You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகக்கோப்பை கால்பந்தில் சர்ச்சைகளுக்கு வித்திட்ட 'ஆஃப்சைட்' விதி பற்றிய எளிய விளக்கம்
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
கால்பந்து உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. கோல் போஸ்ட்டுக்குள் விழுந்தால் கோல், அதிக கோல்கள் அடித்தால் வெற்றி. கோல் கிக், கார்னர் கிக், பாக்சுக்கு வெளியே ஃபவுல் ஆனால் ஃப்ரீ கிக், பாக்சுக்குள் ஃபவுல் ஆனால் பெனால்டி, கடுமையான ஃபவுல் செய்தால் மஞ்சள் அட்டை, அதைவிடக் கடுமையான ஃபவுல் என்றால் சிவப்பு அட்டை. அவ்வளவுதான்.
ஆனால், அந்த கோல் என்பதை கடினமானதாக மாற்றும் ஒரு விதி இருக்கிறது. கால்பந்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களைக் குழப்பும், அச்சுறுத்தும் ஒரு விதி - ஆஃப் சைட்.
புரிந்தவர்களையுமே கூட இந்த விதி நிறைய விவாதங்களுக்கு உட்படுத்தும். பல சர்ச்சைகளை எழுப்பிக்கொண்டே இருக்கும். பல்வேறு உட்பிரிவுகள், நுணுக்கங்கள் என மேலும் மேலும் நுட்பமாக செல்ல வேண்டியிருக்கும்.
கால்பந்தில் இந்த ஆஃப் சைட் விதி என்பது எப்போதுமே சர்ச்சைகளைக் கிளப்புவதாகவும், விவாதங்களை ஏற்படுத்துவதாகவுமே இருந்திருக்கிறது. அது தற்போது நடந்துவரும் ஃபிஃபா உலகக் கோப்பை தொடரிலுமே கூட தொடர்ந்துகொண்டிருக்கிறது.
கோல்கீப்பர் நின்ற இடம், பந்து ஒரு வீரர் மீது பட்டதா என்ற கேள்வி, எதிரணி வீரர் மீது வேண்டுமென்றே பட்டதா என்ற கேள்வி, ஃபவுல் செய்யப்பட்டபோது ஒரு வீரர் ஆஃப் சைட் பொசிஷனில் இருந்தாரா... இவை இந்த உலகக் கோப்பையில் ஆஃப் சைட் முடிவுகள் பற்றி எழுந்த கேள்விகள். ஆம், இவை இந்தத் தொடரில் மட்டுமே எழுந்த கேள்விகள். இதுதான் ஆஃப் சைட் எழுப்பும் கேள்விகள்.
ஆஃப் சைட் என்றால் என்ன? ஏன் இந்த ஆஃப் சைட் என்பது புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான ஒரு விதியாக இருக்கிறது? எதனால் இந்த விதிகள் பயன்பாட்டுக்கு வந்தன?
ஆஃப்சைட் என்றால் என்ன?
கால்பந்தில் கோல் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது. அதை எப்படி அடிக்கிறார்கள், தடுக்கிறார்கள் என்பதுதான் அந்த ஆட்டத்தை சுவாரஸ்யமாக்குகிறது. ஆனால், எதிரணியின் கோல் போஸ்ட்டுக்கு அருகிலேயே நின்றுகொண்டு பந்தை கோலாக்கினால்? அது அந்த ஆட்டத்தின் சுவாரஸ்யத்தைப் போக்கிவிடும் அல்லவா, அதனால் அதை தடுக்கத்தான் ஆஃப் சைட் விதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்றைய விதிப்படி, ஒரு வீரர் எதிரணியின் பாதியில் இருக்கும்போது, பந்து மற்றும் எதிரணியின் கடைசிக்கு முந்தைய வீரர் ஆகிய இருவரையும் விட எதிரணியின் இலக்கிற்கு மிக அருகில் இருந்தால், அவர் ஆஃப்சைடு நிலையில் இருப்பதாகக் கருதப்படுவார்.
அதை எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், எதிரணியின் பாதியில் இருக்கும் ஒரு வீரருக்கும் எதிரணியின் கோல் போஸ்ட்டுக்கும் இடையே குறைந்தபட்சம் 2 எதிரணி வீரர்களோ அல்லது பந்தோ இருக்கவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அந்த வீரர் ஆஃப் சைட் பொசிஷனில் இருப்பதாகக் கருதப்படுவார்.
அப்படி ஆஃப் சைட் பொசிஷனில் இருக்கும் வீரர் ஆட்டத்தில் பங்கேற்காத வரை பிரச்னை இல்லை. ஆனால் அந்த இடத்தில் இருந்துகொண்டு அவர் பாஸ் பெற்றாலோ, பந்தைப் பெற முயற்சி செய்தாலோ அல்லது எதிரணி வீரருக்கு இடையூறாக இருந்தாலோ ஆஃப் சைட் கொடுக்கப்படும்.
ஒரு வீரர் ஆஃப் சைட் பொசிஷனில் இருப்பதற்கு, அவர் முழு உடலும் எதிரணி வீரரைத் தாண்டி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அந்த வீரரின் கோலடிக்கக் கூடிய உடல் பாகங்கள் எதிரணி வீரரைத் தாண்டியிருந்தாலே அது ஆஃப் சைடாகக் கருதப்படும். கோலடிக்கக் கூடிய பாகங்கள் தாண்டியிருந்தால் மட்டும் தான் அது ஆஃப் சைட்.
உதாரணமாக படம் 1-ஐ பாருங்கள். அர்ஜென்டினா மற்றும் சௌதி அரேபியா அணிகள் மோதிய 2022 உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினா ஸ்டிரைக்கர் லௌடாரோ மார்டினஸ் (ஜெர்ஸி எண் 22) அடித்த கோல் ஆஃப் சைட் என்று மறுக்கப்பட்டது. சௌதி அரேபிய வீரரின் கடைசிப் பாகம் அவருடைய இடது கால்.
லௌடாரோ மார்டினஸின் இடது கை அவரைத் தாண்டி இருக்கிறது. ஆனால், கையில் பட்டு சென்றால் அது கோல் இல்லை என்பதால் அது பிரச்னையில்லை. அதேசமயம் இந்தப் படத்தில் கோலடிக்கக் கூடிய கடைசி உடல் பாகம் மார்டினஸின் இடது தோள்பட்டை. அது சௌதி அரேபிய டிஃபண்டரைத் தாண்டி இருப்பதால் அந்த கோல் ஆஃப் சைட் காரணமாக நிராகரிக்கபப்ட்டது.
இதில் இன்னொரு நுணுக்கமான விஷயமும் இருக்கிறது. ஒரு வீரர் பாஸ் பெறும்போது எங்கே இருக்கிறார் என்பது பிரச்னை இல்லை. அந்த பாஸ் ஆரம்பித்தபோது அவர் எந்த இடத்தில் இருந்தார் என்பதுதான் கருதப்படும்.
சில உதாரணங்கள் மூலம் ஆஃப் சைட் பற்றி புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். படம் 2-ஐ பாருங்கள். 2023ம் ஆண்டு செல்சீ (நீல ஜெர்ஸி) மற்றும் லிவர்பூல் (சிவப்பு ஜெர்ஸி) அணிகள் மோதிய பிரீமியர் லீக் போட்டியில் ஒரு ஆஃப் சைட் முடிவை விஏஆர் (VAR - Video Assistant Referee) சோதிக்கும் காட்சி இது.
இங்கே செல்சீ பாதியில் லிவர்பூல் அணி அட்டாக் செய்கிறது. லிவர்பூல் வீரர் டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னால்ட் (TAA) மொஹமது சலாவுக்கு பாஸ் செய்கிறார். அந்த பாஸ் செய்யும்போது சலா இருக்கும் இடத்தைப் பாருங்கள். செல்சீ அணியின் அனைத்து டிஃபண்டர்களையும் சலா தாண்டியிருக்கிறார். சலாவுக்கும் கோல் போஸ்ட்டுக்கும் இடையே இருப்பது ஒரேயொரு செல்சீ வீரர் (இந்தப் படத்தில் இல்லாத செல்சீ கோல்கீப்பர் ராபர்ட் சான்சஸ்) மட்டும் தான்.
இங்கே விஏஆர் சோதனையில், கடைசிக்கு முந்தைய செல்சீ வீரரான டிசாஸி இருக்கும் இடம் நீலக் கோட்டிலும், சலா இருக்கும் இடம் சிவப்புக் கோட்டிலும் குறியிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. அதில் சலா டிசாஸியைத் தாண்டியிருப்பது நன்கு தெரிகிறது. அந்த வீரருக்கும், எதிரணி கோல் போஸ்ட்டுக்கும் இடையே குறைந்தபட்சம் 2 எதிரணி வீரர்கள் இருக்கவேண்டும் என்பதால், இந்த இடத்தில் அப்படி இல்லை என்பதால் இது ஆஃப் சைட். இங்கே சலா கோல் அடித்தும், சோதனைக்குப் பிறகு அது மாற்றப்பட்டது.
படம் 3-ஐ பாருங்கள். 2020-ஆம் ஆண்டு நார்விச் சிட்டி (மஞ்சள் & பச்சை ஜெர்ஸி) மற்றும் கிறிஸ்டல் பேலஸ் (வெள்ளை ஜெர்ஸி) அணிகள் மோதிய பிரீமியர் லீக் போட்டியில், கிறிஸ்டல் பேலஸ் வீரர் கானர் விக்ஹம் அடித்த கோல் ஆஃப் சைடுக்காக சோதிக்கப்பட்டது. நார்விச் சிட்டி டிஃபண்டரின் கடைசி பாகமான அவரது வலது கால் இருந்த இடம் நீலக் கோட்டின் மூலம், விக்ஹமின் (கோலடிக்கக்கூடிய) கடைசி பாகமான தலை இருந்த இடம் சிவப்புக் கோட்டின் மூலம் காட்டப்பட்டிருக்கின்றன. விக்ஹமைத் தாண்டி நார்விச் டிஃபண்டர் ஒருவர் மற்றும் கோல்கீப்பர் என இருவர் இருந்ததால், அது ஆன்சைட் தான். அதனால், இங்கே கோல் நிராகரிக்கப்படவில்லை.
முன்பு சொல்லப்பட்ட ஆஃப் சைட் விதியில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒரு பாஸ் கொடுக்கப்படும் போது, கோல் போஸ்ட்டுக்கும் பந்தைப் பெறும் வீரருக்கும் இடையே பந்து இருந்தால், அது ஆஃப் சைடாகக் கருதப்பட்டாது.
என்னென்ன விலக்குகள் உள்ளன?
ஆஃப் சைட் விதிக்கு ஒருசில விலக்குகள் இருக்கின்றன. பந்தைப் பெறும் ஒரு வீரர், அந்தப் பந்து அடிக்கப்பட்டபோது தங்கள் அணியின் பாதியில் இருந்தால் அது ஆஃப் சைட் கிடையாது. ஒரு வீரர் எதிரணியின் பாதியில் இருந்தால் தான் ஆஃப் சைட் என்பதே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அதேபோல் கார்னர் கிக், கோல் கிக், த்ரோ இன் ஆகியவற்றின் போதும் ஒரு வீரர் ஆஃப் சைட் பொசிஷனில் இருக்க அனுமதிக்கப்படுவார்.
ஒருவேளை எதிரணி வீரரிடம் இருந்து பந்து கிடைக்கப் பெறும் வீரர் ஆஃப் சைடில் இருந்தாலும், அது கணக்கில் கொள்ளப்படாது. தன் அணி வீரர் கொடுக்கும் பாஸைப் பெறும்போதுதான் ஆஃப் சைட் செல்லும். ஆனால், எதிரணி வீரரிடம் இருந்து கிடைக்கும் பந்து என்பது எதிரணி வீரருக்கு தெரியாமல் அவர் மீது பட்டதாக அல்லாமல் அவர் கையாள முயன்ற (intentional pass) பாஸாக இருக்கவேண்டும்.
இந்த விதி பற்றியும், இன்ன பிற நுணக்கங்களையும் சில உதாரணங்கள் கொண்டு பார்ப்போம்.
இரான் - எகிப்து ஆட்டம் சர்ச்சை ஆனது ஏன்?
நடந்துவரும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில், ஜூன் 27ம் தேதி இரான் மற்றும் எகிப்து அணிகள் மோதின. இரான் அடுத்த சுற்றுக்கு முன்னேற அந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாக இருந்தது. ஆட்டம் 1-1 என்றிருந்த நிலையில், இரண்டாவது பாதியின் ஸ்டாப்பேஜ் டைமில் இரான் அணி ஒரு கோல் அடித்தது. ஆனால், ஆஃப்சைட் என்று நடுவர்கள் அதை நிராகரித்தார்கள்.
அந்த நிராகரிக்கப்பட்ட கோல் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆஃப் சைட் இடத்தில் இருந்ததாக சொல்லப்பட்ட ஷோஜா கலில்சதேவுக்குப் பின்னால் எகிப்து தற்காப்பு வீரர் ஒருவர் நின்றிருந்ததாகவும், அதனால் அது ஆஃப் சைட் இல்லை என்றும் பல ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். அந்த கோல் நிராகரிக்கப்பட்டதால் இரான் அணியின் நாக் அவுட் வாய்ப்பு சந்தேகத்துக்கு உள்ளாகிவிட்டதாக வாதிட்டார்கள்.
படம் 4-ஐப் பாருங்கள். இரான் வீரர் கலில்சதேவ் (வெள்ளை ஜெர்ஸி), எகிப்து அணி வீரர் (சிவப்பு ஜெர்ஸி) மெஹதி டரேமிக்குப் பின்னால் இருக்கிறார். அதனால் ஆஃப் சைட் கொடுக்கப்பட்டது. ஆனால், இதற்குப் பின்னாலும் ஒரு எகிப்து வீரர் இருந்ததால் அது ஆஃப் சைட் இல்லை என்று பலர் வாதிடுகிறார்கள். அது உண்மைதான்.
எகிப்து டிஃபண்டர் யசெர் இப்ராஹிம் அந்தத் தருணத்தில் டரேமிக்குப் பின்னால் தான் இருந்தார். அப்படியெனில் ஏன் அவர் ஆஃப் சைட் இல்லை? காரணம், அப்போது இப்ராஹிம், டரேமி இருவருக்கும் முன்னால் இருந்தார் எகிப்து கோல்கீப்பர் மொஸ்தஃபா அஹமது ஷொபெய்ர்.
கலில்சதேவ் அடித்த அந்த கோல் ஃப்ரீ கிக் வாயிலாக வந்தது. அந்த ஃப்ரீ கிக் பாக்சுக்குள் வந்தபோது அதைத் தடுக்க முன்னால் ஓடிவந்தார் ஷொபெய்ர். அவர் பந்தைத் தவறவிட்டுவிட, இரான் வீரர் மொகமது கொர்பானி பந்தை இலக்கை நோக்கி அடித்தார். அது தடுக்கப்பட்டு கலில்சதேவ் வசம் சென்றது. அதைத்தான் அவர் கோலாக்கினார். கொர்பானி அந்தப் பந்தை அடித்தபோது கோல்கீப்பர் ஷொபெய்ர் டரேமி, இப்ராஹிம் இருவருக்கும் முன்னால் இருந்தார்.
ஆஃப் சைட் விதிப்படி ஒரு வீரருக்கும் கோல் போஸ்ட்டுக்கும் இடையே எதிரணியின் 2 வீரர்கள் இருக்கவேண்டும். இந்த இடத்தில் இப்ராஹிம் மட்டுமே கோல் போஸ்ட்டுக்கும் கலில்சதேவுக்கும் இடையே இருந்ததால் அது ஆஃப் சைட் என்று நிராகரிக்கப்பட்டது.
பொதுவாக கோல்கீப்பர் கோல் போஸ்ட்டுக்கு அருகிலேயே இருப்பார்கள் என்பதால், அட்டாக் செய்யும் வீரர் எதிரணியின் ஒரு டிஃபண்டருக்கு முன் இருந்தாலே போதும் என்ற பார்வை இருக்கும். பெரும்பாலான ரசிகர்கள் அப்படியே பார்த்துப் பழகிவிட்டார்கள்.
ஆனால், அது கோல்கீப்பரா, தற்காப்பு வீரரா, தாக்குதல் ஆட்டக்காரரா என்பதெல்லாம் விஷயமே இல்லை, 2 எதிரணி வீரர்கள் அங்கு இருக்கவேண்டும். அவ்வளவுதான். இந்த இடத்தில் கோல்கீப்பர் முன்னே இருந்ததால், அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதைப் பல ரசிகர்கள் கவனிக்காததால் தான் இந்த ஆஃப் சைட் முடிவு அப்போது விவாதங்களை எழுப்பியது.
இந்த உதாரணம் மூலம் இன்னொரு விஷயத்தையும் புரிந்துகொள்ளலாம். கலில்சதேவ் கோலடிப்பதற்கு முன் பாஸ் மூலம் பந்தைப் பெறவில்லை. கொர்பானி இலக்கை நோக்கி அடித்த ஷாட் பாய்ந்து வந்த கோல்கீப்பரால் தடுக்கப்பட்டே கலில்சதேவ் வசம் சென்றது. ஆஃப் சைட் விதிப்படி பாஸ்கள் மட்டுமல்ல, இப்படி தடுக்கப்பட்டு வரும் ஷாட்கள் அடிக்கப்பட்டபோது அந்த வீரர் ஆஃப் சைட் பொசிஷனில் இருந்தாலும், அது ஆஃப் சைடாகவே கருதப்படும்.
போர்ச்சுகல் - குரோஷியா ஆட்டத்தில் என்ன குழப்பம்?
ஜூலை 3ம் தேதி போர்ச்சுகல் மற்றும் குரோஷியா அணிகள் மோதிய ரவுண்ட் ஆஃப் 32 போட்டியிலும் ஒரு ஆஃப் சைட் முடிவு பெறும் விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியது. கடைசி நிமிடத்தில் குரோஷிய வீரர் குவார்டியோல் அடித்த கோல் நிராகரிக்கப்பட்டதால், அந்த அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.
குரோஷிய வீரர் பெரிசிச் பந்தை கிராஸ் செய்ய, அந்தப் பந்து இகோர் மாடனோவிச் தலையை உரசி, பின்னர் போர்ச்சுகல் டிஃபண்டர் ரெனாடோ வேகா தலையில் பட்டு, பசாலிச்சிடம் சென்றது. அதை பசாலிச் கட்டுப்படுத்தி மையப்பகுதிக்கு அனுப்ப, குவார்டியோல் அதை கோலாக்கினார். இங்கே மாடனோவிச் தலையில் பந்து பட்டபோது பசாலிச் ஆஃப் சைட் பொசிஷனில் தான் இருந்தார்.
ஆனாலும், இந்த விஷயம் சர்ச்சைக்கு உள்ளாவதற்கு 2 காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இகோர் மாடனோவிச் தலையில் பந்து பட்டதா என்பது, இன்னொன்று அப்படிப் பட்டிருந்தாலும், அடுத்ததாக போர்ச்சுகல் வீரர் வேகா மீதும் பந்து பட்டிருந்தது. அதனால் பசாலிச் ஆஃப் சைட் பொசிஷனில் இருந்தது செல்லுமா என்பதும் கேள்வியானது.
இகோர் மாடனோவிச் தலையில் பந்து உரசிச் சென்றது வெளிப்படையாகத் தெரியவில்லை. அதனால், கிரிக்கெட்டில் வருவதுபோல் ஸ்னிக்கோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விஏஆர், கள நடுவரையும் அதைப் பரிசீலிக்கச் சொல்லியது. அதைப் பரிசீலித்த நடுவர் பந்து இகோர் மாடனோவிச் தலையில் உரசியதை உறுதி செய்தார்.
அடுத்த கேள்வி, வேகா மீது பந்து பட்டதால் அது ஆஃப் சைட் ஆகுமா என்பது. ஆஃப் சைட் விதியைப் பொறுத்தவரை எதிரணி வீரர் பந்தை வேண்டுமென்றே தொட்டிருந்தாலோ அடித்திருந்தாலோ தான் ஆஃப் சைடில் ஒரு வீரர் இருந்தாலும் அது ஆன் சைட் என்று கருதப்படும்.
இதுவே எதிரணி வீரர் மீது தெரியாமல் பட்டு வந்தாலோ, அவர் பந்தைத் தடுக்கச் செல்லும்போது அவர் மீது பட்டு திசைதிரும்பி வந்திருந்தாலோ, அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அந்த வீரர் ஆஃப் சைட் பொசிஷனில் இருந்ததாகவே கருதப்படும்.
அந்த வகையில் இந்தத் தருணத்தில் வேகா குனியும்போது இகோர் மாடனோவிச் மீது பட்டு வந்த பந்து, வேகா மீதும் தெரியாமல் பட்டுச் சென்றிருக்கிறது என்றே கருதப்பட்டது. வேகா பந்தை வேண்டுமென்றே தொட்டாரா என்பதை உறுதி செய்யத்தான் விஏஆர், கள நடுவரை பரிசீலனைக்கு அழைத்தது.
வேகா மீது பந்து எதேச்சையாகவே பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார் கள நடுவர். அதனால், பசாலிச் ஆஃப் சைட் பொசிஷனில் இருந்ததாகவே கருதப்பட்டு அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.
இதுபோன்ற தருணங்களில் ஒவ்வொருவரின் பார்வையும் வேறு வேறு இருக்கும். ஒருவர் வேகா வேண்டுமென்றே பந்தைத் தொட முயற்சி செய்தார் என்று சொல்வார்கள், சிலர் அதை மறுப்பார்கள். இகோர் மாடனோவிச் பந்தைத் தொட்டதும் அப்படித்தான். அனைவரின் பார்வையுமே மாறும். இதுபோன்ற தருணங்களில் கள நடுவரின் பார்வையே இறுதி முடிவைத் தீர்மானிக்கின்றன.
அதனால் தான் விஏஆர் கூட தாங்களே முடிவெடுக்காமல் நடுவரை பரிசீலனைக்கு அழைத்து அவரையே முடிவெடுக்க வைத்தன. ஒவ்வொருவரின் பார்வையும் மாறும் என்பதால், இது பெரும் விவாதமாக வெடித்தது.
ஆஃப் சைட் எப்படியெல்லாம் கண்டறியப்படுகிறது?
முன்பெல்லாம் ஒரு வீரர் ஆஃப் சைட் பொசிஷனில் இருக்கிறாரா என்பதை உதவி நடுவர்களே கண்டறிவார்கள். அப்போதெல்லாம் நிறைய கோல்கள் மீது ஆஃப் சைட் சர்ச்சைகள் எழும். பின்னர் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகு தற்போது அந்தத் தவறுகள் குறைந்திருக்கின்றன. விஏஆர் எனப்படும் வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரீ தற்போது ஆஃப் சைட்களைக் கண்டறிவதில் உதவி செய்கிறார்கள்.
விஏஆர் நடுவருக்கு சில உதவி நடுவர்கள் கொடுக்கப்படுவார்கள். அவர்கள் தனியாக ஒரு அறையில் இருப்பார்கள். போட்டியில் நடந்தவற்றை வீடியோ மூலம் பார்த்து, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்கள் இறுதி முடிவை எடுப்பார்கள்.
மேலே காட்டப்பட்ட பிரீமியர் லீக் சார்ந்த படங்களில் அந்தக் கோடுகள் இட்டுக் காட்டப்பட்டிருக்கிறது, அவையெல்லாம் முழுக்க நடுவர்களால் செய்யப்படுவது. காட்சிகளை நிறுத்தி அவர்கள் வீரர்களின் இடங்களைக் கணிக்கிட்டு ஆஃப் சைட் பற்றிய முடிவை அவர்கள் எடுப்பார்கள்.
அதேசமயம் உலகக் கோப்பை போன்ற ஒருசில தொடர்களில் ஆஃப் சைடைத் தீர்மானிக்க பகுதியளவு தானியங்கி ஆஃப்சைட் தொழில்நுட்பம் (Semi-Automated Offside Technology - SAOT) பயன்படுத்தப்படும். களத்தில் இருக்கும் நாற்பதற்கும் மேற்பட்ட கேமராக்கள், பந்தில் இருக்கும் சிப் போன்றவை ஆஃப் சைடைத் தீர்மானிக்க உதவிகரமாக இருக்கும். படம் 1, எஸ்ஏஓடி தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்பட்ட முடிவு தான்.
ஒவ்வொரு முன்னணி கால்பந்து தொடரிலும் ஒவ்வொரு வகையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு