையத்திற்கு அருகே, அஜீஸ் கான் என்ற குதிரை வண்டி ஓட்டுநரை அவர்கள் சந்தித்தனர். சோயப் அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்து, அந்த இரவைக் கழிக்க ஒரு இடம் தருமாறு கேட்டார்.
அப்போது அந்த வண்டி ஓட்டுநர், "நீங்கள் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுகிறீர்களா?" என்று கேட்டார்.
அதற்கு சோயப், "இப்போது இல்லை. ஆனால் ஒரு நாள் நிச்சயமாக விளையாடுவேன்," என்று பதிலளித்தார்.
தான் பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டால், மீண்டும் வந்து அவரைச் சந்திப்பதாகச் சோயப் வாக்குறுதி அளித்தார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தின் மூலம் நட்சத்திர வீரராக உயர்ந்த சோயப், தனது வாக்குறுதியை நிறைவேற்ற லாகூருக்குத் திரும்பினார்.
அங்கு அவர் அஜீஸ் கானைத் தேடிக் கண்டுபிடித்தார்.
இருவரும் ஒன்றாக இரவு உணவு உண்டனர். அதன் பிறகு, தேர்வுக்காக அவரை இறக்கிவிட்ட அதே பாதையில், அந்தக் குதிரை வண்டி ஓட்டுநர் மீண்டும் அவரை அழைத்துச் சென்றார்.
4. துப்பாக்கிச் சூடு, சடலங்கள், ஸ்டிரைக் மற்றும் ஊரடங்கு உத்தரவுகள்
பிஐஏ அணியில் தேர்வான பிறகு, சோயப் கராச்சிக்குச் சென்றார். அவருக்குத் தங்குமிடம் வழங்கப்படவில்லை.
லியாகதாபாத் மற்றும் லாலுகேட் போன்ற பகுதிகளில் உள்ள எளிய அறைகளில் அவர் தங்க வேண்டியிருந்தது.
அது கராச்சியில் அரசியல் வன்முறைகளும் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம்.
நகரில் அடிக்கடி வேலைநிறுத்தங்கள், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் இருந்தன.
தேசிய கிரிக்கெட் மைதானத்தை அடைவதற்காக தினமும் பல கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்ததாக சோயப் கூறுகிறார். சில நேரங்களில் திடீரென துப்பாக்கிச் சூடு தொடங்கிவிடும். அப்போது, குண்டு படாமல் இருக்க அவர் தரையில் அமர்ந்து கொள்வார்.
இவ்வாறான சூழ்நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர் கழித்தார்.
5. 'என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு குண்டுவெடிப்பைப் பார்த்தேன்'
மே 2002-இல், கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்கியிருந்த விடுதிக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்தது.
திடீரெனபலத்த வெடிச்சத்தமும் வெளியே தீப்பிழம்பும் தோன்றியபோது, தான் தனது அறையில் அமர்ந்திருந்ததாக சோயப் கூறுகிறார். தனது செவிப்பறைகள் கிழிந்துவிட்டது போல உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ரஷீத் லத்தீஃப் அறையின் கதவை உடைத்து அவர்களை வெளியே அழைத்துச் சென்றார்.
கீழே சென்றபோது, நியூசிலாந்து வீரர்கள் அழுதுகொண்டிருப்பதை சோயப் பார்த்தார். அவர் மிகவும் பீதியடைந்தார்.
இந்தச் சம்பவம் தனது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதன் பிறகு நீண்ட காலம் கராச்சிக்கு வருவதற்கே பயந்ததாகவும் சோயப் கூறுகிறார்.
6. 'ஷாருக்கான் வார்த்தைகளை நம்பியிருக்க கூடாது'
2008ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரின் முதல் சீசன் நடந்தது.
சோயப் அக்தரும் அதில் ஒரு பகுதியாக இருந்தார்.
அப்போது ஐபிஎல் மற்றும் ஐசிஎல் ஆகிய இரு லீக்குகளும் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்ததாக அவர் கூறுகிறார். நடிகர் ஷாருக்கான் அவரை அணுகி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு தருவதாக கூறினார்.
ஷாருக்கான் மற்றும் லலித் மோதியை சோயப் அக்தர் சந்தித்தார். தனக்கு நிதி ரீதியான உதவி தரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் வீரர்கள் ஏலத்திற்குப் பிறகு ஏமாற்றமடைந்ததாகவும் அவர் கூறுகிறார்.
தனக்கு வழங்கப்பட்ட தொகையில் திருப்தி இல்லை என்பதை ஷாருக்கானிடம் நேரடியாகத் தெரிவித்ததாகச் சோயப் கூறுகிறார். அவரைப் பொருத்தவரை, இது பணம் தொடர்பான விஷயம் மட்டுமல்ல. ஒரு வீரரின் அந்தஸ்து மற்றும் மரியாதை தொடர்பான விஷயமுமாகும்.
லலித் மோதி மற்றும் ஷாருக்கானின் வார்த்தைகளைத் தான் நம்பியிருக்கக் கூடாது என்று தான் உணர்வதாக அவர் எழுதியுள்ளார்.
7. ஆசிஃப் சர்தாரி மற்றும் அல்தாஃப் ஹுசைனிடம் உதவி கேட்டது ஏன்?
சோயப் கூற்றுப்படி, வீரர் ஒப்பந்தங்கள் தொடர்பாக அவர் தெரிவித்த ஒரு கருத்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அவர் மீது அதிருப்தியடைந்தது. இதையடுத்து, அவருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதனால், ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பதும் கேள்விக்குறியானது.
அப்போது பிசிபி தலைவர் நசீம் அஷ்ரஃப் தனக்கு எதிராக இருந்ததாக சோயப் கூறுகிறார்.
இந்தச் சூழலில் இருந்து வெளியேறுவதற்காக, ஒரு நண்பர் மூலம் ஆசிஃப் அலி சர்தாரியைத் தொடர்பு கொண்டதாகவும், எம்கியூஎம் (MQM) தலைவர் அல்தாஃப் ஹுசைனுக்கும் தொலைபேசியில் அழைத்ததாகவும் அவர் கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, இந்த விவகாரத்தில் ரஹ்மான் மாலிக் தலையிட்டார். பின்னர், அவரும் நசீம் அஷ்ரஃபும் சந்தித்தனர். இதைத் தொடர்ந்து, அவர் மீதான தடை நீக்கப்பட்டது. அதன்பிறகு, அவர் ஐபிஎல் தொடரில் விளையாடத் தகுதி பெற்றார்.
ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய அவர், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அந்தப் போட்டியில் வீரேந்தர் சேவாக், கெளதம் கம்பீர், ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் மனோஜ் திவாரி ஆகியோரை அவர் ஆட்டமிழக்கச் செய்தார். அணியின் வெற்றிக்குப் பிறகு, ஷாருக் கான் மகிழ்ச்சியில் அவரை ஆரத் தழுவினார்.
8. லாராவுடனான உரையாடல்
சோயப், தனக்குப் பிடித்த பேட்ஸ்மேனான பிரையன் லாராவுக்குப் பந்துவீச விரும்பினார். அந்த வாய்ப்பு 2004 சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது அவருக்குக் கிடைத்தது.
"நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன். உங்களுக்குப் பந்துவீசுவது எனக்குப் பெருமை" என்று லாராவிடம் கூறியதாகச் சோயப் தெரிவிக்கிறார்.
ஆனால், சோயப் தன்னை கொல்லப் போவதாகக் கூறுவதாக லாரா, ராம்நரேஷ் சர்வானிடம் நகைச்சுவையாகக் கூறினார்.
தற்செயலாக, சிறிது நேரத்துக்குப் பிறகு சோயப் வீசிய ஒரு பந்து லாராவின் கழுத்தில் தாக்கியது. இதையடுத்து, அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அதன்பிறகு, லாராவை சோயப் அக்தர் மிரட்டியதாக வதந்திகள் பரவின.
இருப்பினும், அந்தத் தவறான புரிதலை லாராவே பின்னர் தெளிவுபடுத்தினார். சோயப் அக்தரிடம் அவர் மன்னிப்பும் கேட்டார்.
9. சாகசம் இல்லாமல் வாழ்க்கை முழுமையடையாது
சோயப் அக்தருக்கு சாகச செயல்களில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் ஸ்கைடைவிங் செய்துள்ளார், பஞ்சி ஜம்பிங்கில் ஈடுபட்டுள்ளார், காடுகளில் மலையேற்றப் பயணம் மேற்கொண்டுள்ளார். பி-52 குண்டுவீச்சு விமானத்தில் பறந்த அனுபவத்தையும் பெற்றுள்ளார். விருந்துகளில் சுதந்திரமாக நடனமாடுவது என பலவற்றையும் செய்துள்ளார்.
கள நடுவர் ரூடி கோர்ட்சனிடம் தான் செய்த குறும்புகளையும் அவர் நினைவு கூர்கிறார். சோயப்பின் கூற்றுப்படி, ரூடியின் சட்டையை அவர் அடிக்கடி விளையாட்டாக இழுப்பார். ஆனால், ரூடி ஒருபோதும் கோபப்பட்டதில்லை.
2006-ஆம் ஆண்டு, முழங்கால் அறுவைச் சிகிச்சையின் போதே சோயப்புக்கு சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்பியது. பின்னர், மருத்துவர்கள் அவரை மீண்டும் மயக்க நிலையில் ஆழ்த்தி அறுவைச் சிகிச்சையை நிறைவு செய்தனர்.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, ஓய்வு அறையில் கண்விழித்தபோது, ஒரு செவிலியர் அவருக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தார்.
அவரிடம் நகைச்சுவையாகக் காதல் பேச்சைத் தொடங்கியதாகச் சோயப் கூறுகிறார். ஆனால், சிறிது நேரத்திலேயே அவருக்கு மீண்டும் மயக்க மருந்து அளிக்கப்பட்டது.
10. கேங்ஸ்டர் படத்தில் இடம்பெற முடியாதது குறித்து சோயப் வருத்தம்
சோயப் கூற்றுப்படி, ஒரு நாள் நடிகை மீரா, இயக்குநர் மகேஷ் பட் தன்னைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
'கேங்ஸ்டர்' திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வழங்க மகேஷ் பட் விரும்பியதாகவும் அவர் கூறுகிறார். அந்த வாய்ப்பு கிடைத்ததில் சோயப் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
இருப்பினும், திரைப்படங்களில் நடித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) எச்சரிக்கை விடுத்ததாக அவர் கூறுகிறார்.
கிரிக்கெட் வாழ்க்கையைத் தீவிரமாகத் தொடர விரும்பினால், திரைப்படங்களில் இருந்து விலகி இருக்குமாறும் அவரது நண்பர்கள் அறிவுறுத்தினர்.
இறுதியில், சோயப் அந்தத் திரைப்படத்தில் நடிக்கவில்லை. பின்னர், அந்த முடிவுக்காக வருத்தப்பட்டதாக அவர் கூறுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு