'விடுமுறைக்கு கிரீஸ் சென்றபோது உண்ணி கடித்ததால் 42 நாட்கள் கோமாவில் இருந்தேன்'

பட மூலாதாரம், Victoria Stellas
- எழுதியவர், லீ பூபியர்
- பதவி, பிபிசி வேல்ஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கிரீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உண்ணி கடித்ததால் ஏற்பட்ட நோய்த்தொற்றால், ஒரு பெண் ஏறத்தாழ ஆறு வாரங்கள் கோமா நிலைக்குச் சென்றதுடன், தற்போது நினைவாற்றல் இழப்பு மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இதனால் நாள் ஒன்றுக்கு 18 மாத்திரைகளை உட்கொள்ளும் நிலைக்கும் அவர் தள்ளப்பட்டுள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த விக்டோரியா ஸ்டெல்லாஸ் , 2019-இல் சிராஸ் தீவுக்குச் சென்றிருந்தபோது காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார்.
பின்னர் வீடு திரும்பியதும், அவருக்கு இரவில் வலிப்புகள் ஏற்படத் தொடங்கின.
அவர் மருத்துவமனைக்குச் சென்றபோதிலும், "யாருக்கும் என்ன பிரச்னை என்று தெரியவில்லை"என்பதால், அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் லிவர்பூலில் உள்ள வால்டன் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் 42 நாட்கள் செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு உண்ணி மூலம் பரவும் டிக்-போர்ன் என்செபலைட்டிஸ் (டிபிஇ) எனப்படும், பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
"இது என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. வேலைக்குச் செல்வதைத் தவிர நான் வெளியே அதிகம் செல்வதில்லை" எனக் கூறுகிறார் விக்டோரியா.
தன் மைத்துனரின் வீட்டில் ஆடுகள் இருந்ததாகவும், அவை உண்ணிகளைக் கவரக்கூடும் என்பதால், அங்கு இருந்தபோது தன்னை உண்ணி கடித்திருக்கலாம் என்றும் விக்டோரியா நம்புகிறார்.
விக்டோரியாவுக்கு ஒரு குழந்தை உள்ளது.
தொடர்ந்து பேசும் அவர், "எனக்குத் தொடர்ந்து வலிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது, ஆனால் என்ன பிரச்னை என்று யாருக்கும் தெரியவில்லை. இது அசாதாரணமான நோய்த்தொற்று, இதைக் கண்டறிவதற்கான நிபுணர்கள் இல்லை என்று நினைக்கிறேன்" என்கிறார்.
"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் சிகிச்சை முடிந்து மீளும் நிலை வரை, மொத்தமாக சுமார் ஆறு மாதங்கள் ஆகிவிட்டன," என்றும் விக்டோரியா கூறினார்.
"சில நேரங்களில் நான் அமைதியாகவே இருந்துவிடுவேன். நோய் வருவதற்கு முன்பு நான் மிகவும் கலகலப்பான குணம் கொண்டவராக இருந்தேன்," என்று விக்டோரியா கூறுகிறார்.
தனக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகளால், மதுபான விடுதியில் செய்துவந்த பணியையும், சிறப்புக் கல்வித் தேவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான பள்ளியில் ஆசிரியர் உதவியாளராக இருந்த வேலையையும் இழந்ததாக அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Victoria Stellas
"நினைவாற்றல் தேவைப்படாத வேலை என ஏதாவது ஒரு வேலை இருக்கிறதா என என்னிடம் கூறுங்கள்? வாழ்க்கையில் நீங்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் நினைவாற்றல் தேவைப்படுகிறது. பொருட்கள் வாங்குவது, வேலை செய்வது, பயணம் செய்வது என அனைத்திற்கும் தேவைப்படுகிறது" என்கிறார் விக்டோரியா.
"நான் வீடு திரும்பி, கற்பித்தல் உதவியாளராக மீண்டும் எனது வேலைக்குச் செல்ல முயன்றபோது, வெவ்வேறு வகுப்புகளில் உள்ள குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் பெயர்களை என்னால் நினைவுகூர முடியவில்லை.''
இதுகுறித்து பகிர்ந்து கொண்ட விக்டோரியா, "நான் எல்லோரையும் அடையாளம் கண்டுகொள்வேன், ஆனால் பெயர்கள் நினைவிருக்காது. அது இன்றளவும் ஒரு பிரச்னையாகவே உள்ளது" என்றார்.
பிரிட்டன் சுகாதார சேவை (என்.ஹெச்.எஸ்) அமைப்பின் கூற்றுப்படி, டி.பி.இ என்பது ஐரோப்பா, ரஷ்யா மற்றும் சீனா, ஜப்பானின் சில பகுதிகளில் காணப்படும் உண்ணிகள் கடிப்பதன் மூலம் பரவும் ஒரு வைரஸ் தொற்றாகும்.
பிரிட்டனில் டி.பி.இ தொற்றால் பாதிக்கப்படுவதற்கான அபாயமும், உண்ணி கடித்தால் கடுமையாக நோய்வாய்ப்படுவதற்கான அபாயமும் மிகக் குறைவு என்று என்.ஹெச்.எஸ் தெரிவித்துள்ளது.
உண்ணி கடித்த சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, சோர்வு, தலைவலி போன்ற அறிகுறிகள் தோன்றலாம். மேலும், வலிப்பு, குழப்பநிலை, தெளிவற்ற பேச்சு அல்லது உடலின் ஒரு பகுதியை இயக்க முடியாத நிலை போன்ற தொற்றுநோயின் தீவிர அறிகுறிகளும் ஏற்படக்கூடும்.
நோய்த்தொற்று பரவலாக இருக்கும் நாடுகளுக்குச் சென்று செயல்பாடுகளில் ஈடுபட விரும்பும் எவரும், அங்கு செல்வதற்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே டி.பி.இ-க்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று என்.ஹெச்.எஸ் அறிவுறுத்துகிறது.

பட மூலாதாரம், Victoria Stellas
'ஒரு நாளைக்கு 15 முதல் 18 மாத்திரைகள்'
கிரீஸில் பிறந்து வளர்ந்து, தமது ஐந்து வயதில் வேல்ஸுக்குக் குடிபெயர்ந்த விக்டோரியா, ஒவ்வொரு ஆண்டும் விடுமுறைக்காக அங்குச் சென்று வருகிறார். இருப்பினும் இந்தத் தடுப்பூசியைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் விரும்புகிறார்.
ஆபத்து நிறைந்த பகுதிகளுக்குச் செல்லும்போதும், வனப்பகுதிகள் அல்லது விலங்குகளுக்கு அருகில் நேரத்தைச் செலவிடும்போதும் மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், பாங்கர் பல்கலைக்கழக மாணவர்களிடம் தனது அனுபவத்தைப் பகிர்ந்து வருகிறார்.
விக்டோரியா இப்போது ஒரு நாளைக்கு 15 முதல் 18 மாத்திரைகள் வரை உட்கொள்கிறார், மேலும் அன்றாடப் பணிகளை எவ்வாறு செய்வது என்பதை நினைவில் கொள்ள உத்திகளை அவர் கண்டறிய வேண்டியுள்ளது.
தனக்கு இரவில் ஏற்படும் வலிப்புகள் இப்போது "முன்பு இருந்த அளவுக்குத் தொடர்ச்சியாக இல்லை"என்று கூறிய அவர், "நான் இப்போது என் அம்மாவுடன் தூங்குகிறேன். இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவாக இருக்கும் என் குடும்பத்தினரையும் நண்பர்களையும் பெற நான் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன்" என்றும் கூறினார்.
இதுகுறித்து விக்டோரியாவின் தாயாரான லிஸ் ஸ்டெல்லாஸ், "அபாயமற்றவை என தோன்றும், ஆனால் ஆபத்தான விஷயங்கள் குறித்து நீங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். பூச்சி கடிகள் உங்கள் வாழ்க்கையில் கடுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் இதைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை" என்கிறார்.

பட மூலாதாரம், Victoria Stellas
டி.பி.இ தடுப்பூசி என்.ஹெச்.எஸ் அமைப்பில் கிடைப்பதில்லை. சிறப்பு பயண சுகாதார மையங்கள் மற்றும் மருந்தகங்கள் மூலமாக மட்டுமே தனியார் முறையில் அதைப் பெற முடியும்.
வேல்ஸ் பொது சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவுறுத்தலில், "உண்ணிகள் இருக்கக்கூடிய பகுதிகளில் நேரத்தைச் செலவிடும்போது, மக்கள் நீண்ட கை கொண்ட சட்டைகள் மற்றும் நீண்ட காற்சட்டைகளை அணிய வேண்டும், துணியால் மூடப்படாமல் வெளியே தெரியும்படி இருக்கும் உடலின் பகுதிகளில், டிஈஈடி அடங்கிய பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும், மேலும் முடிந்தவரை தெளிவான பாதைகளிலேயே செல்ல வேண்டும்.'' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ''வெளியில் நேரத்தைச் செலவிட்ட பிறகு, உங்கள் உடல், ஆடைகள் மற்றும் செல்லப்பிராணிகளில் உண்ணிகள் இருக்கிறதா என்று பரிசோதித்து, ஒட்டிக்கொண்டிருக்கும் உண்ணிகளை உண்ணி அகற்றும் கருவி அல்லது மெல்லிய முனை கொண்ட இடுக்கிகளைப் பயன்படுத்தி கூடிய விரைவில் அகற்றுவது முக்கியம். உடனடியாக அகற்றுவது, சில உண்ணிகளால் பரவும் தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கிறது" என்று தெரிவித்தது.

பட மூலாதாரம், Getty Images
விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்த்தொற்றுகளில் நிபுணத்துவம் பெற்ற லிவர்பூல் பல்கலைக்கழக பேராசிரியர் பெனடிக்ட் மைக்கேல் , கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் டி.பி.இ பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், ஆனால் பிரிட்டனில் "மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே" உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நோய் ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே அதிக ஆபத்து மண்டலங்களாகக் குறிப்பிடுவது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் கூறினார்.
மேலும் விக்டோரியாவுக்கு நடந்தவை "அதிர்ஷ்டவசமாக ஒப்பீட்டளவில் அரிதானவை" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"மொத்தத்தில், 3% மக்களுக்கு மட்டுமே மூளைத் தொற்று சிக்கல் ஏற்படும். 97% மக்களுக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது அல்லது குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் கடுமையான காய்ச்சல் போன்ற நிலை இருக்கும்" என்று அவர் விளக்கினார்.
மேலும்,"இதற்குச் சிறந்த வைரஸ் எதிர்ப்புச் சிகிச்சைகள் நம்மிடம் இல்லாததால் இது ஒரு முக்கியமான பாதிப்பாகும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"எனவே, விக்டோரியாவின் நிலையைப் போல ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும், வலிப்பு மற்றும் பிற சிக்கல்களைத் தடுப்பதும்தான் சிகிச்சையின் முக்கிய நோக்கமாக இருக்கும். மேலும், இந்த நோயை தடுப்பூசி மூலம் தடுக்க முடியும் என்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்," என்று பேராசிரியர் பெனடிக்ட் மைக்கேல் தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































