தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுக்கு பிறகு நிதின் கட்கரிக்கு எதிராக மீம்கள் - என்ன சர்ச்சை?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மெட்டா, எக்ஸ், கூகுள் மற்றும் பெயர் தெரியாத சிலருக்கு எதிராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தாக்கல் செய்த அவதூறு வழக்கின் மீதான விசாரணையை ஆகஸ்ட் ஐந்தாம் தேதி மேற்கொள்ளப் போவதாக மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட டீப்ஃபேக் உள்ளடக்கங்கள் தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கங்களில் மத்திய அரசின் எத்தனால் கலப்புத் திட்டத்துடன் நிதின் கட்கரி தவறான முறையில் தொடர்புப்படுத்தி காட்டப்பட்டிருந்தார்.

நீதிபதி ஆரிஃப் டாக்டர் தலைமையிலான அமர்வு, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறு மத்திய அமைச்சரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தீப் எஸ். லட்டாவுக்கு உத்தரவிட்டது. அதன் பிறகு நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தனது புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி நிதின் கட்கரி 11 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரியுள்ளார். சமூக ஊடகங்களில் வைரலான இந்த உள்ளடக்கத்தால் தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நிதின் கட்கரி 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சராக உள்ளார். இ-20 கொள்கையுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் கூறுகிறார். சிலர் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகவும், அவற்றில் எத்தனால் கலப்புத் திட்டத்துக்கு (EBP) தானே பொறுப்பு எனத் தவறாகக் காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மனுவில் சமூக ஊடகங்களில் செய்யப்பட்ட 24 பதிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன, அவை நிதின் கட்கரியை அவதூறு செய்வதாகவும், இ20 சர்ச்சையுடன் அவரை இணைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதிவுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மத்திய அமைச்சர் கோரியுள்ளார். மேலும், தனது புகழுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பாதிப்புக்காக 11 கோடி ரூபாய் நஷ்டஈடும் அவர் கோரியுள்ளார்.

நிதின் கட்கரி இலக்கானது எப்படி?

மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்த பிறகு, சமூக ஊடகங்களில் நிதின் கட்கரி இலக்காக்கப்பட்டார். போராட்டத்தின் போதும் கட்கரி தொடர்பான மீம்கள் காணப்பட்டன.

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தற்போது அவரை இலக்கு வைக்கத் தொடங்கியிருந்தன.

சமூக ஊடகங்களில் பல பதிவுகளில் இ20 (20 சதவிகிதம் எத்தனால் மற்றும் 80 சதவிகிதம் பெட்ரோல்) போன்ற எத்தனால் கலந்த எரிபொருள் கொள்கையால் நிதி ரீதியாக ஆதாயம் அடைவதாகக் கூறப்பட்டிருந்தது.

இ20 மற்றும் நிதின் கட்கரிக்கு எதிராகப் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகத் தாம் "நேஷனல் டவுன் ஹால்" நடத்தப்போவதாக அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அறிவித்திருந்தார்.

"இந்த நாட்டின் இளைஞர்கள் ஓர் அகந்தை பிடித்த அரசைப் பணிய வைத்தனர், இதன் விளைவாகத் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டியதாயிற்று. இப்போது பிரதமர் இ20 விவகாரத்துக்கும் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இது ஒரு பெரிய மக்கள் இயக்கமாக உருவெடுப்பதற்கு முன்பாக இதைச் செய்ய வேண்டும்" என்று செய்தியாளர் சந்திப்பில் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸும் எத்தனால் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரியுள்ளது. இந்தக் கொள்கையானது "போதிய அறிவியல் ரீதியான உறுதிப்படுத்தல் இல்லாமலும், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வாகன உரிமையாளர்களின் நலன்களைப் பலிகொடுத்தும் அமல்படுத்தப்படுகிறது" என காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் குல்தீப் சிங் ரத்தோர் இதே மாதத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த ஒரு வாரத்தில் சமூக ஊடகங்களில் 'கட்கரி இஸ் நெக்ஸ்ட்' என்ற மீம்கள் பெருக்கெடுத்துள்ளன. சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட காணொளிகளில், ஜந்தர் மந்தரிலிருந்து திரும்பும் ஜென் ஸி போராட்டக்காரர்கள் காவல்துறையினரிடம், "இனி இ20 நேரத்தில் சந்திப்போம்." என வேடிக்கையாகப் பேசுவதும் காணப்பட்டது. இருப்பினும், காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்கள் இதுவரை இதுபோன்ற எந்தக் குறிப்பிட்ட போராட்டத்தையும் அறிவிக்கவில்லை.

இருப்பினும், "இ20 ஜனதா கட்சி" என்ற பெயரில் இயங்கும் சமூக ஊடகப் பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்துள்ளனர். எக்ஸ் தளத்தில் இதன் பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

தங்களை "இ20 ஜனதா கட்சி" என்று அழைத்துக்கொள்ளும் எக்ஸ் தள பக்கத்தில், தாங்கள் எந்தவொரு அரசியல் கட்சியும் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே இருந்த ஏதோ ஒரு பழைய கணக்கின் புதிய பெயராக இருக்கலாம்

திங்கள்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு பகிரப்பட்ட ஒரு பதிவில், "நாங்கள் ஒரு சுயாதீன குடிமக்கள் இயக்கம், சாதாரண மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளைத் எழுப்புவதே எங்கள் நோக்கம். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதும், இந்தியாவின் இ20 (20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல்) கொள்கையின் உண்மையான தாக்கம் குறித்து வெளிப்படையான பொது விவாதத்தை ஊக்குவிப்பது மட்டுமே நமது ஒரே செயல்திட்டமாகும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இ20-யுடன் நிதின் கட்கரியின் பெயர் இணைந்தது எப்படி?

அரசின் எத்தனால் கலந்த எரிபொருள் கொள்கைக்கு எதிரான சூழ்ச்சி நடப்பதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிதின் கட்கரி குற்றம் சாட்டினார்.

சில சுயநலவாதிகள் இந்த மாற்றத்தைத் தடுக்க முயல்வதாக அவர் கூறியிருந்தார். இ20 அதாவது 20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்து சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் கவலைகளுக்குப் பதிலளித்த கட்கரி, "சுயநலன் சம்பந்தப்பட்டிருப்பதால் எல்லா இடங்களிலும் அழுத்தம் கொடுக்கும் குழுக்கள் (லாபிகள்) உள்ளன. பெட்ரோல் துறையின் லாபி மிகவும் சக்திவாய்ந்தது" என்றார்.

புதுடெல்லியில் நடந்த இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) அமைப்பின் 65-வது வருடாந்திர மாநாட்டில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

"சமூக ஊடகங்களில் எனக்கு எதிராக நடத்தப்பட்ட பிரசாரம் ஒரு திட்டமிடப்பட்ட பிரசாரமாகும். உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. அதில் எந்த உண்மையும் இல்லை" என்று அவர் கூறியிருந்தார்.

இ20 எரிபொருள் பயன்பாடு ஏப்ரல் 2023-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சில பெட்ரோல் பங்க்குகளில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு ஏப்ரல் 2025-ஆம் ஆண்டில் இது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இது 10 சதவிகிதம் எத்தனால் கலக்கப்பட்டு, இந்தியாவில் பெரும்பாலான கார்களில் பயன்படுத்தப்பட்டு வந்த இ10 எரிபொருளுக்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்டது. எத்தனால் என்பது முக்கியமாகக் கரும்பு, சோளம் மற்றும் அரிசி போன்ற உணவுப் தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை ஆல்கஹால் ஆகும்.

நிதின் கட்கரி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

அவரது குடும்பத்தினருக்குப் பூர்த்தி குழுமம் போன்ற கரும்பு சார்ந்த நிறுவனங்களுடன் தொடர்பு உள்ளது என்பதால் எத்தனால் கலப்பை ஊக்குவிப்பதற்குப் பின்னால் நிதின் கட்கரியின் சுயநலம் இருப்பதாகச் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் எட்டாம் தேதி தி இந்து ஆங்கில நாளிதழின் 'மைண்ட்' நிகழ்வில் கட்கரி இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்துப் பேசுகையில், "இது வேண்டுமென்றே நடத்தப்படும் தவறான பரப்புரையாகும். மக்களை தொலைபேசியில் அழைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட வைக்கும் ஓர் அமைப்பை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இதற்குப் பின்னால் ஏதேனும் அரசியல் சதி இருக்க சாத்தியமுள்ளது. அரசியலில் இது இயல்புதான்" என்றார்.

"அடல் பிஹாரி வாஜ்பேய் 2001-ஆம் ஆண்டில் எத்தனால் கலப்பைத் தொடங்கினார். அவர் அதை என் பேச்சைக் கேட்டுச் செய்தாரா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தனது குடும்பத்தினரின் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்றார். இந்த நிறுவனங்களை மூடிவிடுமாறு தனக்குப் பலமுறை அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் தனது தனிப்பட்ட பிணைப்பு காரணமாகத் தான் அவ்வாறு செய்யவில்லை என்றும் நிதின் கட்கரி கூறினார். இந்த நிறுவனங்கள் வெறும் 1.3 லட்சம் லிட்டர் எத்தனாலை மட்டுமே உற்பத்தி செய்கின்றன, இது மிகவும் சிறிய அளவாகும் என்று அவர் கூறினார்.

"நான் எலக்ட்ரிக், ஹைட்ரஜன் அல்லது பிளெக்ஸ் எஞ்சின் கொண்ட வாகனங்களை ஊக்குவிக்கிறேன் என்றால், நான் அவற்றைத் தயாரிக்கிறேன் என்று அர்த்தமா? கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் மாசுபாட்டைக் குறைக்கவும், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்கவும், பிரதமரின் ஆத்மநிர்பார் பாரத் கனவை நனவாக்கவும் நான் பல மாற்று மற்றும் உயிரி எரிபொருட்களை ஊக்குவிக்கிறேன்" என்றார்.

எத்தனால் கலப்பு கிராமப்புறப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் என்று கட்கரி வலியுறுத்திக் கூறினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு