You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பலி 5-ஆக உயர்வு: அமோனியா கசிவு பற்றி சட்டப்பேரவையில் அமைச்சர் கூறியது என்ன? திமுக, அதிமுக அமளி
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இதனை தெரியப்படுத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ், அவர்கள் அனைவரும் பெண் தொழிலாளர்கள் என்று தெரிவித்தார். அமோனியா வாயு கசிவால் 74 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 42 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அமைச்சரின் பேச்சுக்கு முன்பே, அமோனியா வாயு கசிவு விபத்து குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. அதனை ஏற்க மறுத்த சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், அவை உறுப்பினர்கள் தங்களுக்கு வாய்ப்பு தரப்படும் போது அதுகுறித்து பேசலாம் என்று தெரிவித்தார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆவர். விபத்து தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளர்கள் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன தொழிலாளர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
சட்டப்பேரவையில் என்ன நடந்தது?
திருவள்ளூர் அருகே கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. சட்டப்பேரவை கூடியதும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் அமோனியா வாயு கசிவு விபத்து குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமளில் ஈடுபட்டனர். அதனை சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் நிராகரித்துவிட, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் 110 விதியின் கீழ் திருவள்ளூர் தனியார் நிறுவன விபத்து குறித்து விளக்கம் அளித்தார்.
"திருவள்ளூர் அருகே இறால் பதப்படுத்தும் ஆலையில் பைப் லைனில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 74 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 70 பேர் பெண்கள் ஆவர். பாதிக்கப்பட்டவர்களில், இதுவரை 5 பெண்கள் உயிரிழந்துவிட்டனர். 15 பேர் அரசு மருத்துவமனையிலும், 27 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் 27 பேர் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நேரிடாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று அமைச்சர் பர்வேஸ் தெரிவித்தார்.
அதிமுக வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "பூஜ்ய நேரத்தின் போது எங்களை பேச சட்டப்பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். அவைக்குள் பேச எங்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. மக்களின் பிரச்னைகள் குறித்து பேச வாய்ப்பளிக்குமாறு சட்டப்பேரவைத் தலைவரிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால், எங்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை" என்று கூறினார்.
திருவள்ளூர் அருகே என்ன நடந்தது?
திருவள்ளூர் மாவட்டத்தில் கன்னிகைப்பேர் என்ற கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. அங்கு நேற்று (21-06-2026 ஞாயிற்றுக்கிழமை) காலை அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
அரசு தெரிவித்த தகவலின்படி, உற்பத்தி பிரிவில் வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதில், அங்கு பணியில் இருந்த 64 நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் 60 பேர் பெண்கள். 4 பேர் ஆண்கள்.
இந்த சம்பவத்தில் குறைந்தது 5 பெண்கள் உயிரிழந்துவிட்டதை தமிழக அரசு உறுதிப்படுத்தியுள்ளது. 15 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 23 பேர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 24 பேர் தனியார் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, காஞ்சிபுரம் சரக டிஐஜி சேஷ சாயி, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
சிகிச்சை பெறும் தொழிலாளர்களின் நிலை என்ன?
வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் குமுதா, "சிகிச்சைக்கு வந்தவர்களில் சிலர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு இருப்பதாக" தெரிவித்தார்.
அத்துடன், "இங்கு சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்றாலும், பெரிதும் அச்சப்படும் அளவுக்கு இல்லை. அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரேயொரு ஆண் என்றும் மீதம் அனைவரும் பெண் தொழிலாளர்கள்" என்றும் கூறிய அவர், "அவர்களும் சுமார் 20 முதல் 23 வரையிலான வயது வரம்புகளில் இருப்பதால், விரைவில் குணமாகிவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவர் குமுதா தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன?
"கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் பிரஷர் வால்வில் இருந்து அமோனியா வாயு கசிந்ததால் அங்கிருந்த தொழிலாளர்களுக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டது," என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இப்படியாக, "மயக்கம், வாந்தி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளோம். அரசு மருத்துவமனை மட்டுமின்றி சிலர் வேல்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி நல்ல நிலையில் இருப்பவர்கள் அருகில் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்று ஆட்சியர் கவிதா விவரித்தார்.
மேலும் பேசிய அவர், "வாயுக் கசிவு ஏற்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். இப்போதைக்கு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று விளக்கினார்.
அமோனியா கசிந்தது எப்படி? அமைச்சர் பேட்டி
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் குமார், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறினார்.
வாயு கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து கூறுகையில், "சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் ஒரு இறால் பண்ணை, அங்கு பதப்படுத்தி வைக்கும் சேமிப்புக் கிடங்கில் இருந்த அமோனியா மூலமாக இயங்கி வந்த குளிரூட்டியில் ஏற்பட்ட கசிவால் விபத்து நிகழ்ந்துள்ளதாக இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக இன்னும் விரிவாக விசாரணை நடத்தி, ஆராய்ந்து முழு தகவல்களையும் தெரிவிக்கிறோம்" என்று கூறினார்.
நிறுவனத்தின் உரிமையாளர்கள் காவலில் எடுக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் குமார், "அவசர சிகிச்சைப் பிரிவில் 23 பேர் உள்ளனர். மற்றவர்கள் உடல்நிலை பயப்படக்கூடிய கட்டத்தைத் தாண்டி முன்னேறிவிட்டது" என்றார்.
3 நாளில் முழுமையான விசாரணை அறிக்கை - முதல்வர் உத்தரவு
இதில் உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலையும் ஆறுதலையும் அறிக்கை வாயிலாகத் தெரிவித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், இரு குடும்பங்களுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி நல்லடக்கம் செய்ய அரசு செலவில் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாநில ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளதாக அவரது அறிக்கை கூறுகிறது.
"வாயுக் கசிவு தொடர்பாக தொழிலகப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர், சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு முதல்கட்ட விசாரணை அறிக்கை 24 மணிநேரத்திற்கு உள்ளாக சமர்பிக்கப்பட வேண்டும், முழுமையான விசாரணை அறிக்கை மூன்று நாட்களுக்கு உள்ளாக சமர்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்" என்றும் முதலமைச்சர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு