You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க இணையதளம்'- சென்னை மென்பொறியாளர் கூறுவது என்ன?
'புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பித்தால் 30,000 ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள்', 'பஞ்சாயத்து எழுத்தர் பதவி நியமனத்துக்காக, சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் 15 லட்சம் ரூபாய் கேட்கிறார்', 'பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் 2,500 ரூபாய் பணம் கேட்கிறார்கள்'...
இதுபோன்ற 900க்கும் மேற்பட்ட புகார்கள் 'மக்கள் சாட்சி' என்ற இணையதளத்தில் பதிவாகியுள்ளன. ஆனால், இது அரசு இணையதளம் அல்ல, தனி நபர் ஒருவரால் உருவாக்கப்பட்டது.
இதை உருவாக்கியுள்ள சென்னை சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான தீபக் சிவக்குமார், "ஊழலுக்கு எதிரான நோக்கத்துடன் மக்கள் சாட்சி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அலுவலகம் வாரியாக, மாவட்டம் வாரியாக மற்றும் பிரிவு வாரியாக பெயர் குறிப்பிடாமல் புகார்களை பதிவு செய்வதற்கான ஒரு பொதுத் தளமாகும்" என்கிறார்.
ஆனால், தனி நபர் உருவாக்கிய இணையதளத்தில் அரசு அதிகாரிகள் குறித்த புகார்களை பொது மக்கள் பதிவு செய்வதில், தரவுகள் கசிவது அல்லது தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான ஆபத்துகள் உள்ளன என, சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதேசமயம், இதுபோன்ற முன்னெடுப்புகள் சட்டரீதியாக தவறு இல்லை, ஆனால் அதை அரசு எடுத்து செய்ய வேண்டும் என்றும் சட்ட நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
'மக்கள் சாட்சி'
தமிழக வெற்றிக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இருக்கும் மென்பொருள் பொறியாளர் சிவக்குமார், "முதலில் டாஸ்மாக் துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்து புகார் அளிக்க ஒரு போர்ட்டலை (Portal) தொடங்கினேன். தொடங்கிய ஒரு சில நாட்களில் 300க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன. பெரும்பாலானவை பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவது தொடர்பான புகார்கள்" என்கிறார்.
"ஒரு துறைக்கே இவ்வளவு புகார்கள், அனைத்து துறைகள் தொடர்பாகவும் புகார் அளிக்க ஒரு இணையதளம் இருந்தால் மக்களுக்கு உதவியாக இருக்குமே என எண்ணி 'மக்கள் சாட்சி' தளத்தை உருவாக்கினேன்" என்கிறார் அவர்.
சிவக்குமாரின் 'மக்கள் சாட்சி' தளத்தில் புகார்கள் தொடர்ந்து பதிவாகின்றன. குறிப்பாக, மின்சாரத்துறை குறித்து அதிக புகார்கள் பதிவாகியுள்ளன.
'போக்குவரத்து காவலர் ஒருவர் 500 ரூபாய் லஞ்சம் கேட்டார்' என்பதில் தொடங்கி 'சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார்' என 200க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.
"பெயர் குறிப்பிடாமல் புகார் அளிப்பதற்கான வசதி உள்ளது, சிலர் விருப்பப்பட்டு தங்களது பெயர்களையும் குறிப்பிடுவார்கள்" என்கிறார் சிவக்குமார்.
அதேசமயம், தான் எந்த வகையிலும் தமிழக அரசுடன் தொடர்புடையவர் அல்ல என்பதால், இந்தத் தளம் பயனர்களின் முக்கியத் தகவல்களை சேமித்து வைப்பதில்லை அல்லது புகார்தாரர்களின் தனிப்பட்ட விவரங்களை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்வதில்லை என்று சிவக்குமார் குறிப்பிடுகிறார்.
"சில புகார்களின் தன்மை கருதி அதை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கோ, காவல்துறைக்கோ அல்லது லஞ்ச ஒழிப்பு துறைக்கோ அனுப்பி வைக்கிறேன். சமூக ஊடகங்களில் அதை பகிர்கிறேன்" என்கிறார் அவர்.
அப்படி ஒரு புகாரை பகிர்ந்தபோது காவல்துறை உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தது என அவர் கூறுகிறார்.
"ஜூன் 6ஆம் தேதி 'மக்கள் சாட்சி' தளத்தில் ஒரு புகார் பதிவானது. அது மூன்று மாதங்களுக்கு முன் நடந்த 'நிதி மோசடி' தொடர்பான புகார். இழந்த பணத்தை மீட்க, காவல்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டதாக அந்தப் புகார் தெரிவித்தது." என்கிறார்.
தான் அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து காவல்துறை ஆணையரை 'டேக்' செய்ததாக கூறும் சிவக்குமார், "உடனடியாக, பெருநகர சென்னை காவல்துறையின் இணை ஆணையர் (தெற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு), பி. விஜயகுமார், என்னைத் தொடர்பு கொண்டார். அதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் புகார்தாரரின் இல்லத்துக்குச் சென்று, எழுத்துப்பூர்வமான புகாரைப் பெற்று, பணத்தை மீட்க உதவுவதாக உறுதியளித்துள்ளனர்" என்கிறார்.
தனிநபர் செய்வது சரியா?
ஆனால், நோக்கம் சரியானதாக இருந்தாலும், தனிநபர் ஒருவர் இதைச் செய்வதால் தரவுகள் சார்ந்து சில அபாயங்கள் உள்ளன என குறிப்பிடுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை.
"தரவுகள் கசிவது தொடர்பான அபாயம் ஒருபுறம் உள்ளது. சில புகார்களில் பெயர் இல்லாவிட்டாலும், அந்த நபரைக் கண்டறிவதற்கு போதுமான விவரங்கள் உள்ளன. உதாரணத்துக்கு ஒரு புகாரில் பட்டா எண் உள்ளது. இதை வைத்து யார் புகார் அளித்தார்கள் என கண்டறிந்து அந்த நபருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதை எப்படி தடுக்க முடியும்?" என கேள்வியெழுப்புகிறார் முரளிகிருஷ்ணன்.
அதேபோல, "அந்தத் தளத்தில் பதிவாகும் புகார்கள் எந்த அடிப்படையில் உண்மையான புகார்கள் அல்லது போலியான புகார்கள் என தரம் பிரிக்கப்படுகின்றன. அதில் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, ஒருவேளை அது பொய் புகாராக இருந்தால், அது அந்த அதிகாரியை அவமானப்படுத்தும் அல்லது பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்தப்படலாம். அவரை பணம் கேட்டு மிரட்டுவதற்கு கூட அந்த தரவுகள் பயன்படுத்தப்படலாம் அல்லவா?" என்றும் அவர் கூறுகிறார்.
டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 (டிபிடிபி சட்டம்) என்பது இணையத்தில் மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் முக்கியச் சட்டமாகும். நிறுவனங்கள், செயலிகள், இணையதளங்கள் மற்றும் அரசாங்கம் கூட உங்கள் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான விதிகளை அது வழங்குகிறது.
இதைக் குறிப்பிடும் முரளிகிருஷ்ணன், "நாம் வழங்கும் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படாது என்ற உத்தரவாதத்தை ஒரு தனிநபர் அளிப்பது எவ்வளவு சரியாக இருக்கும் என்பதை கூற முடியாது. 'மக்கள் சாட்சி' தளத்தின் நோக்கம் சரியானது என்றாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களை புறக்கணிக்க முடியாது." என்று கூறுகிறார்.
சட்டம் சொல்வது என்ன?
"ஒரு தனிநபர் இணையதளம் மக்களின் தரவுகளைக் கோருவது சட்டரீதியாக தவறு இல்லை, ஆனால் என்ன நோக்கத்துக்காக அதை வாங்குகிறேன் என உறுதி அளிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் மீறப்பட்டால், அது குற்றமாகும்" என்கிறார் சைபர் சட்ட வல்லுநரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான வி.பாலு.
"இங்கு மக்களால் வழங்கப்படுவது, லஞ்சம் கோரப்படுகிறது அல்லது கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் தானே. சிலர் லஞ்சம் குறித்து நேரடியாக புகாரளிக்க பயப்படுவார்கள், அவர்களுக்கு இது உதவுகிறது எனும்போது இது பாராட்டப்பட வேண்டிய ஒரு முன்னெடுப்பு தான். அதேசமயம் தரவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை" என்றும் பாலு குறிப்பிடுகிறார்.
'மக்கள் சாட்சி' தளத்தைக் குறித்து பேசிய 'அறப்போர் இயக்கத்தைச்' சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன், "இது ஒரு நல்ல முயற்சி தான். ஆனால் அரசு இதை எடுத்து முறைப்படுத்தி, நடைமுறைப்படுத்த வேண்டும்." என்று கூறுகிறார்.
"லஞ்சத்துக்கு எதிராக நீண்ட காலமாகவே பல நடவடிக்கைகளை அறப்போர் இயக்கம் எடுத்து வருகிறது. குறிப்பாக அரசு ஒப்பந்தங்களை ஆவணப்படுத்துவதற்கான ஒரு இணையதளத்தை தொடங்கவுள்ளோம். எங்களை அணுகும் பெரும்பாலான மக்கள் கேட்பது, 'நான் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் கேட்கிறார்கள், என்ன செய்ய வேண்டும்?' என்பதே. அதற்கான சட்டரீதியான வழிகாட்டுதல்களை வழங்குகிறோம்."
"அப்படியிருக்க இந்த 'மக்கள் சாட்சி' வரவேற்கத்தக்கது. லஞ்ச ஒழிப்புத்துறையை அணுகுவது குறித்து மக்களுக்கு தயக்கமும் குழப்பமும் உள்ளது. அப்படியிருக்க பெயர் குறிப்பிடாமல், எளிதாக புகார் அளிக்க உதவும் இத்தகைய தளத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும். அப்படி செய்தால், இது முழுமை பெறும்" என்கிறார் அவர்.
லஞ்சம் குறித்து அரசுக்கு முறையாக புகார் அளிப்பது எப்படி?
தமிழக அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அல்லது மாநில பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு எதிரான லஞ்சம் அல்லது ஊழல் புகார்களைப் பதிவு செய்ய வேண்டுமென்றால், தமிழக ஊழல் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) முதன்மை முகமையாக உள்ளது.
ஆனால், புகார் அளிப்பவரின் பெயர் குறிப்பிடாமல் வரும் புகாரை டிவிஏசி ஏற்பதில்லை.
இருப்பினும் தகவல் அளிப்பவர்/புகார்தாரர் தங்களது அடையாளத்தை ரகசியமாக வைக்குமாறு கோரிக்கை வைக்கலாம். அத்தகைய நபர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படுவதை உறுதிசெய்ய, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது என டிவிஏசி உறுதி அளிக்கிறது.
டிவிஏசி தலைமையகத்துக்கோ அல்லது (காவல் துணை கண்காணிப்பாளரின் தலைமையில் இயங்கும்) ஏதேனும் மாவட்டப் பிரிவு அலுவலகத்துக்கோ நேரடியாக சென்று புகார் அளிக்கலாம். மனு, மின்னஞ்சல், ஃபேக்ஸ் அல்லது தொலைபேசி மூலமாகவும் புகார் அளிக்கலாம்.
டிவிஏசி இணையதளத்தில் கிடைக்கும் ஒரு படிவத்தை பதிவிறக்கி அதில் விவரங்களை பூர்த்தி செய்யலாம். அந்தப் படிவத்தில் பெயர், தந்தை பெயர், முகவரி, குற்றம்சாட்டப்படும் அதிகாரியின் விவரங்கள், மற்றும் ஆதாரங்களை இணைக்க வேண்டும்.
அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமல்லாது தரகர்கள் மீதும் புகார் அளிக்கலாம் என டிவிஏசி கூறுகிறது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி (1988, பிசிஏ சட்டம்) லஞ்சம் வாங்குவதைப் போலவே, லஞ்சம் அளிப்பதும் குற்றம் எனும்போது, அரசு அதிகாரிகளும் தங்களுக்கு யாராவது லஞ்சம் வழங்க முன்வந்தால் புகார் அளிக்கலாம்.
அதேபோல, மத்திய அரசு ஊழியர்கள் மீதான புகார் என்றால் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) இணையதளத்தைப் பயன்படுத்தலாம். இங்கும் பெயர் குறிப்பிடாமல் புகார் அளிக்க முடியாது, ஆனால் கோரிக்கை வைக்கப்பட்டால் புகார் அளிப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கப்படும் என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவிக்கிறது.
'மக்கள் சாட்சி' இணையதளம் மூலம் வெளிவரும் புகார்களின் தன்மைகளைத் தற்போது ஆய்வு செய்து வருவதாக கூறும் சிவக்குமார், "அதிக எண்ணிக்கையிலான புகார்கள் சேகரிக்கப்பட்டவுடன், அரசு துறைகள் முழுவதும் லஞ்சம் மற்றும் ஊழல் எப்படி நடைபெறுகிறது என்பதை முறையாக வெளிப்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவுடன் இதை ஒருங்கிணைக்க உள்ளேன்" என்கிறார்.
"அரசு இந்தத் தளத்தை ஏற்று, நடத்த வேண்டும் என்பது தான் எனது கோரிக்கையும் கூட. அதற்காகவே தவெக அமைச்சர்களை அணுகி வருகிறேன்" என்று கூறுகிறார் சிவக்குமார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு