You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மெஸ்ஸியை முந்தி எம்பாப்பே புதிய சாதனை: 10 கோல் விழுந்த பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி
- எழுதியவர், எம்மா ஸ்மித்
- பதவி, பிபிசி விளையாட்டு செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
யாருமே விளையாட விரும்பாத ஒரு போட்டி, முடியவே கூடாது என எல்லோரும் நினைக்கும் ஒரு போட்டியாக மாறிவிட்டது.
உலக கோப்பை தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டி 10 கோல்கள் உடன் பரபரப்பான ஆட்டமாக மாறியது. இது 'வெண்கலத்திற்கான போட்டி' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் 6 கோல்கள் அடித்து பிரான்ஸை இங்கிலாந்து வென்றது. கூடுதல் கோல்களும் அடிக்கப்பட்டிருக்கலாம் என்கிற அளவுக்கு இந்தப் போட்டி விறுவிறுப்புடன் இருந்தது.
1966 உலக கோப்பை இறுதிப் போட்டியில் சர் ஜியாஃப் ஹர்ஸ்டுக்குப் பிறகு உலக கோப்பை நாக் அவுட் போட்டி ஒன்றில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இங்கிலாந்து வீரரானார் புகாயோ சாகா. உலக கோப்பைகளில் பிரான்சுக்கு எதிராக ஒரு போட்டியில் மூன்று கோல்கள் அடித்த மற்றுமொரு வீரர் பெலே தான்.
1966 உலக கோப்பையை வென்ற பிறகு இங்கிலாந்து பெற்ற அதிகபட்ச இடம் இதுவே. வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற உலக கோப்பை தொடர் ஒன்றில் இங்கிலாந்து பெற்ற சிறந்த முடிவும் இதுவே.
மூன்றாவது இடத்துக்கான போட்டிகளில் அதிக கோல் அடிக்கப்பட்ட போட்டியில் இதனை இங்கிலாந்து அணி சாதித்துள்ளது. முன்னதாக 1958-இல் மேற்கு ஜெர்மனி உடனான மூன்றாவது இடத்துக்கான போட்டியில் 6-3 என்கிற கணக்கில் அடிக்கப்பட்டிருந்த கோல்களை இந்தப் போட்டி விஞ்சியது.
2002-இல் அர்ஜென்டினாவுக்கு எதிராக பெற்ற வெற்றிக்குப் பிறகு உலக கோப்பை தொடரில், ஃபிஃபா தரவரிசையில் தங்களை விட முன்னிலையில் உள்ள ஓர் அணியை இங்கிலாந்து இப்போது தான் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது.
புதன்கிழமை அர்ஜென்டினாவிடம் அரையிறுதியில் தோல்வியடைந்த பிறகு, அந்தப் பாதிப்பு இல்லாதவாறு விளையாடிய இங்கிலாந்து அணி, இந்தப் போட்டியில் முதல் பாதி கட்டத்தில் 4 கோல்கள் அடித்திருந்தது. இது போட்டிக்கு முந்தைய அனைத்து அவதானிப்புகளையும் மிஞ்சியது.
டெக்லன் ரைஸ் மற்றும் எஸ்ரி கொன்ஸா கோல் அடித்து முதல் 20 நிமிடங்களில் ஆட்டத்தை இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகு சாகா இரண்டு கோல்கள் அடித்தார்.
முதல் பாதியின் முடிவில் பிரான்ஸ் 4 கோல்கள் பின்தங்கியிருப்பது 1930 ஏப்ரலுக்குப் பிறகு முதல் முறையாக நடக்கிறது. போட்டி இடைவெளியின் போது வீரர்கள் அணியின் மேலாளர் டெய்டியர் தேஷாம்ப்ஸால் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். ஒரு மேலாளராக அவருக்கு இது கடைசிப் போட்டி.
இடைவெளிக்குப் பிறகு ஆட்டத்தின் போக்கு முற்றிலும் மாறியது. அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடித்த பிரான்ஸ் ஆட்டத்தை சமன் செய்யும் வாய்ப்பைத் தவறவிட்டது.
ப்ராட்லி பர்கோலா அடித்த கோலுக்கு முன்னும் பின்னும் கோல் அடித்த எம்பாப்பே 2026 உலகக்கோப்பையில் கோல்ட பூட் பந்தயத்தில் தன்னை முன்னிலைப்படுத்தினார். லியோனல் மெஸ்ஸியை முந்திய எம்பாப்பே 22 கோல்களுடன் உலக கோப்பைத் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரராக மாறினார்.
ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் டிஜெட் ஸ்பென்ஸ் மாலோ குஸ்டோவால் ஃபவுல் செய்யப்பட்ட பிறகு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி தனது ஹாட்ரிக் கோலை அடித்தார் இங்கிலாந்து வீரர் சாகா.
ஸ்டாப்பேஜ் நேரத்தின் 6வது நிமிடத்தில் பிரான்ஸின் டெம்பலே கோல் அடித்து 5-4 என மாற்றினார். ஆனால் 98-வது நிமிடத்தில் பிரான்ஸின் தடுப்பரணை மீறி கோல் அடித்த ஜூட் பெல்லிங்ஹாம் இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.
உலகக்கோப்பை போட்டிகளில் இதற்கு முன்பாக பிரான்ஸ் 6 கோல்களை விட்டுக் கொடுத்ததில்லை. அனைத்து விதமான போட்டிகளை எடுத்துக் கொண்டாலும் 66 ஆண்டுகளில் ஒரே போட்டியில் 6 கோல்களை பிரான்ஸ் விட்டுக் கொடுப்பதும் இதுவே முதல்முறை.
இந்த உலக கோப்பையில் 7 கோல்கள் அடித்த பெல்லிங்ஹாம் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த இங்கிலாந்து வீரரானார்.
"அது மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தத் தொடர் முழுவதிலும் நாம் பார்த்த மிகச் சிறந்த, தடையற்ற ஓட்டமுள்ள கால்பந்து ஆட்டங்களில் இதுவும் ஒன்று," என இங்கிலாந்து அணியின் முன்னாள் தடுப்பாட்டக்காரர் ஸ்டீபன் வார்னாக் போட்டி நாளன்று தெரிவித்திருந்தார்.
"மிகச் சிறந்த திறமை இங்கு வெளிப்படுகிறது. இன்று நான் பார்ந்த கால்பந்தாட்ட போட்டி, இதுவரை நான் பார்த்ததிலே சிறந்த ஆட்டங்களில் ஒன்று. நான் அனைத்தையும் பார்த்துவிட்டேன்," என முன்னாள் இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரரான டேனி மர்ஃபி கூறினார்.
அசாதாரணமான இந்தப் போட்டியில் என்ன நடந்தது?
ஹாரி கேன் விளையாடாத சூழலில் இங்கிலாந்தை வழிநடத்திய ரைஸ், மைதானத்தின் மையக்கோட்டில் டெசயர் டூயேவிடமிருந்து வந்த பாஸை இடைமறித்து, முன்னோக்கிப் வந்து, பெனால்டி பாக்ஸின் விளிம்பிலிருந்து பிரான்ஸ் கோல்கீப்பர் மைக் மெய்னானைக் கடந்து கோல் அடித்தார்.
ஆர்செனல் அணியில் நடுக்கள வீரரான அவர் அதன் பின்னர் இரண்டாவது கோல் அடிப்பதற்கான வாய்பபை உருவாக்கிக் கொடுத்தார். அவர் கொடுத்த பாஸை தடுப்பாட்டக்காரர் கொன்ஸா தலையில் முட்டி கோல் ஆக்கினார்.
இரு அணிகளுமே போட்டியின் போது திறந்த இடைவெளியை உருவாக்கியிருந்தன. அதனை இங்கிலாந்து தங்களுக்குச் சாதகமான பயன்படுத்திக் கொண்டது.
வேகமான தாக்குதல் ஆட்டத்தின்போது பிரான்சின் பாதி மைதானம் முழுவதும் சாகாவிற்கு வசமாக இருந்தது. ஆரம்பத்தில் மைனானால் தடுக்கப்பட்ட அவர், இறுதியில் மார்கஸ் ராஷ்ஃபோர்டின் பாஸைத் தொடர்ந்து கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் முதல் கோல் அடித்த எம்பாப்பே பிரான்ஸின் கணக்கைத் தொடங்கி வைத்தார். அதற்குச் சரியாக 6 நிமிடங்கள் கழித்து பர்கோலா இரண்டாவது கோல் அடித்தார்.
அதன்பிறகு தனக்குக் கிடைத்த கோல் வாய்ப்பை எம்பாப்பே மீண்டும் கோலாக மாற்றினார். இந்த உலக கோப்பைத் தொடரில் தனது 10-வது கோலை அடித்தார். அதன் மூலம் மெஸ்ஸியை முந்திய எம்பாப்பே இந்தத் தொடரில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக கோப்பைகளிலுமே அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார்.
1970-இல் பிரான்ஸ் வீரர் கெர்ட் முல்லருக்குப் பிறகு ஆடவர் உலக கோப்பை தொடரில் இரட்டை இலக்கத்தில் கோல் அடித்த முதல் வீரராகவும் மாறினார் எம்பாப்பே.
பெனால்டி வாய்ப்பு மூலம் இங்கிலாந்து வீரர் சாகா ஹாட்ரிக் கோல் அடிப்பதற்கு முன்பாக ஆட்டத்தைச் சமன் செய்து கூடுதல் நேரம் வரை எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை பிரான்ஸ் பலமுறை தவறவிட்டது.
டெம்பலே மீண்டும் ஒரு கோலை அடித்து அச்சுறுத்திய நிலையில் இங்கிலாந்து வீரர் பெல்லிங்ஹாம் கோல் அடித்து போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார். ஆடுகளத்தின் மையக்கோட்டிலிருந்து பந்தை எடுத்துக்கொண்டு முன்னேறி, மாக்சென்ஸ் லக்ரோயாவை முந்திச் சென்று, ஆட்டத்தின் கடைசி கோலை நிதானமாக அவர் அடித்தார்.
இங்கிலாந்தின் ஆட்டம் எப்படி இருந்தது?
அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து அணி, தாமஸ் டூசெலைக் மாற்று வீரராக களமிறக்கியது உள்ளிட்ட முடிவுகளைத் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணி மேலாளர் ஏழு மாற்றங்களை மேற்கொண்டார். கேன் மற்றும் பெல்லிங்ஹாம் விளையாட சூழலில் இந்தத் தொடர் முழுவதும் ஃபார்ம் இல்லாமல் தவித்த சாகாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
முதல் பாதி ஆட்டத்தில் மிகவும் புத்துணர்ச்சியாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்த செயல்பாடு மூலம் வெற்றி உறுதியானது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் சில பிழைகள் மற்றும் நெருக்கடியான சூழல்கள் இருந்த அதே வேளையில், மிகுந்த விரக்தி அளிப்பதாகவும் இருந்தது.
அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில், குறிப்பாக சாகாவின் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து, இந்த ஆக்ரோஷமான அணுகுமுறை எங்கு இருந்தது என இங்கிலாந்து ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். 'ஆஃப்சைட்' விதிமீறலால் ஒரு கோல் மறுக்கப்பட்ட போதிலும், ஹாட்ரிக் கோல்களை அடிப்பதற்கு முன்பிருந்தே வலதுபுற முனையிலிருந்து ஆட்டத்தை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் சாகா.
இந்த அபாரமான ஆட்டம் அரையிறுதிப் போட்டியில் ஏன் அவர் விளையாட வைக்கப்படவில்லை என்கிற கேள்வியை எழுப்புகிறது.
அர்ஜென்டினாவுக்கு எதிராக தடுப்பாட்டத்திற்கான மாற்றங்களை டூச்செல் மேற்கொண்ட நிலையில் அழுத்தம் குறைவான இந்தப் போட்டியில் அத்தகைய எந்த மாற்றங்களும் இருக்கவில்லை.
ஒரு முக்கியமான தொடரில் தாங்கள் எதிர்கொண்ட மிகவும் விநோதமான, அதேவேளையில் சுவாரஸ்யமான ஒரு போட்டியில் இங்கிலாந்து வென்றது.
இந்தப் போட்டியில் 38 ஷாட்கள் (அவற்றில் 20 இலக்கு மீது) அடிக்கப்பட்டன. உலக கோப்பையில் இங்கிலாந்து விளையாடிய ஒரு போட்டியில் இந்த முறை தான் அதிக கோல்கள் அடிக்கப்பட்டன.
பிரான்ஸின் ஆட்டம் எப்படி இருந்தது?
பிரான்ஸ் மேலாளர் தேஷாம்ப்ஸ் தனது 187-வது மற்றும் உலக கோப்பைத் தொடரில் 27-வது போட்டிக்குப் பிறகு தேசிய அணி பொறுப்பிலிருந்து விலகுகிறார்.
2018-இல் பிரான்ஸை உலக கோப்பை வெற்றிக்கு அழைத்துச் சென்ற தேஷாம்ப்ஸ், இந்தத் தொடரின் சிறந்த வீரரான எம்பாப்பே மற்றும் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிய மைக்கேல் ஒலீஸ் உடன் தொடங்கியபோது மீண்டும் வெற்றியுடன் தனது பணியை முடிக்க நினைத்தார்.
வரலாற்று அவமானத்தை ஏற்படுத்தும் அளவுக்கு முதல் பாதி ஆட்டம் இருந்தபோதிலும், இரண்டாம் பாதியில் மிகவும் மேம்பட்ட ஆட்டத்தை பிரான்ஸ் வெளிப்படுத்தியது. ஆனாலும், 1982-க்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான முதல் தோல்வியுடன் தனது பதவிக்காலத்தை முடித்துக்கொண்டார் தேஷாம்ப்ஸ்.
பிரான்ஸ் சில சமயங்களில் தாக்குதல் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இங்கிலாந்தின் மாற்று கோல்கீப்பரான ஹென்டர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரயான் செர்கி, எம்பாப்பே மற்றும் டெம்பலே ஆகியோரின் ஷாட்களைத் திறமையாகத் தடுத்தார். இதற்கிடையே இரண்டு தெளிவான வாய்ப்புகளைத் தவறிவிட்ட ஓலிஸ், கோல் அடிக்காமலே இந்தத் தொடரை முடிக்கிறார்.
படுமோசமாகவும் ஈடுபாடின்றியும் முதல் பாதி ஆட்டம் இருந்த நிலையில் இடைவேளைக்குப் பின் பிரான்சின் தரமும் ஆற்றலும் இங்கிலாந்தை நிலைகுலையச் செய்தன. ஆனால், நம்பமுடியாத அளவிலான ஒரு தோல்வியை அந்த அணி சந்தித்தது.
இந்த ஆட்டத்தில், 1958-இல் நடந்த பிரான்ஸ் 7-3 பராகுவே ஆட்டத்திற்கு சமமாக, உலகக் கோப்பை போட்டிகளில் ஐந்தாவது அதிகபட்ச கோல்கள் அடிக்கப்பட்டன. 1982-இல் ஹங்கேரி 10-1 எல் சால்வடார் ஆட்டத்திற்குப் பிறகு, இந்தத் தொடரில் நடந்த எந்தவொரு ஆட்டத்திலும் இதுவே அதிகபட்ச கோல்களாகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு