You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரை அருகே 16 வயது தலித் மாணவி மரணம் - தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
(எச்சரிக்கை: இந்தக்கட்டுரையில் இடம்பெற்ற சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)
மதுரை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் 16 வயது தலித் சிறுமியை அவமானப்படுத்தியதாக எழுந்த புகார் தொடர்பாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுமி ஆகஸ்ட் 25ம் தேதி தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
உசிலம்பட்டி பகுதியில் வசிக்கும் சம்பந்தப்பட்ட சிறுமியும் அவரது தாயாரும் ஆகஸ்ட் 24-ம் தேதி 11-ம் வகுப்பு சேர்க்கைக்காக தலைமையாசிரியரை நேரில் சந்தித்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையின்படி சிறுமியின் தாயார் கைகளை கட்டிக் கொண்டு நின்ற போது, அவரது மகள் கைகளை கீழே தட்டியுள்ளார். இதை பார்த்து கோபமடைந்த தலைமையாசிரியர் அந்த சிறுமியை திட்டி அங்கிருந்து கிளம்புமாறு சொல்லியுள்ளார்.இதனால் தனது மகள் சோகமாக இருந்ததாகவும், அன்றிரவு சாப்பிடவில்லை எனவும் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்ததாகவும் போலீஸிடம் சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார். அந்த சிறுமி மறுநாள் தனது உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியரின் கருத்தை கேட்க பிபிசி தமிழ் அவரை தொடர்பு கொள்ள முயன்று வருகிறது. அவரது கருத்துகள் கிடைக்கும் போது, இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.
காவல்துறை கூறுவது என்ன?
சிறுமியின் தாய் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக உள்ளார்.
நடந்த நிகழ்வு பற்றி பிபிசி தமிழிடம் விவரித்தபோது, "எனது மகள் உள்ளூர் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து முடித்த பிறகு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு சேர்த்தோம். ஆனால் அங்கு விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவில்லை. இதனால் பள்ளிக்கு செல்ல மறுத்துவிட்டாள்.
எனவே, மற்றொரு அரசுப் பள்ளியில் சேர்க்கைக்காக ஆகஸ்ட் 25ம் தேதி சென்றிருந்தோம். தலைமையாசிரியர் எங்களை நிற்கவைத்து கேள்விகேட்டார். 'எதற்காக பள்ளி மாற வேண்டும்? எனக்கு வேற வேலை இல்லையா?' என்று சொன்னதுடன் வெளியில் காத்திருக்க சொன்னார். அரை மணி நேரம் ஆகியும் அவர் அழைக்காததால் நாங்களே மீண்டும் உள்ளே சென்றோம். அப்போது அவர், 'என்ன காரணத்துக்காக பள்ளி மாற வேண்டும்? முதலில் உன் நன்னடத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்' என்று கூறினார்'' என்றார்
மேலும், "அவர், என் மகள் பத்தாம் வகுப்பு வரை படித்த பள்ளியின் தமிழ் ஆசிரியருக்கு போன் செய்தார். லவுட் ஸ்பீக்கரில் இருந்த அழைப்பில், தமிழ் ஆசிரியர் எனது மகள் 412 மதிப்பெண்கள் பெற்று நன்றாக படிக்கும், ஒழுக்கமான மாணவி என்று கூறினார்.
நான் கையை கூப்பி என் மகளுக்கு சேர்க்கை வழங்குமாறு கேட்டு நின்றேன். தலைமையாசிரியர் தலையை குனிந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். என் மகள் என் கைகளை கீழே இறக்குமாறு சைகை காட்டி என் கைகளை கீழே தட்டிவிட்டார். குனிந்திருந்த தலைமையாசிரியர் தலையை தூக்கும் போது இதைப் பார்த்துவிட்டார். உன் அம்மாவிடம் என்ன சொன்னாய் என்று எனது மகளை மீண்டும் மீண்டும் கேட்டார். கட்டியிருந்த எனது கையை எடுவென்று சொன்னதாக என் மகள் கூறினாள். 'நீங்க எல்லாம் கை கட்டி நிற்கக் கூடாதா? உங்களுக்கு அவ்வளவு திமிரா?' என்று தலைமையாசிரியர் கேட்டார். மேலும் அந்த அறையிலிருந்து வெளியேறுமாறு பல்லை கடித்துக் கொண்டு சொன்னார்'' என விவரிக்கிறார் சிறுமியின் தாய்.
இதே விவரங்கள் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையிலும் சிறுமியின் தாயார் கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் தற்கொலை
வெளியே வந்ததும் தனது மகள் ஓடத் தொடங்கியதாக சிறுமியின் தாய் தெரிவித்தார். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிச் சென்ற அவரை பிடிக்க வழியில் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி, பின் தொடர்ந்ததாக கூறுகிறார்.
"அவளை வழி மறித்து பிறகு ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். பள்ளியில் நடந்த சம்பவம் அவளை பாதித்திருந்தது. அன்றிரவு அவள் சாப்பிடவில்லை" என சிறுமியின் தாய் கூறினார்.
இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் சிறுமி ஏற்கனவே படித்து வந்த பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் வாங்க சென்றுள்ளார். தாயார் பணிக்கு சென்ற நிலையில் பின்னர் அந்த சிறுமி வீட்டில் இருந்துள்ளார்.
பள்ளி முடித்து அவருடைய தம்பி வீட்டுக்கு வந்துள்ளார். "அப்போது அவள் நாற்காலியில் அமர்ந்திருப்பதை என் மகன் பார்த்துள்ளான்" என்கிறார் சிறுமியின் தாய்.
அதன் பிறகு சிறுமி வீட்டிற்கு வெளியே இருப்பதை அண்டை வீட்டார் பார்த்துள்ளனர்.
ஆனால், தாய் வேலையில் இருந்து வீட்டுக்கு திரும்பிய சமயத்தில் வீட்டுக்கு வெளியில் செருப்பு மட்டும் இருந்துள்ளது. படுக்கை அறை தாளிட்டிருந்த நிலையில், கதவை உடைத்து திறந்து பார்த்த போது, மாணவி உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
முதல் தகவல் அறிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையின்படி ,பள்ளியில் சிறுமியின் தாயார் கைகளை கட்டிக் கொண்டு நின்ற நிலையில், சிறுமி தன் தாயிடம் கைகளை கீழே இறக்குமாறு கூறியுள்ளார். இதை பார்த்து கோபமடைந்த தலைமையாசிரியர் அந்த சிறுமியை திட்டியதாகவும், "ஏன் உன் அம்மா கை கட்டி பதில் சொன்னால் உனக்கு என்ன? இப்போது என்னிடம் இவ்வளவு திமிராக நடந்து கொள்கிறாய் என்றால், மற்ற பள்ளிகளிலும் இதே போன்று தான் இருந்திருப்பாய். எனவே தான் உன்னை அந்த பள்ளியிலிருந்து வெளியேற்றி உள்ளார்கள்" என்று கூறி தலைமையாசிரியர் கடிந்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தனது மகள் சோகமாக இருந்ததாகவும், அன்றிரவு சாப்பிடவில்லை எனவும் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்ததாகவும் போலீஸிடம் சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.
முதலில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சாதி குறித்து எதுவும் குறிப்பிடாமல் இருந்தது. பின்னரே எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முக்கிய குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு