You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காமனெயி இறுதிச்சடங்கு: மொஜ்தபா காமனெயி பங்கேற்காமல் தவிர்க்க இஸ்ரேலும் ஒரு காரணமா?
- எழுதியவர், ஒலிவியா அயர்லாண்ட்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இரானில் மறைந்த ஆயதுல்லா அலி காமனெயிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை மூத்த தலைவர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கூடியிருந்தாலும், அந்நாட்டின் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார்.
அலி காமனெயியின் மற்ற மூன்று மகன்களான மசூத், மொஸ்தபா மற்றும் மீசம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர். அவர்களுடன் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் புரட்சிகர காவல்படைத் தலைவர் அகமது வாஹிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மார்ச் மாத தொடக்கத்தில் மொஜ்தபா காமனெயி அதிஉயர் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து பொதுவெளியில் தோன்றாததால், மொஜ்தபாவின் நிலை குறித்த ஊகங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. அவரது தந்தையைக் கொன்ற அதே அமெரிக்க - இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் அவரும் காயமடைந்தார் என்ற வதந்திகள் இந்த ஊகங்களை மேலும் தூண்டின.
மூத்த காமனெயி 1989 முதல் பிப்ரவரியில் அவர் இறக்கும் வரை இரான் இஸ்லாமிய குடியரசை ஆட்சி செய்தார்.
மறைந்த அதி உயர் தலைவருக்கான அதிகாரப்பூர்வ இறுதிச்சடங்கு நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. வரவிருக்கும் வாரத்தில் இரான் மற்றும் இராக் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
"நூற்றாண்டின் இறுதிச்சடங்கு" என்று அவர்கள் அழைக்கும் இந்தச் சடங்குகளில் 1.2 கோடி முதல் 2 கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என்று இரான் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
காமனெயி உடல் தற்போது தெஹ்ரானின் கிராண்ட் மொசல்லா மத வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. புனித நகரான கோமில் உள்ள மதப்பள்ளிகளில் கற்பிக்கும் 97 வயது அறிஞரும், முக்கிய ஷியா மதகுருவுமான ஜாபர் சோபஹானி தலைமையில் இறுதிச்சடங்கு வழிபாடு நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை இரான் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. திங்கட்கிழமை தலைநகரில் நடைபெறவுள்ள ஊர்வலத்திற்கு முன்னதாக காமனெயி உடல் கிராண்ட் மொசல்லாவில் இருந்து மாற்றப்படும்.
இந்தச் சடங்குகள் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் தம்மையும் படுகொலை செய்யக்கூடும் என்ற அச்சத்தின் பின்னணியிலேயே, மொஜ்தபா காமனெயி வருகை தவிர்ப்பு அமைந்துள்ளது.
ஒரு பலவீனமான போர்நிறுத்தம் தற்போது நீடித்து வரும் வேளையில், நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன இருப்பினும் இரு தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
இறுதிச்சடங்கு தொடர்பான நிகழ்வுகளுக்காக அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்ததாக ஆக்ஸியோஸ் செய்தி இணையதளம் கூறியுள்ளது.
இரான் ஆட்சியின் மூத்த அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொள்வதால், அமெரிக்கா அவர்கள் அனைவரையும் "ஒரே அடியில்" வீழ்த்த முடியும் என்று டிரம்ப் கூறியதாக அது குறிப்பிட்டுள்ளது. "ஆனால் நாங்கள் அதைச் செய்யப் போவதில்லை, ஏனென்றால் அவ்வாறு செய்தால் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த யாருமே இருக்க மாட்டார்கள்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இரானியர்கள் அழுவதைக் கண்டு தான் ஆச்சரியமடைந்ததாகக் குறிப்பிட்ட அதிபர், மக்கள் காமனெயியை வெறுக்கிறார்கள் என்று தான் நினைத்ததாகக் கூறினார். "ஒருவேளை அவை போலி கண்ணீராக இருக்கலாம்," என்றும் அவர் கூறினார்.
டொனால்ட் டிரம்பின் இந்த கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, துக்கத்தில் இருந்த 50 வயதான ஜஹ்ரா சஃபேய் என்பவர் ராய்ட்டர்ஸிடம் கூறுகையில் "நாங்கள் 47 ஆண்டுகளுக்கு முன்பு போலி கண்ணீர் சிந்துவதற்காக புரட்சி செய்யவில்லை. இந்த தியாகிகள் அனைவரையும் போலி கண்ணீர் சிந்துவதற்காக நாங்கள் இழக்கவில்லை" என்றார்.
அசோசியேட்டட் பிரஸ் மற்றும் கார்டியன் நாளிதழ்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ஞாயிற்றுக்கிழமை மக்கள் 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மரணம் அடைய வேண்டும்' என்று முழக்கமிட்டதாகத் தெரிவித்துள்ளன. பிரார்த்தனைக்கு முன்னதாக நடைபெற்ற கவிதை வாசிப்பில் கவிஞர் முகமது ரசூலி பேசுகையில், "டிரம்பை கொலை செய்வது நமது பொறுப்பு" என்று கூறினார்.
"அமெரிக்காவுக்கு அழிவு", "இஸ்ரேலுக்கு அழிவு" போன்ற முழக்கங்களை ரசூலி எழுப்புவதையும், அதற்கு மக்கள் குரல் கொடுப்பதையும் கேட்க முடிந்தது.
நகரத்தில் இருந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை "டிரம்பைக் கொல்லுங்கள்", இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் குறிக்கும் வகையில் "பிபியைக் கொல்லுங்கள்" மற்றும் "நாங்கள் பழிவாங்குவோம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததை காண முடிந்தது.
தெஹ்ரான் நிகழ்வுகளில் மட்டுமே இரான் முழுவதிலும் இருந்து 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் மொசல்லா மற்றும் அதன் அருகிலுள்ள மருத்துவ மையங்களுக்கு 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் வந்து சென்றுள்ளதாக இரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான இர்னா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது - இருப்பினும் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
இறுதிச் சடங்கின் படங்கள், அங்கு கூடியிருந்தவர்களின் வெப்பத்தைத் தணிக்க அவர்கள் மீது நீர் தெளிக்கப்படுவதையும், முதிய பெண் ஒருவரை மருத்துவக் குழுவினர் ஸ்ட்ரெச்சரில் சுமந்து செல்வதையும் காட்டுகின்றன.
காமனெயி சவப்பெட்டி, தெஹ்ரான் தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது ஒரு வயது பேத்தி ஜஹ்ரா முகமதி கோல்பயேகானி உட்பட நான்கு உறவினர்களின் சவப்பெட்டிகளுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.
தனது ஆட்சிக்காலம் முழுவதும், அலி காமனெயி மேற்கத்திய நாடுகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்பொலா மற்றும் ஏமனில் உள்ள ஹூத்தி உட்பட மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு ஆயுதக் குழுக்களுக்கு பல ஆண்டுகளாக அவர் ஆதரவை வழங்கினார்.
திங்கட்கிழமை தெஹ்ரானில் நடைபெறும் ஊர்வலங்களுக்குப் பிறகு, காமனெயி சவப்பெட்டி செவ்வாய்க்கிழமை கோமிற்கும், புதன்கிழமை அண்டை நாடான இராக்கில் உள்ள ஒரு முக்கியமான ஷியா தலத்திற்கும் கொண்டு செல்லப்படும். அதன் பின்னர், வியாழக்கிழமை அவரது சொந்த ஊரான மஷாத்தில் உடல் அடக்கம் செய்யப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு